தாவீது (பெர்னீனி)

தாவீது (பெர்னீனி) (David (Bernini)) என்பது இத்தாலிய கலைஞரான ஜான் லொரேன்சோ பெர்னீனி (1598-1680) என்பவரால் பளிங்குக் கல்லில் ஆளுயரத்தில் செதுக்கப்பட்ட ஒரு சிலை ஆகும்.

தாவீது
David
ஓவியர்ஜான்லொரேன்சோ பெர்னீனி
ஆண்டு1623 (1623)-1624 (1624)
வகைபளிங்குக் கற்சிலை
பரிமானங்கள்170 cm (67 அங்)[1]
இடம்பொர்கேசே கலைக்கூடம், உரோமை, இத்தாலியா

இன்று உரோமை நகரில் பொர்கேசே கலைக்கூடத்தில் அமைந்துள்ள இச்சிலையை உருவாக்கப் பொறுப்பளித்தவர் பெர்னீனியின் ஆதரவாளரான கர்தினால் ஷிப்பியோனே பொர்கேசே என்பவர் ஆவார். அவர் தமது கோடையில்லத்தை அணிசெய்வதற்காகச் செய்வித்த பல கலைப்பொருள்களுள் தாவீது சிலையும் ஒன்றாகும்.

இச்சிலையை பெர்னீனி 1623-1624 ஆண்டுக் காலத்தில் ஏழு மாதங்களில் செய்து முடித்தார்.

சிலை அமைப்பு

தொகு

இக்கலைப்படைப்பின் பொருள் விவிலியத்தில் வருகின்ற தாவீது மன்னர் ஆவார். இளைஞரான தாவீது தம் கையில் கவண் எடுத்து, அதில் கல்லைப் பொருத்தி கோலியாத்தின் நெற்றியைக் குறிவைத்து வீசும் காட்சி சிலையாக்கப்பட்டுள்ளது.

பெர்னீனி இச்சிலையை உருவாக்குவதற்கு முன்னர் வேறு பல சிற்பிகள் தாவீது சிலை படைத்திருந்தார்கள். குறிப்பாக மைக்கலாஞ்சலோ உருவாக்கிய தாவீது பளிங்குக் கற்சிலையைக் காட்டலாம். அச்சிலைகளிலிருந்து வேறுபட்ட முறையில், தாவீதை உயிரோட்டமாக, செயலில் ஈடுபட்ட விதத்தில், உள்ளுணர்ச்சியை வெளிக்கொணரும் விதத்தில் பெர்னீனி படைத்தார்.

சிலை செதுக்கிய பின்புலம்

தொகு
  வெளி ஒளிதங்கள்
  smARThistory - Bernini's David[2]

பெர்னீனியின் கலைப்படைப்புகளுக்கு ஆதரவளித்த புரவலர்களுள் ஒருவர் கர்தினால் ஷிப்பியோனே பொர்கேசே ஆவார். அவர் தமது கோடை இல்லத்தை அணிசெய்வதற்காக பல கலைப் பொருள்களை உருவாக்கும்படி பெர்னீனியைக் கேட்டார். அவ்வாறே பெர்னீனி 1618-1625 ஆண்டுக் காலத்தில் பல கலைப்பொருள்களைப் படைத்தார். [3]

1623ஆம் ஆண்டில், பெர்னீனி தம் இருபத்திநான்காம் வயதில் அப்போல்லோவும் டாஃப்னியும் என்ற சிலையை வடித்துக்கொண்டிருந்தார். அந்த வேலையை இடையில் நிறுத்திவிட்டு பெர்னீனி தாவீது சிலையைச் செதுக்கத் தொடங்கினார். 1623ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் அவர் உருவாக்கத் தொடங்கிய தாவீது சிலையை அவர் ஏழே மாதங்களில் முடித்துக்கொடுத்தார் என்று அவருடைய சமகால வரலாற்று ஆசிரியர் ஃபிலிப்போ பால்தினூச்சி என்பவர் குறிப்பிடுகிறார்.[4]

