தாரிக் இப்னு சியாத்

தாரிக் இப்னு சியாத் (Tariq ibn Ziyad, அரபு: طارق بن زياد), இறப்பு 720) பொ.கா. 711-718 இல் விசுகோத்திய எசுப்பானியா மீதான இசுலாமியப் படைகளின் வெற்றிக்கு வழி நடத்திய ஒரு முஸ்லிம், பர்பர் தளபதி ஆவார். ஐபீரியத் தீபகற்பத்தின் வரலாற்றிலேயே மிக முக்கியமான படைத்தளபதியாக அவர் கருதப்படுகிறார். உமையா கலீபா முதலாம் அல்வலீதின் கட்டளைப்படி, மொரோக்கோவின் வடகரையிலிருந்து பெரும் படையொன்றை வழிநடத்திச் சென்ற அவர், அதனைத் தற்போது ஜிப்ரோல்டர் எனக் குறிப்பிடப்படும் பெரும் மலையின் அடிவாரத்தில் குவித்தார். "ஜிப்ரோல்டர்" எனும் பெயர், இவரது பெயரைக் குறிக்குமுகமாக "தாரிக்கின் மலை" எனப் பொருள் படும் அரபு மொழிப் பெயரான ஜபல் தாரிக் (جبل طارق) என்பதன் எசுப்பானிய மருவலாகும்.

தாரிக் இப்னு சியாத்
طارق بن زياد
பொ.கா. 711 இல் தாரிக் இப்னு சியாத் எசுப்பானியாவை வெற்றி கொண்டார்
பிறப்பு670
disputed
இறப்பு720
திமிஷ்கு, சாம்
சார்புஉமையா கலீபகம்
தரம்தளபதி
போர்கள்/யுத்தங்கள்எசுப்பானிய வெற்றி
வேறு செயற்பாடுகள்அல்-அந்தலுஸின் ஆளுநர்

தோற்றம்

தொகு

தாரிக் இப்னு சியாதின் தோற்றம் (குடும்பம்) அல்லது தேசியம் பற்றிப் பெரும்பாலான நடுக்காலத்திய வரலாற்றாளர்கள் மிகக் குறைந்தளவு தகவல்களையே வழங்குகின்றனர் அல்லது அறவே வழங்குவதில்லை. இப்னு அப்துல் ஹக்கம், இப்னுல் அதீர், அத்தபரீ, இப்னு கல்தூன்[1] போன்றோர் இவரது பிறப்புப் பற்றி எதுவுமே கூறுவதில்லை. அதனையே தற்கால ஆக்கங்களான இஸ்லாமியக் கலைக்களஞ்சியம், கேம்பிரிஜ் இஸ்லாமிய வரலாறு எனபனவும் பின்பற்றுகின்றன. இவரது காலத்திலிருந்து 400 - 500 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட ஆக்கங்கள் இவரது பின்னணி பற்றி வித்தியாசமான தரவுகளையே தருகின்றன. அவையாவன:

  • அவர் ஹம்தான் பகுதியைச் சேர்ந்த ஒரு பாரசீகர்.[2]
  • அவர் ஹளரமௌத்தின் பனூ சதப் கோத்திரத்தின் பிரிவாகிய அல்-கிந்தா குலத்தினரின் ஓர் உறுப்பினர் அல்லது விடுதலை செய்யப்பட்ட அடிமை[3].[4]
  • அவர் வட ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒரு பர்பர் இனத்தவர். இங்கேயும் கூட பல்வேறு வித்தியாசமான வாசகங்கள் காணப்படுகின்றன. தற்கால ஆய்வாளர்கள் அவரை ஒரு பர்பர் எனக் குறிப்பது எந்தவொரு காரணமும் கூறாமல் வெறுமனே ஏதோ ஒரு கூற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தான்.[5] (சனாத்தா, வல்ஹாஸ், வர்பஜூமா, நப்ழா போன்ற கோத்திரங்களுடன் தொடர்புடைய) பர்பர் கோத்திரங்கள் அனைத்துமே தாரிக் இப்னு சியாதின் காலத்தில் திரிப்பொலித்தானியாவிலேயே இருந்தன.[6]
    • இது பற்றிய ஆக முந்திய குறிப்பு 12 ஆம் நூற்றாண்டுப் புவியியலாளரான அல்-இத்ரீசீ அவர்கள் இப்னு சியாத் என்னும் வழமையான பதத்தை விடுத்து, இவரைப் பற்றிக் குறிப்பிடும் தாரிக் இப்னு அப்துல்லாஹ் இப்னு வனமூ அல்-சனாத்தீ என்று குறிப்பிடுவதிலிருந்து பெறப்பட்டதாகும்.[7]
    • 14 ஆம் நூற்றாண்டு வரலாற்றாளரான இப்னு இதாரீ இவரது குலமரபு பற்றி இரு விதமாகக் குறிப்பிடுகிறார் (இவ்வேறுபாடுகள் படியெடுக்கும் போது ஏற்பட்ட தவறாக இருக்கலாம்). இவரது பெயர் தாரிக் இப்னு சியாத் இப்னு அப்துல்லாஹ் இப்னு வல்கூ இப்னு வர்பஜூம் இப்னு நபர்காசன் இப்னு வல்ஹாஸ் இப்னு யத்தூபத் இப்னு நப்சாவு (அரபு மொழி: طارق بن زياد بن عبد الله بن ولغو بن ورفجوم بن نبرغاسن بن ولهاص بن يطوفت بن نفزاو‎) என்றும், தாரிக் இப்னு சியாத் இப்னு அப்துல்லாஹ் இப்னு ரப்ஹூ இப்னு வர்பஜூம் இப்னு யன்சகாசன் இப்னு வல்ஹாஸ் இப்னு யத்தூபத் இப்னு நப்சாவு (அரபு மொழி: طارق بن زياد بن عبد الله بن رفهو بن ورفجوم بن ينزغاسن بن ولهاص بن يطوفت بن نفزاو‎) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.[8]

