திருமலை-பம்பரப்பாறை ஓவியங்கள்

திருமலை-பம்பரப்பாறை ஓவியங்கள் என்பன தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், திருமலைகோனேரிப்பட்டி கிராமத்தின் அருகே அமைந்துள்ள பம்பரப்பாறையின் நான்கு பகுதிகளில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் ஆகும். [1][2]


கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு தமிழ்-பிராமி கல்வெட்டுகள் இந்தக் குன்றில் கண்டறியப்பட்டுள்ளன. குகைகளின் பாறைத்தளத்தில் பல சமணப் படுக்கைகள் தலையணைகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு சமணப்படுக்கையில் பொறிக்கப்பட்டுள்ள சுவசுத்திக்கா குறியீடு (Swastik Symbol) தனித்துவமானது. தமிழ்நாட்டின் பிற சமணத்தளங்களில் இதுபோன்ற குறியீடு காணப்படவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர்களின் குடைவரைக்கோவில் ஒன்று இக்குன்றில் உள்ளது. பிற்காலப் பாண்டியர்களின் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டுமானக் கோவில் ஒன்றும் இங்குள்ளது.[2]

திருமலையின் தனிச்சிறப்பு தொகு

பாண்டியர் காலத்தைச் சேர்ந்த குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்களுடன், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், மற்றும் வரலாற்றுக்கு முந்தைய காலத்து ஓவியங்களும் இணைந்துள்ளது திருமலையின் தனிச்சிறப்பு என்று தமிழ்நாடு அரசின் மாநில தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த கல்வெட்டாய்வாளரான வெ.வேதாச்சலம் கருதுகிறார். [3]

அமைவிடம் தொகு

இவ்வூர் மதுரையிலிருந்து 48.8 கி.மீ. தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 26.9 கி.மீ. தொலைவிலும், சிவகங்கை மாவட்டத் தலைமையகத்திலிருந்து வடக்கு நோக்கி 22.2 கிமீ தொலைவிலும், மேலூரிலிருந்து 20.1 கி.மீ. தொலைவிலும், திருக்கோஷ்டியூரிலிருந்து 18.9 கி.மீ. தொலைவிலும், பிறவளூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், கீழப்பூங்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. திருமலைக்கோனேரிப்பட்டி பின் குறியீட்டு எண் 630552 ஆகும்.[1]

பாறை ஓவிய தளங்கள் தொகு

திருமலை-பம்பரப்பாறை வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களின் தளமாகும். [4] இக்குன்றில் உள்ள சறுக்குப் பாறை, வடக்குப் பாறை, தெற்கு மற்றும் தென்கிழக்குப் பாறைகள் ஆகிய நான்கு பகுதிகளில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. [5] இந்தப் பாறை ஒவியங்கள் வாழ்க்கையின் பல நிகழ்வுகளை உன்னிப்பாகப் பதிவு செய்துள்ளன. இவற்றுள் பெரும்பான்மையானவை செங்காவி வண்ணத்திலும், வெகு சில ஓவியங்கள் வெண்சாந்து நிறத்திலும் தீட்டப்பட்டுள்ளன. [5][2]