தாவீது சிலையின் முப்பரிமாண இயங்குபடம்

தாவீது சிலையை உருவாக்கும் பொறுப்பை பெர்னீனியிடம் கொடுத்த கர்தினால் ஷிப்பியோனே பொர்கேசே அச்சிலை முடியும் முன்னரே திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டாம் அர்பன் என்னும் பெயரைச் சூடிக்கொண்டார். இது பெர்னீனிக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. திருத்தந்தை எட்டாம் அர்பன் பெர்னீனியிடம் வேறு பல கலைப்பொருள்கள் உருவாக்கும் பொறுப்பைக் கொடுத்தார். உரோமையில் புனித பேதுரு பெருங்கோவில் கட்டும் பொறுப்பு மற்றும் அவர் ஏற்கெனவே தொடங்கி இடையில் விட்டிருந்த அப்போல்லோவும் டாஃப்னியும் என்ற சிலையை முடிக்கும் பொறுப்பு போன்றவை பெர்னீனியிடம் ஒப்படைக்கப்பட்டன. [5]

தாவீது சிலை குறித்துநிற்பது

தொகு
  • பழைய ஏற்பாட்டு நூல்களுள் ஒன்றாகிய 1 சாமுவேல் என்னும் ஏட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள தாவீது மன்னரின் வாழ்வு நிகழ்ச்சிகளுள் ஒன்றை பெர்னீனி சிலையாக வடித்தார். இசுரயேல் மக்களுக்கும் பெலிஸ்திய மக்களுக்கும் இடையே போர் எழுகின்றது. பெலிஸ்தியர் பிரிவைச் சார்ந்த வலிமை மிக்க வீரனான கோலியாத்து முன்வந்து, இசுரயேலின் வீரர்களும் யாராவது தன்னை எதிர்த்துப் போரிட முடிந்தால் முன்வருமாறு சவால் விடுக்கின்றான். தன்னோடு மற்போரில் ஈடுபடவும், மற்போரில் வெற்றிபெறும் தரப்பினருக்கு மறுதரப்பினர் அடிமைகளாகவும் மாறவேண்டும் என்றும் கோலியாத்து மீண்டும் மீண்டும் விடுத்த சவாலைத் துணிச்சலுடன் சந்திக்க முன்வருகின்றான் ஆடுமேய்க்கும் இளைஞனான தாவீது.
  • தாவீது கவணில் ஒரு கல்லை வைத்து, சுழற்றி, பெலிஸ்தியனான கோலியாத்தின் நெற்றியைக் குறிவைத்து வீசும் காட்சியை அப்படியே பளிங்குக்கல்லில் படம் பிடித்துக் காட்டுகிறார் பெர்னீனி.

பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீதும் அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார்.

தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார் அதை கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான் (1 சாமுவேல் 17:48-49)

  • பெர்னீனி வடித்த தாவீது சிலை மைக்கலாஞ்சலோ செதுக்கிய தாவீது சிலையைப் போல முழு அம்மணமாக நிற்கவில்லை. இருப்பினும், பெர்னீனி வடித்த சிலையில் தாவீதின் அம்மணத்தை ஒரு போர்வை சிறிதளவு மறைக்கிறது.
  • சவுல் மன்னன் கோலியாத்தோடு மற்போருக்குச் சென்ற தாவீதுக்குத் தம் உடைகளை அணிவித்து, வெண்கலத் தலைக்கவசம் மற்றும் மார்புக்கவசத்தையும் போர்த்தியிருந்தார். ஆனால், "தாவீது சவுலை நோக்கி 'இவற்றுடன் என்னால் நடக்கவியலாது, ஏனெனில் இதில் எனக்குப் பழக்கமில்லை' என்று கூறி அவற்றைக் களைந்துவிட்டார்" (1 சாமுவேல் 17:39). இவ்வாறு தாவீது களைந்த போருடைகளை பெர்னீனி தன் சிலையில் தாவீதின் காலடிகளில் வைத்துள்ளார்.
  • தாவீது சிலையின் காலடியில் ஒரு யாழும் உள்ளது. தாவீது இசையில் தேர்ந்தவர்; யாழ் இசைப்பதில் வல்லவர் என்று விவிலியம் கூறுகிறது. எனவே யாழ் தாவீதுக்கு உரிய பொருளாகச் சித்தரிக்கப்படுவது வழக்கம். இங்கே தாவீதின் காலடியில் வைக்கப்பட்டுள்ள யாழின் முகப்பில் கழுகுத் தலை செதுக்கப்பட்டுள்ளது. கழுகு என்பது பொர்கேசே குடும்பத்தின் குலச் சின்னம் ஆகும்.

