தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட்

ஆங்கில எழுத்தாளர்

தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் (Thomas Stearns Eliot, 26 செப்டம்பர் 1888 - 4 சனவரி 1965) என்பவர் ஒரு பிரித்தானியக் கட்டுரையாளர், நூல் வெளியீட்டாளர், நாடக ஆசிரியர், இலக்கிய மற்றும் சமூக விமர்சகர், இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகவும் விளங்கியவர்.[2] 1914 ஆம் ஆண்டு தனது 25-வது வயதில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அங்கேயே தன்னுடைய பணி மற்றும் திருமணத்தை அமைத்துக்கொண்டார். மேலும் அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுத்து 1927 ஆம் ஆண்டு தனது 39 வது வயதில் பிரித்தானிய குடிமகனானார்.[3]

டி. எஸ். எலியட்
T. S. Eliot
1934 இல் எலியட்
1934 இல் எலியட்
பிறப்புதாமஸ் ஸ்டியன்ஸ் எலியட்
(1888-09-26)26 செப்டம்பர் 1888
சென் லூயிசு, மிசூரி, ஐக்கிய அமெரிக்கா
இறப்பு4 சனவரி 1965(1965-01-04) (அகவை 76)
கென்சிங்டன், இலண்டன்
தொழில்கவிஞர், நாடகக் கலைஞர், நாடகத் திறனாய்வாளர்
குடியுரிமைபிரித்தானியர்
கல்விமெய்யியல் (ஆர்வர்டு, 1909)
முனைவர் (ஆவர்டு, 1915–16)[1]
காலம்1905–1965
இலக்கிய இயக்கம்நவீனத்துவம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்"The Love Song of J. Alfred Prufrock" (1915), The Waste Land (1922), Four Quartets (1943), "Murder in the Cathedral" (1935)
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1948), Order of Merit (1948)
துணைவர்
விவியன்
(தி. 1915; முறிவு. 1932)

வலரி
(தி. 1957⁠–⁠1965)
கையொப்பம்

எலியட் எழுதிய "தி லவ் சாங் ஆப் ஜெ. ஆல்பிரேட் ப்ருபிராக்" (1915) என்ற கவிதை அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் நவீனத்துவ இயக்கத்தின் தலைசிறந்த படைப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து "தி வேஸ்ட் லேண்ட்" (1922), "தி ஹாலோ மென்" (1925), "சாம்பல் புதன்" (1930) மற்றும் "நான்கு குவார்டெட்ஸ்" (1943)[4] உள்ளிட்ட மிக பிரபலமான ஆங்கில கவிதைகள் வெளிவந்தன. இவருடைய ஏழு நாடகங்களில் குறிப்பாக "மர்டர் இன் தி கதீட்ரல்" (1935) மற்றும் "தி காக்டெய்ல் பார்ட்டி" (1949) போன்ற நாடகங்கள் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றன. தற்கால கவிதைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் முன்னோடியாக திகழ்ந்தமைக்காகவும் 1948 இல் இலக்கியத்தில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.[5][6]

பின்னணி

தொகு

எலியட் ஐக்கிய அமெரிக்க நாட்டில் மிஸ்ஸௌரி மாநிலத்தில், செயிண்ட்.லூயிஸ் நகரில் 1888 இல் பிறந்தவர். இவரது தந்தை ஹென்றி வேர் எலியர் ஒரு தொழிலதிபர்; செங்கல் ஆலை நடத்தியவர். தாய் சார்லெட்ஸ்டெர்ன்ஸ் எழுத்தாற்றலும், கலையார்வமும் மிக்க சமூகசேவகி. தந்தை வழிபாட்டனார் செயிண்ட் லூயில் நகரில், இறையொருமைக் கோட்பாட்டுத் திருச் சபையையும் (unitarian church), வாஷிங்டன் பல்கலைக் கழகத்தையும் நிறுவியவர்; சமயச் சார்பான பல நூல்களை எழுதியவர். எலியட் ஓர் எழுத்தாளராகவும் சமயக் கவிஞராகவும் உருப்பெற்றதற்கு அடித்தளமாக அவருடைய பாட்டனாரும் தாயாரும் விளங்கினர். எலியட் சிறந்த வங்கி ஊழியராகவும், பதிப்பாளராகவும் விளங்கியதற்குத் தந்தையின் தொழில் திறமை அடித்தளமாக விளங்கியது.[7]

கல்வி

தொகு

எலியட்டின் இளமைக் கல்வி செயிண்ட் லூயிசில் இடம் பெற்றது. பின்னர் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1906லிருந்து 1910 வரை உயர்கல்வி பயின்றார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எலியட் சிறந்த மாணவராகக் கருதப்பட்டார். 1900 ஆம் ஆண்டில் இலத்தீன் பாடத்தில் சிறப்பான தேர்ச்சி பெற்றதற்காகத் தங்கப் பதக்கம் பெற்றார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் விரிவாக மொழி, இலக்கியப் பாடங்களைப் பயின்றார். ஒப்பிலக்கிய ஆய்வில் இளமையிலிருந்தே இவருக்கு விருப்பம் அதிகம். அதனால் கிரீக், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கில இலக்கியங்களை விருப்பப் பாடமாகவும் பயின்றார்.[7]