பாறை ஓவியச் சித்தரிப்புகள் தொகு

  • ஓர் ஓவியம் இரண்டு ஆண்கள் தங்களுக்குள் மூர்க்கமாகச் சண்டையிட்டுக் கொள்வதைச் சித்தரிக்கிறது. ஒருவரை ஒருவர் தாக்க முற்பட, இருவரும் கையை விரித்து நீட்டி மற்றொருவரின் தாக்குதலைத் தடுக்க முற்படுகிறார்கள். இருவரும் தங்களுடைய மற்றொரு கையை நன்கு உயர்த்தி, விரல்களை விரித்து, ஒருவர் மற்றொருவரின் கன்னத்தில் அறைய முற்படுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மனிதர்களும் எடுப்பான அலகுகளுடன் கூடிய பறவைகளின் முகமூடிகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மனிதர்களின் ஓவியங்களும் அடர்த்தியான திட வடிவங்களாக (Solid form) தீட்டப்பட்டுள்ளன. [5] கீழ்வாலை, செத்தவரை (விழுப்புரம் மாவட்டம்), கிடாரிப்பட்டி (மதுரை மாவட்டம்) மற்றும் சந்திராபுரம் (வேலூர் மாவட்டம்) ஆகிய பாறை ஓவிய தளங்களில் மட்டுமே மனிதர்கள், பறவை-முகமூடிகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள பாறை ஓவியங்களுள் இதனைத் தலைசிறந்த ஓவியம் என்று இதனைக் கருதலாம். [3]
  • செங்காவி வண்ணத்தில் தீட்டப்பட்ட வேறொரு பாறை ஓவியம் ஒரு மனிதனின் குதிரையேற்றத்தைச் சித்தரிக்கிறது.
  • மற்றொரு செங்காவி ஓவியம், ஒரு மனித உருவத்தை, உடுக்கையைப் (Damaru) போன்ற முக்கோணக் கோட்டோவியமாகச் சித்தரிக்கிறது. [5] இவை விசமிகளால் சிதைக்கப்பட்டுள்ளன. [6] [2]
  • பறவை முகமூடி அணிந்த ஒரு மனிதனின் ஓவியமும் சிதைக்கப்பட்டுள்ளது.
  • அரிவாள் ஏந்திய மனிதன்;
  • கை கோர்த்தவாறு இணைந்துள்ள மூன்று மனித உருவங்கள்;
  • மானைப் பிடிக்க முயலும் மனிதன்;
  • கொக்கு, நாய் ஆகிய விலங்குகளின் உருவங்களும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.[3][5]

பாறை ஓவியங்களின் காலவரையறை தொகு

  • இந்தப் பாறை ஓவியங்கள் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது. [3]
  • திருமலை-பம்பரப்பாறையில் மட்டுமே, பெருங்கற்காலம் மற்றும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த செங்காவி வண்ண பாறை ஓவியங்கள் திட வடிவிலும், கோட்டோவியமாகவும் தீட்டப்பட்டுள்ளன என்று க.த.காந்திராசன் கருதுகிறார்.
  • திருமலை மற்றும் அழகர்மலை தளங்களில் மட்டுமே மனிதர்கள் வரிவடிவிலும் (Geometric shapes) கோட்டோவியமாகவும் வரையப்பட்டுள்ளதாக காந்திராசன் கருதுகிறார். [3]
  • திருமலை-பம்பரப்பாறை ஓவியங்களை வரைந்த முறை, மற்றும் காட்சி அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இவற்றை பெருங்கற்காலம் மற்றும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியர்கள் வரைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. [5]
  • அடர்த்தியான திட ஓவியம், கோட்டோவியம் மட்டுமின்றி சில இடங்களில் பாறையில் கற்கீரல்களும் கண்டறியப்பட்டுள்ளன. உளியினால் செத்துக்கப்பட்டது போல காணப்படுவதால், இவை இரும்புக் காலத்தையொட்டி உருவக்கப்பட்டிருக்கலாம். [5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Thirumalaikkoneripatti Onefivenine
  2. 2.0 2.1 2.2 2.3 Preserving history D.Karthikeyan. The Hindu January 21, 2010
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Vandals work T.S. Subramaniyan. Frontline February 13, 2009
  4. When rocks tell tales M T Saju The Times of India March 11, 2019
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 திருமலை தமிழிணையம் தமிழர் தகவலாற்றுப்படை
  6. சிதைக்கப்படும் தொல்லியல் பொக்கிஷம்:பொலிவு பெறுமா திருமலை? தினமலர் ஜனவரி 16, 2011

வெளி இணைப்புகள் தொகு