தமிழ் 99

தமிழ் மொழியை கணினியில் உள்ளீடு செய்வதற்கான ஒரு முறை
(தமிழ்99 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் 99 (Tamil99) என்பது தமிழ் மொழி எழுத்துக்களையும், துணை எழுத்துக் குறிகளையும் கணினியில் உள்ளிடுவதற்கென விசைப்பலகையில் அவற்றின் இடங்களைத் தீர்மானித்துச் சீர்தரம் செய்த விசைப்பலகை அமைப்பாகும்.

தமிழ்99 விசைப்பலகை

விசைப்பலகை தரப்படுத்துதல் - முன்வரலாறு

தொகு
 
Inscript தமிழ்த் தட்டச்சுப் பொறி
 
மடிக்கணிப்பொறியில் தமிழ் 99 விசைப்பலகை
இக்காணொலி தமிழ்99 என்னும் தட்டச்சு முறையில் (உள்ளீட்டு முறை) தமிழில் ஒருங்குறி (Unicode) தட்டச்சினை (தமிழ் உள்ளீட்டினை) செய்வதற்கான செய்முறைக் கூறுகளை விளக்குகின்றது.

தமிழ்த் தட்டச்சுப் பொறியில் எழுத்துக்களும் துணையெழுத்துக் குறிகளும் அமைந்துள்ள விசைப்பலகையின் அமைப்பு கணினியில் புழங்கத் திறன் மிக்கதாக இருக்கவில்லை. தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் தத்தம் அறிவுக்கும் ஆய்வுக்கும் எட்டிய பல விசைப்பலகை அமைப்புகளை[மேற்கோள் தேவை]ப் புழங்கி வந்தனர். இவ்வாறு இருந்த ஏராளமான[மேற்கோள் தேவை] விசைப்பலகை அமைப்புகளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கெனச் சீர்தரம் செய்யப்பட்ட ஏதாவதொரு விசைப்பலகை அமைப்பு தேவை என்று உணரப்பட்டது. அச்சமயத்தில் புழக்கத்தில் இருந்த பல விசைப்பலகை அமைப்புகளை ஆராயவும் பொருத்தமான விசைப்பலகை அமைப்பைப் பரிந்துரைக்கவும் 1997இல் தமிழக அரசு ஒரு குழுவை அமர்த்தியது[மேற்கோள் தேவை].

இக்குழுவின் உறுப்பினர்கள்:

இக்குழு மூன்று விசைப்பலகை அமைப்புகளைத் தரப்படுத்துவதற்கென பரிந்துரைத்தது.[1] இப்பரிந்துரைகள் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ்நெட் 97 மாநாட்டில் அறிவிக்கப்பட்டன. அவையாவன:

  • ஒலியன் சார்ந்த அமைப்பு
  • தட்டச்சு அமைப்பு
  • (உரோமன்) ஒலிபெயர்ப்பு சார்ந்த அமைப்பு

பரிந்துரையின் மீதான கருத்துக்களை வரவேற்பதாகவும் அக்குழு அறிவித்தது. தமிழக அரசு இப்பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதான அறிவிப்பை வெளியிடவில்லை.

மேற்கண்ட விசைப்பலகை அமைப்புகளில் ஒலியன் சார்ந்த அமைப்பின் தத்துவம் தமிழ்99 விசைப்பலகையை ஒத்ததாகும். எனினும், இப்பலகையில் விசைகளின் அமைப்பு தமிழ்99-இன் அமைப்பிலிருந்து மாறுபட்டு இருந்தது. இவ்வமைப்பு தொடக்கப் பரிந்துரையாகவே இருந்தபோதிலும் சில தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் இதனைத் தமிழ்நெட்97 என்ற பெயரில் அவர்களது மென்பொருட்களில் வழங்கத் தொடங்கினர். தடித்த எழுத்துக்கள்

தமிழ் 99

தொகு

1999இல் சென்னையில் நடந்த தமிழ் இணையம் 99 மாநாட்டில் தமிழ்99 விசைப்பலகை அறிவிக்கப்பட்டது.[2] அதே சமயத்தில் இரு எழுத்துருத் தரங்களும் (TNM மற்றும் TNB) அறிவிக்கப்பட்டன. புதிய எழுத்துரு தரங்களின் மீதான சூடான விவாதத்தில், தமிழ்நெட்97 பரிந்துரை கைவிடப்பட்டதும் புதிய தரம் பரிந்துரைக்கப்பட்டதும் அவ்வளவாக விவாதிக்கப்படவில்லை. தமிழ்நெட்97 அவ்வளவாக பரவலாக அறியப்படாதிருந்தும் தமிழ்99 தரம் சற்று பழகுவதற்கு எளிதாக இருந்ததும் இத்தரம் நிலைபெற உதவிற்று.

