தூங்கும் அழகி

தூங்கும் அழகி என்பது ஒரு அழகிய இளவரசி மற்றும் ஒரு இளவரசன் பற்றிய செவ்வியல் தேவதைக் கதை ஆகும். 1697 ஆம் ஆண்டில் சார்லஸ் பெரால்ட் வெளியிட்ட "மதர் கூஸ் கதைகள்" தொகுப்பில் இது முதலாவதாகும்.[1]

விக்டர் வாஸ்நெட்சோவின் "தூங்கும் அழகி"

பெரால்டின் பதிப்பு தான் நன்கு அறியப்பட்டதாய் இருக்கிறது எனினும், “சன், மூன், அண்ட் டாலியா” என்னும் 1634 ஆம் ஆண்டில் வெளியான ஒரு பழைய பதிப்புக் கதையும் இருக்கிறது.[2] 1959 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி தயாரித்த அசைவூட்டப் படமான தூங்கும் அழகி தான் ஆங்கிலம் பேசுவோரிடையே மிகவும் பிரபலப்பட்டது ஆகும்.

பெரால்டின் விவரிப்பு தொகு

பெரால்டின் விவரிப்பில் அடிப்படை அம்சங்கள் இரண்டு பாகங்களாய் உள்ளன. கிரிம்ஸ் பதிப்புக்குப் பிறகு அவை தனித்தனிக் கதைகளாகத் தான் இருந்தன என்றும் பின்னர் பாஸிலி அக்கதைகளை ஒன்றாக்கி விட்டார் என்றும், பெரால்டும் அவரைப் பின்தொடர்ந்தார் என்றும் சில கதைசொல்லிகள் நம்புகின்றனர்.[3]

முதல் பாகம் தொகு

வெகுகாலம் வேண்டிப் பிறந்த ஒரு இளவரசியின் பெயர்சூட்டு விழாவுக்கு தேவதைகள் எல்லாம் தெய்வத்தாய்களாய் அழைக்கப்பட்டிருந்தனர்; அவர்கள் வந்திருந்து அழகு, அறிவு மற்றும் இசைத் திறமை என பரிசுகளை வழங்குகின்றனர். ஆயினும், ஒரு துர்தேவதை தன்னை யாரும் அங்கு கண்டுகொள்ளவில்லை எனக் கோபமுற்று இளவரசிக்கு ஒரு சாபத்தை பரிசாகத் தந்து விடுகிறாள். அதன்படி இளவரசி வயதுக்கு வந்த பின், ஒரு தறி ஊசி அவள் விரலில் குத்தி இறந்து போவாள். ஒரு நல்ல தேவதை, தன்னால் இந்த சாபத்தை முழுமையாக இல்லாது செய்ய முடியாமல் போனாலும், இறப்பதற்குப் பதிலாய் அந்த இளவரசி நூறு ஆண்டுகளுக்குத் தூங்கிக் கொண்டிருப்பாள் என மாற்றி விடுகிறாள். ஒரு இளவரசனின் உண்மையான காதலின் முதல் முத்தத்தில் அவள் விழித்தெழுவாள் எனக் கூறுகிறாள்.

மகளுக்கு நேர்ந்த சாபத்தை நினைத்து வருந்தும் மன்னர் நாடு முழுவதிலும் நூற்புக் கழி அல்லது தறியை பயன்படுத்துவதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ முற்றிலுமாய் தடை விதிக்கிறார். ஆனாலும் அது பயனளிக்காமல் போகிறது. இளவரசிக்கு பதினைந்து அல்லது பதினாறு வயது இருக்கும் சமயத்தில் ஒரு கோட்டையின் உச்சியில் ஒரு பழைய பெண் நூல் நூற்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறாள். தனக்குத் தெரியாத அக்கலையை தான் செய்து பார்க்க விரும்புவதாக இளவரசி கேட்கிறாள். நடக்கக் கூடாதது நடந்து விடுகிறது. துர்தேவதையின் சாபம் பலித்தது. நல்ல தேவதை வந்து கோட்டையின் எல்லோரையும் தூங்கச் செய்து விடுகிறாள். முட்செடிகள் கோட்டையைச் சுற்றி காடு போல் வளர்ந்து வெளி உலகத்தில் இருந்து அந்த இடத்திற்கு பாதுகாப்பு அரணாகி விட்டது. முள்ளில் சிக்கி உயிர்போகும் அச்சத்தை எதிர்கொள்ளாமல் ஒருவர் உள்ளே நுழைந்து விட முடியாது.

நூறு வருடங்கள் கழித்து, இந்த சாபத்தின் கதையைக் கேட்கும் ஒரு இளவரசன் அந்த காட்டுக்குள் நுழைகிறான். அவன் வந்ததும் காடு பிளந்து வழிவிடுகிறது, அவன் கோட்டைக்குள் நுழைகிறான். இளவரசியின் அழகில் நடுங்கிப் போகும் அவன் அவளது காலடியில் விழுகிறான். பின் அவன் அவளை முத்தமிடுகிறான். அவள் எழுந்திருக்கிறாள். கோட்டையில் அனைவருமே விழித்தெழுந்து தாங்கள் விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார்கள்....அவர்கள் அனைவரும் அதன் பின் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்குகின்றனர்.

பாகம் இரண்டு தொகு

மறுவிழிப்புற்ற அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட இளவரசன் ஜான் இளவரசியை தொடர்ந்து வந்து பார்த்துச் செல்கிறான். அவர்களுக்கு எல்’அரோரெ (விடியல்) மற்றும் லே யோர் (பகல்) ஆகிய இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இவர்களை ஓக்ரி வம்சாவளியில் வந்த தனது தாயிடம் இருந்து மறைத்து ரகசியமாய் வளர்க்கிறான். தான் அரியணையில் அமர்ந்ததும் தனது மனைவியையும் குழந்தைகளையும் தலைநகருக்கு அவன் அழைத்து வருகிறான். பின் அண்டை நாட்டு சக்கரவர்த்தி கோண்டலபுட் (Emperor Contalabutte) உடன் போரிடச் சென்ற சமயத்தில் நாட்டை அன்னை ராணி வசம் ஒப்படைத்துச் செல்கிறான்.

