தாமசு டிரவுட்மன்

தாமசு டிரவுட்மன் (Thomas Trautmann) ஒரு அமெரிக்க வரலாற்றாளர் ஆவார். இவர் அமெரிக்காவில், விசுக்கான்சின் மாநிலத்தில் பிறந்தார். பெலாய்ட் கல்லூரியில் மானிடவியல் கற்ற அவர், இந்தியா மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையிலும் சிலகாலம் பயின்றார். பட்டம் பெற்றபின்னர், இலண்டன் பல்கலைக்கழகத்தின், கீழைத்தேச, ஆபிரிக்க ஆய்வுப் பள்ளியில் சேர்ந்து, அர்த்தசாஸ்திரம் தொடர்பான ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அங்கேயே விரிவுரையாளராகவும் சிலகாலம் பணியாற்றிய அவருக்கு அக்காலத்தில் அந்நிறுவனத்தில் பணியாற்றிய தமிழ் துறையைச் சேர்ந்த ஜான் மார் என்பவரின் பழக்கத்தினால் தமிழ் மொழி மீதும் ஆர்வம் ஏற்பட்டது.[1] 1968 ஆம் ஆண்டில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் மானிடவியல் துறையில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார்.

நூல்கள் தொகு

ஆங்கிலம், சமசுக்கிருதம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர் டிரவுட்மன். இவை தவிரத் தமிழ் உட்பட்ட பேலும் பல ஐரோப்பிய, ஆசிய மொழிகளையும் இவர் அறிந்துள்ளார். இந்திய வரலாறு, பண்பாடு ஆகியவற்றோடு தொடர்புள்ள பல நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். அர்த்தசாஸ்திரம் பற்றி முனைவர் பட்டத்துக்கான அவரது ஆய்வுகளைத் தொடர்ந்து "கௌடில்யரும் அர்த்தசாஸ்திரமும்" (Kautilya and the Arthasastra) என்னும் தலைப்பில் 1971 ஆம் ஆண்டில் அவரது முதல் நூல் வெளிவந்தது. இதன் பின்னர்;

  • திராவிட உறவுமுறை (Dravidian Kinship), 1981
  • லூயிஸ் என்றி மார்கனும் உறவுமுறையின் கண்டுபிடிப்பும் (Lewis Henry Morgan and the Invention of Kinship), 1987
  • லூயிஸ் என்றி மார்கன், மேரி எலிசபெத் மார்கன் ஆகியோரது நூலகம் (The Library of Lewis Henry Morgan and Mary Elizabeth Morgan), 1987. - இது கார்ல் சன்ஃபோர்ட் கபேலாக் என்பவருடன் இணைந்து எழுதப்பட்டது.
  • ஆரியரும் பிரித்தானிய இந்தியாவும் (Aryans and British India), 1997.
  • இந்தியாவில் ஆரியர் தொடர்பான விவாதம் (The Aryan Debate in India), 2005

ஆகிய நூல்கள் இவர் எழுதி வெளி வந்துள்ளன. 2006 ஆம் ஆண்டில், மொழிகளும் தேசங்களும்: குடியேற்றவாதச் சென்னையில் திராவிடச் சான்று (Languages and Nations: The Dravidian Proof in Colonial Madras) என்னும் நூலும் வெளிவந்துள்ளது. இந்நூல், திராவிடச் சான்று என்னும் தலைப்பில் தமிழிலும் வெளிவந்துள்ளது.

குறிப்புக்கள் தொகு

  1. தாமஸ் டிரவுட்மன், 2007 பக்.16

உசாத்துணைகள் தொகு

  • தாமசு டிரவுட்மன், திராவிடச் சான்று (மொழிபெயர்ப்பு: இராம. சுந்தரம்), சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனாமும் காலச்சுவடு பதிப்பகமும், சென்னை, 2007.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_டிரவுட்மன்&oldid=3305650" இலிருந்து மீள்விக்கப்பட்டது