திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு

அரசியல் கட்சி

திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு (திசம்பர் 16, 1945 - சனவரி 26, 1957[1]) என்பது முந்தைய இந்திய மாநிலமான ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி நாகர்கோவிலைத் தலைமையகமாகக் கொண்டு தமிழின ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டது.[1] ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக இருக்கும் வட்டங்களைச் சென்னை மாகாணத்தோடு இணைக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் முக்கியக் கொள்கையாக இருந்தது. இக்கட்சியில் பரவலாக அறியப்படும் மற்றொரு முக்கிய உறுப்பினர் கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் ஏ. நேசமணி ஆவார்.[1][2]

திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு நடத்திய மாநாட்டில் ம. பொ. சி. மற்றும் இடி. கே. சண்முகம்
திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு நடத்திய ஊர்வலம்

வரலாறு

தொகு

திருவாங்கூர் அரசாங்கம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தின் போது ஒரு முடியாட்சி மாநிலமாக இருந்தது. இதில் மலையாளிகளின் மக்கள் தொகை அதிகமாகவும் தமிழர்களின் மக்கள் தொகை குறைவாகவும் இருந்தது. இதனால் மொழிவாரியாகத் தமிழர்களின் அடையாளம் காட்டப்பட்டு அவர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டன.[2] அம்மாநிலத்தின் தமிழினத் தலைவர்களும் தமிழர்களின் மீது மலையாளிகளால் நடத்தப்படும் பொருளாதாரச் சுரண்டல்களை எதிர்த்து வந்தனர்.[3][4] அக்காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக்கோரி இந்தியா முழுதும் கோரிக்கை பலமாக எழுந்ததால் திருவாங்கூர், கொச்சி, மலபார் பகுதிகளை ஒருங்கிணைத்துக் கேரள மாநிலம் அமைக்க வேண்டும் என மலையாள அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. திருவாங்கூர் சமஸ்தானக் காங்கிரசு இதற்கு ஆதரவளிக்க அதை அக்கட்சியில் உள்ள தமிழர்கள் எதிர்த்து அக்கட்சியை விட்டு வெளியேறினர். கேரள மாநிலம் அமைவதாக இருந்தால் தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என பி. எஸ். மணி, காந்திராமன், ஆர். கே. இராம் போன்ற தமிழர்கள் வலியுறுத்தினர். இந்த அரசியலை ஒட்டித் தமிழர்களுக்கு எனத் தனிக் காங்கிரசு ஒன்றை அமைக்க இவர்கள் தீர்மானித்தனர். அதனால் திசம்பர் 16, கி. பி. 1945 அன்று தொடங்கிய கட்சி தான் அகில திருவாங்கூர் தமிழர் காங்கிரசு ஆகும்.[1]

கொள்கைகளும் ஆதரவுகளும்

தொகு

தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெயாத்தங்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய வட்டங்களைச் சென்னை மாகாணத்துடன் இணைப்பதே இக்கட்சியின் கொள்கை ஆகும். தமிழர்களின் பகுதிகளில் தமிழே நிருவாக மொழியாக இருக்க வேண்டும் என்பதும் இங்கே கூடுதல் கொள்கை. தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்றும் மேல் கோரிக்கைகளையும் இக்கட்சி விடுத்துவந்தது.[1][5] ஆரம்பத்தில் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு தோவாளை, அகத்தீசுவரம் வட்டங்களில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருந்தது. சென்னை மாகாணத்தில் இருந்த தமிழ்த் தேசிய ஊடகங்களும் இவர்களுக்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிட்டு வந்தன.

ம. பொ. சிவஞானம்

தொகு

ம. பொ. சி. இக்கட்சிக்கு ஆதரவாகச் சென்னை மாகாணத்தில் மேடைப் பேச்சுகளில் ஈடுபட்டார்.[6]

முகமது இசுமாயில்

தொகு

தேவிகுளம், பீர்மேடு பகுதிகள், கேரளாவோடு இணைக்கப்பட்டபோது 24.12.1955 அன்று மக்களவையில் கடும் எதிர்ப்பை அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் முகம்மது இசுமாயில் பதிந்தார். தமிழகத்துடன் கேரளாவின் தமிழ்ப் பகுதிகளை இணைக்கப் பின்வருமாறு வழியுறுத்தினார்.