அரபு மற்றும் எசுப்பானிய வரலாற்றாசிரியர் பலரும் இவர் ஓர் அடிமையாக இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.[9] அதாவது, இப்ரீகியாவின் (வட ஆபிரிக்கா), அமீர் மூசா இப்னு நுசைர் இவருக்கு விடுதலையளித்துத் தனது படையில் தளபதியாகவும் நியமித்தார். எனினும், சில நூற்றாண்டுகள் கழித்து இவரது வழிவாறுகள் இவர் ஒருபோதும் மூசாவின் அடிமையாக இருக்கவில்லையெனக் கூறி அதனை நிராகரித்தனர்.

இவரைப் பற்றிய மிக முந்திய குறிப்பு இலத்தீன் மொழியில் பொ.கா. 754 இல் எழுதப்பட்ட மொசரப் வரலாற்றேட்டில் காணப்படுகிறது. அது எசுப்பானிய வெற்றி நிகழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்டதாயினும், இவரது பெயரை தாரிக் அபூசரா எனத் தவறாகக் குறிப்பிடுகிறது.[10]

எப்படியாயினும், தாரிக்கின் பெயர் ஓர் இளம் அடிமைப் பெண்ணாகிய உம்மு ஹக்கீம் என்பவருடன் பொதுவாகத் தொடர்பு படுத்தப்படுகிறது. அப்பெண்ணும் இவருடன் எசுப்பானியாவை அடைந்தார் எனக் கூறப்படுகிறது; எனினும் அவர்களின் உறவின் தன்மை எதுவென்பதில் தெளிவில்லை.[11]

வரலாறு

தொகு
 
ஹோமேஜ் நகரில் இருக்கும் மூரியக் கோட்டை, இது ஜிப்ரோல்டர் மீதான இஸ்லாமிய ஆதிக்கத்தின் சின்னம்.

பொ.கா. 710-711 இல் தஞ்சா வெற்றி கொள்ளப்பட்ட பின்னர், அதன் ஆளுநராக தாரிக் இப்னு சியாதை மூசா இப்னு நுசைர் நியமித்தார்.[12] எனினும் விசிகோத்தியர்களின் புற எல்லைக் காவலரணான செயூத்தா, ஜூலியன் என்னும் தலைவனின் ஆணையின் கீழிருந்தது.

எசுப்பானியாவில் ரொடரிக்கு ஆட்சிக்கு வந்த பின்னர், அப்போதைய மரபின் படி ஜூலியன் தன் மகளை விசிகோத்திய அரசவையிற் கல்வி பெற அனுப்பி வைத்தான். அப்போது ரொடரிக்கு அவளைக் கற்பழித்தமையினால் வெஞ்சினமுற்ற ஜூலியன், விசிகோத்திய அரசை இல்லாதொழிக்க அரபியருடன் ஒப்பந்தம் செய்து கொண்டான் எனக் கூறப்படுகிறது. அப்போது அவன் எசுப்பானியப் பெருநிலப் பரப்பில் தனக்கிருந்த கோட்டைகள் மற்றும் தன் வசமிருந்த வணிகக் கப்பல்களைப் பயன்படுத்தி முஸ்லிம் படையை ஜிப்ரோல்டர் நீரிணையைத் தாண்டிச் சென்று எசுப்பானியப் பெருநிலப் பரப்பில் இறக்குவதற்கு (மூசா கைரவான் நகருக்குத் திரும்பிச் சென்றிருந்த வேளையில்) தாரிக்குடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். இவ்வொப்பந்தம் மூசாவினால் அங்கீகரிக்கப்பட்டது.