ஓக்ரி வளி அன்னை ராணி இளம் ராணியையும் குழந்தைகளையும் காட்டுக்குள் அமைந்த ஒரு தனியான வீட்டிற்கு கொண்டு சென்று, அங்கு அந்த பையனை தனக்கு உணவாக சமைத்து சிறப்புச் சாறுடன் கொண்டுவரும்படி, தனது சமையல்காரிக்கு ஆணையிடுகிறாள். மனிதாபிமானமுள்ள அந்த சமையற்காரி அதற்குப் பதிலாய் ஒரு செம்மறியாட்டை சமைத்து அன்னை ராணியை திருப்தி செய்கிறாள். அதன்பின் அன்னை ராணி அந்த சிறுமியை சமைத்துத் தரும்படி சொல்ல அதே அற்புதமான சாற்றில் தயாரித்த ஒரு இளம் ஆடு ஒன்றைக் கொண்டு சமையல்காரி அவளைத் திருப்தி செய்கிறாள். அடுத்து இளம் ராணியை உணவாக்க அன்னை ராணி ஆணையிடுகிறாள். தன்னை கழுத்தை அறுக்கும்படியும் தான் இறந்து விட்ட தனது பிள்ளைகளோடு போய்ச் சேர்வதாகவும் இளம் ராணி கதறுகிறாள். சமையல்காரியின் வீட்டிலேயே கண்ணீர் மல்கும் ரகசியமான மறுஇணைவு நிகழ்கிறது. அன்னை ராணி சிறப்புச் சாறு கொண்டு தயாரித்த உணவில் மகிழ்ந்திருந்தாள். ஆனால் விரைவிலேயே சூட்சுமத்தை தெரிந்து கொள்ளும் அவள் அவர்களைக் கொல்ல கட்டுவிரியன்கள் மற்றும் பிற நச்சு ஜந்துகள் நிரம்பிய ஒரு குளத்தை ஏற்பாடு செய்கிறாள். அந்த சரியான நேரத்தில் அரசர் நாடு திரும்ப, அன்னை ராணி தானே அந்த குளத்திற்குள் குதிக்க அந்த விஷ ஜந்துகள் அவள் உயிரைக் குடிக்கின்றன. அதன்பின் எல்லோரும் மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்வைத் தொடர்கிறார்கள்.

ஆதாரங்கள் தொகு

கதையின் தொனியில் இருக்கும் வித்தியாசங்கள் தவிர, கதைக்கருவில் மிக முக்கியமான வித்தியாசங்களாக பின்வருவன இருக்கின்றன: அந்த தூக்கம் சாபத்தில் இருந்து விளைந்திருக்கவில்லை, மாறாக தீர்க்கதரிசனமாகத் தெரிவிக்கப்பட்ட ஒன்று என்பது. அரசர் டாலியாவை ஒரு முத்தத்தின் மூலம் எழுப்பவில்லை மாறாக அவளைக் கற்பழித்தார்.[4] அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து ஒரு குழந்தை அவளது விரலைச் சப்பிய சமயத்தில் அதில் அவளைத் தூங்க வைத்திருந்த அந்த அடைப்புத் துண்டு வெளியில் வந்தது, அவள் விழித்தெழுந்தாள் என்பது; அவளுடன் குரோதம் கொண்டு அவளையும் அவள் குழந்தைகளையும் உணவாகச் சாப்பிட முயன்றது அரசரின் தாய் அல்ல மாறாக பொறாமை கொண்ட அவரது மனைவி என்பது. மாமியாரின் பொறாமை குணம் என்பது தேவதைக் கதைகளில் பொதுவாய்க் காணப்படும் ஒன்று தான் என்றாலும் இதில் அதற்கான காரணம் பெரிய அளவினதாய் இருக்கவில்லை.

இந்த கதைக்கு பங்களித்த முந்தைய கூறுகளும் உண்டு. மத்தியகால வீரகாவியமான பெர்ஸ்ஃபாரஸ்ட் (1528 ஆம் ஆண்டில் வெளியானது) காவியத்தில், ஸெலாண்டின் என்ற பெயரிலான ஒரு இளவரசி ட்ராய்லஸ் என்னும் பெயரிலான மனிதன் மீது காதல் கொள்கிறாள். அவன் தன் தகுதியை நிரூபிக்க சில கடமைகள் இருப்பதாகக் கூறி அவற்றை செய்வதற்கு அவனை அவள் தந்தை அனுப்புகிறார். அவன் செல்கின்ற சமயத்தில் ஸெலாண்டின் ஒரு சாப உறக்கத்தில் விழுகிறாள். ட்ராய்லஸ் தூக்கத்திலேயே அவளைக் கர்ப்பமாக்குகிறான்; அவர்களுக்கு குழந்தை பிறக்கும்போது, அவளது விரலில் இருந்து அவளைத் தூங்கச் செய்த பொருளை அவன் வெளியிலெடுக்கிறான். அவன் விட்டுச் செல்லும் மோதிரத்தில் இருந்து குழந்தையின் தந்தை ட்ராய்லஸ் தான் என்பதை அவள் தெரிந்து கொள்கிறாள்; தனது சாகசங்கள் முடிந்த பிறகு திரும்பும் ட்ராய்லஸ் அவளை மணந்து கொள்கிறான்.[5]

மாறுபட்ட வகைகள் தொகு

இந்த தேவதைக் கதை ஆர்னி-தாம்ப்ஸன் வகை 410 என வகைப்படுத்தப்படுகிறது.[6]

இளவரசியின் பெயர் எல்லா கதைகளிலும் ஒன்றாக இல்லை. சன், மூன், அண்ட் டாலியா வில், இளவரசியின் பெயர் டாலியா (”சன்” என்பதும் “மூன்” என்பதும் அவளது இரட்டைக் குழந்தைகள்”). இதனை அகற்றிய பெரால்ட் இளவரசிக்கு பெயரிடாமலேயே விட்டார், ஆயினும் அவளது குழந்தைக்கு “எல்’அரோரெ” (L'Aurore) எனப் பெயரிட்டிருந்தார். பிரதர்ஸ் கிரிம் தங்களது 1812 ஆம் ஆண்டுத் தொகுப்பில் அவளுக்கு “ப்ரையர் ரோஸ்” எனப் பெயரிட்டிருந்தனர்.[7] இந்த மாற்றத்தை டிஸ்னி தனது படத்தில் எடுத்துக் கையாண்டார். அதிலும் இளவரசி அரோரா என அழைக்கப்பட்டார்.[8]

பிரதர்ஸ் கிரிம் தங்களது தொகுப்பில் (1812) ப்ரையர் ரோஸ் என்னும் ஒரு வகையைச் சேர்த்தனர்.[9] இப்போது பொதுவாக அறியப்படுவதாய் இருக்கும் பெரால்டு மற்றும் பேஸிலி இறுதி வரை கூறிய கதையை இது பாதியுடன் முடிக்கிறது. அதாவது இளவரசர் வந்ததும் கதை முடிந்து போகிறது.[10] கிரிம் கதையின் சில மொழிபெயர்ப்புகள் இளவரசியின் பெயரை ரோஸாமாண்ட் என்கின்றன. பெரால்டின் பதிப்பில் இருந்து வந்தது என்கிற காரணத்தைக் கூறி இச்சகோதரர்கள் கதையை நிராகரிக்கவிருந்தனர், ஆனால் ப்ரைன்ஹைல்டின் கதை இருந்தது ஒரு அங்கீகாரமுற்ற ஜெர்மன் கதையாகக் கருதி அவர்கள் இதனை சேர்ப்பதற்கு அவர்களை சம்மதிக்கச் செய்தது. ஆயினும், இது மட்டுமே இக்கதையின் ஜெர்மன் வகையாகக் கருதப்படும் ஒரே கதை ஆகும், இதில் பெரால்டின் தாக்கம் ஏறக்குறைய நிச்சயமானதாய் இருக்கிறது.[11]

