மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று
(தலசயனப் பெருமாள் கோயில், மாமல்லபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருத்தலங்களில் 63–ஆவது தலமாக புகழ்பெற்று விளங்குகிறது மாமல்லபுரம். 14–ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது.

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள்
தலசயனப் பெருமாள் கோயிலின் முன்பக்கம்
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் is located in தமிழ் நாடு
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள்
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள்
Location in Tamil Nadu
புவியியல் ஆள்கூற்று:12°37′03″N 80°11′35″E / 12.617475°N 80.192997°E / 12.617475; 80.192997
பெயர்
பெயர்:மாமல்லபுரம் தலசயனப் பெருமாள்
அமைவிடம்
ஊர்:மாமல்லபுரம்
மாவட்டம்:செங்கல்பட்டு மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உலகுய்ய நின்ற பெருமாள்
தாயார்:நிலமங்கை நாச்சியார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:உண்டு
அருகிலுள்ள குன்றில் இருந்து தலசயனப் பெருமாள் கோயிலின் தோற்றம்

பல்லவ மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக அமைந்துள்ள கடற்கரை கோவிலை கட்டினார்கள். இந்தக் கடற்கரை கோவிலில் அப்போது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, பூஜை வழிபாடுகள் நடந்து வந்தன. மாமல்லபுரம் பகுதியில் இயற்கை சீற்றங்களினாலும், கடல் கொந்தளிப்பாலும், ஆங்காங்கே உள்ள கோவில்கள் சிதிலமடைந்து வந்த நிலையில், ஊரின் மையப்பகுதியில், ஸ்ரீதலசயன பெருமாளுக்கு பராங்குச மாமன்னர் இந்தக் கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

வைகானச ஆகம முறைப்படி பிள்ளைலோகம் ஜீயர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இன்றளவும் நான்கு காலபூஜைகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தில் தலசயன பெருமாள் படுத்த நிலையில் தனது காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் கருவறையில் காட்சி தருகிறார். 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் இங்கு தோன்றியதால், பூதத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம் என்ற புகழும் இந்த ஆலயத்திற்கு உண்டு. இங்குள்ள பெருமாளை பூதத்தாழ்வார் போற்றி,

அன்பே தகழியா, ஆர்வமே நெய்யாக

இன்பு உருகு சிந்தை இடுதிரியா - நன்பு உருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

என்று போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.

புண்டரீக புஷ்கரணி குளம்

மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் 7–ஆவது அரசனான மல்லேஸ்வரன் என்ற அரசனின் ஆட்சிக் காலத்தில், தினமும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஒரு நாள் திடீரென மல்லேஸ்வரன் அன்னதானம் வழங்குவதை நிறுத்திவிட்டான். இதனால் பொதுமக்கள் பசி, பட்டினியால் வாடினர். இதனால் கோபமடைந்த வைணவ அடியார்கள், ‘மக்களின் பசியை தீர்க்க முடியாத நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன்’ என்று கூறி, ‘தண்ணீரில் மிதக்கும் முதலையாக இருப்பாய்’ என்று சாபம் கொடுத்து விடுகின்றனர்.

பின்னர் அங்குள்ள புண்டரீக புஷ்கரணி குளத்தில் முதலை உருவில் மல்லேஸ்வரன் தண்ணீரில் வாழ்ந்து வந்தான். அப்போது அந்தக் குளத்தில் 1,000 தாமரை இதழ்களை பறித்து பெருமாளுக்கு படைக்க புண்டரீக மகரிஷி அங்கு சென்றார். இந்த நிலையில் குளத்து நீரில் முதலை உருவில் வசித்து வந்த மல்லேஸ்வரன் புண்டரீக முனிவரிடம், தன் தவறுக்கு வருந்தி, ‘என்னுடைய சாபம் நீங்கப்பெற நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்’ என்று மன்றாடி சாப விமோசனம் கேட்டான். அதற்கு முனிவர், ‘நீ! மக்களை பசி, பட்டினியால் வதைத்தாய். உன் சாபம் நீங்கப்பெற வேண்டும் என்றால், 1000 தாமரை இதழ்களை பறித்துக்கொடு’ என்று கேட்க, அவனும் பறித்துக் கொடுத்தான். பின்னர் கடலில் அருள்பாலித்துக் கொண்டிருந்த தலசயன பெருமாளின் பாதங்களில் 1000 தாமரை இதழ்களை முனிவர் சாத்தினார்.