சீர்தரப்படுத்தல்

தொகு

மென்பொருள் தயாரிப்பாளர்களும், கணினி சார்ந்த சேவைகளை, பண்டங்களை வழங்குபவர்களும் இந்த சீர்தரம் செய்த விசைப்பலகை அமைப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.

தயாரிக்கும் மென்பொருட்களிலும் வழங்கும் சேவைகளிலும் இவ்விசைப்பலகை தளக்கோலம் மட்டும்தான் அமையவேண்டும் என்றில்லை. ஆனால் கொடுக்கப்படும் தளக்கோலத் தெரிவுகளில் தமிழ்99 தளக்கோலமும் ஒன்றாக இருக்கவேண்டும்.

இதன் விளைவாக எந்த மென்பொருளிலும் தமிழ்99 விசைப்பலகை தளக்கோலம் கட்டாயம் கிடைப்பில் இருக்கும்.

எனினும் இன்றுவரை எந்த இயக்கு தளத்திலும் தமிழ்99 விசைப்பலகை தானாக நிறுவப்படவில்லை. பயனர்கள் தங்கள் தேவைக்கேற்ப தாமே நிறுவிக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

சிறப்பியல்புகள்

தொகு
  • குறைந்தளவு எண்ணிக்கையிலான விசை அமுக்கல்களை கொண்டிருத்தல்.
  • வலுவான விரல்களுக்கு அதிகளவு பயன்பாடும் வலுக்குறைந்த விரல்களுக்கு குறைந்தளவு பயன்பாடும் ஏற்படுத்தல்.
  • இடதுகை, வலதுகை என மாறி மாறி அமுக்குதற்குரிய வகையில் எழுத்துக்கள் இடம், வலம் என பரவலாக அமைத்தல்.
  • குறைவான அளவில் பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துக்களை தூக்கும் விசையை பயன்படுத்தி தட்டெழுதத் தக்கவாறு ஆக்கப்பட்டிருத்தல்.
  • எளிதில் நினைவு வைத்திருக்கக்கூடிய வகையிலும் சுலபமான பயன்பாட்டுக்குத் தக்கவாறும் குறில் மற்றும் நெடில் உயிரெழுத்துக்களை அருகருகே அமைத்தல்.
  • அடிக்கடி இணைந்து வரும் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ன்ற போன்ற தமிழ் எழுத்துக்கள் இலகுவில் நினைவிருக்கும் வகையிலும் இலகுவான பயன்பாட்டுக்கு ஏதுவாகவும் அமைக்கப்பட்டிருத்தல்.

தமிழ் 99 விசைப்பலகையின் அறிவுகூர்ந்த இயல்பு விதிகள்

தொகு
 
தமிழ்99 விசைப்பலகை தளக்கோலம்
  • 1. விசைப்பலகை பின்வரும் எழுத்துக்களை அடையாளங்களாக கொண்டிருக்கும்.
    • உயிரெழுத்துக்கள் 12
    • குற்று (ஒற்று அல்லது புள்ளி)
    • ஆய்த எழுத்து
    • மெய்யெழுத்துக்கள் 18 (அ கரப்படுத்தப்பட்டவை. எ.கா: க ச ட த ப ற )
    • கிரந்த எழுத்துக்கள் (அ கரப்படுத்தப்பட்டவை)
  • 2. அகரம் ஏறிய மெய்யெழுத்தைத் தொடர்ந்து புள்ளியை அமுக்குதல் தூய மெய்யெழுத்தைத் தோற்றுவிக்கும்.

எடுத்துக்காட்டாக, க + (புள்ளி) = க்

  • 3. அகரம் ஏறிய மெய்யெழுத்தைத் தொடர்ந்து "அ" தவிர்ந்த உயிரெழுத்தை அமுக்குதல் உயிர் மெய்யெழுத்தைத் தோற்றுவிக்கும்

எடுத்துக்காட்டாக, க + ஆ = கா

  • 4. ஒரு அகரம் ஏறிய மெய்யெழுத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே மெய்யெழுத்தை அமுக்குதல், முதலாவது மெய்யெழுத்தில் குற்றினை இடும்.

எடுத்துக்காட்டாக, க + க = க்க

  • 5. மேற்படி ஒற்று இடும் (புள்ளி வைக்கும், குற்றிடும்) வசதி, அதே மெய்யெழுத்து மூன்றாவது தடவை அமுக்கப்படும் போது தற்காலிகமாக நிறுத்தப்படும்.