பிரதர்ஸ் கிரிம் தங்களது கதையின் முதல் பதிப்பில் தீய மாமியார் (The Evil Mother-in-Law) என்னும் ஒரு துண்டுக் கதையையும் சேர்த்திருந்தனர். இந்த கதை நாயகி திருமணம் முடித்திருக்க, அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதுடன் துவங்குகிறது. பெரால்டின் கதையில் வரும் இரண்டாவது பாதி போல, நாயகியின் மாமியார் முதலில் குழந்தைகளையும் பின் நாயகியையும் உணவாக்கிக் கொள்ள முயல்கிறாள். ஆனால் பெரால்டின் பதிப்பில் போலன்றி, நாயகியே இதில் ஒரு விலங்கைப் பதிலீடு செய்து குழந்தைகளைக் காப்பாற்றும் முடிவினை மேற்கொள்கிறாள். குழந்தைகளை அழாமல் எப்படி பார்த்துக் கொண்டிருப்பது, அழுதால் மாமியாருக்குத் தெரிந்து விடுமே என்று நாயகி கவலை கொள்வதுடன் இந்த துண்டு முடிவுறுகிறது. பிரெஞ்சு பாதிப்பைக் கொண்ட பல ஜெர்மன் கதைகளைப் போலவே, இதுவும் அடுத்து வந்த எந்த பதிப்பிலும் இடம்பெறவில்லை.[12]

இத்தாலிய நாடோடிக் கதை களில் இடாலோ கால்வினோ ஒரு வகையைச் சேர்த்தார். இளவரசியின் தூக்கம் அவளது தாயின் முட்டாள்தனமான வேண்டுதலால் நிகழ்கிறது, அதாவது தனக்கு மட்டும் ஒரு பெண்பிள்ளை இருந்தால், அது பதினைந்து வயதில் விரலில் முள் குத்தி இறக்க நேர்ந்தாலும் கவலையில்லை என அவள் வேண்டுகிறாள். பெண்டாமெரோன் போலவே இதிலும், அவளைத் தூக்கத்தில் இளவரசன் கற்பழித்ததும் அவள் விழித்துக் கொள்கிறாள். இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குழந்தை அவள் விரலைச் சப்புகையில் அவளைத் தூக்கத்தில் ஆழ்த்தியிருந்த அந்த முள்ளை உறிஞ்சி எடுக்கிறது. குழந்தைகளைக் கொல்ல முயலும் பெண் அரசரின் தாய் தான் மனைவி அல்ல என்பதான வகையையே இவரும் பாதுகாக்கிறார். ஆனால் அவள் அக்குழந்தைகளை தனக்கு உணவாக்கிக் கொள்ளாமல் அரசருக்கு பரிமாறுமாறு கோருவதாக கொண்டு செல்கிறார்.[13] இவரது பதிப்பு காலப்ரியாவில் இருந்து வந்தது என்றாலும், அனைத்து பதிப்புகளும் பேஸிலின் வடிவத்தை பின்பற்றுவதாய் அவர் குறிப்பிட்டார்.[14]

தூங்கும் அழகியின் வடிவம் இந்த கதைக்கும் இங்கிலாந்து அரசரும் அவரது மூன்று பையன்களும் (The King of England and his Three Sons) என்கிற நாடோடிக் கதைக்கும் பொதுவானதாய் இருப்பதாக ஜோசப் ஜேகப்ஸ் தனது கூடுதல் ஆங்கில தேவதைக் கதைகள் புத்தகத்தில் குறிப்பிட்டார்.[15]

அரசரின் தாய் புதிய மருமகளை நோக்கி வெளிப்படுத்தும் விரோதம் தி சிக்ஸ் ஸ்வான்ஸ் [16] என்னும் தேவதைக் கதையிலும் இடம்பெறுகிறது. தி ட்வெல்வ் ஒயில்டு டக்ஸ் என்கிற கதையிலும் இதே அம்சம் இடம்பெறுகிறது. இக்கதையில் அவர் அரசரின் மாற்றாந்தாயாக சித்தரிக்கப்படுகிறார். ஆனால் இந்த கதைகள் நரமாமிச உணவு விடயத்தை விட்டு விடுகின்றன.

புராணக் கருத்துகள் தொகு

தூங்கும் அழகி கதை சந்திர வருடத்தை (அதன் பதின்மூன்று மாதங்களும் பதின்மூன்று தேவதைகளால் அடையாளப்படுகின்றன) சூரிய வருடத்தைக் கொண்டு (இதில் இருக்கும் பன்னிரண்டு மாதங்கள், அழைக்கப்பட்ட பன்னிரண்டு தேவதைகளைக் குறிக்கின்றன) இடம்பெயர்ப்பதைக் குறிப்பதாக சில கதைசொல்லிகள் கூறுகின்றனர். ஆனாலும், கிரிம்ஸ் கதையில் மட்டுமே துர்தேவதை பதின்மூன்றாவது தேவதையாக வருகிறது; பெரால்டின் கதையில் அது எட்டாவதாய் வருகிறது என்பதில் இந்த சித்தாந்தம் தடுமாறி விடுகிறது.[17]

பெரால்டின் கதையில் பிரபலமாய் இருக்கும் கருப்பொருள்கள் மற்றும் அங்கங்கள் பின்வருமாறு:

  • வரமிருந்து பிறக்கும் குழந்தை
  • சாபப் பரிசு
  • ஊழ் விதி
  • நூற்பாளர்
  • சாகச வேட்கை
  • ஓக்ரி மாற்றாந்தாய்
  • மீட்பர் மூலமான சாப விமோசனம். தூக்கம் உருவகமாய் காட்டப்படுகிறது.
  • பலியாட்டை பதிலீடு செய்வது

நவீன கால மறுகதைகள் தொகு

பல தேவதைக் கதைகளின் கற்பனை மறுகதைகளில் தூங்கும் அழகி மிகப் பிரபலமான ஒன்றாய் இருக்கிறது. தி கேட்ஸ் ஆஃப் ஸ்லீப் புதினம்; ராபின் மெக்கின்லே எழுதிய ஸ்பிண்டில்'ஸ் எண்ட் , ஆர்ஸன் ஸ்காட் கார்டு எழுதிய என்சாண்ட்மெண்ட் , ஜேன் யோலென் எழுதிய ப்ரையர் ரோஸ் , சோஃபி மேஸன் எழுதிய க்ளெமெண்டைன் , மற்றும் ஆனி ரைஸின் தூங்கும் அழகி முத்தொடர் வரிசை ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