விநாயகம்

தொகு

காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் விநாயகம் பிற்காலத்தில் திருத்தணிப் பகுதி தமிழகத்தில் இணையக் காரணமாய் இருந்தவர். தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் திருவாங்கூர்-கொச்சிக்குக் கிடைக்க வைக்க மலையாளி பணிக்கர் அளவு கடந்து முயல்வதாக எச்சரித்து, தமிழருக்கு ஆதரவாக சட்டமன்றத்திலேயே மலையாளி பணிக்கரை குற்றம் சாட்டினார் விநாயகம்.

பெயர்மாற்றம்

தொகு

1945இல் இதன் தலைவராக வழக்கறிஞர் சாம் நத்தானியலும் பொதுச்செயலாளராக ஆர். கே. இராம் என்பவரும் இருந்தனர். ஆனால் தமிழர் பகுதிகளைச் சென்னை மாகாணத்துடன் இணைக்க வேண்டும் என்பதே முக்கியக் கோரிக்கை என்பதால் கட்சியின் பெயரை திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு எனப் பெயர் மாற்றம் செய்ய 1946 சூன் 30 அன்று இரவிப்புத்தூரில் நடந்த தமிழர் காங்கிரசு குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[7]

கல்குளம் - விளவங்கோடு எழுச்சியும் துப்பாக்கிச் சூடும்

தொகு

தோவாளை, அகத்தீசுவரம் வட்டங்களில் மட்டுமே செல்வாக்குடன் இருந்த திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு விளவங்கோட்டைச் சேர்ந்த ஏ. நேசமணி இக்கட்சியில் இணைந்ததால் கல்குளம், விளவங்கோடு வட்ட மக்களின் ஆதரவையும் பெறத்தொடங்கியது. 1947 செப்டம்பர் 8 அன்று நாகர்கோவில் ஆலன் நினைவு அரங்கில் நேசமணி தனது ஆதரவாளர்களின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் அவரின் ஆதரவாளர்களும் இக்கட்சியில் சேர முடிவு எடுத்தனர்.[8] கல்குளம், விளவங்கோடு பகுதியில் தமிழ் நாடார்கள் அனைவரும் இக்கட்சிக்கு ஆதரவாகத் திரண்டதால் அப்பகுதியில் இருந்த மலையாள ஆதிக்க சாதியான நாயர்கள் இவர்கள் மீது கோபம் கொண்டனர். இதனால் ஏற்பட்ட நிகழ்வுகளை அடக்க நினைத்துக் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாங்காடு தேவசகாயம், கீழ்குளம் செல்லையா போன்றோர் கொல்லப்பட்டனர்.[9][10]

1949இல் இந்தியாவில் நடந்த மாநிலங்களின் ஒருங்கிணைப்பின் போது திருவாங்கூர் அரசும் கொச்சி அரசும் ஒன்றாக இணைந்து தனி முடியாட்சி மாநிலமாக மாறியது.[11] அப்போது இராச்சுபிரமுக்கு அதன் ஆளுநராக இருந்தார். 1951இல் நடந்த திருவாங்கூர்-கொச்சி மாநிலச் சட்டசபைத் தேர்தலில் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு 9[12] அல்லது 10 தொகுதிகளில் வென்றது.[13] அந்தத் தேர்தலில் தனிமாநில ஆதரவு தருவார்கள் என நம்பி இந்தியத் தேசியக் காங்கிரசை ஆதரித்த திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு 19 மாதங்கள் கழித்து இந்தியத் தேசியக் காங்கிரசிடம் இருந்து இதற்கு ஆதரவு கிடைக்காது என்பதால் ஆதரவைத் திருப்பிப் பெற்றுக்கொண்டது.[12] 1952இல் நடந்த திருவாங்கூர்-கொச்சி மாநிலச் சட்டசபைத் தேர்தலில் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு 12 தொகுதிகளை வென்றது.[14] அதே ஆண்டில் இக்கட்சி தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த வட்டங்களான தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெயாத்தங்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய வட்டங்களைச் சென்னை மாகாணத்துடன் இணைக்கக் கோரி அறிக்கை விட்டது.[15] ஆகத்து 1954இல் இது தொடர்பாக நடந்த சாலைப் போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.[16][17]

