திருநீலகண்ட நாயனார்

63 நாயன்மார்களில், சிதம்பரத்தில், குயவர் குலத்தைச் சேர்ந்த, நாயன்மார்.

திருநீலகண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[6]. இவரைப் பற்றிய குறிப்புகள், 8 ஆம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், பின்னர் 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் உள்ளன. இவர் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர் என்பது மேலுள்ள நூல்களில் உள்ள செய்தி.

திருநீலகண்ட நாயனார்
பெயர்:திருநீலகண்ட நாயனார்
குலம்:குயவர்[1][2][3][4]
பூசை நாள்:தை விசாகம்
அவதாரத் தலம்:தில்லை
முக்தித் தலம்:தில்லைப்புலீச்சரம்[5]
திருநீலகண்ட நாயனார், சிதம்பரம், தில்லை திருப்புலீச்சரம் குளத்தில் மனைவியுடன் மூழ்கியெழும் காட்சி

"திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்" - திருத்தொண்டத் தொகை

“சொல்லைச் சிவன் திரு ஆணைதன் தூம்மொழி தோள் நசையால்
ஒல்லைத் துறந்து உரு மூத்தற் பின் உமைகோன் அருளால்
வில்லைப் புரைநுத லாளொடு இளமை பெற்று இன்பம் மிக்கான்
தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே” - திருத்தொண்டர் திருவந்தாதி

சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்த ஓர் அடியவர் இருந்தார். அவர் சிதம்பரத்துச் சிற்சபையில் சிவகாமியம்மையார் காண அற்புதத் தனிகூத்தாடும் நடராசவள்ளலை நாளும் வாழ்த்தி வழிபடும் நலத்திறன் மிக்கவர். அன்பர் பணி செய்வதும் அவ்வடியாரின் ஓர் அருஞ்செயல். தாம் ஆக்கும் ஓடுகளிற் சிறந்தனவற்றை அடியவர் அமுது செய்வதற்காக இலவசமாக அளிப்பது அவர்தம் வழக்கம். அவர் சிவபெருமானது எண்ணில்லாத சீர்மைகளுள் திருநீலகண்டத்தைப் பெரிதும் நயந்தார். அன்பாளர்கள் அமுது செய்தற் பொருட்டு, பெருமான் நஞ்சுண்ட பெருங்கருணைத் திறத்தின் அடையாளமல்லவா திருநீல கண்டம்! ஆதலால் திருநீலகண்டம் என்பதைப் பெருமந்திரமாகக் கொண்டு ஒழுகினார். இதனால் அவருக்கு திருநீலகண்டக்குயனவார் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவருக்கு அருந்ததியைப் போன்று கற்பிற் சிறந்த மனைவியார் அமைந்தார். அவரிடம் ஒரு பலவீனமும் இருந்தது; இளமை தூர்ந்த அவர், இன்பத்துறையில் எளியராயினமையே அது. அவர் தம் புற ஒழுக்கத்தை அறிந்த மனைவியார் மானத்தால் நொந்தார். கணவனுக்கு வேண்டும் பணிகளை எல்லாம் குறைவுறச் செய்து உடனுறைவுக்கு இசையாதிருந்தார். ஒரு நாள் நாயனார் அவரது புலவியைத் தீர்த்தற் பொருட்டு, அருகணைத்து, வேண்டும் இரப்புரைகளைக் கூறி, தீண்டுவதற்குச் சென்றார். உடனே "எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்" என அம்மாதரசி ஆணையிட்டார். அவ்வாணைக்கு நாயனார் கட்டுண்டார். மனைவியாரை அயலவர் போல் நோக்கி, எம்மை எனச் சொன்னமையால் "எம் மாதரையும் தீண்டேன்" உறுதி கொண்டார்.

இளமை மிக்க நாயனாரும், மனைவியாரும் உடனுறைவின்றி வேறு வேறாக தம் மனையிலே (வீட்டிலே) வாழ்ந்தனர். தமது இவ்வொழுக்கத்தை அயலறியா வண்ணம் பேணி நடந்தனர். ஆண்டுகள் பலவும் செல்ல இளமை நீங்கி முதுமையெய்தினர். முதுமையெய்தி உடல் தளர்ந்த நிலையிலும் திருநீலகண்டத்திலும் கொண்ட பற்றுறுதியும் தம் உறுதி தவறாது ஒழுகினர்.

