திருவாசி
திருவாசி என்பது கோயிலில் கடவுள் சிலை இருக்கும் பீடத்தின் மேல் அமைந்திருக்கும், வேலைப்பாட்டுடன் கூடிய, உலோகத்தினால் செய்யப்பட்ட அலங்கார அமைப்பு ஆகும். இதனை திருவாசிகை, திருவாட்சி, வாகனப்பிரபை போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. இது சிலைக்குப் பின்னணியாக இருக்கும்படி அமைந்திருக்கும். வளைவாக அமைந்து காணப்படினும், இவை பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.
சமய அடிப்படையில் இதற்குப் பல தத்துவங்கள் கூறப்படுகின்றன. உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த நூல் சிவனின் நடராச தத்துவத்தை விளக்கும்போது ஓங்காரமே திருவாசி என்று திருவாசியை ஓங்கார வடிவமாகக் காட்டுகிறது. [1] [2] இதுதவிர திருவாசி பிரபஞ்சத்தைக் குறிக்கிறது என்ற கருத்தும் உண்டு. நடராஜர் சிற்பங்களில் திருவாசி ஏறத்தாழ வட்டவடிவில் காணப்படும். இவ்வட்டத்தின் மையம் ஆடல் புரியும் நிலையில் உள்ள சிலையின் தொப்புளுடன் பொருந்தி வரும்படி அமைந்திருக்கும். வளைவின் வெளிப்புறம் வரிசையாகத் தீச்சுவாலைகள் இருக்கும்.
சில திருவாசிகளில் இருபுறமும் பீடத்திலிருந்து தூண்போன்ற அமைப்புக்களும் அதன் மேல் வளைவான அமைப்பும் காணப்படும். உச்சியில் யாளியின் முகம் அமைந்திருக்க, இரு பக்கங்களிலும் தூண் அமைப்பின் உச்சியிலிருந்து வளைவு தொடங்கும் இடங்களில் பக்கத்துக்கு ஒன்றாக இரு மகர உருவங்கள் இருப்பது உண்டு.
திருவாசிகள் பித்தளை, செப்பு, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம் போன்ற பலவகை உலோகங்களால் ஆக்கப்படுவது உண்டு.
ஆதாரங்கள்
தொகு- ↑ https://web.archive.org/save/http://temple.dinamalar.com/news_detail.php?id=24105
- ↑ ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில் -சேக்கிழார் பிள்ளைத் தமிழ்