தேவதை கொடுக்கும் சாபம் என்கிற விடயம் இந்த கதையில் இருந்து எடுக்கப்பட்டு பல்வேறு விதமாய் கையாளப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் மெக்டொனால்டு இதனை தனது தி லைட் பிரின்சஸ் என்கிற தூங்கும் அழகி யின் கிண்டல் படைப்பில் பயன்படுத்துகிறார். இதில் அந்த தீய தேவதை சாகும்படி சாபமளிக்காமல் புவியீர்ப்பு விசை இல்லாது போக சாபமளிக்கிறது. இதனால் அவளுக்கு உடல் எடை பற்றாமல் போகும் நிலையும் மற்றவர்களின் துயரத்தை முக்கியமாய்க் கருதாத நிலையும் தோன்றுகிறது.[18] ஆண்ட்ரூ லேங் எழுதிய பிரின்ஸ் பிரிஜியோ வில், தேவதைகளில் நம்பிக்கையில்லாத ராணி அவர்களை அழைக்கவில்லை; ஆனாலும் அங்கு வரும் தேவதைகள் அவனுக்கு நல்ல பரிசுகளை வழங்குகின்றன. அதில் கடைசியாக வரும் தேவதை மட்டும் அவன் "மெத்த அறிவாளியாக" ஆகும் பரிசளிக்கிறது. இத்தகையதொரு பரிசினால் வரும் பிரச்சினைகள் பின்னர் விளக்கப்படுகின்றன. பேட்ரிசியா வ்ரெடெவின் என்சாண்டட் ஃபாரஸ்ட் கிரானிகிள்ஸ் படைப்பில், தான் பிறந்த போது தனக்கு யாரும் சாபம் கொடுக்காமல் போனது குறித்து ஒரு இளவரசி புலம்புகிறாள். பல இளவரசிகளுக்கும் அவ்வாறு தானே நேர்கிறது என இன்னொரு பாத்திரம் சுட்டிக் காட்டும்போது, இந்த இளவரசி, தன் விடயத்தில் அந்த தேவதை "நல்லபடியாய் இரு" என்று கூறி விட்டுப் போய் விட்டதாகவும், அது உண்மையிலேயே ஒரு தேவதைக் கதைப் பாத்திரம்' தானா என்பதில் தனக்கு சந்தேகம் வந்து விட்டதாகவும் கிண்டலடிக்கிறாள்.

ஏஞ்சலா கார்டரின் "தி ப்ளடி சாம்பர்" தூங்கும் அழகியின் ஒரு பின்நவீனத்துவ மறுகதையாடலை "தி லேடி ஆஃப் தி ஹவுஸ் ஆஃப் லவ்" என்கிற தலைப்பில் சொல்கிறது. மூல விடயத்தில் இருந்து கணிசமான மாற்றங்கள் இருந்தாலும் "பக்க அம்சங்களை" பாதுகாத்திருப்பதாக அவர் கூறுகிறார். உதாரணமாக அவள் வெகுவருடங்கள் தூங்கிக் கொண்டிருக்கவில்லை என்றாலும் நாயகி தூக்கத்தில் நடக்கும் வியாதி கொண்டவராய் பல இடங்களில் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறார். இந்த கதை தனது தலைவிதியால் சபிக்கப்பட்ட ஒரு காட்டேரியின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது. அதன்பின் வரும் ஒரு இளம் படைவீரன் தனது அப்பாவித்தனத்தின் மூலம் அவளைத் தன் சாபத்தில் இருந்து விடுவிக்கிறான்.

வாக்கிங் ரோஸ் இந்த கதையை நவீன பாணியில் சொல்கிறது. நாயகி ரோஸ் (ப்ரையர் ரோஸ் என்னும் பெயரில் இருந்து வந்தது) கோமா நிலைக்கு செல்கிறாள்; சட்டவிரோதமாய் மக்களைக் கொன்று அவர்களின் அவயங்களை கருப்புச் சந்தையில் விற்பனை செய்யும் இரண்டு மருத்துவர்களின் மோசடி வேலைகளை முன்னதாக அவள் கண்டறிந்திருந்த நிலையில், அந்த மருத்துவர்கள் இருவரும் இப்போது அவள் கருணைக் கொலை செய்யப்படத் தகுதியானவள் என்று வாதாடிக் கொண்டிருக்க, இவளைக் காப்பாற்ற இவரது ஆண்நண்பர் போராடுவதாக கதை செல்கிறது.

பியூர்டோ ரிகா எழுத்தாளரான ரோஸாரியோ ஃபெரியின் "தி யங்கஸ்ட் டோல்" கதைத் தொகுப்பில் "தூங்கும் அழகி" என்ற தலைப்பில் ஒரு கதை உள்ளது. இது அந்த தேவதைக் கதையில் காணப்படும் ஏராளமான அம்சங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

இசையில் தூங்கும் அழகி தொகு

சாய்கோவ்ஸ்கியின் பதிப்புக்கு முன்னதாக, பல பாலே தயாரிப்புகளும் "தூங்கும் அழகி" கருப்பொருளை அடிப்படையாய்க் கொண்டிருந்தன;

மே 25, 1888 அன்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள இம்பீரியல் தியேட்டர்ஸ் இயக்குநரான இவான் செவோலோவ்ஸ்கி பெரால்டின் கதையின் அடிப்படையிலான ஒரு பாலேவுக்கு யோசனை தெரிவித்து எழுதியபோது, அவர் வன்முறை மிகுந்த இரண்டாவது பகுதியை வெட்டி விட்டார்; விழிப்பு கொணரும் முத்தத்துடன் உச்ச காட்சியை அமைத்து விட்டு, அதனைத் தொடர்ந்து வழக்கமான கொண்டாட்டங்களும், வீரச்செறிவு தொகுப்புவகைகளையும் காட்டி முடித்தார்.

ஒரு புதிய பாலேவைத் தொகுக்க சாய்கோவ்ஸ்கிக்கு அவ்வளவு விருப்பமில்லை என்றாலும் (பதினோரு பருவங்களுக்கு முன்னதாக இவரது ஸ்வான் லேக் பாலே இசைக்கான வரவேற்பு மந்தமாக இருந்தது என்பது நினைவில் கொள்ள வேண்டியது) அவர் செவோலோவ்ஸ்கியின் காட்சி அமைப்புகளுக்கு வேலை பார்க்க ஒப்புக் கொண்டார். சாய்கோவ்ஸ்கியின் இசையுடன் இந்த பாலே மாரியஸ் பெடிபாவின் நடன அமைப்புடன் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மரின்ஸ்கி திரையரங்கில் 24 ஜனவரி 1890 அன்று அரங்கேற்றமானது.