இவர் தம் செயற்கருஞ்செயலை, உலகத்தவர்களுக்கு விளக்கம் செய்ய, இறைவர் திருவுளம் பற்றினார். ஒரு சிவயோகியார் வேடம் பூண்டு, நாயனாரது மனைக்கு எழுந்தருளினார். நாயானார் அவரை எதிர்கொண்டு வணங்கி, முறைப்படி பூசனை செய்து, "அடியேன் செய்யும் பணி யாது?" என இரந்து நின்றார். சிவயோகியார், தம்மிடமிருந்த ஓட்டினை அன்பரிடம் கொடுத்து, "இத்திருவோடு ஒப்பற்றது; இதனைப் பாதுகாப்பாக வைத்து நாம் வேண்டும் போது தருக" எனக் கூறிச் சென்றார். பலநாட் சென்ற பின்னர் ஓட்டினை வைத்த இடத்தில் இராத வண்ணம் மாயஞ்செய்து விட்டு, சிவயோகியார் மீண்டும் வந்தார். வந்த சிவயோகியாரை வரவேற்று, பூசனை செய்து பணிந்து நின்ற நாயனாரிடம், "யான் முன்பு உன்னிடம் தந்த ஓட்டினைத் தருக" எனக் கேட்டார். திருநீலகண்டர் வைத்த இடத்தில் எடுப்பதற்காகச் விரைந்து சென்றார். அங்கே ஓட்டினைக் காணாது திகைத்தார். அங்கு நின்றவரிடம் கேட்டும், எங்கும் தேடியும் காணதவராய், யாது செய்வதென்றறியாமல் அயர்ந்து அங்கேயே நின்றார். சிவயோகியார், "நொடிப்பொழுதில் எடுத்து வருவதாகச் சென்றீர்; யாது செய்கின்றீர்" என அழைத்ததும், அருகே வந்து கைதொழுது, "சுவாமி பாதுகாப்பாக வைத்த இடத்தில் ஓட்டினைக் காணவில்லை. வேறிடந்தேடியும் அகப்படவில்லை, அந்தப் பழைய ஓட்டிற்குப் பதிலாக நல்ல புதிய ஓடு தருகிறேன். அதனை ஏற்று, பிழை பொறுத்தருளுங்கள்" என இரந்து நின்றார். சிவயோகியார் "யான் தந்த மண்ணோடன்றி, பொன்னோடு தந்தாலும் கொள்ளேன்; தந்ததையே கொண்டுவா" எனக் கூறினார். திருநீலகண்டர், "பெரியோய்! தங்கள் ஓட்டைத் தரும்வழி காணேன். வேறு நல்ல ஓடு தருகிறேன் என்றாலும் ஏற்றுக் கொள்கின்றீர்கள் இல்லை" எனக் கூறி உணர்வொடுங்கி நின்றார். புண்ணியப் பொருளாக வந்த சிவயோகியார், "யான் தந்த அடைக்கலப் பொருளைக் கவர்ந்துகொண்டு, பாவத்திற்குச் சிறிதும் அஞ்சாது பலபல பொய்மொழிகள் கூறுகிறாய், யாவரும் காணத் திருவோட்டை வாங்காது இவ்விடம் விட்டுப் போகேன்" என்றார். அதற்கு, “சுவாமி! தேவரீரது ஓட்டை அடியேன் கவரவில்லை. இதை எப்படித் தெரிவிப்பது? சொல்லும்” என நாயனார் கூறினார். “உன் அன்பு மைந்தனைக் கைப்பிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “அப்படிச் செய்வதற்கு எனக்கு மகன் இல்லையே! என் செய்வது” எனச் சிவயோகியாரை நோக்கினார் திருநீலகண்டர். “உன் மனைவியின் கையைப் பற்றி குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “நானும் என் மனைவியும் எங்களிடையேயுள்ள ஒரு சபதத்தால் கைபிடித்துச் சத்தியம் செய்ய முடியவில்லை. நான் தனியே குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்து தருகிறேன் வாரும்” என நாயனார் அழைத்தார். “தந்த ஓட்டைத் தராமல் இருக்கிறாய்; அதனை நீ கவரவில்லை எனின் உன் மனைவியின் கைப்பிடித்து சத்தியஞ்செய்து தரவும் தயங்குகின்றாய். தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பேரவையிலே இவ்வழக்கினைச் சொல்லப்போகின்றேன்; நீ அங்கு வா” என அழைத்தார் சிவயோகியார். திருநீலகண்டர் அதற்கிசைந்து அவருடன் சென்றார்.