பெர்னீனியின் தாவீது சிலையின் சிறப்புகள்

தொகு
  • பெர்னீனி தாவீது சிலையைப் பளிங்குக்கல்லில் செதுக்கும் முன்னர் வேறுபல மறுமலர்ச்சிக் காலக் கலைஞர்கள் தாவீதை வடிவமைத்திருந்தார்கள். அவர்களுள் மைக்கலாஞ்சலோ, டொனாட்டெல்லோ, வெரோக்கியோ என்பவர்களைக் குறிப்பிடலாம். அச்சிலைகள் தனித்து நிற்கும் வகையில் செதுக்கப்பட்டன. ஆனால் பெர்னீனியின் தாவீது சிலை தனித்து நிற்காமல், தன்னைச் சூழ்ந்து நிற்போரையும் உள்ளடக்குகின்ற விதத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
  • இன்னொரு சிறப்பு பெர்னீனி தாவீதின் உடல் இயக்கம் ஒன்றைத் தனிமைப்படுத்திச் சித்தரிப்பது ஆகும்.
  • பண்டைய கிரேக்க செவ்விய காலத்தைச் சார்ந்த "சாமோத்ராக்கேயின் வெற்றி தேவதை" (Winged Victory of Samothrace) என்ற புகழ்மிக்க சிலையின் உடலைப் போர்த்தியிருக்கும் ஆடை கடற்காற்றில் அசைவதுபோல உருவாக்கப்பட்டதற்குப் பின் பல நூற்றாண்டுகளாக சிலைகளின் உடல் அசைவு தனிமைப்படுத்தப்பட்டு கலையாக்கம் பெறவில்லை. ஆனால் பெர்னீனியின் தாவீது சிலையில் அந்த உடலசைவு அழுத்தம் பெறுகிறது.[6]
  • "பொர்கேசே வாள்வீரன்" (Borghese Gladiator) என்ற பண்டைய கிரேக்க சிலை பெர்னீனியின் தாவீது உருவாக்கத்திற்குத் தூண்டுதல் கொடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[7]
  • பெர்னீனியின் தாவீது சிலையின் இன்னொரு சிறப்பு, அச்சிலை வெளிப்படுத்துகின்ற குறிப்பிட்ட உடல் இயக்க முனை. பெர்னீனிக்கு முன்னால் தாவீது சிலையை உருவாக்கிய மைக்கலாஞ்சலோ, தாவீது போருக்குப் புறப்பட்டு நிற்பதைச் சித்தரித்தது. அதற்கு முன்னால் தாவீது சிலையை வடித்த டொனாட்டெல்லோ மற்றும் வெரோக்கியோ என்னும் சிற்பிகள் தாவீது போரில் வெற்றிபெற்றதைச் சித்தரித்தார்கள். ஆனால் பெர்னீனி மட்டுமே, தாவீது கவணில் கல்லைப் பொருத்தி, கோலியாத்தை நோக்கிக் குறிவைத்து வீசுகின்ற உடல் இயக்கத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.[8][9]இது ஒரு புதுமையான செய்முறைதான்.
  • கர்ராச்சி என்னும் ஓவியர் வரைந்த "பொலிஃபீமஸ்" (Polyphemus) என்னும் ஓவியத்தில் ஒற்றைக்கண் அரக்கன் கல் வீடுவது சித்தரிக்கப்படுகிறது. பெர்னீனியின் கணிப்புப்படி கர்ராச்சி ஒரு தலைசிறந்த ஓவியர். எனவே கர்ராச்சியின் அந்த ஓவியம் பெர்னீனியின் தாவீது சிலை வடிவமைப்புக்கு உந்துதல் அளித்திருக்கலாம்.[9]
  • கர்ராச்சியும் பெர்னீனியும் லெயோனார்டோ டா வின்சியிடமிருந்து, கல்லை வீசுகின்ற உடல் இயக்க அசைவைச் சித்தரிக்கும் முறை யாதெனக் கற்றிருக்கலாம் என்று தெரிகிறது. டா வின்சி தம் நூலாகிய "ஓவியக் கலை" (A Treatise on Painting) என்னும் ஏட்டில் பின்வருமாறு கூறுகிறார்:

