தாமசு ஆல்வா எடிசன்

அமெரிக்க கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர்
(தாமஸ் எடிசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிப்ரவரி 11, 1847அக்டோபர் 18, 1931 . ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.

A Day with Thomas Edison (1922)

தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் சில, இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும்.. எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிம நிறுவனத்தை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

இளமை

தொகு
 
இளமைக்கால எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது! 1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் கலங்கரைவிளக்கக் காப்பாளராகவும் , கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தின் தச்சராகவும் சாமுவெல் வேலை பார்த்தார்.

கல்வி

தொகு

தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது! எனவே, அவரின் தாயார் பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்கூட ஆசிரியரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும், பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11.

தனது ஏழாவது வயது முதல் சூழ்நிலைச் சாதனங்களின் மேல் எடிசனுக்கு ஆர்வம் மிகுந்தது. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் (Richard Parker) எழுதிய 'இயற்கைச் சோதனைத் தத்துவம் ' (Natural & Experimental Philosophy) என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பைன் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், ஐசக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைக்கேல் பாரடேயின் செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். இவை அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணித அறிவும் அறிவியல்இயற்பாடு எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார்.

1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே - பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, தாமசின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பறிபோனது.

அதன் பின்னர் இரயில்நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார். சில காலம் பன்றி வெட்டினார்; காய்கறி வணிகம் செய்தார். இரயில் வண்டியின் ஒரு பெட்டியை அச்சகமாக மாற்றி அதிலிருந்தபடியே 1862-இல் ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்; அதுவும், அக்டோபர் 28, 1868 அன்று (மின் வாக்குப்பதிவி) முதல் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.

ஆய்வுகள்

தொகு
 
மென்லோ பூங்கா ஆய்வறை

முழுநேரக் கண்டுபிடிப்பாளராகத் தன் வாழ்க்கையை நடத்தும் பொருட்டு தாமசு நியூ செர்சியிலுள்ள நெவார்க்கிற்குச் சென்றார். நியூ செர்சியிலுள்ள மென்லோ பூங்கா என்ற இடத்தில் தன் ஆய்வகத்தை அமைத்தார் எடிசன். பங்குச்சந்தைப் புள்ளிகளை தொடராகப் பதிவேற்றும் துடிநாடா, மேம்படுத்தப்பட்ட தந்திக்கருவிகள் ஆகிய கருவிகளை உருவாக்கினார். ஆனால் எடிசனுக்குப் பெயர் பெற்றுத்தந்த கருவி 1877-இல் அவர் ஆக்கிய ஒலிவரைவியே. அதன் பிறகே “மென்லோ பூங்காவின் மேதை” என்ற பட்டம் அவருக்கு வழங்கலாயிற்று.

தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி

தொகு

1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் புகைவண்டி நிலையத்தில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் மத்திய புகைவண்டி நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்குவரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளி மற்றும் கோடுகளாகப் பதிவானதால், அவரது காது கேளாமைத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது இவ்வேலையை எளிதாக்கும் தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமையைக் காட்டினார். 1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார். அத்துடன் தந்தியின் மின்குறிகளைத் தானாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .

எடிசன் தனது தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப்பணிக்கு, நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கு "பிராங்க் போப்" என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் உலகப் பதிப்பி ' (Edison Universal Stock Printer), மற்றும் வேறு பதிக்கும் கருவிகளையும் உருவாக்கினார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் தானியங்கித் தந்தி (Automatic Telegraph) ஏற்பாட்டைச் செப்பனிட்டார். இரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக்கருவி மின்குறி அனுப்புதலை மிகவும் சிக்கலாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், இரசாயன அறிவை உயர்த்த வேண்டியதாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா (Electric Pen), பிரதி எடுப்பி (Mimeograph) போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த பட்டறிவே, எடிசன் இசைத்தட்டு (கிராமஃபோன்) (Phonograph) கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று. எடிசன் புதிய கருவிகளைக் கண்டு பிடிக்க முனையும் போது, வேறு பல அரிய கருவிகளும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி '(Carbon Transmitter) என்னும் சாதனம்.

முதல் ஒலிவரைவி கண்டுபிடிப்பு

தொகு
 
ஒலிவரைவியுடன் எடிசன்

1877 இல் எதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி (கிராமஃபோன்) ஆகும். பிரான்சு நாட்டைச் சேர்ந்த லியான் ஸ்காட் 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதியிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு (Phonography) எனப்பட்டது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச்சுவடுகள் பாரபின் தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், கிறுக்கப் பட்டு நுணுக்கமாகத் தாளில் வரையப்பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!

எடிசன் அடுத்து ஓர் உருளை மீது தகரத் தாளைச் சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் ஒலிவரைவி [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் இவரது ஒலிவரைவி ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர பத்தாண்டுகள் ஆயின.