பொ.கா. 711 ஏப்ரல் 29 அளவில், அண்மையிலேயே இஸ்லாத்தைத் தழுவியோரைக் கொண்டிருந்த தாரிக்கின் படை ஜூலியனால் ஜிப்ரோல்டரில் இறக்கி விடப்பட்டது[13] (ஜிப்ரோல்டர் எனும் பெயர் அரபு மொழியில் தாரிக்கின் மலை எனப் பொருள் படும் ஜபல் தாரிக் என்பதிலிருந்து தோன்றியதே).

தாரிக்கின் படை 7000 பேரைக் கொண்டிருந்ததுடன், மூசாவினால் மேலும் 5000 பேர் கொண்ட உதவிப்படை அனுப்பி வைக்கப்பட்டது.[14] இவ்வச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக ரொடரிக்கு 100,000 பேர் கொண்ட படையைத் திரட்டினான். இவ்வெண்ணிக்கை வித்தியாசப்படலாம். ரொடரிக்கின் படையிற் பெரும் பகுதி அவனாற் படுமோசமாகப் பதவியிறக்கப்பட்ட விட்டிசா என்பவனின் மகன்மாரின் தலைமையிலும் அவர்களுக்கு நம்பகமானோராலுமே வழிநடத்தப்பட்டது. அத்துடன் அவர்கள் மிக முக்கியமான வேளையிற் பின்வாங்கிச் செல்வதாக தாரிக்குடன் அந்தரங்கமாக ஒப்பந்தம் செய்திருந்தனர்.[15] இது நிகழந்த பின்னர், விசிகோத்திய அரசனான ரொடரிக்கு அவ்வாண்டு ஜூலை 19 ஆம் நாள் குவாடலேட்டு போரில் கொல்லப்பட்டதுடன், தாரிக் இப்னு சியாத் மிகப் பெரும் வெற்றியடைந்தார்.

ஜூலியனின் அறிவுரையின் பேரில், தன்னுடைய படையைச் சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து குர்துபா, கிரனடா மற்றும் ஏனைய இடங்களைக் கைப்பற்றுவதற்காக அனுப்பிய தாரிக், தான் ஏற்கனவே கைப்பற்றியிருந்த தொலடோவிலும் குவாடலஜாராவிலும் நிலை கொண்டிருந்த படைகளுக்குத் தலைமை தாங்கி நின்றார். ஓராண்டுக்குப் பின்னர் மூசா வந்து சேரும் வரையில் தாரிக் உண்மையிலேயே எசுப்பானியாவின் ஆளுநராக இருந்தார்.

பொ.கா. 714 இல் திமிஷ்கு நகருக்கு வருமாறு தாரிக், மூசா ஆகிய இருவருக்கும் அப்போதைய உமையா கலீபா முதலாம் அல்-வலீத் ஆணையிட்டார். அதன் பின்னர் இவ்விருவரும் அங்கேயே தம் இறுதி நாட்கள் வரை வாழ்ந்தனர்.[16]

தாரிக்கும் மூசாவும்

தொகு

எசுப்பானிய வெற்றியைப் பற்றி எழுதியுள்ள அரபு வரலாற்று நூல்கள் பலவற்றிலும் தாரிக் இப்னு சியாத் மற்றும் மூசா இப்னு நுசைர் ஆகியோருக்கிடையிலான உறவு பற்றிக் குறிப்பான வேறுபாடுகள் காணப்படுகின்றன. தன்னால் விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒரு நாட்டையே வெற்றி கொண்டான் என்பதில் மூசா பொறாமையும் சினமும் கொண்டிருந்ததாக அவற்றிற் சில குறிப்பிடுகின்றன. எனினும், அவ்வாறான தீய நிகழ்வுகள் எதுவுமே நடைபெற்றதாக ஏனைய வரலாற்றேடுகள் குறிப்பிடவில்லை.