எலியட்டின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர்கள் இர்விங்பாபிட், ஜியார்ஜ் சாந்தாயணா என்ற இரண்டு பேராசிரியர்கள். பண்டைய மரபுகளில் எலியட் தெளிந்த அறிவு பெற்றதற்கு இவர்களே காரணம். ஆர்தர் சைமன்ஸ் என்பார் எழுதிய ‘இலக்கியத்தில் குறியீட்டு இயக்கம்’ (the symbolist movement in literature) என்ற நூலை 1908-இல் எலியட் படித்தவுடன், பிரெஞ்சுக் குறியீட்டுக் கவிஞர்களின் படைப்பில்- குறிப்பாக லாஃபோர்க்கின் கவிதைகளில்- இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்திலேயே இவருக்குக் கவிதை எழுதுவதில் ஆர்வம் இருத்தது. ஹார்வார்டு இதழான 'அட்வகேட்' (advocate)டைப் பதிப்பிக்கும் பொறுப்பாளராக இருந்த எலியட் அதில் தமது துவக்ககாலக் கவிதைகளை வெளியிட்டார்.

1910-ஆம் ஆண்டில் ஹார்வார்டில் பட்டம் பெற்ற பிறகு பாரிசு நகரம் சென்று சார்மோன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஓராண்டுக்காலம் பிரெஞ்சு குறியீட்டிலக்கியங்களைப் பயின்றார். பாரிசில் அப்போது வாழ்ந்த பிரெஞ்சு இலக்கியவாதிகளோடு நெருங்கிப் பழகி, அவர்கள் படைப்புக்களையும் பயின்றார். பின்னர் பவேரியா, ஜெர்மனி முதலிய நாடுகளுக்குச் சென்று, அங்கே முக்கியமான் சில ஜெர்மன் எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களுடைய படைப்புக்களையும் பயின்றார். பிறகு மீண்டும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருத இலக்கியமும் இந்தியத் தத்துவமும் பயின்றார். ஓய்வு நேரங்களில் குத்துச்சண்டை பயின்றார். ஆன் முனையில் (Cape Ann) தம் தந்தை கட்டியிருத்த ஓய்வுக்கால மாளிகையில் தமது விடுமுறை நாட்களைக் கழித்தார். அப்போது படகு ஓட்டும் பயிற்சியில் வல்லவரானார். இவருடைய கவிதைகளில் கடற்பயணம் பற்றிய படிமங்கள் அதிகமாகக் காணப்படுவதற்குக் காரணம் இதுதான்.[7]

பிரிட்டனில் குடியேறல்

தொகு

முதல் உலகப் போர் துவங்கியதும் எலியட் ஜெர்மனியை விட்டு வெளியேறி இலண்டனில் குடியேறினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மீண்டும் தமது கல்வியைத் தொடர்ந்தார். இங்கிலாந்தில் இருந்தபடியே பிராட்லேயின் தத்துவச் சிந்தனைகளை ஆய்வு செய்து ‘முனைவர்’ பட்டம் பெற விரும்பித்தன் ஆய்வுக் கட்டுரையை ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அப்பட்டத்தைப் பெற அவர் ஹார்வார்டு மீண்டும் செல்லவில்லை.

இலண்டன் வாழ்க்கை இவருடைய இலக்கிய முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவியது. இலண்டனில் அப்போது பல இலக்கிய வட்டங்கள் இருந்தன. அவற்றுள் புளும்ஸ்பரி இலக்கிய வட்டமும், கவிஞர் சிட்வெல்லின் இலக்கிய வட்டமும் குறிப்பிடத்தக்கவை. யேட்ஸ், எஸ்ரா பவுண்ட் போன்ற சிறந்த கவிஞர்களின் தொடர்பு இவரது கவிதையாற்றலைச் சானைபிடித்துக் கொள்ளப் பெரிதும் உதவியது.

1927-ஆம் ஆண்டு தம்மை ஆங்கிலக்குடிமகனாகப் பதிவு செய்து கொண்டபோது, ஆங்கிலிகன் கிறித்தவ சமயத்திலும் சேர்ந்து கொண்டார். அதன் பிறகு இவர் எழுதிய ‘மாகியின் பயணம்’ (The Journey of the Magi) ஆஷ் வெடனெஸ்டே (Ash Wednesday) ஆகிய இரண்டு நூல்களின் குரலும், இவர் புதிதாகச் சேர்ந்த சமயத்தின் உணர்வுகளை ஓங்கி ஒலிக்கக் காணலாம்.[7]