எடுத்துக்காட்டாக, க + க + க = க்கக

    • நான்காவது அமுக்கலில் ஒற்று இடும் (குற்றிடும்) வசதி மீள ஏற்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டாக, க + க +க +க = க்கக்க

  • 6. முதலாவது உயிரெழுத்து "அ" அகரமேறிய மெய்யெழுத்தைத் தொடர்ந்து அமுக்கப்பட்டால் அது முதலாவது அமுக்குதல் அகரமேறிய உயிர்மெய் என்பதை உறுதி செய்கிறது. இது முந்திய அமுக்கத்தோடு வேறு எந்த அமுக்கமும் இணைவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. எனவே இந்த நிலையில் எந்த உயிர் அமுக்கமும் முந்தைய மெய்யுடன் இணையாது.

எடுத்துக்காட்டாக, க + அ + இ = கஇ

    • இங்கு தானியங்கி ஒற்று இடும் (குற்றிடும், புள்ளி வைக்கும்) வசதி அடுத்த அமுக்கத்துக்கு மட்டும் நிறுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, க + அ + க = கக

    • அதற்கடுத்த அமுக்கத்துடன் தானியங்கி ஒற்று (குற்று, புள்ளி) மீண்டும் வருகிறது.

எடுத்துக்காட்டாக, க + அ + க + க = கக்க

    • இங்கு அ எனும் உயிரெழுத்து மெய் இணைப்பகற்றும் குறியீடாக தொழிற்படுகிறது.
  • 7. ஒரு மெல்லின அகரமேறிய மெய்யைத் தொடர்ந்து வல்லின அகரமேறிய மெய் அமுக்கப்பட்டால், மேலே 3-6 வரை கொடுக்கப்பட்ட விதிகளுக்கமைய மாற்றங்கள் ஏற்படும். இங்கு ங,ச ஞ,ச ந,த ண,ட ம,ப ன,ற ஆகியவை மெல்லின வல்லின மெய் இணைகளாகும்.

எடுத்துக்காட்டாக,

ங + க = ங்க ந + த + த = ந்தத ந + த + த + த = ந்தத்த ந + அ + த = நத ந + அ + த + த = நத்த

  • 8. அகரமேறிய மெய்யல்லாத ஓர் அடையாளத்தை அடுத்து ஓர் உயிரெழுத்து அமுக்கப்பட்டால் அந்த உயிர் சுதந்திரமான உயிராகவே இருக்கும்.
  • 9. உயிருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் கொம்பு போன்ற அடையாளங்களை பெறுவதற்கு "கரட்" அடையாளத்தை முதலில் அமுக்கி அதையடுத்து பொருத்தமான உயிரை அமுக்க வேண்டும். கரட் அடையாளத்தை பெறுவதற்கு அதனை இருமுறை அழுத்த வேண்டும்.
  • 10. "புல்லெட்" மற்றும் காப்புரிமை வரியுருக்கள் எழுத்துரு திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
  • 11. ஒற்றை அல்லது இரட்டை மேற்கோள் காட்டிகளை பெறுவதற்கு கரட் அடையாளம் பயன்படுத்தப்படும்

எடுத்துக்காட்டாக,

^ + 7 = இடப்புற ஒற்றை மேற்கோள் காட்டி ^ + 8 = வலப்புற ஒற்றை மேற்கோள் காட்டி ^ + 9 = இடப்புற இரட்டை மேற்கோள் காட்டி ^ + 0 = வலப்புற இரட்டை மேற்கோள் காட்டி ^ + S = உடைபடாத வெளி

  • 12. அகற்றுதல் மற்றும் பின்னகர்த்த விசைகள் தனி நபர் விருப்பத்துக்கென விடப்பட்டுள்ளன

குறைகளும் பிழைகளும்

தொகு

தமிழ்99 விசைப்பலகை அமைப்பில் பல நற்பண்புகள் இருந்தபோதும் இவற்றில் சில குறைகளும் உள்ளன. பொதுவாக இக்குறைகள் அனைத்தும் இவ்வமைப்பின் அறிவுசார் இயல்பினால் ஏற்பட்டவையே. பொதுவாக இருவிதமாக குறைகள் ஏற்படுகின்றன. ஒன்று அறிவுசார் இயல்பின் உள்ளார்ந்த பண்பின் அமைந்த குறை. மற்றது இயல்பு விதிகளை கணிச் செயல்படுத்துவதில் ஏற்படும் குறை. கணிச்செயல்படுத்தும் போது ஏற்படும் குறைகள் சில சமயம் விதிகளை சரியாக புரிந்து கொள்ளாமல் செயல்படுத்துவதால் ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் செயலாக்க கருவிகளின் குறையினாலோ இயக்குதளத்தின் உள்ளார்ந்த செயல்பாட்டு வேறுபாடுகளாலோ ஏற்படுவதும் உண்டு.

