தூக்கு (செய்யுள்)

பாட்டை ஓசையுடன் குரலைத் தூக்கிப் பாடுவதைத் தூக்கு என்பது தொல்காப்பிய மரபு. மயிலின் ஓசையை அகவல் என்பர். ஆசிரியப்பா மயில் அகவுவது போன்ற ஓசையுடன் பாடப்படும்.[1] வெண்பா அகவாமல் சொல்வது போலப் பாடப்படும். இதனைச் செப்பல் ஓசை என்பர்.[2] கலிப்பா ஊற்றுநீர் துள்ளிக் குதிப்பது போன்ற ஓசையுடன் வரும். இதனைத் துள்ளல் ஓசை என்பர்.[3] வஞ்சிப்பாவானது ஊஞ்சலாடும் கயிறு தூங்கிக்கொண்டு [4] முன்னும் பின்னும் ஆடுவது போல ஓசை அசைந்தாடப் பாடம்மபடும்.[5] இவை நான்கு பாட்டுக்கும் உரிய ஓசைகள். இந்த ஓசைகளைத் தூக்கு என்பர்.

மருட்பாவுக்கெனத் தனி ஓசைத்தூக்கு இல்லை. இந்தப் பாட்டில் சீர், தளை முதலானவும் விரவி நிற்கும். எனவே ஓசைத்தூக்கும் விரவியே வரும்.[6]

செய்யுளாக எழுதப்படும் பாட்டுகளுக்கு இந்த நான்கு வகையான ஓசைத்தூக்குகள் மட்டுமே உண்டு.[7] பாவினப் பாடல்களும், இசைப் பாடல்களுக்கும் ஓசை என்னும் தூக்கு வரையறை இல்லை. இசை உண்டு. ஓசை என்பது குரலில் தோன்றும் ஏற்றத்தாழ்வு. இசை என்பது இனிய ஓசை. இவையே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு. தாக்கு என்பது மேலே கூறப்பட்ட நான்கு வகையான ஓசைகள்.[8]

அடிக்குறிப்பு தொகு

  1. அகவல் என்பது ஆசிரியம்மே (தொல்காப்பியம் பொருளதிகாரம் 386)
  2. 'அஃதா அன்று' என்ப-'வெண்பா யாப்பே' (தொல்காப்பியம் பொருளதிகாரம் 387)
  3. 'துள்ளல் ஓசை கலி' என மொழிப (தொல்காப்பியம் பொருளதிகாரம் 388)
  4. தொங்கிக்கொண்டு
  5. தூங்கல் ஓசை வஞ்சி ஆகும். (தொல்காப்பியம் பொருளதிகாரம் 389)
  6. மருட்பா ஏனை இரு சார் அல்லது, தான் இது என்னும் தனிநிலை இன்றே. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 390)
  7. அவ் இயல் அல்லது பாட்டு ஆங்குக் கிளவார் (தொல்காப்பியம் பொருளதிகாரம் 391)
  8. 'தூக்கு இயல் வகையே ஆங்கு' என மொழிப (தொல்காப்பியம் பொருளதிகாரம் 392)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூக்கு_(செய்யுள்)&oldid=2745939" இலிருந்து மீள்விக்கப்பட்டது