திருலோக சீதாராம்

திருலோக சீதாராம் என்ற திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன் (1 ஏப்ரல் 1917 – 23 ஆகத்து 1973) மேடைப்பேச்சாளர், சிவாஜி இதழின் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், இலக்கியக் கட்டுரையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர்.[1] செருமானிய இலக்கியவாதி எர்மன் கெசியின் 'சித்தார்த்தா' புதினத்தைத் தமிழில் ’சித்தார்த்தன்’ என்று மொழிபெயர்த்து 1957 ஆம் ஆண்டு வெளியிட்டவர். மனுசுமிருதியையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.[2]

வாழ்க்கை தொகு

இவர் பெரம்பலூருக்கு அருகிலுள்ள தொண்டைமான்துறை என்ற ஊரில், திருவையாறு லோகநாத ஐயர்–மீனாட்சி சுந்தரி என்ற தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பெற்றோருக்கு 1917 ஏப்ரல் முதல் தேதியன்று பிறந்தார். மூன்று வயதிருக்கும்போதே தந்தையை இழந்து, மாமன் வீட்டில் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். இவருக்கு லலிதா என்ற தங்கையும் பஞ்சாபகேசன் என்ற தம்பியும் இருந்தனர். இவருக்கு 1936 இல் இவரது 19 ஆம் வயதில் 10 வயதான ராஜாமணியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மதுரம், வசந்தா, இந்திரா என்ற மூன்று பெண் குழந்தைகளும் பசுபதி, சுப்பிரமணியன், முரளிதரன், ராமகிருஷ்ணன் என்ற நான்கு ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.

பாரதி பணி தொகு

சிறு வயதிலேயே பாரதியின் எழுத்துக்களை தானாக பயின்றவர். பாரதியின் கவிதைகளை பரப்புவதில் தன் வாழ்க்கைப் பயனைக் கண்டார். செல்லும் இடங்களெல்லாம் பரதியின் பாடல்களைப் பாடினார். பாரதியின் பாஞ்சாலி சபதம் பாடலை மூன்று மணி நேரம் கதாகாலட்சேபம் போல் சொற்பொழிவு ஆற்றுவார்.

பாரதியாரின் குடும்பத்தினரோடும் நெருங்கிய தொடர்பில் இருந்தார். கடையத்தில் வறுமையான வாழ்க்கை நடத்தி வந்த பாரதியின் மனைவி செல்லம்மா பாரதி, மற்றும் குடும்பத்தினரை திருச்சிக்கு அழைத்து வந்து தன் பொறுப்பில் காப்பாற்றினார். செல்லம்மா பாரதி உடல்நலம் இழந்த இறுதிக் காலத்தில், அவருடனே இருந்து அவருக்குப் பணிவிடை செய்தார். இவருடைய மடியில்தான் செல்லாம்மா பாரதி உயிர் நீத்தார்.

பத்திரிகைப் பணிகள் தொகு

இவருக்கு இளம் வயதிலேயே கவிதை எழுதுவதிலும், பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. இதனால், அவரது 18 வது வயதிலேயே ‘இந்திய வாலிபன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். பிறகு, விழுப்புரத்துக்கு அருகில் பரிக்கல் என்ற சிற்றூரில் இராம சடகோபன் என்பவர் நடத்தி வந்த ‘தியாகி’ என்ற பத்திரிகையின் துணை ஆசிரியராகச் சில மாதங்கள் பணிபுரிந்தார். மந்தஹாசன் என்ற புனைபெயரில் எழுதத் துவங்கிய திருலோகம், சில ஆண்டுகளுக்குப் பிறகு திருலோக சீதாராம் என்ற பெயரிலேயே தன் எழுத்தைத் தொடர்ந்தார்.[3]

நடத்திய பத்திரிகைகளின் பட்டியல் தொகு

  • இந்திய வாலிபன்
  • ஆற்காடு தூதன் (விழுப்புரத்திலிருந்து)
  • கிராம ஊழியன் (துறையூரிலிருந்து)
  • சிவாஜி (திருச்சியிலிருந்து)

எழுதிய நூல்கள் தொகு

  1. உதயம் - கவிதைத் தொகுதி - புதுப்புனல் பதிப்பகம்
  2. கந்தருவ கானம் - கவிதைத் தொகுதி - கலைஞன் பதிப்பகம் - 1967
  3. இலக்கிய படகு - கட்டுரைத் தொகுதி - கலைஞன் பதிப்பகம்
  4. ஜி.டி.நாயுடு வாழ்க்கை பற்றிய நூல் - அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
  5. புதுயுக கவிஞர் - புவனேஸ்வரி பதிப்பகம் - பாரதியார் கவிதைகள் பற்றி ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைகள்

தொகுத்த நூல் தொகு

  • புதுத்தமிழ் கவிமலர்கள் - 1957 - சமகால கவிஞர்கள் பலரின் கவிதைகளின் தொகுப்பு, எழுதிய கவிஞர்களைப் பற்றிய குறிப்புகளுடன்.

மொழி பெயர்ப்புகள் தொகு

  • மனுதரும சாத்திரம்[4]
  • சித்தார்த்தா (நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு)[5]

மேற்கோள்கள் தொகு

  1. திருலோக சீதாராம் எனும் பன்முக ஆளுமை
  2. திருலோக சீதாராம், ஏ.ஆர்.இராஜமணி (புத்தக மதிப்புரை)
  3. ரவி சுப்பிரமணியன் (ஆகத்து 3, 2017). "திருலோக சீதாராம் எனும் பன்முக ஆளுமை". கட்டுரை. தி இந்து.
  4. "மனுதர்ம சாஸ்திரம்". panuval.com. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "திருலோக சீதாராம்". sramakrishnan.com. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருலோக_சீதாராம்&oldid=3588981" இலிருந்து மீள்விக்கப்பட்டது