இது பாலே தொகுப்பில் சாய்கோவ்ஸ்கியின் முதல் பெரும் வெற்றியாய் அமைந்ததோடு, "செவ்வியல் பாலே" என்று இப்போது அழைக்கப்படும் ஒன்றிற்கான புதிய தர நிர்ணயத்தை அது அமைத்துக் கொடுத்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செர்ஜி டியாஜிலேவ் பார்த்த முதல் பாலேவாக தூங்கும் அழகி இருந்தது. இவர் அதனை பின்னாளில் தனது மலரும்நினைவுகளில் பதிவு செய்தார். அனா பாவ்லோவா மற்றும் கலினா உலனோவா ஆகிய பாலே நடனக் கலைஞர்கள் பார்த்த முதல் பாலேவும் தூங்கும் அழகி தான். அத்துடன் ரஷ்ய நடனக் கலைஞர் ருடோல்ஃப் நுரெயேவை ஐரோப்பிய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பாலேவாகவும் இது அமைந்தது. 1921 ஆம் ஆண்டில் லண்டனில் பாலே ரஸஸ் குழுவின் உதவியுடன் டியாஜிலேவ் தானே இந்த பாலேவை அரங்கேற்றினார். நடன அமைப்புக் கலைஞரான ஜார்ஜ் பலான்சின் தனது மேடை அரங்கேற்றத்தை கடைசிக் காட்சி யின் போது ஒரு நகரும் கூண்டில் அமர்ந்திருக்கும் நகரும் மன்மதனாக பங்கேற்றதன் மூலம் ஏற்படுத்திக் கொண்டார்.

மாரிஸ் ராவெலின் மா மெரி ஐ'ஓயியில் (Ma Mère l'Oye) பாவனெ டி லா பெலெ அவ் பாயிஸ் டார்மண்ட் (காட்டில் தூங்கும் அழகின் பவானெ நடனம் ) என்ற பெயரிலான ஒரு அசைவு இருக்கும். இந்த துண்டும் பின்னர் ஒரு பாலேவாக அபிவிருத்தி செய்யப்பட்டது.

அலிஸனா (Alesana) இசைக்குழுவும் தூங்கும் அழகி தொடர்பான ஒரு பாடலைக் கொண்டிருக்கிறது; "தி அன்இன்வைடட் தர்ட்டீன்த்" என்னும் இப்பாடல் அவர்களது வேர் மித் ஃபேட்ஸ் டூ லெஜண்ட் (Where Myth Fades to Legend) ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது. "இது அழைக்கப்படாத பதின்மூன்றாவது தேவதை மற்றும் இளவரசனின் கண்ணோட்டத்தில் அமைந்ததாகும். பல இளவரசர்கள் தூங்கும் அழகியை எழுப்ப முயற்சி செய்துள்ளனர் ஆனால் அவர்கள் அவளை சென்றடையும் முன்னரே முள் துளைத்தெடுக்கிறது. அழைக்கப்படாத பதின்மூன்றாவது தேவதை இருவரையுமே பழிவாங்குவது குறித்தும் கொல்வது குறித்தும் பேசுகிறது. இளவரசனைப் பொறுத்தவரை அவளைக் காப்பாற்றுவது குறித்தும் முற்களைக் கடப்பதற்கு அவன் போராடுவது பற்றியும் பேசுகிறான். இறுதியில் அவள் இருக்கும் இடத்தை அடையும் அவன் அவளுக்கு முத்தமிடுகிறான். அவனுக்குக் கிடைத்த பரிசு அவனது காதலி ரோஸாமாண்ட்."

வால்ட் டிஸ்னியின் தூங்கும் அழகி தொகு

வால்ட் டிஸ்னி தயாரிப்பின் அசைவூட்டத் திரைப்படமான தூங்கும் அழகி 29 ஜனவரி 1959 அன்று ப்யூனா விஸ்டா விநியோக நிறுவனம் மூலம் வெளியானது. இந்த படத்திற்காக டிஸ்னி ஏறக்குறைய பத்தாண்டு காலம் உழைத்தார். இந்த படத்தை தயாரிக்க ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானது. இப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் சாய்கோவ்ஸ்கியின் பாலேயில் இருந்து தழுவப்பட்டவை. இந்த கதையில் ஃபுளோரா, ஃபானா, மற்றும் மெரிவெதர் ஆகிய மூன்று நல்ல தேவதைகளும் மாலெஃபிசியண்ட் என்னும் ஒரு துர்தேவதையும் வருகிறார்கள். அநேக டிஸ்னி படங்களில் போலவே, இந்த கதையிலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, இக்கதையில் மாலெஃபிசியண்ட் தேவதை தானே கோட்டை உச்சியில் நூற்பு சக்கரத்தையும் ஊசியையும் உருவாக்கி, அதில் இளவரசி அரோரா (நிகழ்வுக்கு முன்னதாக ஃபுளோரா, ஃபானா, மற்றும் மெரிவெதர் மூவரும் ப்ரையர் ரோஸ் என அழைக்கின்றனர்) தனது விரலைக் குத்திக் கொள்ளும்படி சூழ்ச்சி செய்கிறாள். இளவரசியின் முடியும் பெரால்டின் புத்தகத்தில் இருப்பது போல் அடர்ந்த பழுப்பு நிறமாய் இல்லாமல் வெளிர் நிறமாய் மாற்றப்பட்டிருக்கும். டிஸ்னியின் மிக அழகிய நாயகியாக[19] இந்த இளவரசி விவரிக்கப்பட்டார்.[20] இந்த படத்தின் அனைத்து வரிசைக் காட்சிகளும் முதலில் நேரலை செயல்பாடுகளாய் படம்பிடிக்கப்பட்டன.[21]

