தளவாய் சுந்தரம் (எழுத்தாளர்)

திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்

தளவாய் சுந்தரம் தமிழகத்தைச் சேர்ந்த இதழாளர், சிறுகதை எழுத்தாளர், பதிப்பாசிரியர். இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தமிழின் முன்னணி இதழ்களில் துணையாசிரியராகப் பணியாற்றியவர்; பொறுப்பாசிரியாகப் பணியாற்றுபவர். பதிப்பகம் ஒன்றில் பதிப்பாசிரியராகப் பொறுப்பு வகிப்பவர்.இதழியல் ஆலோசகர்.

தளவாய் சுந்தரம்
பிறப்பு(1975-03-03)3 மார்ச்சு 1975
ஊரல்வாய்மொழி
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
கல்விஅறிவியல் இளவர் (கணிதம்)
கலைமுதுவர் (தொடர்பியல்)
பணிஊடகவியலாளர்
பணியகம்ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
குமுதம்
ஆனந்தவிகடன்
கிழக்குப் பதிப்பகம்
காட்சிப்பிழை திரை
அறியப்படுவதுஇதழாளர்
எழுத்தாளர்
பெற்றோர்கிருட்டிணன், செல்லம்மாள்
வாழ்க்கைத்
துணை
சூரியா
பிள்ளைகள்கிருட்டிணன்
நித்திலன்
வலைத்தளம்
http://dhalavaisundaram.blogspot.in/

பிறப்பு

தொகு

தளவாய் சுந்தரம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் இராதாபுரம் வட்டத்தில் கூடன்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள ஊரல்வாய்மொழி என்னும் சிற்றூரில் 1975 மார்ச் 3ஆம் நாள் வேளாண்மையைத் தொழிலாகக்கொண்ட கிருஷ்ணன் – செல்லம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர்.[1]

கல்வி

தொகு

தளவாய் சுந்தரம் தான் பிறந்த ஊரல்வாய்மொழியில் உள்ள இந்து தொடக்கப் பள்ளியில் 1980-81ஆம் கல்வியாண்டு முதல் 1984-85ஆம் ஆண்டு வரை தொடக்கக் கல்வி (1-5 ஆம் வகுப்புகள்) பெற்றார். 1985-86ஆம் கல்வியாண்டு முதல் 1991-92ஆம் கல்வியாண்டு வரை நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிசுதவ மேல்நிலைப் பள்ளியில் நடுநிலைக் கல்வி (6-8 ஆம் வகுப்புகள்), இடைநிலைக் கல்வி (9-10 ஆம் வகுப்புகள்), மேல்நிலைக் கல்வி (11-12 ஆம் வகுப்புகள்) ஆகியவற்றை பெற்றார்.[2]

பின்னர் நாகர்கோவில் பிள்ளையார்புரத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் 1993-94ஆம் கல்வியாண்டு முதல் 1995-96ஆம் கல்வியாண்டு வரை பயின்று கணிதத்தில் அறிவியல் இளவர் (Bachelor of Science in Mathematics) பட்டம் பெற்றார். அதன் பின்னர் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 1996-97ஆம் கல்வியாண்டு முதல் 1997-98ஆம் கல்வியாண்டு வரை பயின்று இதழியலும் திரற்றொடர்பியலிலும் கலை முதுவர் (Master of Arts in Journalism and Mass Communication) பட்டம் பெற்றார். தற்பொழுது பேராசிரியர் வி. நடராஜன் வழிகாட்டுதலில் தமிழ் அச்சு ஊடகங்களில் குற்றவாளிகளைச் சித்தரித்தல் (Portray of criminals in Tamil Print Media) என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டு உள்ளார்.[2]

