தானியா சாச்தேவ்
தானியா சாச்தேவ் (Tania Sachdev) என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். இந்தியப் பெண்கள் அனைத்துலக மாசுட்டர், பெண் கிராண்டு மாசுட்டர் போன்ற பிடே அமைப்பு வழங்கும் பட்டங்கள் இவருக்குச் சொந்தமாக உள்ளன. தானியா சதுரங்க வர்ணணையாளர் மற்றும் சதுரங்கத் தொகுப்பாளராகவும் உள்ளார்.
தானியா சாச்தேவ் Tania Sachdev | |
---|---|
தானியா சாச்தேவ், 2014 | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 1986 ஆகத்து 20 தில்லி, இந்தியா |
பட்டம் | அனைத்துலக மாசுட்டர் (2008) பெண் கிராண்டு மாசுட்டர் (2005) |
உச்சத் தரவுகோள் | 2443 (செப்டம்பர் 2013) |
தொடக்கக் காலம்
தொகுதானியா சாச்தேவ் தில்லியில் பிறந்தார். தானியாவுக்கு எட்டு வயதாக இருந்தபோது சதுரங்க விளையாட்டு அவருடைய தாயார் அஞ்சுவால் அறிமுகப்படுத்தப்பட்டது. தானியாவின் பெற்றோர்கள் அவருக்கு தொழில்முறை சதுரங்கப் பயிற்சியைக் கொடுத்தார்கள். எட்டு வயதிலேயே தானியா தனது முதல் அனைத்துலகப் பட்டத்தை பெற்றார். குழந்தையிலிருந்தே பயிற்சியாளர் கே.சி. யோசி தானியாவுக்குப் பயிற்சியளித்தார். எனவே குழந்தையாக இருந்தபோதே தானியா பல போட்டிகளை வென்றார். 12 வயதுக்குட்பட்டோர் இந்திய சாம்பியன்[1], 2000 ஆம் ஆண்டிற்கான பெண்கள் 14 வயதுக்குட்பட்டோர் ஆசியச் சாம்பியன்[2], உலகப் பெண்கள் 12 வயதுக்குட்பட்டோர் சாம்பியன் பட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் போன்றவை அவற்றில் சில வெற்றிகளாகும்[3]. 2002 ஆம் ஆண்டில் தானியா இலங்கையின் மாரவிளா நகரில் நடைபெற்ற பெண்கள் ஆசிய இளையோர் சாம்பியன் பட்டத்தை வென்றார்[4].
தேசிய, அனைத்துலக பாராட்டுகள்
தொகு2005 ஆம் ஆண்டில் பெண் கிராண்ட்டு மாசுட்டர் என்ற பட்டத்தை வென்ற எட்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் தேசிய மகளிர் பிரீமியர் சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் வென்றார். 2007 ஆம் ஆண்டில் தெக்ரானில் நடைபெற்ற மகளிர் ஆசிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியின் ஒன்பது சுற்றுகளில் 6½ புள்ளிகளை எடுத்து சாம்பியன் பட்டத்தை அவர் வென்றார்[5]. 2009 ஆம் ஆண்டு மதிப்பு மிக்க அருச்சுனா விருது தானியாவுக்கு வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ஐசுலாந்து ரேய்க்யாவிக் சதுரங்கப் போட்டியில் சிறந்த பெண்மணி என்ற விருதைப் பெற்றார்[6][7]. களுத்துறையில் நடைபெற்ற பொதுநலவாய மகளிர் சாம்பியன் பட்டப் போட்டியில் தானியா சாம்பியன் பட்டம் பெற்றார்[8] 2008 ஆம் ஆண்டு முதல் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில்
தானியா இந்தியாவின் தேசிய அணியில் விளையாடி வருகிறார். 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகப் பெண்கள் குழு சாம்பியன் பட்டப் போட்டிகளிலும், 2003 ஆம் ஆண்டு முதல் ஆசியப் பெண்கள் குழு சாம்பியன் பட்டப் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடினார். இவை தவிர 2006 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உள்ளரங்கப் போட்டிகள் ஆகியவற்றிலும் விளையாடினார். இசுதான்புல்லில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடின் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல ஆசியப் பெண்கள் குழு சாம்பியன் பட்டப் போட்டிகளில் 2008, 2009, 2012, 2014 ஆம் ஆண்டுகளில் அணிக்காக நான்கு வெள்ளிப் பதக்கங்கள், தனிநபருக்கான மூன்று வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தார்[9].