பிற விவரங்கள் தொகு

  • தேவதைப் பரிசுகளில் ஒன்றாக புத்திக்கூர்மை இருந்ததாக சிலசமயங்களில் தவறாக நினைவுகூரப்படுகிறது. ஆயினும் இத்தகையதொரு பரிசு பெரால்டின் கதையில் இல்லை. சற்று கூடுதலாய் நவீனப்பட்ட பதிப்புகளில் புத்திக்கூர்மை தவிர, தீரம் மற்றும் சுதந்திரமும் கூட தேவதை பரிசுகளாய் சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஃபிராய்டுவகை உளவியலாளர்கள் தூங்கும் அழகி யில் ஆராய்வதற்கு நிறைய அம்சங்கள் இருப்பதாய் கருதினர். வெளிப்படாத பெண் பாலுணர்வுக்குரிய ஒரு நிகழ்வு வரலாறாக இதனைக் கருதிய அவர்கள் வேலைக்குச் செல்லாதிருக்கும் இளம் பெண்களின் சமூகத்துடனான தொடர்புமுறைக்கு ஒரு பரிந்துரையாக இதனைப் பார்த்தனர்.
  • எரிக் பெர்னெ வாழ்க்கைக் கதையமைப்புகளில் ஒன்றை விளங்கப்படுத்த இந்த தேவதைக் கதையைப் பயன்படுத்துகிறார்.[22] இந்த கதையில் வரும் ஏறக்குறைய ஒவ்வொன்றும் உண்மையில் நடக்கக் கூடியது தான் என்பதைச் சுட்டிக் காட்டும் இவர், இந்த கதை சுட்டிக் காட்ட மறுக்கும் ஒரு முக்கியமான குறிப்பை பிரதானப்படுத்திக் காட்டுகிறார்: அதாவது அவள் தூங்கும் போது காலம் நின்று போவதில்லை, யதார்த்தத்தில் ரோஸ் வயது பதினைந்தாகவே இருப்பதில்லை, முப்பது, நாற்பது, அல்லது ஐம்பது என்று ஏறிக் கொண்டே போகிறது.
  • ஜோன் கோல்டின் தவிட்டை தங்கமாக்குதல் (Turning Straw into Gold) புத்தகம் இந்த கதையை பெண்களின் பார்வையில் காண்கிறது. நெருக்கடி காலங்களில் பெண்ணின் திறமைக்கான ஒரு உதாரணமாக தூங்கும் அழகி இருப்பதாக அவர் வாதிடுகிறார். இளவரசன் அறைக்குள் நுழைந்ததும் அவள் விழித்தெழுகிறாள். ஏனெனில் எழுந்திருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்று கூறும் கதையின் ஒரு வடிவத்தை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
  • டெர்ரி பிராட்செட் தனது டிஸ்க்வேர்ல்டு தொடரில் பல்வேறு தேவதைக் கதைகள் குறித்து குறிப்பிடுகிறார். வைர்டு சிஸ்டர்ஸ் கதையில் ஒரு கோட்டையும் அதில் வசிப்பவர்களும் நூறு ஆண்டுகள் கழித்தான வருங்காலத்திற்கு உள்ளாக நகர்த்தப்படுகின்றனர். பின்னர் விட்சஸ் அப்ராட் கதையில், சாபத்தால் கோட்டைத்தளத்திற்குள் காடு வளர்ந்திருக்க எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து இருக்கிறார்கள். வேலைக்காரர்கள் எல்லாம் கோபமாய் எழுந்திருப்பதோடு சூனியக்காரிகளைத் துரத்தியடிக்கும் முடிவோடு துரத்துகிறார்கள்; அவர்கள் இளவரசியை எழுப்புவது முத்தத்தால் அல்ல, அந்த நூற்பு தறியை சன்னலுக்கு வெளியே கொண்டு வைப்பதன் மூலம் அதைச் செய்கின்றனர்.
  • தூங்கும் அழகி உள்பட தேவதைக் கதைகளின் இளவரசிகளுக்கு, அவர்கள் “நான் செய்கிறேன்!” என்று சொன்னதன் பிறகு என்ன நேர்ந்தது என்பதை பமீலா டிட்சாஃபின் மிசஸ். பீஸ்ட் [1] என்கிற புதினம் ஆராய்கிறது.

.[23]