இதைப் பற்றி ஆக மோசமாகக் குறிப்பிடும் அரபு வரலாற்றேடு இப்னு அப்துல் ஹகம் என்பவரால் (9 ஆம் நூற்றாண்டில்) எழுதப்பட்டதாகும். தாரிக்கின் மீது வெஞ்சினமுற்றிருந்த மூசா, தாரிக்கைச் சிறையில் அடைத்ததாகவும், பின்னர் தாரிக்கைக் கொன்று விடப் போகையில் கலீபா அல்-வலீதினால் விடுதலை செய்யப்பட்ட அடிமையாகிய முகீத் அர்-ரூமி என்பவரின் தலையீட்டினால் அது தவிர்க்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே தாரிக்கும் மூசாவும் கலீபாவினால் திமிஷ்கு நகருக்கு அழைக்கப்பட்டனர் என்றும் குறி்பபிடுகிறது.[17] அத்துடன் 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அக்பார் மஜ்மூஆ என்னும் நூலில், மூசா எசுப்பானியாவுக்கு வந்து சேர்ந்த போது அவரை கண்ணியப்படுத்தும் வகையில் தாரிக் தன் குதிரையிலிருந்து இறங்கியதாகவும், அப்போது மூசா தன்னுடைய குதிரையின் சவுக்கால் தாரிக்கின் தலையில் அடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.[18]

மற்றொரு முற்கால வரலாற்றாசிரியரான அல்-பலாதுரீ (9 ஆம் நூற்றாண்டு), மூசா தாரிக்கிற்கு ஒரு "கடுமையான மடல்" எழுதியதாகவும், பின்னர் இருவரும் சமரசம் செய்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.[19]

சுலைமானின் மேசை

தொகு

தாரிக்குக்கும் மூசாவுக்கும் இடையிலான பகைமையைப் பற்றிக் கூறப்படும் மிகப் பரவலான கதையொன்று சுலைமான் நபி அவர்களுக்குச் சொந்தமாயிருந்ததாகக் கூறப்படும் ஒரு சிறந்த தளபாடம் பற்றியதாகும். தங்கத்தினால் வார்க்கப்பட்டும், விலைமதிக்க முடியாதளவு பெறுமதி மிக்க நன் மணிகளால் அலங்கரிக்கப்பட்டும் இருந்த அது இஸ்லாமியர்களுக்கு முன்னர் எசுப்பானிய விசிகோத்தியர்களின் வசம் இருந்ததாகக் கூறப்படுகிறது.[20]

ரொடரிக்கின் மருமக்களில் ஒருவன் சரணடைந்த பின்னர், தாரிக் அம்மேசைக்கு உரித்தாளியானார். அது மூசாவினால் தவறிழைக்கப்படலாம் என அஞ்சிய தாரிக் அதன் கால்களில் ஒன்றை அகற்றிவிட்டு, பெறுமதி குறைந்த பொருட்களினால் அப்பகுதியை மீளமைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அம்மேசை மூசாவின் கொள்ளைப் பொருட்களுடன் சேர்க்கப்பட்டு திமிஷ்கு நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்விருவரும் கலீபாவிடம் வந்து சேர்ந்த போது, தானே அம்மேசையைப் பெற்றுக் கொண்டதாகக் கூறி அதனை மூசா கலீபாவிடம் காட்டினார். அப்போது தாரிக் அதன் பெறுமதி குறைந்த காலை கலீபாவிடம் சுட்டிக் காட்டினார். அதற்கு மூசா கூறிய விளக்கம், தான் அதனைப் பெற்றுக் கொண்ட போது அது அப்படித்தான் இருந்தது என்பதாகும். அதன் பின்னர், தாரிக் அதன் உண்மையான காலைச் சமர்ப்பித்த போது, அது மூசாவிற்குச் சினமேற்படுத்தியது.[21]

எப்படியாயினும் மேற்படி கதை எதையும் கூறாமல், வெறுமனே மேசை கலீபாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்கிறார் அல்-பலாதுரீ.[22]

