துணை மின்முனை

துணை மின்முனை (Auxilliary Electrode), அடிக்கடி மறிமின்முனை (Counter Electrode,என்றும் வழங்கப்படுகிறது. இது மும்மின்முனை அமைந்த மின்வேதிக் கலத்தில் அல்லது வோல்டா-அளவியல் பகுப்பாய்வில் அல்லது மின்னோட்டப் பாய்வுள்ள வேதிவினைகளில் பயன்படும் ஒரு மின்முனை ஆகும்.[1][2][3] துணை மின்முனை என்பது கலத்தின் வேதிவினை நிகழும் வினை மின்முனையிலிருந்தும் மற்ற மின்னிலைகளை ஒப்பிட்டு அளக்க உதவும் மேற்கோள் மின்னிலையை உடைய தரவு மின்முனையில் (Reference Electrode) இருந்தும் வேறுபட்டதாகும்.

ஓர் இரு மின்முனை அமைப்பில், அளவறிந்த மின்னோட்டமோ அல்லது மின்னிலையோ வினை மின்முனைக்கும் துணை மின்முனைக்கும் இடையில் தரப்படும். விளையும் மாறியின் மதிப்பு அளக்கப்படும் .வினை மின்முனை நேர்முனையாக விளங்கும்போது, துணை மின்முனை எதிர் மின்முனையாகச் செயல்படும். இது எதிர்மாறாகவும் அமையலாம். துணை மின்முனையின் பரப்பு வினை மின்முனையின் பரப்பை விட எப்போதும் கூடுதலாகவே இருக்கும். இது துணை மின்முனையில் நிகழும் அரை-வினை வேகமாக நடப்பதை உறுதிபடுத்துவதோடு, வினை மின்முனையில் நடக்கும் வினையை வரம்பு படுத்தாமல் இருக்கவும் உதவுகிறது..

மும்மின்முனைக் கலம் மின்வேதிப்பகுப்பாய்வை நிகழ்த்த பயன்படுத்தப்படும்போது, துணை மின்முனையும், வினை மின்முனையும் மின்னோட்டம் தரும் அல்லது அளக்கும் சுற்றமைவாக அமையும். இந்நிலையில் துணை மின்முனையின் மின்னிலை அளக்கப்படுவதில்லை. மாறாக, வினை மின்முனையில் நிகழும் வேதிவினை சமன்படும்வகையில் துணை மின்முனையின் மின்னிலை தொடர்ந்து மாற்றப்படும் அல்லது சரிசெய்யப்படும். இந்த அமைவு அறிந்த தரவு மின்முனை மின்னிலையுடன் ஒப்பிட்டு வினை மின்முனையின் மின்னிலையை அளக்க வழிவகுக்கிறது. இதனால் தரவு மின்முனையில் மின்னோட்டம் பாய்ந்து அதன் நிலைப்பினைக் குலைக்காமல் பார்த்துகொள்ள முடிகிறது.

வினை மின்முனையில் இருந்து துணை மின்முனையை ஒரு கண்ணாடித் தடுக்கால் பிரிக்கலாம். இது துணை மின்முனையில் வெளிப்படும் விளைபொருள்கள் கலக் கரைசலை மாசுபடுத்தாமல் காக்கும். எடுத்துகாட்டாக, வினை மின்முனையில் குறைப்பு வேதிவினை நீர்க் கரைசலில் நிகழும்போது துணை மின்முனையில் உயிரகம் (ஆக்சிஜன்), வெளியேறும். எனவே இத்தடுக்குப் பிரிப்பு குறைப்புவேற்ற (Redox) வினை நிகழவல்ல பொருள்களின் பேரளவு மின்னாற்பகுப்புக்குக் கட்டாயத் தேவையாகும்.

துனை மின்முனைகள் எப்போதும் மின்வேதியியலாக மந்தமான பொன், பிளாட்டினம், அல்லது கரிமம் அகிய பொருள்களில் இருந்து செய்யப்படுகின்றன.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Kissinger, Peter; William R. Heineman (1996-01-23). Laboratory Techniques in Electroanalytical Chemistry, Second Edition, Revised and Expanded (2 ). CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8247-9445-1. 
  2. Bard, Allen J.; Larry R. Faulkner (2000-12-18). Electrochemical Methods: Fundamentals and Applications (2 ). Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-04372-9. 
  3. Zoski, Cynthia G. (2007-02-07). Handbook of Electrochemistry. Elsevier Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-444-51958-0. 

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணை_மின்முனை&oldid=1934394" இலிருந்து மீள்விக்கப்பட்டது