அப்போது அசரீரியாக ஒலித்த பெருமாள், ‘உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’ என்று கூறினார். அதற்கு புண்டரீக மகரிஷி, ‘பெருமாளே! நான் முற்றும் துறந்த முனிவன். எனக்கென்று எந்த ஆசையும் கிடையாது. இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் பசி, பட்டினி இன்றி நல்ல சுகபோகத்துடன் வாழ வேண்டும். மல்லேஸ்வரனின் சாபம் நீங்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். இறைவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்புரிந்தார்.

பின்னர் அரசன் மல்லேஸ்வரனும் தனது சாபம் நீங்கப்பெற்று மீண்டும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியைத் தொடங்கினான். இதன் வரலாறு பிரம்மாண்ட புராண வாக்கியத்தில் சேத்ரகாண்டம் என்ற பகுதியில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு வரலாற்று புகழ் பெற்ற, புண்டரீக மகரிஷி பாதம் பட்ட இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில், மாசிமகத்தன்று தலசயன பெருமாளுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. மேலும் நம் முன்னோர்களுக்கு இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில் நீராடி மகாளய அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் காசி, கயா, ராமேஸ்வரத்தில் கிடைக்கும் புண்ணியத்தைவிட பல மடங்கு புண்ணியமும், மனநிறைவும், மகிழ்ச்சியும் கொடுக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களாலும் நம்பப்பட்டு வருகிறது.

கோவில் சிறப்பு

தொகு

இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள அரிய காட்சி வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சியாகும். மானிடராகப் பிறந்தவர்கள் இந்தப் பெருமாளை ஒரு முறையாவது தரிசித்தால் முக்திப்பேறு கிட்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் இக்கோவில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற தலம் ஆகும்.

கோவில் அமைப்பு

தொகு

படுத்த நிலையில் பெருமாள் (விஷ்ணு) காட்சி அளிக்கும் தலங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. 14–ஆம் நூற்றாண்டில் பராங்குச மன்னன் கட்டிய காலத்தில் தென்னிந்திய கட்டிடக் கலைக்கு பெயர் சேர்க்கும் விதத்தில், இந்தக் கோவிலில் கருங்கல் தூண்கள் (ஸ்தூபிகள்) அமைத்து கட்டப்பட்டது. 12 ஆழ்வார்களுக்கும் இக்கோவிலில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. குறிப்பாக பூதத்தாழ்வார் இந்தக் கோவிலில் அவதரித்தது விசேஷம் ஆகும். கடந்த காலத்தில் 1957–ஆம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு 1997–இல் தமிழக அரசின் கட்டுமான கழகம் மூலம் ஒரு சிற்பியைக் கொண்டு, வைணவ ஆகம முறைப்படி பழைய கோபுரத்தை இடித்து, தமிழக கட்டிடக்கலைக்கு பெயரும், புகழும் சேர்க்கும் விதத்தில், தரைமட்டத்தில் இருந்து புதிதாக கோபுரம் கட்டி வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சீபுரம் தலைநகராகவும், மாமல்லபுரம் துறைமுகப்பட்டினமாகவும் விளங்கிய காலத்தில் மல்லாபுரி என்ற பெயரோடு விளங்கிய இந்த ஊர் பிற்காலத்தில் மாமல்லபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கடற்கரை கோவிலை மையமாக வைத்தே ஊரின் மத்திய பகுதியில் இக்கோவில் (தலசயன பெருமாள் கோலில்) எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடந்த காலத்தில் சைவமும், வைணவமும் இணைந்து இருந்த கடற்கரை கோவில் பொதுமக்கள் வழிபாட்டில் இருந்தது. பின்னர் தொல்லியல் துறை அக்கோவிலை எடுத்துக்கொண்ட பிறகு பூஜைகள், வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. பின்னர் ஊரின் மத்திய பகுதியில் கட்டப்பட்ட தலசயன பெருமாளை பொதுமக்கள், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வழிபட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இக்கோவில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் அரசு விரைவு, குளிர் சாதன பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் (திருக்கடல்மல்லை) இத்திருக்கோயில் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் 64-ஆவது திவ்ய தேசமான இந்து வைணவ திருக் கோயிலாகும்.[1]

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 35 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°37'02.9"N, 80°11'34.8"E (அதாவது, 12.617475°N, 80.192997°E) ஆகும்.