1948 சட்டமன்றத் தேர்தல்

தொகு

திருவாங்கூரில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தல் 1948 பெப்ரவரி மாதம் நடைபெற்றது. தமிழர் பகுதிகளில் 18 வேட்பாளர்களை நிறுத்திய தி.த.நா.கா. 14 தொகுதிகளை வென்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. மலையாளிகள் அதிகம் இருந்த சமஸ்தான காங்கிரசு வெற்றிபெற்று அதில் இருந்த பட்டம் தாணுபிள்ளை நாயர் முதல்வராகப் பதவியேற்றார். விளவங்கோடு தொகுதியில் வென்ற நேசமணி தி.த.நா.கா. சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது தலைமையிலேயே தமிழர் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன.[1]

வெற்றி பெற்ற தி. த. நா. கா. உறுப்பினர்கள்[18]

தொகு

நேசமணி எதிர்க்கட்சித் தலைவராகவும் கீழ்வருபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 1. அம்புரூசு பெர்ணான்டசு
 2. பொன்னையா
 3. தானுலிங்க நாடார்
 4. இராமன் பிள்ளை
 5. சிவராம பிள்ளை
 6. நேசமணி - எதிர்க்கட்சித்தலைவரும் கூட.
 7. கொச்சு கிருட்டிணப் பிள்ளை
 8. எலியாசு
 9. தாசு
 10. ஞான சிகாமணி
 11. சிதம்பரநாதன் நாடார்
 12. சதாசிவன்
 13. செல்வசுவாமி நாடார்
 14. கபிரியல்

தேவிக்குள தொழிலாளர் வாக்குரிமைப் போராட்டம்

தொகு

மலைப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு வட்டங்களில் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பெருமளவில் இருந்தனர். திருவாங்கூர் சமசுத்தான காங்கிரசின் தலைவர்கள் தமிழ்த் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டதால், தமிழர்கள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் காமராசரின் உதவியை நாடினர். காமராசரின் ஆலோசனையின் பேரில் மூணாற்றில் 23 - 10 - 1947 அன்று தி.த.நா.கா. குழு தொடங்கப்பட்டது. பெரும்பாலான தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படாதலால் தி.த.நா.கா. தேவிகுளத்தில் தோல்வியடைந்தது. 1948 மார்ச்சு மாதம் தமிழ்த் தொழிலாளர்களுக்காக, தென்னிந்திய தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் தி.த.நா.கா. உதவியுடன் தொடங்கப்பட்டது. அத்தொழிற்சங்கத்தை கவனிப்பதற்காகக் காமராசரால் அனுப்பப்பட்ட குப்புசாமி தேவிகுளத்தில் தமிழர் போராட்டத்தை வலுப்படுத்தியதில் முதன்மையானவர்.[18]

கட்சியில் பிளவு

தொகு

திருவாங்கூர்-கொச்சி மாநிலக் காங்கிரசு கமிட்டியின் ஓர் அங்கமாக செயற்பட தி.த.நா.க. கட்சியை செயற்பட வைக்கத் திருவாங்கூர்-கொச்சி மாநிலக் காங்கிரசுக் கட்சியினர் முயற்சிகளை மேற்கொண்டனர். 1950இல் சென்னை மாநிலக் காங்கிரசு மூத்த தலைவர் பக்தவத்சலம் முன்னிலையில் பாளையங்கோட்டையில் வைத்து இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தி.த.நா.க. கட்சியை திருவாங்கூர்-கொச்சி மாநில காங்கிரசு கட்சியின் அங்கமாக செயற்பட வைக்கத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அந்த உடன்பாடு குறித்து தி.த.நா.க.வில் தனிப்பட்ட விவாதம் நடந்த போது அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதை ஏற்காத சாம் நத்தானியல் தி.த.நா.க. கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார். புதிய தலைவராக 1950இல் தேர்தல் நடத்தி பி. இராமசாமி பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார். உடன் போட்டியிட்ட தானுலிங்க நாடார் தலைமையில் புதிய தி.த.நா.கா. கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இரண்டையும் இணைக்கக் கோரி கட்சியின் மூத்த தலைவர்கள் குஞ்சன் நாடார், காந்திராமன் 9 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இறுதியில் காந்திராமன் உடல் நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.[19]