தொழில்

தொகு

பொருளாதார நெருக்கடி காரணமாக இவர் சில ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், பல ஆண்டுகள் லாயிட்ஸ் வங்கி அலுவலராகவும் பணிபுரிந்தார். இவ்வாறு பணிபுரிந்த பத்தாண்டுக் காலம் எலியட் நிறைய எழுதினார். அளவுக்கு மீறி உழைத்ததால் அடிக்கடி நோய் வாய்ப்பட்டார். 1918 இல் கடற்படையில் சேரத் தம்மைப் பதிவுசெய்துகொண்டார்; மோசமான உடல்நிலை காரணமாக நிராகரிக்கப்பட்டார். 1917 லிருந்து 1919 வரை ‘தி எகோயிஸ்ட்’ (The Egoist) என்ற இதழின் துணையாசிரியராக இருந்தார். 1923-இல் கிரிடீரியன் (Criterion) என்ற நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று இரண்டாம் உலகப்போர் துவங்கும்வரை தொடர்ந்து நடத்திவந்தார். 1925-இல் ஃபேபர் அண்டு ஃபேபர் (Faber aud Faber) என்ற பதிப்பகத்தின் பங்குதாரர் ஆனார். பின்னர் அதன் இயக்குநராகித் தம் வாழ்நாள் இறுதி வரையிலும் அதைத் திறம்பட நடத்தி வந்தார்.[7]

இலக்கியப் பணிகள்

தொகு

எலியட் தாம் வாழ்ந்த காலச் சூழ்நிலைக்கு ஏற்பப் பல்வேறுபட்ட சிக்கலான பொருள்களைத் தமது கவிதைக்குரிய பாடு பொருள்களாக மேற்கொண்டார். கவிதைகள் மட்டுமன்றி, நுட்பமான இலக்கியத் திறனாய்வு நூல்களும், நாடகங்களும் எழுதியிருக்கிறார். என்றாலும் இவருக்கு அழியாப் புகழையும், நோபெல் பரிசையும் தேடித் தந்தது பாழ்நிலம் படைப்பே. துவக்க காலத்தில் எலியட் எழுதிய ‘ப்ருஃப் ரோக்கின் காதற் பாடல்’ The Love, Song of Alfred Prufrock மிகவும் விளம்பரம் பெற்றது. எல்லாராலும் விரும்பிப் படிக்கப்பட்டது.[7]

தனிப்பட்ட வாழ்கை

தொகு

1915-இல் ‘விவியன் ஹெய்க்’ என்ற நடனமாதைத் திருமணம் செய்து கொண்டு நிரந்தரமாக இலண்டனில் தங்கிவிட்டார். இவருடைய மனைவி விவியன் ஹெய்க் நீண்ட நாள் படுக்கையில் கிடந்து 1947 இல் இறந்துபோனார். பின்னர், தம்மிடம் செயலாளராகப் பணிபுரிந்த ‘வேலரி ஃப்ளெச்சர்’ என்ற மாதை 1957 இல் திருமணம் செய்து கொண்டார். இறுதிக் காலத்தில் அந்த அம்மையார் எலியட்டை அன்போடும் பரிவோடும் கவனித்துக் கொண்டார்.[7]

இறப்பு

தொகு

1965 ஆம் ஆண்டு சனவரி 4 ஆம் நாள் புகழின் உச்சியில் வாழ்ந்தபோதே இலண்டனில் எலியட் உயிர்நீத்தார். 17 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த அவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த ‘ஈஸ்ட் கோக்கர்’ என்ற குக்கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.[7]

அங்கீகாரங்கள்

தொகு

எலியட்ட் வாழ்ந்த காலத்திலேயே முதல்தரமான இலக்கிய மேதையாக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பல முறை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்திவிட்டு வந்தவர்; சாகும் வரை ஓய்வின்றி எழுதிக் கொண்டிருந்தவர்; உலகின் மிகச் சிறந்த பரிசுகளான ஆர்டர் ஆஃப் மெரிட், நோபெல் பரிசு ஆகியவற்றோடு வேறுபல பரிசுகளும் பெற்றார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Jewel Spears Brooker, Mastery and Escape: T.S. Eliot and the Dialectic of Modernism, University of Massachusetts Press, 1996, p. 172.
  2. Bush, Ronald. "T.S. Eliot's Life and Career." American National Biography. Ed. John A Garraty and Mark C. Carnes. New York: Oxford University Press, 1999.[1]
  3. Bloom, Harold (2003). T.S. Eliot. Bloom's Biocritiques. Broomall: Chelsea House Publishing. p. 30. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  4. "Thomas Stearns Eliot", Encyclopædia Britannica, accessed 7 November 2009.
  5. "The Nobel Prize in Literature 1948". Nobelprize.org. Nobel Media. பார்க்கப்பட்ட நாள் 26 April 2013.
  6. "The Nobel Prize in Literature 1948 – T.S. Eliot", Nobelprize.org, taken from Frenz, Horst (ed). Nobel Lectures, Literature 1901–1967. Amsterdam: Elsevier Publishing Company, 1969, accessed 6 March 2012.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 7.8 கவிஞர் முருகு சுந்தரம் (1993). "புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்". நூல். அன்னம் (பி)லிட். pp. 66–77. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_ஸ்டியன்ஸ்_எலியட்&oldid=4055558" இலிருந்து மீள்விக்கப்பட்டது