படம் வரையும்போது, ஓர் ஆளின் ஒரு குறிப்பிட்ட உடல் இயக்க அசைவைச் சித்தரிக்கும்போது பின்பற்ற வேண்டிய முறை: விரித்துவைக்கின்ற காலடியானது நெஞ்சுக்கு நேராகவரும். உடலின் பளுவைத் தாங்குகின்ற காலடிக்கு மேலே மறுதோள் வரும். அதாவது, வலது கால் உடலின் பளுவைத் தாங்கிநிற்கும். இடது தோள் வலது காலடி நுனிக்கு நேர் மேலாக வரும்.

லெயோனார்டோ டா வின்சி, ஓவியக் கலை, [10]

கலைப் பாணி

தொகு
  • பொதுவாக, மறுமலர்ச்சிக் கால பளிங்குச் சிலைகள் பார்வையாளருக்கு ஒரு பக்கப் பார்வையைத் தான் அளித்தன. அதாவதும் சிலைக்கு நேர் முன்னே நின்று அச்சிலையின் அழகைத் துய்க்கலாம். ஆனால் பெர்னீனி வடித்த தாவீது சிலையின் முழு அழகையும் இயக்க அசைவையும் உணர வேண்டும் என்றால், பார்வையாளர் அச்சிலையின் முன்னே நின்று பார்ப்பதோடு, அச்சிலையைச் சுற்றியும் சென்று, வெவ்வேறு கோணங்களில் நின்று பார்க்க வேண்டும். [11]
  • தாவீதுக்கு முன்னால் கண்களுக்குப் புலப்படாத விதத்தில் கோலியாத்து என்னும் மாவீரன் நின்றுகொண்டிருக்கின்றான். அதுபோலவே தாவீது சிலையில் அச்சிலையை வடித்த பெர்னீனியும் ஒருவிதத்தில் மறைந்து, வெளிப்படுகின்றார். [12] தாவீது சிலை, கலையிலிருந்து உயிர்நிலைக்கு வருவதுபோல தோற்றமளிக்கிறது. சிலையின் வலதுகால் சிலை மேடையின் ஓரத்தில் வந்து வெளியே நீள்வதற்கு முயல்வதுபோல் உள்ளது.[13]
  • இவ்வாறு சிலை உருவாக்கியது அக்கால வழக்கத்துக்கு மாறானது. காலமும் இடமும் இங்கே தாண்டப்படுகின்றன. மைக்கலாஞ்சலோவின் தாவீது சிலையிலும் சக்தி உள்ளது. ஆனால் அச்சக்தி மறைந்திருக்கின்றது. பெர்னீனியின் தாவீது சிலையிலோ சக்தி வேகத்துடன் பீறிட்டு வெளிவருகிறது. ஒரு நொடிநேர உடல் இயக்க அசைவு அப்படியே உறைந்ததுபோலத் தெரிகிறது.[6]
  • பெர்னீனியின் தாவீது சிலையில் அழுத்தமான உணர்வு வெளிப்படுகிறது. கோபத்தோடு கூடிய ஆவேசம் தாவீதின் முகத்தில் தெறிக்கிறது. [14] தாவீது, முகத்தை இறுக்கிச் சுளித்துக் கொண்டு, கீழ் உதட்டை அழுத்திக் கடித்துக்கொண்டு, எதிரியைத் தாக்கும் நிலையில் உடலை விறைத்துநிற்கின்றார். [13]
