தம்புருவளை சித்தி விநாயகர் கோவில்

தம்புருவளை சித்தி விநாயகர் கோவில் இலங்கையின் வடக்கே பருத்தித்துறையை அண்டிய தும்பளை என்னும் இடத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவில் ஆகும்.

ஆரம்பகாலம் தொகு

பறங்கியரின் ஆட்சிக் காலத்துக்கு உட்பட்ட ஏறத்தாழ 1730ம் ஆண்டினைத் தம்புருவளைச் சித்திவிநாயகர் ஆலயத்தின் தோற்றத்துக்குரிய ஆரம்பகாலம் என்று கூறலாம். "அம்புலியம்பதி" என்னும் பெயருடைய காணியே தம்புருவளைக் கோவில் அமைந்துள்ள இடமாகும். ஆல், அரசு, புளி, தென்னை, பனை, முதலிய மரங்கள் விளங்கிய இக்காணியில் சிறிய ஓர் ஆலமரத்தின் நிழலில் இவ்வூர் மக்கள் கொட்டில் ஒன்றை அமைத்தனர். இந்த ஆலமரமே சித்தி விநாயகரின் தலவிருட்சமாகத் திகழ்கிறது. ஆலமரத்தின் கீழ் அமைந்த கொட்டிலில், தமிழ்நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட விநாயகர் விக்கிரகம் ஒன்றை வைத்துப் பொங்கலும் பூசையும் செய்து, மக்கள் வழிபட்டு வந்தனர். தற்போது கர்ப்பக்கிரகத்தில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் மூல மூர்த்திக்கு அண்மையில், வடக்குப் புறமாக இவ்விக்கிரகமும் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.

மடாலயம் தொகு

ஏறக்குறைய நூறாண்டுகள் கழிந்தபின், மக்கள் நாற்புறமும் மதில் சூழ மடாலயம் ஒன்றை அமைத்து, விநாயகர் விக்கிரகத்தை மடாலயத்தின் மகாமண்டபத்திலும், புதிதாகத் தருவிக்கப்பட்ட வேறொரு விநாயகர் விக்கிரகத்தை மூலத்தானத்திலும் பிரதிட்டைசெய்து, மிகவும் சிறப்பாகப் பூசித்து வந்தனர். மடாலயங்கள் அமைக்கப்பட்ட காலத்தில், அம்புலியம்பதியின் அருகில் இருந்த சில காணிகள் உரியவர்களால் அதற்கு வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் மடாலயத்தை அமைத்து விநாயகப்பெருமானை வழிபட்டு வந்ததோடு, திருப்புளிய மரத்தின்கீழ்ச் சூலங்களை வைத்து வைரவ சுவாமியையும், வடக்கு வெளிவீதியின் தென்கரையில் நாகதம்பிரானையும் வழிபட்டுவந்தனர். அக்காலத்தில் ஆனி உத்தரத் திருவிழாவும், திருவெம்பாவைத் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றன.

மடாலயத்துக்கு வெளியே தென்கிழக்கு மூலையில், பூசகர் வசிப்பதற்கு வீடு ஒன்றும் வடக்கு வெளி வீதியில் பூசகரின் உபயோகத்திகுக் கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டன. அதேகாலத்தில் அன்பர்கள் உபயோகத்துக்காக வடமேற்கு மூலையில் இரு குளங்களும், அவற்றின் வடக்கில் சிறு கிணறு ஒன்றும் கட்டப்பட்டன. வடக்கு வெளிவீதிக் கிணறு 1917ம் ஆண்டில் தூர்க்கப்பட்டது. மடாலயத்தின் சுற்றுமதிலின் ஒருபகுதி, இன்றும் ஞானவைரவர் ஆலயத்தைச் சுற்றி மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதைக் காணலாம்.

ஆலயம் தொகு

1891ம் ஆண்டில், பெரிதாக ஆலயம் அமைக்க வேண்டும் என்று ஊர் மக்கள் விரும்பி, விநாயகர் விக்கிரகங்களை ஒருபுறத்தில் வைத்து வழிபட்டுக்கொண்டு மடாலயத்தை அழித்தனர்; 1894ம் ஆண்டில் மூலஸ்தானத்தை வைரக்கற்களால் கட்டி எழுப்பினர். முழுவதையும் வைரக்கற்களால் கட்டிமுடிக்க முடியாத நிலை ஏற்பட்டது எனினும் 1901-1903ம் ஆண்டு காலத்தில் விமானத்தை எழுப்பி மூலத்தானத்தையும் மகாமண்டபத்தையும் கட்டி முடித்து, பெரிய விநாயகர் விக்கிரகத்தைப் பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தனர்.

1909ம் ஆண்டில் தரிசனமண்டபமும் 1912-1913ம் ஆண்டுகளில் தம்ப மண்டபமும் அமைக்கப்பட்டன. இம் மண்டபங்களுக்கான தீராந்தி மரங்கள் திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்டன. 1914-1916ம் ஆண்டுகாலத்தில் கோபுரவாசல் வைரக்கல் திருப்பணிவேலை இடம்பெற்றது. 1917-1919ம் ஆண்டுகாலத்தில் பழைய சுற்றுமதிலை அழித்துப் புதிதாகச் சுற்று மதிலும், வெளிவிதியின் தென்மேற்கு முலையில் கிணறும் கட்டப்பட்டன. 1919-1921ம் ஆண்டுகாலத்தில் மடைப்பள்ளி, அதற்குரிய கிணறும், களஞ்சியம், வாகனசாலை என்பன கட்டப்பட்டன. 1924ம் ஆண்டில் 640 இறாத்தல் நிறையுடைய கண்டாமணி சுப்பையா ஆச்சாரியைக் கொண்டு வார்ப்பிக்கப்பட்டது. 1925-1928ம் ஆண்டுகாலத்தில் மணிக்கோபுர வைரக்கல் திருப்பணிவேலை செய்விக்கப்பட்டது.

1928ம் ஆண்டில் நாகதம்பிரான் கோவிலில், ஆனி உத்தரத்திருநாளன்று பிரதிட்டையும் நடைபெற்றது. வடக்கு வெளிவீதியின் தென்பக்கத்தில் வைத்து வழிபட்ட நாகதம்பிரனும் புதிதாகத் தருவிக்கப்பட்ட விஷ்ணு அம்சம் பொருந்திய நாகதம்பிரனும் இக்கோவிலில் முறையே தென்புறமும் வடபுறமும் ஒன்றாய்ப் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன. 1940ம் ஆண்டளவில் கோவில் வெளிமண்டபமும் கட்டப்பட்டது. 1950ம் ஆண்டில் கோபுரவாசலுக்கு இரும்புக் கேற்றும் 1953ம் ஆண்டில் தேவசபை வெளிவாசலுக்கு இரும்புக் கேற்றும் அமைக்கப்பட்டது.


வெளி இணைப்புகள் தொகு

  1. http://thampuruvalaipillaiyar.com/[தொடர்பிழந்த இணைப்பு]
  2. https://www.facebook.com/ThampuruvalaiVinayakarAalayam
  3. https://www.youtube.com/user/thampuruvalai