  • இளவரசி மறு உலகத்தில் எழும்போது அவளுக்கு உடன் எழுந்து உதவுவதற்காக பணியாட்கள் தூங்குவது பழங்கால புதைப்பு சம்பிரதாய சடங்குகளில் ஒன்றை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. எகிப்திய கல்லறைகள் குறித்து அநேகமாக பெரால்ட் அறிந்திருக்க மாட்டார். ஊர் நகரின் மூன்றாம் ராஜவம்சத்தை சேர்ந்த புவாபி ராணியின் அரச கல்லறைகள் குறித்து அவருக்கு நிச்சயமாய் தெரிந்திருக்காது. சீனாவில் ஆரம்ப கால சக்கரவர்த்திகளுடன் புதைக்கப்பட்ட சேவகர்கள், புனித ஓட்டிகளுடன் உடன்புதைக்கப்பட்ட குதிரைகள் குறித்தெல்லாம் அவர் அறிந்திருக்க மாட்டார். தி கிங் அண்ட் குவீன் படைப்பில் இந்த புதைப்பு ஒப்பீடு இல்லை. ஆனால் அவர்கள் அங்கேயே ஓய்வெடுக்க, கோட்டையையும் அதில் வசிப்பவர்களையும் பாதுகாக்க முள் காடுகள் உடனடியாய் அதைச் சுற்றி வளர்கின்றன. [மேற்கோள் தேவை]
மேலும் தகவல்களுக்கு: Grave goods
  • ஏ.என்.ரோக்லார் என்கிற பெயரின் கீழ் ஆனி ரைஸ் எழுதிய தி க்ளெய்மிங் ஆஃப் ஸ்லீப்பிங் பியூட்டி என்னும் பாலுணர்வு நாவல் ஓரளவுக்கு இந்த தேவதைக் கதையையே அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும்.
  • ஏஞ்சலா கார்டர் தனது தி பிளடி சாம்பர் என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு இந்த கதையை மறுமொழியாக்கம் செய்தார்.
  • கெய்ட்லின் ஆர். கீர்மேன் (Caitlín R. Kiernan) எழுதிய ”கிளாஸ் காஃபின்” ”தூங்கும் அழகி” கதையின் ஒரு மறுபொழிப்பே. இது அவரது டேல்ஸ் ஆஃப் பெயின் அண்ட் ஒண்டர் என்னும் தொகுப்பில் இடம்பெறுகிறது. கதையின் தலைப்பு பி.ஜே.ஹார்வியின் “ஹார்ட்லி வெயிட்” என்கிற பாடலுக்கு குறிப்புக் கொண்டுள்ளது. அந்த பாடலே “தூங்கும் அழகி”க்கான ஒரு குறிப்பே.
  • ஷெரி எஸ்.டெப்பர் தூங்கும் அழகி கதையைத் தழுவி தனது ப்யூட்டி எனும் புதினத்தை எழுதினார். இந்த புதினத்தில் சிண்ட்ரல்லா மற்றும் தி ஃபிராக் பிரின்ஸ்க்கான (The Frog Prince) குறிப்புகளும் இருக்கின்றன.
  • புரூஸ் பென்னெட் தூங்கும் அழகியைத் தழுவி ஒரு குழந்தை இசைப் பாடலை லின் வாரென் நிறுவனத்துக்காக உருவாக்கினார். இதன் உலக அரங்கேற்றம் ரிவர்வாக் தியேட்டரில் நடந்தது.
  • கேதரின் எம்.வாலெண்ட் தனது தி மெய்டன்-ட்ரீ பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம் கதையில் இக்கதையைத் தழுவினார். இதில் நூற்பு ஊசியை அவர் மருத்துவ ஊசி போல் குறிப்பிடுகிறார்.
  • மேக்ஸ் பெய்ன் 2: தி ஃபால் ஆஃப் மேக்ஸ் பெயின் என்கிற கணினி விளையாட்டில், தூங்கும் அழகி விளையாட்டின் முடிவில் குறிப்புக் கொண்டிருக்கிறது. விளையாட்டின் முடிவில் இறந்து விட்டிருக்கும் மோனா சாக்ஸின் உதடுகளில் மேக்ஸ் முத்தமிடுகிறார். மேக்ஸ் கூறுகிறார், “...எல்லா முறையும் தூங்கும் அழகியின் கதையை தவறாகவே கூறுகிறார்கள்.” மேக்ஸ் போன்ற ஒரு இளவரசன் தூங்கும் அழகியை முத்தமிடுவது, அவளை எழுப்புவதற்காக அல்ல, மாறாக தன்னை அங்கு கொண்டு வந்த நம்பிக்கை மற்றும் வலியில் இருந்து தன்னை எழுப்புவதற்காகத் தான் என்பது அவரது சித்தாந்தம். “நூறு வருடங்கள் தூங்கிய எவரொருவரும் எழுந்திருப்பது சாத்தியமில்லை” என்று மேக்ஸ் கூறுகிறார். ஆயினும், இந்த விளையாட்டில் கடினமான விளையாட்டு அளவைத் தேர்ந்தெடுத்து வென்றால், முத்தத்தின் பின் மோனா எழுந்திருப்பதாய் விளையாட்டு அமைந்துள்ளது.
  • தத்துவத் துறையில் தூங்கும் அழகி முரணுரை என்பது ஒரு சிந்தனை சோதனை ஆகும். இதில் அழகிக்கு மயக்க மருந்து கொடுத்து ஞாயிறு இரவு தூங்கச் செய்யப்படுகிறாள். ஒரு நாணயம் சுண்டி விடப்பட்டு தலை விழுந்தால் அவள் திங்களன்று எழுப்பப்பட்டு மீண்டும் தூக்கத்திற்கு செலுத்தப்படுவாள். பூ விழுந்தால், அவள் திங்கள் மற்றும் செவ்வாயில் எழுப்பப்படுகிறாள். ஒவ்வொரு முறை அவள் எழும்போதும், அவளிடம் நாணயத்தில் தலை விழுந்திருப்பதற்கு அகநிலை நிகழ்தகவு எவ்வளவு என்று அவளிடம் கேட்கப்படும். சோதனைக்கு முன்பாக அவள் 1/2 என்று தான் பதில் கூறுவாள் என்பதை ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் பரிசோதனைக்கு இடையில் அவள் 1/3 என்று பதில் கூறுவாள் என்பதாய் சிலர் வாதிடுகிறார்கள். அப்படி அவள் பதிலளித்தால் அது பிரதிபலிப்பு கோட்பாட்டை மறுதலிப்பதாய் ஆகும். இக்கோட்பாடு பகுத்தறிவுக்கு முட்டுக்கட்டை போடும் என்பது பேயிசியர்களின் (Bayesians) பொதுவான கருத்து.
  • கரோய் யுகியின் புத்தகமான லுட்விக் ரெவல்யூஷனில், ராணிக்கு குழந்தை இல்லாதிருக்கிறது, ஒரு மீனின் தீர்க்கதரிசனத்தால் இளவரசி ஃபிரைடரிக் பிறக்கிறாள். தீர்க்கதரிசனம் ஒன்றும் இல்லை என்றும் ராணி கற்பழிக்கப்பட்டாள் என்றும் இளவரசி அரசரின் குழந்தை அல்ல என்றும் சூனியக்காரி கூறக் கேட்டு இளவரசி தனது விரலை குத்திக் கொள்கிறாள். சூனியக்காரி சொல்வது உண்மையா என்பதை அறிவதற்காக ஊசியால் குத்திக் கொள்ளும் ஃபிரைடரிக் நூறு ஆண்டுகள் தூங்குகிறாள். இளவரசன் லுட்விக் தனது கனவுகளில் அவளை சந்திக்கும்போது, அவள் மீது அவன் காதலில் விழுகிறாள், அவனது முத்தம் அவளது தூக்கத்தைக் கலைக்கிறது. ஆயினும், அவர்கள் அதன்பின் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது, ஏனெனில் விழித்தெழுந்த அந்த கணத்திலேயே முதுமை காரணமாய் அவள் இறந்து விடுகிறாள். அதன்பின் ஆவியாக திரும்பி வரும் அவள் மோசடி ராணியான லேடி பெட்ரொனெல்லாவைத் தூக்கியெறிவதற்கு தனது சக்திகளை அளிக்கிறாள்.
  • ஹனி அண்ட் கிளாவரின் ஒரு அத்தியாயத்தில், ஆயுமி தன்னை கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு அழைக்காவிட்டால், அவளது வருங்கால மகள் தனது 15வது பிறந்தநாளில் ஒரு தறி ஊசி குத்தி ஆழ்ந்த தூக்கத்திற்கு போய் விடும் வகையில் அவளை சபித்து விடுவதாக மோரிடா எச்சரிக்கிறான்.
  • 2005 ஆம் ஆண்டு வந்த இஸ்தான்புல் டேல்ஸ் என்கிற ஐந்து பிரபல தேவதைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதான துருக்கிய தொகுப்புக் கதைத் திரைப்படத்தின் ஒரு பகுதி இந்த கதையின் அடிப்படையில் அமைந்ததாகும்; இதில் போஸ்பாரஸ் விடுதியில் தங்கியிருக்கும் புத்திசுவாதீனமற்ற ஒரு இளம் பெண் தூங்கும் அழகியாக வருகிறாள். இஸ்தான்புல்லுக்கு குடிபெயர்ந்த ஒரு இளம் குர்திஷ் மனிதன் அவளை சந்திக்கிறான்.
  • வால்ட் டிஸ்னியின் தூங்கும் அழகியின் பிரதான நாயகன் மற்றும் வில்லன் பாத்திரங்கள் ஸ்குயர்-எனிக்ஸ்/டிஸ்னி கூட்டுப்படைப்பு பிஎஸ்2 விளையாட்டுகளான கிங்டம் ஹார்ட்ஸ், கிங்டம் ஹார்ட்ஸ் 2 ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டன. அத்துடன் கிங்டம் ஹார்ட்ஸ்: பர்த் பை ஸ்லீப் விளையாட்டிலும் இடம்பெற இருக்கிறது. பிரின்சஸஸ் ஆஃப் ஹார்ட் என்னும் தங்கள் இதயத்தில் இருளில்லாத இளவரசிகளில் அரோராவும் ஒருவர். பிரின்சஸ் ஆஃப் ஹார்ட்ஸின் அனைத்து ஏழு இளவரசிகளையும் ஒன்றாகச் சேர்த்தால் அனைத்துலக இதயமாய் கிங்டம் ஆஃப் ஹார்ட்ஸ்க்கான பாதை திறக்கும். சிண்ட்ரெல்லா, பெலெ, அலைஸ், ஸ்னோ ஒயிட், ஜாஸ்மின் மற்றும் மூல ஆட்டத்தின் இளவரசியான கைரி ஆகியோருடன் இணைந்து பிரின்சஸ் ஆஃப் ஹார்ட் பட்டத்தை அவள் பகிர்ந்து கொள்கிறாள். மாலிஃபிசியண்ட் இந்த ஆட்டங்களில் பிரதான வில்லி பாத்திரத்தை ஆற்றுகிறார். இவர் தன்னுடைய வேலையுடன் சேர்த்து மற்ற டிஸ்னி வில்லன்களுக்கும் உதவுகிறார். கிங்டம் ஹார்ட்ஸ் 2 விளையாட்டில் ஃபுளோரா, ஃபானா, மற்றும் மெரிவெதர் ஆகிய மூன்று நல்ல தேவதைகளும் இடம்பெறுகின்றனர்.
  • ஜேன் யோலெனின் “ப்ரையர் ரோஸ்” புதினம் யூதப் படுகொலையின் பின்னணியில் “தூங்கும் அழகி”யின் கதையை மறுகற்பனை செய்கிறது.
  • ஜோஸ் வீடனின் டோல்ஹவுஸ் தொடரில் இந்த கதை ”ப்ரையர் ரோஸ்” என்ற பொருத்தமான தலைப்புடனான அத்தியாயத்தில் நீட்டித்த உருவகமாய் பயன்படுத்தப்படுகிறது. டோல்ஹவுஸின் மூளைச் சலவை செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்விளைவுகளால் பாதிப்புறும் ஒரு இளம் பாத்திரம் இரண்டுடனும் இந்த கதை ஒப்பிடப்படுகிறது.