தில்லைவாழந்தணர் சபையை அடைந்த சிவயோகியார், “இந்தக் குயவன் யான் அடைக்கலம் வைத்த ஓட்டைத் தருகிறானில்லை. அதனை அவன் கவர்ந்துகொள்ளவில்லை என்று மனைவியின் கைப்பிடித்து சத்தியம் செய்கிறானுமில்லை” என்று தம் வழக்கினைக் கூறினார். அதுகேட்ட அந்தணர்கள், திருநீலகண்டரை நோக்கி, “நீர் நிகழ்ந்ததைக் கூறும்” என்றனர். “திருவுடை அந்தணர்களே! இவர் தந்த திருவோட்டை மிகப்பாதுகாப்பான இடத்தில் வைத்தேன். அது மருமமாய் மறைந்து விட்டது. இதுவே நிகழ்ந்தது” எனத் திருநீலகண்டர் உள்ளதைக் கூறினார். “அப்படியாயின் இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியின் கைப் பிடித்து குளத்திலே மூழ்கிச் சத்தியம் செய்து கொடுத்தலே முறை” எனத் தில்லைவாழந்தணர்கள் தீர்ப்பளித்தனர். அது கேட்ட திருநீலகண்டர், தம் மனைவியைத் தான் தீண்ட இயலாத சபத்தை வெளிப்படுத்த முடியாதவராய், “பொருந்திய வகையால் மூழ்கித் தருகிறேன்” எனச் சொல்லி சிவயோகியாருடன் தம் வீட்டை அடைந்தார். வீட்டில் இருந்த மனைவியாரையும் அழைத்துக் கொண்டு தில்லைத் திருப்புலீச்சரக் கோயிலின் முன்னுள்ள குளத்தை அடைந்தார். திருநீலகண்டத்தின் ஆணையினைக் காத்தற்பொருட்டு மூங்கில் தடியொன்றில் ஒரு முனையைத் தாமும் மறுமுனையை மனைவியும் பிடித்த வண்ணம் குளத்தில் இறங்கினர். அப்பொழுது சிவயோகியார், “மனைவியின் கையைப் பிடித்து மூழ்குக" என வற்புறுத்தினார். அது செய்யமாட்டாத சபதத்தை அங்குள்ளோர் அனைவரும் கேட்கும் வண்ணம் வெளிப்படுத்தித் திருநீலகண்டர் மனைவியாருடன் குளத்தில் மூழ்கினார். மூழ்கிக் கரையேறும் திருநீலகண்டரும் மனைவியாரும் முதுமை நீங்கி இளமைக் கோலத்தில் தோன்றினார்கள். அந்த அற்புதத்தைக் கண்ட அனைவரும், சிவயோகியாரைக் காணாது மருண்டு நின்றனர். மறைந்த இறையவர், உமையம்மையாரோடு, வெள்ளையெருதின் மீது தோன்றி, "புலனை வென்ற பெரியோர்களே! இவ்விளமையோடு என்றும் எம்மை நீங்காதிருப்பீர்களாக" என்றருளி மறைந்தருளினார். நாயனாரும் துணைவியாரும் இவ்வுலகிலே இறைபணியாற்றிச் சிவலோகமடைந்து பெறலரும் இளமை பெற்றுப் பேரின்பமுற்றனர்[7].

திருத்தொண்டர் புராண சாசனம் தொகு

தில்லைநகர் வேட்கோவர் தூர்தராகி,

தீண்டிலெமைத் திருநீல கண்டமென்று

சொல்லும் மனையாள் தனையே அன்றிமற்றும்

துடியிடையாரிடை இன்பம் துறந்து, மூத்து, அங்(கு)