சென்னை தரமணியில் அமைந்துள்ள ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் 1998ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் முதல் 2000ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் வரை அடைவாக்குநராகப் (Indexer) பணியாற்றினார். அப்பொழுது 1940 - 1960 களில் வெளிவந்த பழைய தமிழ் இதழ்களை பக்கம்வாரியாக அடைவாக்கம் செய்தார். குமுதம் குழும இதழ்களான குமுதம்.காம், குமுதம், குமுதம் ஜங்ஷன், குமுதம் தீராநதி ஆகியவற்றில் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் முதல் 2006ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் வரை செய்தியாளராகப் (Reporter) பணியாற்றினார். ஆனந்த விகடன் குழும இதழ்களான ஆனந்த விகடன், விகடன் புக் கிளப் ஆகியவற்றில் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2008ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் வரை துணையாசிரியராகப் (Sub-Editor) பணியாற்றினார். கிழக்குப் பதிப்பகத்தின் இலக்கியப் பிரிவில் 2008ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் முதல் 2008ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் வரை பணியாற்றினார்.[2] குமுதம் இதழில் 2008ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் முதல் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் வரை துணையாசிரியராகப் பணியாற்றினார்.

காட்சிப்பிழை திரை என்னும் இதழ் தொடங்கப்பட்ட பொழுது அதன் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். கயல் கவின் பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றினார். 2009ஆம் ஆண்டு முதல் அம்ருதா இதழில் ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறார்.

கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்னும் இலக்கிய இதழின் ஒருங்கிணைப்பாளராக 2009ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகிக்கிறார்.

படைப்புகள்

தொகு

தளவாய் சுந்தரத்தின் படைப்புகள் அவர் பணியாற்றிய இதழ்கள் அனைத்திலும் செய்திக் கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், கேள்வி பதில் என பல்வேறு வடிவங்களில் வெளியாகி உள்ளன. இவர் எழுதிய சாமியாடிகள் என்னும் சிறுகதை 1995ஆம் ஆண்டில் இந்தியா டுடே இதழில் வெளிவந்தது. இதுவே அச்சில் வந்த இவரது முதற்படைப்பு ஆகும். இவரது சிறுகதைகள் சிலவற்றைக்கொண்ட தொகுப்பு சாவை அழைத்துக்கொண்டு வருபவள் என்னும் பெயரில் தஞ்சாவூர் அகரம் பதிப்பகத்தால் 2001 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு உள்ளது.[2]

தொகுப்புகள்

தொகு

பிற மொழிகளிலிருந்து பலரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் இதழ்கள் பலவற்றில் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து பின்வரும் ஐந்து தொகுதிகளை வெளியிட்டு இருக்கிறார் தளவாய் சுந்தரம்.

வ.எண் நூல் ஆண்டு பதிப்பகம் குறிப்பு
01 மணல் பிரதி 2001 சந்தியா பதிப்பகம் ஜோர்ஜ் லூயி போர்ஹே சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு),
02 மஞ்சள் பூ [3] 2001 சந்தியா பதிப்பகம் ஐந்து சர்வதேச எழுத்தாளர்கள் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)
03 பாறைகள் 2002 சந்தியா பதிப்பகம் இந்தியச் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)
04 எமிலிக்காக ஒரு ரோஜா[4] 2002 சந்தியா பதிப்பகம் இருபத்தைந்து சர்வதேச சிறந்த சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)
05 பிரபஞ்சகானம் 2002 சந்தியா பதிப்பகம் சமகால உலகச் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)

குடும்பம்

தொகு

தளவாய் சுந்தரம் 2004 திசம்பர் 8ஆம் நாள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சூரியா என்பவரை மணந்தார். இவர்களுக்கு கிருட்டிணன், நித்திலன் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வெளியிணைப்பு

தொகு

சான்றடைவு

தொகு
  1. தளவாய்
  2. 2.0 2.1 2.2 2.3 என்னைப்பற்றி
  3. நூலகப்பட்டியல் [தொடர்பிழந்த இணைப்பு]
  4. அ. மங்கை, தமிழ் மொழிபெயர்ப்பின் அரசியல், உங்கள் நூலகம், ஜனவரி-பிப்ரவரி 2008