  • பெர்னீனியின் சமகாலத்தவரும் அவருடைய வரலாற்றை எழுதியவருமான பால்டினூச்சி என்பவர் கூற்றுப்படி, கர்தினால் மஃப்ஃபேயோ பெர்னீனி (பிற்காலத்தில் திருத்தந்தை எட்டாம் அர்பன்) பல தடவைகளில் பெர்னீனியின் கலையகம் சென்று, பெர்னீனி தாவீது சிலையை உருவாக்கும்போது, அவரது முகத்திற்கு நேராக ஒரு முகக் கண்ணாடியைப் பிடித்துக்கொண்டிருப்பாராம். இவ்வாறு, பெர்னீனி தான் செதுக்கிய சிலையில் தனது முகத்தோற்றத்தை மட்டுமன்றி, தனது உணர்ச்சி, உறுதிப்பாடு, வேகம் அனைத்தையும் வெளிக்கொணர்ந்தாராம்.[4]
  • அக்கால வழக்கப்படி, போர்வீரன் ஒருவனைச் சித்தரிக்கும்போது தலைக்கும் உடலுக்கும் 1:10 என்ற விகிதத்தைப் பயன்படுத்தி பெர்னீனி தாவீது சிலையை உருவாக்கினார்.[9]
  • மேலும், தாவீது சிலையின் தலையையும் முகத்தையும் பார்க்கும்போது, ஒரு சிங்கத்தின் கம்பீரத் தோற்றம் தெரிகிறது. தாவீதின் முடி சுருண்டு, சிங்கத்தின் பிடரிமயிர் போல் உள்ளது. முகத்திலும் சிங்கத்தின் தோற்றம் உள்ளது. விரிந்த நெற்றி, முன்னே நீண்டுவரும் புருவங்கள், வளைந்த மூக்கு இவையும் தாவீதின் வீரத்தை அழகுற வெளிக்கொணர்கின்றன.[9]. இவ்வாறு, தாவீது உண்மையிலேயே "யூதாவின் சிங்கம்" என்னும் சிறப்புப் பெயர்கொண்டு, பெர்னீனியின் தாவீது சிலையில் மீண்டும் உயிர்பெற்றதுபோல் உள்ளார்.

குறிப்புகள்

தொகு
  1. Martin, p. 319
  2. "Bernini's David". smARThistory at Khan Academy. Archived from the original on அக்டோபர் 18, 2014. பார்க்கப்பட்ட நாள் December 18, 2012.
  3. Preimesberger, p. 7.
  4. 4.0 4.1 Hibbard, p. 54.
  5. Hibbard, pp. 56-57.
  6. 6.0 6.1 Gardner, p. 758
  7. Hibbard, p. 61
  8. Hibbard, p. 56.
  9. 9.0 9.1 9.2 9.3 Preimesberger, p. 10.
  10. Quoted in Preimesberger, p. 11.
  11. Hibbard, p. 57.
  12. Martin, p. 167.
  13. 13.0 13.1 Hibbard, p. 55.
  14. Martin, p. 74.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீது_(பெர்னீனி)&oldid=3628316" இலிருந்து மீள்விக்கப்பட்டது