1952 பொதுத் தேர்தல்

தொகு

1952ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் நேசமணி ஆதரவு தி.த.நா.கா. குடச் சின்னத்திலும், தானுலிங்க நாடார் அணி வண்டிச் சின்னத்திலும் போட்டியிட்டனர். நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நேசமணி பெருவாரியான வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திருவட்டார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட கட்சித்தலைவர் பி ராமசாமிப்பிள்ளை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் தொகையை இழக்கும் வகையில் பெரும் வெற்றி பெற்றார் கல்குளம்-விளவங்கோடு வட்டங்களில் 7 தொகுதிகளிலும் தேவிகுளத்தில் ஒரு தொகுதியிலும் நேசமணி தி.த.நா.கா. வெற்றி பெற்றது. தோவாளை, அகத்தீசுவரம் வட்டங்களில் இரு அணிகளும் தோல்வியடைந்தன.[10] தேர்தல் முடிந்த பின்னர் ஏ.கே. ஜான் தலைமையிலான காங்கிரசு அரசு பதவியேற்றது. தி.த.நா.கா.வின் சிதம்பர நாடார் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள்[20] திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு

தொகு
 1. மனுவேல் சைமன்
 2. வில்லியம்
 3. நூர் முகம்மது
 4. பி. இராமசாமி பிள்ளை
 5. பொன்னப்ப நாடார்
 6. ஏ. கே. செல்லையா
 7. சிதம்பரநாதன் நாடார்
 8. தேவியப்பன்

1952 மாநிலங்களவைத் தேர்தல்

தொகு

1952 மாநிலங்களவைத் தேர்தலில் முசுலீம் இலீக்கு கட்சியின் முன்னாள் உறுப்பினர் எ. அப்துல் இரசாக்கு தி.த.நா.கா. வேட்பாளராக போட்டியிட்டு கம்யூனிசுடுக் கட்சி ஆதரவுடன் வெற்றி பெற்றுப் பாராளுமன்றத்திற்கு சென்றார்.[1]

1954 சட்டமன்றத் தேர்தல்

தொகு

தமிழர் பிரச்சனையில் போதிய அக்கறை காட்டவில்லை என்று கூறி மந்திரிசபைக்கு அளித்து வந்த ஆதரவை தி.த.நா.கா. திரும்பப்பெற்றதால் ஆட்சி அவிழ்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.த.நா.கா. 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றுள் தேவிகுளத்தில் இரண்டு தொகுதிகளிலும் அடக்கம்.

1954 தேர்தலில் வெற்றி பெற்றோர்[21]

தொகு
 1. தங்கையா
 2. குஞ்சன் நாடார்
 3. அலெக்சாண்டர்
 4. மனுவேல் சைமன்
 5. டி.டி. இடானியல்
 6. டி. ஆனந்தராமன்
 7. வில்லியம்
 8. தானுலிங்க நாடார்
 9. சிதம்பரநாத நாடார்
 10. நூர் முகம்மது
 11. பொன்னப்ப நாடார்
 12. பி. இராமசாமி பிள்ளை
 13. எஸ். எஸ். சர்மா

1954 ஆகத்து 11 துப்பாக்கிச் சூடு

தொகு

திருவாங்கூர்-கொச்சி மாநில முதல்வராக பதவியேற்ற பட்டம் தாணுபிள்ளை தேவிக்குளம் பகுதித் தமிழர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவினார். காவல் துறையினர் அத்துமீறல்களைக் கண்டித்து நாகர்கோவில் பகுதி தி.த.நா.கா. தலைவர்கள் மூணாற்றுக்கே சென்று தடையை மீறி போராட்டம் நடத்திக் கைதாயினர். நேசமணி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டால் தென்றிருவாங்கூர்ப் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. ஆகத்து 11ஆம் தேதியன்று தி.த.நா.கா. அறிவித்திருந்த விடுதலை நாள் போராட்டத்தின் போது ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. அன்றைய போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தி.த.நா.கா. தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் பட்டியல்[1]