பிரிட்சு பயிற்சியாளர் தந்திரம் இலக்கமுறை காணொளி வட்டு ஒன்றை சதுரங்க மென்பொருள் நிறுவனமான செசு பேசுக்கு தானியா தொகுத்தளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆனந்த் கார்லசென் இடையிலான போட்டிகளுக்கும் இவரே வர்ணனையாளராக இருந்தார்[10].
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதில்லியில் உள்ள வசந்த் விகார் நவீனப் பள்ளியில் தானியா தன்னுடைய கல்வியை கற்றுத் தேர்ந்தார். சிறீ வெங்கடேசுவரா கல்லுரியில் தன்னுடைய பட்டப் படிப்பையும் முடித்தார்.
ரெட் புல் நிறுவனம் தானியாவிற்கு ஆதரவு நல்கியது[11]. 2014 ஆம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை வடிவமைப்பாள இளைஞர் வீரச் கட்டாரியாவை மணந்து கொண்டார்[12] பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞரான தானியாவின் பொழு போக்கு அம்சங்கள் படிப்பதும் கடையில் பொருட்கள் வாங்குவதுமாகும்[13]..
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tania Sachdev joins the Chessdom commentators team". Chessdom. 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-11-20.
- ↑ "Young champions are back". தி இந்து. 2000-04-04. http://www.thehindu.com/2000/04/04/stories/0704020b.htm. பார்த்த நாள்: 28 January 2016.
- ↑ World Championship in U18 categories. 25/10-7/11/1998 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம். chess.gr. Retrieved 28 January 2016.
- ↑ "25th Asian Juniors 2002, Sri Lanka". Tripod. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
- ↑ 12th Asian Women Indevidual (sic) Chess Championship Chess-Results
- ↑ Ramirez, Alejandro (2016-03-20). "Indian success in Iceland" (in ஆங்கிலம்). ChessBase. பார்க்கப்பட்ட நாள் 2016-08-31.
- ↑ "Abhijeet wins Reykjavik Open; Tania makes Grandmaster norm". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2016-03-17. http://timesofindia.indiatimes.com/sports/chess/Abhijeet-wins-Reykjavik-Open-Tania-makes-Grandmaster-norm/articleshow/51441690.cms.
- ↑ "Gupta and Sachdev overall champions of Commonwealth Open Chess". Daily News. 2016-08-19. http://www.dailynews.lk/?q=2016/08/19/sports/90797.
- ↑ Sachdev Tania team chess record at Olimpbase.org
- ↑ Shah, Sagar (2014-07-04). "Improve Your Chess With Tania Sachdev". Chessbase Chess News. பார்க்கப்பட்ட நாள் 5 September 2016.
- ↑ "Don't mind being called a chess hottie: Tania Sachdev". mid-day.com. 2014-06-08. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
- ↑ Pähtz, Elisabeth (2014-12-14). "Tania Sachdev got married". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
- ↑ "Tania Sachdev". Red Bull (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-30.
புற இணைப்புகள்
தொகு- Tania Sachdev chess games at 365Chess.com
- Interview with Tania Sachdev பரணிடப்பட்டது 2019-02-11 at the வந்தவழி இயந்திரம் by Chessdom
- Interview with Tania Sachdev (2011) by Alina l'Ami
- Interview with Tania Sachdev (2007) பரணிடப்பட்டது 2016-04-04 at the வந்தவழி இயந்திரம் by South Asian Outlook