புதிய பட்டம் அல்-அந்தலுஸ் ஆளுநர்
711–712
பின்னர்

பெயரிடுகைகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. கைனகோஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அல்-மக்காரீ, ப. 255 இல் தாரிக்கைப் பற்றி இப்னு கல்தூன் அல்-லைதீ எனக் கூறுவதாகக் குறிப்பிட்டாலும், இப்னு கல்தூனின் ஆக்கங்களின் தற்காலப் பதிப்புக்களில் அக்குறிப்பு காணப்படவில்லை.
  2. அக்பார் மஜ்மூஆ, எசுப்பானிய மொழிபெயர்ப்பின் ப. 20, அரபு மொழிபெயர்ப்பின் ப. 6. அல்-மக்காரீ, பார்க்க கைனகோஸின் ஆங்கில மொழிபெயர்ப்பு ப. 266.
  3. அக்பார் மஜ்மூஆ, எசுப்பானிய மொழிபெயர்ப்பு ப. 20 & 21, அரபு மொழிபெயர்ப்பு ப. 6.
  4. மேலும் பார்க்க, இப்னு தக்ரீபிர்தீ, பிரான்சிய மொழிபெயர்ப்பு ப. 278, மற்றும் இப்னு கல்லிகான், ஆங்கில மொழிபெயர்ப்பு பாகம் 3 ப. 476 (அது இவரை ஒரு பர்பர் என்றும் குறிப்பிடுகிறது). அத்துடன் அல்-மக்காரீ, ஆங்கில மொழிபெயர்ப்பு ப. 253 & 266 இல் இவர் லக்மிய கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகிறது.
  5. எ.கா., எம். த ஸ்லேன், இப்னு கல்தூனின் கிதாபுல் இபர் என்னும் நூலின் பிரான்சிய மொழிபெயர்ப்பின் முன்னுரையின் பாகம் 1 ப. 215 இல், இவர் வல்ஹாஸ் கோத்திரத்தைச் சேர்ந்தவர் எனக் கருத்திடுகிறார். அண்மைய ஆய்வுகள் பல இவரை வர்பஜூமா கோத்திரத்தவர் என்கின்றன. அவற்றுக்கு எடுத்துக் காட்டாக வான் செர்திமா எழுதிய Golden Age of the Moor (மூர்களின் பொற்காலம்) ப. 54 ஐக் குறிப்பிடலாம். இவ்விரு கருத்துக்களுமே இப்னு இதாரீ அவர்களின் ஆக்கத்திலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளன.
  6. Yves Modéran, Les Maures et L'Afrique Romaine (IVe-VIIe Siècle). Ecole Française de Rome, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7283-0640-0.
  7. அல்-இத்ரீசீ, அரபு ஆக்கம் பாகம் 5 ப. 539-540; பிரான்சிய மொழிபெயர்ப்பு பாகம் 2 ப. 17. "வனமூ" என்னும் குறிப்பைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை. ஏனெனில், பல்வேறு கையெழுத்துப் பிரதிகளும் வெவ்வேறு எழுத்துக் கூட்டல்களைக் கொண்டுள்ளன.
  8. இப்னு இதாரீ, அரபு மூலம், முறையே பாகம் 1 ப. 43 & பாகம் 2 ப. 5.
  9. இப்னு கல்லிகான், ஆங்கில மொழிபெயர்ப்பு, பாகம் 3 ப. 81. அவர்கள் இவரை "தாரிக் இப்னு நுசைர்" என்றுகூடக் குறிப்பிடுகின்றனர். ஆனால் த ஸ்லேன் தனது நூலின் அடிக்குறிப்பில், "மூசாவின் விடுதலை செய்யப்பட்ட அடிமை" என்பதைக் குறிப்பதாக இருக்குமெனக் கூறுகிறார்.
  10. வரலாற்றேடு, பந்தி 34. அல்-மக்காரீ குறிப்பிடுவது போல தாரிப் இப்னு மாலிக் உடன் சில குழப்பங்களும் காணப்படுகின்றன.
  11. எடுத்துக் காட்டாக இப்னு அப்துல் ஹகம் அவர்களின் பெரும்பாலான குறிப்புகளையும், அக்பார் மஜ்மூஆவின் சில குறிப்புகளையும் கூறலாம்.
  12. வேறு விதமாகச் சொல்வதானால், மூசாவின் மகன் மர்வான் கைரவான் நகருக்குத் திரும்பிச் சென்றதும் இவர் தானாகவே அதன் ஆளுநரானார். இவ்விரு விளக்கங்களும் இப்னு அப்துல் ஹகம் என்பவரின் நூலின் எசுப்பானிய மொழிபெயரப்பு ப. 41, மற்றும் அரபு உரை ப. 204 என்பவற்றிற் தரப்பட்டுள்ளன.
  13. யாரும் கோழைத் தனமாகத் திரும்பிச் செல்லக் கூடாது என்பதற்காகத் தாம் வந்திறங்கிய கப்பல்கள் அனைத்தையும் எரித்து விடுமாறு தாரிக் கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. இக்குறிப்பு தாரிக்கின் காலத்திலிருந்து 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த புவியியலாளரான அல்-இத்ரீசீ என்பவராற் கூறப்பட்டுள்ளது, பார்க்க அரபு உரை பா. 5 ப. 540 (அரபு மொழி: فٱمر بإحراق المراكب‎) மற்றும் பிரான்சிய மொழிபெயர்ப்பு பாகம் 2 ப. 18. சற்றுப் பிந்திய காலத்தில் எழுந்த கிதாப் அல்-இக்திபா பீ அக்பாருல் குலபா என்னும் நூலைத் தவிர வேறு இடங்களில் இக்குறிப்பு காணப்படவில்லை.
  14. அக்பார் மஜ்மூஆ, எசுப்பானிய மொழிபெயர்ப்பு ப. 21, அரபு உரை ப. 6.
  15. அக்பார் மஜ்மூஆ எசுப்பானிய மொழிபெயர்ப்பு ப. 22, அரபு உரை ப. 8.
  16. Reilly, Bernard F. (2009). The Medieval Spains. New York: Cambridge University Press. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-39741-4.
  17. எசுப்பானிய மொழிபெயர்ப்பு ப. 48-49 மற்றும் அரபு உரை ப. 210.
  18. எசுப்பானிய மொழிபெயர்ப்பு ப. 30-31 மற்றும் அரபு உரை ப. 18-19.
  19. ஹித்தியின் ஆங்கில மொழிபெயர்ப்பு ப. 365.
  20. அதனைப் பற்றி 6 ஆம் நூற்றாண்டின் பைசாந்திய வரலாற்றாசிரியரான புரோக்கோப்பியசு என்பவரால் கூறப்பட்டுள்ளது.
  21. இப்னு அப்துல் ஹகம், எசுப்பானிய மொழிபெயர்ப்பு ப. 50, அரபு உரை ப. 210-211.
  22. ஹித்தியின் ஆங்கில மொழிபெயர்ப்பு ப. 366.