தொகு
 1. எம். முத்துச்சாமி
 2. எ. அருளப்பநாடார்
 3. எ. பீர்முகம்மது
 4. என். செல்லப்பாபிள்ளை
 5. எ. பொன்னையன்
 6. எஸ். இராமையன்
 7. என். குமரன் நாடார்
 8. எம்.பாலையன் நாடார்
 9. ஜி. பப்பு பணிக்கர்

தமிழகத்தில் சேர்க்கப்பட்ட வட்டங்கள்

தொகு

மொழிவாரியாக மாநிலங்களை பிரிப்பதற்கு ஆய்வு மேற்கொள்வதற்காக 1953 திசம்பர் மாதம் நீதிபதி பசல் அலி தலைமையிலான கமிசனை மத்திய அரசு நியமித்தது. பசல் அலி கமிசன் மொழிவாரியாக கோரிக்கைகள் எழுப்பப்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று கருத்துக்களை கேட்டறிந்து, 1955 ஆம் ஆண்டு ஆகத்து பத்தாம் தேதியன்று தமது அறிக்கையினை வெளியிட்டது. 1956ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் நாள் புதிய மாநிலங்கள் செயல்படத் தொடங்கின. அன்றைய தினம் தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு வட்டங்கள் கன்னியாக்குமரி மாவட்டம் என்ற பெயருடன் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்டன. செங்கோட்டை கிழக்கு பகுதி திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.[1] கமிசனின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அப்போது கீழ்வருகிறபடி பகுதிகள் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டும் சேர்க்கப்படாமலும் இருந்தன.

தமிழகத்துடன் சேர்க்கப்பட்டவை

தொகு

கீழுள்ளவை சென்னை மாகாணத்தோடு (தமிழ்நாடு) கமிசனின் ஒப்புதல் பெற்றவுடன் இணைக்கப்பட்டன.

 1. தோவாளை
 2. அகத்தீசுவரம்
 3. கல்குளம்
 4. விளவங்கோடு
 5. செங்கோட்டை கிழக்குப் பகுதி

தமிழகத்துடன் சேர்க்கப்படாதவை

தொகு

கீழுள்ளவை புதிதாக அமையவிருந்த கேரள மாநிலத்தோடு கமிசனின் ஒப்புதல் பெற்று சேர்க்கப்பட்டன.

 1. தேவிகுளம்
 2. பீர்மேடு
 3. சித்தூர்
 4. நெய்யாற்றங்கரை
 5. செங்கோட்டை மலைப்பகுதி

கட்சிக்கலைப்பு

தொகு

இந்திய அரசின் மாநில மறுசீரமைப்பு ஆணையம் வடிவமைத்த மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956ன் படி இந்தியாவின் பல விதமான பகுதிகள் பல விதமாக இணைக்கப்பட்டு மாநிலங்கள் ஆக்கப்பட்டன. அதன்படி[22] தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, தோவளை போன்ற பகுதிகள் சென்னை மாகாணத்தோடு நவம்பர் 1, 1956ல் இணைக்கப்பட்டது.[a])[22][24] மற்ற தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் திருவாங்கூர்-கொச்சி மாநிலத்துடனையே இருந்தன. இந்த இணைப்புகளுக்குப் பின்னரும் தமிழர்கள் அதிகம் வாழும் திருவாங்கூர்-கொச்சின் பகுதிகள் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு தங்களது வேட்பாளர்களை நிறுத்தியும் மீதமிருக்கும் தமிழர் பகுதிகளை சென்னை மாகாணத்தோடு இணைக்கும் தொடர்ச்சியான விழிப்புணர்வையும் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.[25] மேலும் கன்னியாக்குமரி, செங்கோட்டை போன்ற பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டதால் 1957ல் கட்சியைக் கலைத்துவிட்டு இந்தியத் தேசியக் காங்கிரசு கட்சியில் இணைந்துவிட்டனர்.[26]

அடிக்குறிப்புகள்

தொகு
 1. Madras state renamed as Tamil Nadu on 14 January 1969[23]