இக்குறைகளின் பட்டியல் பின்வருமாறு:

உள்ளார்ந்த குறைகள்

  • தமிழ் மொழியின் அடிப்படையான உயிரும் மெய்யும் சேர்வதன்மூலம் உயிர்மெய் உருவாகும் என்பதிலிருந்து விலகி, அகரமேறிய உயிர்மெய்யுடன் மீண்டும் உயிர் சேர்வதாக அமைந்துள்ளது. உதாரணம் "கி" என்பதை க் + இ என்பதற்குப் பதிலாக க + இ என்று எழுதவேண்டும்.[3]
  • 4, 5 மற்றும் 6ஆம் விதிகள் ஒரு மெய்யெழுத்து விசை தொடர்ந்து அழுத்தப்படும் போது "ஒற்று" குறியை அழுத்தும் தேவையில்லாததை குறிக்கின்றது. இவ்விதிகளின்படி அகரமேறிய மெய்யை உள்ளிட சிலசமயங்களில் உரிய மெய்யெழுத்த மட்டும் அழுத்தப்படலாம். மற்ற சமயங்களில் மெய்யெழுத்தும் அடுத்து "அ" விசையும் அழுத்தப்பட வேண்டும். இத்தகைய மாறுபாடுகள் திரையைப் பாராமல் வேக தட்டச்சு செய்வதற்கு ஒவ்வாதது.
  • இதே போன்று ஒத்த மெய்கள் குறித்த 7ம் விதியிலும் சமயங்களில் "அ" விசை அழுத்தப்படவேண்டியுள்ளது.
  • ஒற்று விசை இடது கையில் தட்டச்சு விதிகளின்படி பலமான ஆள்காட்டி விரலில் அமைந்துள்ளது. மேலும் "வ"வும் கிரந்தங்களும் தவிர மற்ற எல்லா மெய்யெழுத்துக்களும் வலது கையில் அமைந்துள்ளன. எனவே "ஒற்று" தட்டுதலை சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சொல்லுமளவு வேகக்குறை ஏதும் ஏற்படுவதில்லை.
  • இவ்விசைப் பலகையை பழகுபவர்கள், இவ்விதிகள் அனைத்தையும் நினைவில் இருத்த வேண்டியதுள்ளது. இது தட்டச்சு பழகுவதற்கு சற்று சிரமத்தை கொடுக்கின்றது.
  • தற்கால உரைபதிப்பு செயலிகள், இட, வல, ஒற்றை மற்றும் இரட்டை மேற்கோள்காட்டிகளை தாமாகவே இட்டுக் கொள்கின்றன. இவை குறித்த 11ம் விதி பெரும்பாலும் தேவையற்றது. மேலும் இவற்றை உள்ளிட உதவும் செத்த விசை (en:Dead key) மாற்று விசை அழுத்தி பெறப்பட வேண்டியது. இதனால் விசையழுத்தங்கள் அதிகமாகவும் சிக்கலானதாகவும் ஆகின்றன.
  • இதே போன்று "புல்லட்" மற்றும் காப்புரிமை குறிகள் குறித்த 10ம் விதியும் தேவையில்லாதது. இவையும் பெரும்பாலான உரைபதிப்பு செயலிகளில் தன்னிச்சையாக உருவாக்கப் படுகின்றன.

செயலாக்க பிழைகள்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Standardization of Tamil Keyboard Layouts: Recommendations of Tamil Nadu Standardization Committee". tamilnation.org. (ஆங்கில மொழியில்)
  2. TamilNet'99 Conference Conclusions
  3. "தமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும்". விருபா. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  4. இலவச தமிழ் 99 விசைப்பலகை மென்பொருள் பதிவிறக்கம் tavultesoft.com/keyman இது virtual touch keypad -ஐயும் கொண்டு உள்ளது.
  5. *என் எச் எம் ரைட்டர் பரணிடப்பட்டது 2008-10-24 at the வந்தவழி இயந்திரம் அதிகாரப்பூர்வத் தளம் (ஆங்கில மொழியில்) இலவச பதிவிறக்கம், (விண்டோஸ் 8.1, 10 -உம் உண்டு). தமிழ் 99 விசைப்பலகை மென்பொருள் பதிவிறக்கம். www.software.nhm.in

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_99&oldid=3685390" இலிருந்து மீள்விக்கப்பட்டது