இலக்கியங்கள்

தொகு

வெளித் தொடுப்புகள்

தொகு
  • Pascual de Gayangos y Arce, The History of the Mohammedan Dynasties in Spain.. vol. 1. 1840. Authoritative English translation of al-Maqqari available from Google eBooks. தற்கால வரலாற்றாளர்களாலும் கூட இன்னமும் குறித்துரைக்கப்படும் மொழிபெயர்ப்பு இதுவாகும்.
  • Tarik's Address to His Soldiers, 711 CE, from The Breath of Perfumes. அல் மக்காரீயின் ஆக்கத்தின் ஒரு மொழிபெயர்ப்பு. Charles F. Horne, "The Sacred Books and Early Literature of the East,"(New York: Parke, Austin, & Lipscomb, 1917), Vol. VI: Medieval Arabia, pp. 241–242. Horne was the editor, the translator is not identified. NB: the online extract, often cited, does not include the warning on p. 238 (download the whole book from other sites): "எவ்வாறிருப்பினும் இவ்வுரை தாரிக்கின் உண்மையான வார்த்தைகளை அப்படியே கூறுவதாக இல்லை; இது வெறுமனே மூரிய வரலாற்றாளரான அல்-மக்காரீயினால் அச்செய்தி பதியப்பட்டுள்ள விதத்தைக் கூறுகிறது. அவர் மூர்கள் எசுப்பானியாவிலிருந்து வெளியேற்றப்பட்டும் பல ஆண்டுகளின் பின்னரேயே ஆபிரிக்காவைப் பற்றி எழுதுகிறார். உள்ளதை உள்ளபடியே கூறும் அரபு வழக்கம் அல்-மக்காரீயின் காலத்தில் ஓரளவு மங்கியிருந்தது. மூர்கள் அறிவியலாளராகவும் சிறந்த வரலாற்றாளராகவும் இருப்பதற்குப் பதிலாக, கவிஞர்களாகவும் கனவு காண்போராகவும் ஆகி விட்டிருந்தனர்."
  • இப்னு அப்துல் ஹகம், மிகப் பழைய ஆங்கில மொழிபெயர்ப்பு Medieval Sourcebook: The Islamic Conquest of Spain
  • Article: Tariq ibnu zeyad in tha mazight(Berber: Rif)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரிக்_இப்னு_சியாத்&oldid=3105094" இலிருந்து மீள்விக்கப்பட்டது