எல்லையில் ஓடு இறை வைத்து, மாற்றி, நாங்கள்

எடுத்திலம் என்று இயம்பும், என இழித்து பொய்கை

மெல்லியாளுடன் மூழ்கி இளமையெய்தி

விளங்கு புலீச்சரத்தரனை மேவினாரே

நுண்பொருள் தொகு

“திருநீலகண்டம்" எனும் திருமந்திரப்பெருமை

  1. திருநீலகண்டம் தீதினை அகற்றித் திருவாக்கும் திருமந்திரம் (திருஞானசம்பந்தப் பிள்ளையார்) “திருநீலகண்டத் திருப்பதிகம்” அருளிச் செய்தமை காண்க.
  2. இன்பத்துறையில் எளியரான குயவனாரை, புலனை வென்ற பெரியோராக்கியது, இத்திருநாம மந்திரம். அயலவர் ஐயுறா வண்ணம் கருத்தொருமித்து, மனையறம் நடத்திக் கொண்டே, அன்புறுபுணர்ச்சியின்றி வாழ்ந்ததும், முதுமையிலும் இவ்விரதம் காத்ததும் தமக்கு நேர்ந்த பழியினின்று நீங்குவதற்கு, மனைவியின் கைபிடித்துக் குளத்தில் மூழ்கும் முறை வந்தவிடத்தும், கைதீண்டாது, மற்றோர் முறையால் மூழ்கியதும், தம் கூடா ஒழுக்கத்தை உலகறியச் சொல்ல நேரிட்டபோதும், விரதம் காத்ததும் ஆகிய இவையெல்லாம் திருநீலகண்டம் எனும் இத்திருமந்திரத்தின் ஆற்றல் விளைந்தனவே.
  3. இத்திருமந்திரத்தைத் துணைகொள்ளின் எத்தகைய விரதத்தைக் கைகொள்ளலும், அதனைக் காத்தலும் எளிதே.
மன்றுள்ளே திருக்கூத்தாடி அடியவர் மனைகள் தோறும்
சென்றவர் நிலைமைகாட்டும் தேவர்கள் தேவர்தாமும்
வென்ற ஐம்புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால்
என்றும் இவ்விளமை நீங்காது என்றுஎழுந்தருளினீரே - பெரியபுராணம்

திருநீலகண்ட நாயனாரது குருபூசை நாள் தை விசாகம்.

மேற்கோள்கள் தொகு

  1. திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன் - திருத்தொண்டத்தொகை 7:39:2
  2. கி. வா. ஜகந்நாதன் , தொகுப்பாசிரியர் (1980). விடைகள் ஆயிரம். 20. அமுத நிலையம். பக். 169. https://books.google.co.in/books?id=dXRkAAAAMAAJ&dq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F&focus=searchwithinvolume&q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%2C+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D. "624.திருநீலகண்ட நாயனர், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனர் ஆகிய இருவரும் ஒருவரா? இருவரும் வேறு.திருநீலகண்டநாயனர் குலால வம்சத்தைச் சேர்ந்தவர், திருநீலகண்டயாழ்ப்பாணர் பாணர் குலத்தினர்;" 
  3. கீழாம்பூர். ஆர்.நாராயணஸ்வாமி, தொகுப்பாசிரியர் (1941). கலைமகள் இதழ். 20. பக். 78:. https://books.google.co.in/books?id=NNsGAQAAIAAJ&q=. "சிதம்பரத்தில் குலாலர் குலத்தில் கிருநீலகண்டரென்பவர் உதித்து இளமை தொடங்கியே சிவபக்திச் செல்வமுடையவராகி விளங்கினர்" 
  4. புலவர் செ. இராசு, தொகுப்பாசிரியர் (1991). கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள். அரை காலிகோ. பக். 184. https://books.google.co.in/books?id=zxpHAQAAIAAJ&q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjBiaiutJDrAhWF6nMBHVZuAhoQ6AEIKDAA. "திருநீலகண்டர் குலாலர் சமூகத்தில் பிறந்தவர். கிபி. 15ஆம் நூற்றாண்டில் தீர்த்தகிரி மலையில் குலாலர் குலப் பெருமக்களால் திருநீலகண்டர் பெயரில் திருமடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இது 56 தேசத்திலும் உள்ள திருநீலகண்டர்கள் ( குலாலர்கள் ) பலர் சேர்ந்து ஏற்படுத்திய மடம். மடத்தில் திருநீலகண்டரையும் , இராமலிங்க பண்டாரத்தையும் பிரதிட்டை செய்தனர் ." 
  5. நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்
  6. 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (16 பிப்ரவரி 2011). திருநீலகண்ட நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1782. 
  7. மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39. 

உசாத்துணைகள் தொகு

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநீலகண்ட_நாயனார்&oldid=3395255" இலிருந்து மீள்விக்கப்பட்டது