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 பி. யோகீசுவரன் (29 செப்டம்பர் 2011). திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு. சென்னை. {{cite book}}: Check date values in: |year= (help)
 2. 2.0 2.1 "Remembering Marshal Nesamony". The Hindu. 2 November 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/remembering-marshal-nesamony/article4057148.ece. பார்த்த நாள்: 3 February 2014. 
 3. Kumari Thanthai, Marshall A. Nesamony; Dr.Peter, Dr. Ivy Peter,; Peter. Liberation of the Oppressed a Continuous Struggle. History Kanyakumari District. p. 244. GGKEY:4WSDDCN93JK.{{cite book}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
 4. "Veteran Congress leader Dennis dead". The Hindu. 22 June 2013. பார்க்கப்பட்ட நாள் 22 February 2014.
 5. Kumari Thanthai, Marshall A. Nesamony; Dr.Peter, Dr. Ivy Peter,; Peter. Liberation of the Oppressed a Continuous Struggle. History Kanyakumari District. p. 135. GGKEY:4WSDDCN93JK.{{cite book}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
 6. V. Sathianesan (2000). Tamil Separatism in Travancore : A Movement for Social Liberation.
 7. D Daniel (1992). Travancore Tamils, struggle for identity, 1938-1956. Madurai: Raj Publishers.
 8. The Hindu, September 12 1947
 9. D. Peter, Ivy Peter (November 2009). LIBERATION OF THE OPPRESSED: A CONTINUOUS STRUGGLE, A CASE STUDY, (SINCE 1822 A.D.), Socio-Economic and Political Liberation Struggle in the Extreme South of India. 266, Water Tank Road, Nagercoil-629 001, India: Kanyakumari Institute of Development Studies. pp. 60–62.{{cite book}}: CS1 maint: location (link)
 10. 10.0 10.1 D Peter. மலையாளி ஆதிக்கமும் தமிழர் விடுதலையும்.
 11. John Jeya Paul; Keith E. Yandell (2000). Religion and Public Culture: Encounters and Identities in Modern South India. Psychology Press. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-1101-7.
 12. 12.0 12.1 Meera Srivastava (1980). Constitutional Crisis in the States in India. Concept Publishing Company. p. 50. GGKEY:0BS5QYU7XF2.
 13. Chander, N. Jose (2004). Coalition Politics: The Indian Experience. Concept Publishing Company. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180690921.
 14. "History of Kerala Legislature". Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 3 February 2014.
 15. "Historically and demographically, Peermedu and Devikulam taluks belong to TN". The weekendleader. 6 January 2012. http://www.theweekendleader.com/Causes/912/Idukki-for-TN.html. பார்த்த நாள்: 3 February 2014. 
 16. Manisha (2010). Profiles of Indian Prime Ministers. Mittal Publications. p. 311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-976-8.
 17. S. C. Bhatt, Gopal K. Bhargava (2006). Land and People of Indian States and Union Territories: In 36 Volumes. Kerala. Gyan Publishing House. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-370-8.
 18. 18.0 18.1 A. Nesamony (1948). Inside Travancore Tamil Nadu, Nagercoil, 1948. நாகர்கோவில்.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
 19. தினமலர், 4.10.1981
 20. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Travancore-Cochin" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.
 21. "Statistical Report on General Election, 1954 : To the Legislative Assembly of Travancore-Cochin" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2018-10-17. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.
 22. 22.0 22.1 "Nagercoil". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
 23. "Tamil Nadu Legislative Assembly History". Tamil Nadu Legislative Assembly. Archived from the original on 13 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 24. "Floral tributes on Kumari-TN merger day to Nesamony". The New Indian Express. 1 November 2011. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Floral-tributes-on-Kumari-TN-merger-day-to-Nesamony/2013/11/01/article1867432.ece. பார்த்த நாள்: 3 February 2014. "November 1, the day of merger of Kanyakumari district with Tamil Nadu" 
 25. Arunachalam, S (6 January 2012). "Historically and demographically, Peermedu and Devikulam taluks belong to TNf". The Weekend Leader. http://www.theweekendleader.com/Causes/912/Idukki-for-TN.html#sthash.zIoI2iPJ.dpu. பார்த்த நாள்: 20 May 2014. 
 26. Kumari Thanthai, Marshall A. Nesamony; Dr.Peter, Dr. Ivy Peter,; Peter. Liberation of the Oppressed a Continuous Struggle. History Kanyakumari District. p. 130. GGKEY:4WSDDCN93JK.{{cite book}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)