தம்பலகாமம் படுகொலைகள்
தம்பலகாமம் படுகொலைகள் (Tampalakamam massacre) அல்லது பாரதிபுரம் படுகொலைகள் 1998 பெப்ரவரி 1 ஆம் நாள் இலங்கையின் கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள தம்பலகாமம், பாரதிபுரம் என்ற சிற்றூரில் இடம்பெற்றன. இலங்கைக் காவல்துறை, மற்றும் சிங்கள ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது எட்டு இலங்கைத் தமிழ்க் குடிமக்கள் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள காவல் நிலையத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 13, 17-வயது சிறுவர்களும் அடங்குவர்.[1] இப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த காவல்துறையினர் ஒருவர் 2000 சனவரி 24 இல் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2]
நிகழ்வு
தொகுசுற்றிவளைப்பில் சுமார் 20 பேர் ஈடுபட்டனர். காவல் நிலையத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டவர்கள் அங்கு மிகக் கிட்டவாக வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை அடுத்து கந்தளாய் காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் என ஒப்புதல் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டனர். அதே நாளில் 6 விடுதலைப் புலிகள் தம்பலகாமத்தில் கொல்லப்பட்டனர் என தேசியத் தொலைக்காட்சி சேவை அறிவித்தது.[1]
தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் கந்தளாய் காவல் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டனர்.[1]
தீர்ப்பு
தொகுதிருகோணமலை மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் 1998 சனவரி 31 அல்லது அதற்கு அடுத்த நாள் குறித்த படுகொலைகள் இடம்பெற்றதாக வழக்கு முறையிடப்பட்டது. திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் 13 காவல்துறையினருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளை விடுதலைப் புலிகள் கொலை செய்ததை அடுத்து, வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.[3] குற்றம் இடம்பெற்று 26 ஆண்டுகளின் பின்னர் 2024 ஏப்ரல் 26 அன்று இவ்வழக்குத் தொடர்பான தீர்ப்பு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்டது.[3] 5 பேர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அன்றைய காலப்பகுதியில் கந்தளாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய அதிகாரி, பிரதிக் காவல்துறைப் பரிசோதகர், மேலும் 3 காவல்துறையினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது, இருவர் குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்யப்பட்டனர், ஏனையோர் சாட்சியங்கள் இன்றி விடுவிக்கப்பட்டனர்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Amnesty International Report". Amnesty International.org. Archived from the original on 31 சனவரி 2004. பார்க்கப்பட்ட நாள் 2006-01-06.
- ↑ "Tampalakamam accused shot dead". Tamilnet.com. பார்க்கப்பட்ட நாள் 2006-01-06.
- ↑ 3.0 3.1 3.2 "Sri Lanka: Five police officers sentenced to death for killing five Tamil civilians 26 years ago". Sri Lanka Brief. 28 ஏப்பிரல் 2024 இம் மூலத்தில் இருந்து 5 மே 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240505043802/https://srilankabrief.org/sri-lanka-five-police-officers-sentenced-to-death-for-killing-five-tamil-civilians-26-years-ago/. பார்த்த நாள்: 5 மே 2024.
- ↑ "Sri Lankan police officers sentenced over massacre of Tamils 26 years later, but dozens released". Sri Lanka Guardian. 29 ஏப்பிரல் 2024 இம் மூலத்தில் இருந்து 29 ஏப்பிரல் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240429183713/https://www.tamilguardian.com/content/sri-lankan-police-officers-sentenced-over-massacre-tamils-26-years-later-dozens-released. பார்த்த நாள்: 5 மே 2024.