தல வரலாறு

தொகு

முன்பு காடாக இருந்த இப்பகுதியில் புண்டரீக மகரிஷி தவம் செய்து வந்தார். ஆயிரம் இதழ் கொண்ட அபூர்வ தாமரை மலர் ஒன்றைக் கண்ட மகரிஷி அதனை திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணருக்கு சமர்ப்பிக்க எண்ணினார். அன்பின் மிகுதியால் கடல் நீரை வற்ற இறைத்து விட்டால் திருப்பாற்கடலை அடைந்து தாமரை மலரை இறைவனுக்கு அர்ப்பணித்து விடலாம் என்று கருதினார். கடல் நீரை கைகளால் இறைத்து வற்றச் செய்ய முயன்றார். திருமாலும் ஒரு முதியவர் வடிவம் கொண்டு, முடியாத இக்காரியத்தைச் செய்ய முயலுகின்றீரே, பசித்திருக்கும் எனக்கு உணவளியுங்கள் என வினவ, பசித்தோருக்கு உணவிட வேண்டிய கடமையையும் தமது சீரிய காரியத்தில் ஏற்பட்டுள்ள தடையையும் கண்டு திகைத்தார் மகரிஷி. வந்த முதியவர், மகரிஷி சென்று உணவு கொணரும் வரை தாம் அவரது பணியை மேற்கொள்வதாக உறுதி கூறி மகரிஷியை உணவு கொண்டுவர அனுப்பினார். உணவுடன் மகரிஷி திரும்புவதற்குள் தாமரை மலர் சூடி தரையிலேயே சயன கோலத்தில் பள்ளிகொண்டார் திருமால். திரும்பி வந்து தரிசனம் பெற்ற முனிவர் ஆனந்தத்துடன் வழிபட்டு மகிழ்ந்தார்.

இத்தலத்தில் திருமால் ஆதிசேசனில் பள்ளிகொள்ளாமல் பள்ளிகொண்டுள்ளார். திருப்பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி அமர்ந்துள்ளார். தாமரை மலரும் அமைந்துள்ளது.

பாசுரங்களும் கல்வெட்டுக்களும்

தொகு

இக் கோயிலிலுள்ள இறைவர் உலகுய்ய நின்ற பெருமாள் எனவும் இறைவி நிலமங்கை நாச்சியார் எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள விஷ்ணு பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் திருமாலாகவே காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள் (தமிழில்: தரைகிடந்த பெருமாள்) என வழங்கி வருகின்றது. இதனால் இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.

திருமங்கையாழ்வார் எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் திருக்கடல்மல்லை தலசயனம் என்பது இக்கோயிலையே குறிக்கின்றது என்பது பலரது கருத்து. அவ்வாறன்றி இது கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையிலுள்ள பல்லவர் காலக் கோயிலையே குறித்தது என்பது வேறு சில அறிஞர்கள் கருத்து.

தலத்தின் சிறப்புகள்

தொகு
  • இத்தலமே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்த அவதார திருத்தலம்.
  • உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம் [2]
  • இத்திருக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ உற்சவத்திருவிழா சிறப்பானது.[3]
  • மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராட இராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் என்று குறிப்பிடப்படுகின்றது[4]

தொல்லியல் துறை

தொகு

இந்தத் திருக்கோயிலை நடுவண் அரசின் தொல்லியல் துறை கையகப்படுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. http://temple.dinamalar.com/New.php?id=649
  2. http://temple.dinamalar.com/New.php?id=649
  3. http://www.dinamani.com/edition_chennai/kanchipuram/2014/05/13/மாமல்லபுரம்-தலசயனப்-பெருமா/article2221402.ece
  4. http://tamil.thehindu.com/society/spiritualityமகத்தன்று-நீராட-வேண்டிய-சமுத்திர-ஸ்தலம்-எது/article5682489.ece
  5. "மாம‌ல்லபுர‌ம் கோ‌வி‌லை அரவ‌ங்காடாக மா‌ற்ற முயலு‌ம் ம‌த்‌திய அரசு - வைகோ கு‌ற்ற‌ச்சா‌ற்று". வெப்துனியா வலைத்தளம். 30 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 30 மே 2012.