மின்குமிழி, மின்சக்தி சேமிப்புக்கலன் கண்டுபிடிப்பு

தொகு
 
எடிசன் கண்டுபிடித்த முதல் மின் விளக்கு, 1879-ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் வீதிக் கம்பங்களில் பயன்படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளிப் பொறியாளர்களுக்குத் தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' தொடர்பாக பல ஆய்வுகள் செய்து வந்தனர். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல்' எழுப்பிய வெப்ப வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன்படுத்தி 'நுண்ணுனர் மானி ' என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன்படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வமேற்பட்டது.

எடிசனின் மின்விளக்கு குறித்த ஆய்வுகளுக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக 30,000 டாலர் தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் (Francis Upton) எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது.

மின்தடை மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் செல்லும் மின்னோட்டம் மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்குகளும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்கவில்லை. எடிசன் குழுவினர், பிளாட்டினம் கம்பியைச் சுருளைச் வெற்றிடக் குமிழி ஒன்றில் உபயோகித்துக், கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உருவாக்கினார்கள்.

1881 ஜனவரியில் முதல் 'மின் விளக்கொளி அமைப்பு ' வணிகமாக்கும் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் & கெட்சம் ' அச்சக மாளிகையில் நடந்தது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார நிறுவனம் ', எடிசனின் நேரடிப் பார்வையில் நிறுவப்பட்டது. அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்பித்தது. பின்னர் மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய உணவு விடுதிகள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.

 
1897-ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட விரைவில் எரியக்கூடிய மின் விளக்கு

மின்சார மோட்டார்

தொகு

இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார சேமிப்புக்கலனை உண்டாக்க போதிய ஆய்வுகள் செய்து முடித்தார்கள். இயந்திர ஆற்றலால் ஓட்டினால் மின்சார சேமிப்புக்கலனில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்பி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக மின்சார சேமிப்புக்கலனின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே கருவி இயந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனை ஆகும்.

எடிசன் விளைவு

தொகு

விளக்கு எரியும் போது, வெற்றிட மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்தபோது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1898 இல் ஜெ. ஜெ. தாம்சன் முதன் முதல் 'எதிர் மின்னணுத் துகளைக் ' [Electron] கண்டுபிடித்தார். அதன் பின்னரே அறிவியலறிஞர்கள் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எலக்ட்ரான்கள் சூடான முனையிலிருந்து குளிர்ச்சியான முனைக்கு வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எலக்ட்ரான் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு' இது அடிகோலியது.

நியூயார்க் நகரமும் மின்விளக்குகளும்

தொகு

அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும் வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை. ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்பதை அவரைத் தவிர மற்ற விஞ்ஞானிகள் உட்பட யாரும் நம்பவில்லை. விஞ்ஞானிகள் எடிசனுக்கு எதிராகத் தங்கள் கருத்துகள் மூன்றை ஆணித்தரமாகக் கூறினர். 1. மின்சாரத்தைப் பல இடங்களுக்கு வினியோகிக்க முடியாது. 2. அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு அதைப் பயன்படுத்துவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. 3. மின்சார விளக்கு கேஸ் லைட் போல மலிவானதல்ல. அக்காலகட்டத்தில் அறிவியல் அந்த அளவே வளர்ந்திருந்ததால் அவர்கள் கூறியதில் உண்மை இருந்தது. வழிகள் இல்லாவிட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தமது ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார். இருநூறு நோட்டுகளில், 40,000-த்திற்கும் மேற்பட்ட பக்கங்களில், தம் கருத்துகளையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ந்தார்.

கடைசியில் அவர் கனவு நனவாகியது. உலகிலேயே மின்விளக்குகளால் ஒளி பெற்ற முதல் நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது. பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும் அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்றபோது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறோர் ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி குறித்து பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது அவர் புன்னகையுடன் சொன்னார்: நேற்றைய கண்டுபிடிப்பு பற்றிப் பேசி இன்றைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.” எடிசனின் வெற்றியில் ஒரு சதவீதம் அறிவு, 99 சதவீதம் உழைப்பு” என்ற பொன்மொழி பிரசித்தமானது

திரைப்பட படப்பிடிப்புக் கருவி

தொகு
சூன் 1894 லெனார்டு-குசிங்கு போட்டி - கினட்டோசுக்கோப்புக் கருவியில் பதிவு செய்யப்பட்டது.

கிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடிசன் நகரும் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை உருவாக்க, அதுவரை வெளிவந்த ஆய்வு முயற்சிகளையும், தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார். இந்த எண்ணம் எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது:

'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் ' மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை திரைப்பட படப்பிடிப்புக் கருவியுடன் இணைத்துப் 'பேசும் படம் ' என்னால் தயாரிக்க முடியும் '

.

முதல் நகரும் படம் வெளிவரப் உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒருவிதப் பதிவு நாடாவைப் பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.

மறைவு

தொகு

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் 'சுதந்திர தேவி சிலையின்'(Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_ஆல்வா_எடிசன்&oldid=3620156" இலிருந்து மீள்விக்கப்பட்டது