தூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர்

தூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர் ஆங்கில மொழி: Camerlengo of the Holy Roman Church என்பது கத்தோலிக்க திருச்சபையின் மிகவும் குறிக்கத்தக்க ஆட்சிப்பணிகளில் ஒன்றாகும். திரு ஆட்சிப்பீடத்தின் சொத்து மற்றும் வருவாயினை நிர்வகிக்கும் பொறுப்பு இவருடையதாகும். முக்காலத்தில் திருத்தந்தை நாடுகளின் நிதி நிர்வாகமும் இவருடையதாக இருந்தது.

இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பதவியினை வகிப்பவரின் சொந்த ஆட்சி முத்திரை இச்சின்னத்தின் கேடயத்தில் பொறிக்கப்படும்

வத்திக்கான் நாட்டின் சட்டப்படி இப்பதவியினை ஒரு கர்தினால் மட்டுமே வகிக்க முடியும்.[1] இவ்வழக்கம் 15ம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததற்குச் சான்றில்லை.[2] இப்பதவியினை வகிப்பவரின் ஆட்சி முத்திரையில் தங்கம் மற்றும் வெள்ளி சாவிகளுடன் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பட்டைகளை உடைய குடை பொறிக்கப்பட்டிருக்கும். இவையே இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் திரு ஆட்சிப்பீடத்தின் சின்னமுமாகும்.

டிசம்பர் 20, 2014 அன்று திருத்தந்தை பிரான்சிசு கர்தினால் ஜீன்-லூயிஸ் தாவ்ரானை தூய உரோமைத் திருச்சபையின் பொருளாளராக நியமித்தார்.[3]

பணிப்பொறுப்புகள்

தொகு

இப்பதவியினை வகிப்போர் திருத்தந்தையின் இறப்பை உறுதிசெய்ய வேண்டும். மருத்துவரால் திருத்தந்தை இறந்ததாக அறிவிக்கப்பட்டதை உறுதி செய்தப்பின்பு திருத்தந்தையின் மோதிரத்தைப் பிற கர்தினால்களின் முன்னிலையில் இவர் உடைக்க வேண்டும். போலி ஆவணங்கள் உருவாக்காமல் தடுப்பதற்கும் திருத்தந்தையின் ஆட்சி முடிவுற்றது என்பதை குறிப்பதற்கும் இவ்வாறு செய்யப்படுகின்றது. இதன்பின்னர் பொருளாளர் உரோமைச் செயலகங்களுக்கு, குறிப்பாக கர்தினால் குழு முதல்வருக்கு திருத்தந்தையின் இறப்புச்செய்தியினை அறிவிப்பார். திருத்தந்தையின் இறப்புச்சடங்குகளுக்கும் புதிய திருத்தந்தைத் தேர்தலுக்கும் ஏற்பாடு செய்வார்.

புதிய திருத்தந்தை தேர்வு செய்யப்படும் வரை, இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் இவரே வத்திக்கான் நகரின் நாட்டுத் தலைவர் பணியினை செய்வார். எனினும் இக்காலத்தில் இவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் அல்ல என்பது குறிக்கத்தக்கது. இக்காலத்தில் கத்தோலிக்க திருச்சபையினை வழிநடத்தும் பணி கர்தினால் குழாமுக்கு உரியது ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Pastor Bonus
  2. Miranda, Salvador. "The Cardinals of the Holy Roman Church, Reverend Apostolic Chamber". The Cardinals of the Holy Roman Church. Florida International University. பார்க்கப்பட்ட நாள் 2010-02-22. The camerlengo was often a cardinal, but it became a cardinalitial office only from the XV century.
  3. "Francis names new Camerlengo, interim leader of Vatican at pope's death". National Catholic Reporter. 20 டிசம்பர் 2014 இம் மூலத்தில் இருந்து 2014-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141220213552/http://ncronline.org/blogs/ncr-today/francis-names-new-camerlengo-interim-leader-church-popes-death.