தாமசு ஜேம்சு எண்டர்சன்
தாமசு ஜேம்சு ஆலன் எண்டர்சன் (Thomas James Alan Henderson, 28 டிசம்பர் 1798 - 23 நவம்பர் 1844) ஒரு இசுகாட்டிய வானியலாரும் கணிதவியலாரும் ஆவார். இவர்தான் புவியில் இருந்து மிக அருகில் உள்ள ஆல்பா செண்டாரியின் தொலைவை முதன்முதலில் கண்டறிந்து பெயர் பெற்றவர். மேலும் இவர்தான் முதல் இசுகாட்லாந்து அரசு வானியலாரும் ஆவார்.
தாமசு ஜேம்சு என்டர்சன் Thomas James Henderson | |
---|---|
1820களில் தாமசு என்டர்சன் | |
பிறப்பு | டண்டீ, இசுக்கொட்லாந்து | 28 திசம்பர் 1798
இறப்பு | 23 நவம்பர் 1844 எடின்பரோ | (அகவை 45)
தேசியம் | இசுக்காட்டியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | நகர வான்காணகம், எடின்பரோ |
அறியப்படுவது | ஆல்பா செண்டாரி தொலைவு |
இளமைப் பருவம்
தொகுடண்டீ நகரில் பிறந்த தாமசு என்டர்சன் டண்டீ உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார், பிறகு வழக்கறிஞராகி உதவியாளரிலிருந்து பல்வேறு உயர்நிலைகளை அடைந்தார். என்றாலும் அவரது கவனம் எப்போதும் வானியலிலும் கணிதத்திலுமே கவிந்திருந்தது. நிலா இடைமறைவைப் பயன்படுத்திப் புவியின் நெட்டாங்கைக் (longitude) காணும் புதிய முறையைக் கண்டறிந்ததும் அப்போது அரச கடற்படைத் துறையின் கடலளவை வரைபடக் கண்காணிப்பளராக இருந்த தாமசு யங்கின் கவனத்துக்கு உள்ளானார். இளைஞர் எண்டர்சனுக்கு வானியல் பெரும்புலத்தில் நுழைய யங் பெரிதும் உதவியுள்ளார். அவரது இறப்பிற்குப் பிறகு எண்டர்சனுக்கு அவரது இடத்தைத் தரும்படி, அரசதிகார மேலிடத்துக்கு யங் ஒரு பரிந்துரைக் கடிதம் முன்னதாகவே தந்துள்ளார்.
அலுவற் காலம்
தொகுஆப்பிரிக்கா
தொகுஇந்த பதவிக்கு அவர் கருதப்படாவிட்டாலும் நன்னம்பிக்கை முனை அரசு வான்காணகத்துக்குப் பரிந்துரைக்கப்படும் அளவுக்குச் செல்வாக்கு அவருக்கு இருந்ததால் அவர் தென்னாப்பிரிக்கா, நன்னம்பிக்கை முனைக்குச் சென்று அங்கே பதவி ஏற்றார். அங்கே அவர் ஏப்பிரல் 1832 இல் இருந்து 1833 வரை கணிசமான விண்மீன் அளவீடுகளை எடுத்தார். இதில் அவர் இப்போதும் பாராட்டப்படுவதற்கான அளவீடுகளும் உள்ளடங்கும். பொலிவுமிக்க தெற்கு விண்மீனாகிய ஆல்ஃபா செண்டாரியின் கருக்கான இயக்கம் பெரிதாக அமைவது அவருக்குச் சுட்டிக் காட்டப்பட்டதால், இது தான் புவிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் என்ற முடிவுக்கு அப்போது அவர் வந்துள்ளார்.
விண்வெளிப்போட்டியின் 1830களின் நிலவரப்படி, இவர்தான் இடமாறு தோற்றப்பிழையைப் பயன்படுத்தி விண்மீனின் தொலைவை, அது மிக அருகில் இருந்ததால், எளிதாகக் கண்டுபிடித்தவர் ஆவார். உடல்நலக் குறைவால் ஓய்வுபெற்று ஐக்கிய ராச்சியம் திரும்பிவந்த பிறகு இவர் அமைதியாக தனது அளவீடுகளை ஆய்ந்து ஆல்ஃபா செண்டாரி, சற்றே ஒரு புடைநொடி (parsec) தொலைவுக்கப்பால், அதாவது 3.25 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதென்ற முடிவுக்கு வந்தார். இந்த மதிப்பு 25.6% அளவே சிறியது என்பதால் ஓரளவுக்குத் துல்லியமானதே எனலாம்.
எண்டர்சன் தனது ஆய்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை. அதற்குள் (ஏற்கெனவே விண்மீன் இடமாறு தோற்றப்பிழையைக் கண்டறிந்ததாகக் கோரிய, முந்தைய மறுதளிக்கப்பட்ட, முயற்சிகள் இருந்தபோதும்) பிரீட்ரிக் வில்லெம் பெசல் என்பார் இவரை முந்திக்கொண்டார். பெசல் 1838இல் "61 சிக்னி" என்ற இரும விண்மீனுக்கான இடமாறு தோற்றப்பிழை 10.3 ஒளியாண்டுகளென (9.6% மிகச் சிறிய மதிப்பு) தன் முடிவை வெளியிட்டார்.[1] எண்டர்சன் தன் முடிவுகளை 1839இல் வெளியிட்டார். என்றாலும் அவருடைய தன்னம்பிக்கையின்மையால் அவர் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
இசுகாட்லாந்து
தொகுஇவர் 1834இல், நன்னம்பிக்கை முனை அளவீட்டால் பெயர்பெற்ற காரணத்தால், முதன்முதலாக இசுகாட்லாந்து வானியற் கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது எடின்பரோ பல்கலைக்கழகத்தில் வெற்றிடமாக இருந்த வானியற் தலைமைப் பதவியும், பிரதமர் மெல்போர்ன் பிரபுவின் அறிவுரையின் பேரில் அவருக்கு வழங்கப்பட்டது. இவர் 1834ஆம் ஆண்டில் இருந்து இறப்புவரை எடின்பரோவில் இருந்த (அப்போது கால்டன்மலை வான்காணகம் என அழைக்கப்பட்ட) நகர வான்காணகத்தில் பணிபுரிந்து வந்தார்.[2] இவர் 1840இல் இலண்டன் அரசு கழக ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
எண்டர்சன் அரசு வானியல் கழகம் (1832), எடின்பரோ அரசு வானியல் கழகம் (1834) உட்பட, பல பெயர்பெற்ற கழகங்களின் உறுப்பினரானார்.[2]
சொந்த வாழ்க்கையும் இறப்பும்
தொகுஇவர் அலெக்சாந்தர் ஆடியின் மகளை மணந்தார். இவருக்கு 1836இல் ஒரு மகள் பிறந்தார்.[4] தாமசு என்டர்சன் 1844 நவம்பர் 23ஆம் நாளன்று எடின்பரோவில் இறந்தார். கிரேஃபிரியர்சு கிர்க்யார்டு அடீ குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bessel, F. W. (1838b). "On the parallax of 61 Cygni". Monthly Notices of the Royal Astronomical Society 4: 152–161. Bibcode: 1838MNRAS...4..152B.
- ↑ 2.0 2.1 Encyclopedia Britannica online. Retrieved 20 March 2013.
- ↑ "Library and Archive catalogue". Royal Society. பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2010.
- ↑ Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2012.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-12.