படங்கள் தொகு

மேலும் காண்க தொகு

  • ராணி தேனீ
  • தி கிளாஸ் காஃபின்
  • வால்ட் டிஸ்னியின் தூங்கும் அழகி (பலகை விளையாட்டு)

குறிப்புதவிகள் தொகு

 
இளவரசன் ஃபுளோரிமண்ட் தூங்கும் அழகியைக் காண்கிறான்
  1. ஹெய்தி ஆனி ஹெய்னர், "உரை விளக்கத்துடனான தூங்கும் அழகி " பரணிடப்பட்டது 2010-02-13 at the வந்தவழி இயந்திரம்
  2. ஜியாம்படிஸ்டா பேஸிலி, பெண்டாமெரோன் , "சன், மூன் அண்ட் டாலியா" பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம்
  3. மரியா டடார், ப 96, விளக்கத்துடனான செவ்வியல் தேவதைக் கதைகள், ISBN 0-393-05163-3
  4. http://www.pitt.edu/~dash/type0410.html#basile
  5. ஜேக் ஸைப்ஸ், மாபெரும் தேவதைக் கதை பாரம்பரியம்: ஸ்ட்ரபரோலா மற்றும் பேஸிலி துவங்கி ப்ரதர்ஸ் கிரிம் வரை, ப 648, ISBN 0-393-97636-X
  6. ஹெய்தி ஆனி ஹெய்னர், "தூங்கும் அழகியை ஒத்த கதைகள்" பரணிடப்பட்டது 2010-04-30 at the வந்தவழி இயந்திரம்
  7. ஜேகப் மற்றும் வில்ஹெம் கிரிம், கிரிம்ஸின் தேவதைக் கதைகள் , "லிட்டில் ப்ரையர்-ரோஸ்" பரணிடப்பட்டது 2007-05-20 at the வந்தவழி இயந்திரம்
  8. ஹெய்தி ஆனி ஹெய்னர், "உரை விளக்கத்துடனான தூங்கும் அழகி பரணிடப்பட்டது 2010-02-22 at the வந்தவழி இயந்திரம்"
  9. ஜேகப் மற்றும் வில்ஹெம் கிரிம், 'கிரிம்ஸின் தேவதைக் கதைகள் , "லிட்டில் ப்ரையர்-ரோஸ்" பரணிடப்பட்டது 2007-05-20 at the வந்தவழி இயந்திரம்
  10. ஹாரி வெல்டென், "ஜெர்மன் தேவதைக்கதைகள் மீது சார்லஸ் பெரால்டின் Contes de ma Mère L'oie ஏற்படுத்திய பாதிப்புகள்", ப 961, ஜேக் ஸைப்ஸ், எட். மாபெரும் தேவதைக் கதை பாரம்பரியம்: ஸ்ட்ராபரோலா மற்றும் பேஸிலி முதல் ப்ரதர்ஸ் கிரிம் வரை , ISBN 0-393-97636-X
  11. ஹாரி வெல்டென், "ஜெர்மன் தேவதைக்கதைகள் மீது சார்லஸ் பெரால்டின் Contes de ma Mère L'oie ஏற்படுத்திய பாதிப்புகள்", ப 962, ஜேக் ஸைப்ஸ், எட். மாபெரும் தேவதைக் கதை பாரம்பரியம்: ஸ்ட்ராபரோலா மற்றும் பேஸிலி முதல் ப்ரதர்ஸ் கிரிம் வரை , ISBN 0-393-97636-X
  12. மரியா டடார், உரை விளக்கத்துடன் ப்ரதர்ஸ் கிரிம் , ப 376-7 W. W. நார்டான் & நிறுவனம், லண்டன், நியூயார்க், 2004 ISBN 0-393-05848-4
  13. இதாலா கால்வினோ, இத்தாலியன் தேவதைக் கதைகள் ப 485 ISBN 0-15-645489-0
  14. இதாலா கால்வினோ, இத்தாலியன் தேவதைக் கதைகள் ப 744 ISBN 0-15-645489-0
  15. ஜோசப் ஜேகப்ஸ், கூடுதல் ஆங்கில தேவதைக் கதைகள் , "இங்கிலாந்து அரசரும் அவரது மூன்று மகன்களும்" பரணிடப்பட்டது 2010-04-27 at the வந்தவழி இயந்திரம்
  16. மரியா டடார், உரை விளக்கத்துடன் ப்ரதர்ஸ் கிரிம் , ப. 230 W. W. நார்டான் & நிறுவனம், லண்டன், நியூயார்க், 2004 ISBN 0-393-05848-4
  17. மேக்ஸ் லுதி, ஒன்ஸ் அபான் எ டைம்: ஆன் தி நேச்சர் ஆஃப் ஃபேரி டேல்ஸ் , ப 33 ஃபிரடெரிக் உங்கார் பப்ளிஷிங் நிறுவனம், நியூயார்க், 1970
  18. ஜேக் ஸைப்ஸ், வென் ட்ரீம்ஸ் கம் ட்ரூ: கிளாஸிகல் ஃபேரி டேல்ஸ் அண்ட் தெயர் ட்ரெடிஷன் , ப 124-5 ISBN 0-415-92151-1
  19. சார்லஸ் சாலமன், தி டிஸ்னி தேட் நெவர் வாஸ் 1989:198, மேற்கோளிடப்பட்டது Bell 1995:110.
  20. எலிசபெத் பெல், "சோமடெக்ஸ்ட்ஸ் அட் தி டிஸ்னி ஷாப்"
  21. லியோனார்டு மால்டின், தி டிஸ்னி ஃபிலிம்ஸ்.
  22. ஹலோவுக்கு பின் நீங்கள் சொல்வது என்ன?; 1975; ISBN 0-552-09806-X
  23. மிசஸ் பீஸ்ட் , ஸ்டே தர்ஸ்டி பிரஸ், 2009. ASIN: B001YQF59K

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sleeping Beauty
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Sleeping Beauty வார்ப்புரு:Brothers Grimm

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூங்கும்_அழகி&oldid=3793859" இலிருந்து மீள்விக்கப்பட்டது