தெற்கிலிருந்து வடக்கு

தெற்கிலிருந்து வடக்கு என்பது தமிழர் உலகப் பரவல் பற்றி சில இயக்கங்களும் நபர்களும் கூறிய கொள்கையாகும். இதன்படி தமிழர் தென்னிந்தியாவில் இருந்து வடக்கு நோக்கி பெயர்ந்து பல்வேறு நாகரிகங்களை பல்வேறு நாடுகளில் உருவாக்கினர் என்று கூறப்படுகிறது. இதை குமரிக்கண்ட ஆதரவாளர்களும் விவேகானந்தர் போன்றோரும் தாங்கள் எழுதிய நூல்களில் குறித்துள்ளனர்.

குமரிக்கண்ட ஆதரவாளர்கள் தொகு

பாவாணர் கூறிய சான்றுகள் தொகு

மூலம் - தமிழர் வரலாறு[1]

பாவாணர் தமிழர் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி குடி பெயர்ந்தனர் என்று பின்வரும் வாதங்களை முன் வைக்கிறார்.

  1. தமிழும் அதனோடு தொடர்புள்ள திராவிட மொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென் மொழி வடக்கே செல்லச் செல்லத் திரிந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கே வரவரத் திருந்தியும் விரிந்தும் இலக்கியமுற்றும் செறிந்தும் இருத்தலும்.
  2. நாவலந் தேயத்திற்கு வெளியே திராவிட மொழிகள் இல்லாமல் இருத்தலும், மேலை மொழிகளிலுள்ள தென் சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேரிருத்தலும்.
  3. முழுத்தூய்மையுள்ள தமிழ் தென்னாட்டில் தென் கோடியில் வழங்குதல்.
  4. தமிழ்நாட்டுள்ளும் தமிழ் தெற்கே செல்லச் செல்லத் திருந்தியும் சிறந்தும் இருத்தல்.
  5. திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக்கும் இதை உணர்த்தும்.
  6. வடநாட்டு மொழிகளிலும் தெலுங்கு முதலிய திராவிட மொழிகளிலுமுள்ள வல்லொலிகள் தமிழிலின்மையும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனையடுத்த தீவுகளிலும் வழங்குதலும்.
  7. தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழானபின் ஏற்பட்ட தலைக்கழகம், குமரிக்கண்டத்தின் தென் கோடிப் பஃறுளி யாற்றங்கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும்.
  8. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந் தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.
  9. பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிம மும் (காரன்னம்) ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத்(Tasmania) தீவில் இன்றுமிருத்தல்.
  10. வணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்குகளும் நிலைத்திணை (தாவர) உயிர்களுந் தவிர, மற்றல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகைகளு மாகிய முதற் பொருளும், தென்னாட்டிற்குச் சிறப்பாக உரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல்.
  11. மக்களின் நாகரிகத் தொடக்கத்தையுணர்த்தும் ஐந்திணை மக்கட் பாகுபாடும், குறிஞ்சி மகளிர் தழையுடையும், நாட்டாட்சிக்கு முற்பட்ட ஊராட்சியும், அகப்பொருட் செய்யுள்களிற் புலனெறி வழக்கமாகக் கூறப்பட்டிருத் தலும், ஐந்திணை நிலப் பாகுபாடு தமிழ் நாட்டிற்போல் வேறெங்கும் அடுத்தடுத்து அமைந் திராமையும்.
  12. தமிழ்மக்கள் பழங்கற்காலத்திலிருந்து தென்னாட்டிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்திருத்தலும், அவர்க்கு வந்தேறிக் கருத்தின்மையும்.
  13. தமிழர் பிற நாட்டிலிருந்து வந்தாரென்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியத்தில் ஒருசான்று மின்மை.
  14. தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்), தென் மொழி, தென்றமிழ். தென்னவன் (பாண்டியன்), தென்கலை என்னும் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கி வந்துள்ளமை.
  15. பண்டைத் தமிழர் தம் முன்னோரைத் தென்புலத்தார் என்றழைத்தமையும்; இறந்த முன்னோரிடம் தென் புலம், தென்னுலகு என்றும், கூற்றுவன் தென்றிசைக் கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் என்றும் பெயர் பெற்றிருத்தலும்.
  16. தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றவன், தென்வடல், தென்பல்லி, வடபல்லி (அணிகள்) முதலிய வழக்குகளில், தென்றிசை முற்குறிக்கப் பெறுதல்.
  17. அகப்பொருளில் தலைக்கழகத்தில் நிறைய புலவர்கள் இருந்ததும் அடுத்து வந்த க்ழகங்களில் புலவர்களின் எண்ணிகை திடுமென குறைந்ததும். தலைக்க்ழகம் போது குமரி மிகப்பெறும் நாடாயிருந்தது. அதனால் நிறைய புலவர்கள் வந்தனர். இடைக்கழகம் போதே கபாடபுரம் பொருநை ஆறான தாமிரபரணி அருகில் வரை சுருங்கிவிட்டது. அதனால் சில புலவர்களே இருந்தனர்.
  18. தமிழ்ஞாலத்தின் நடுவிடமாக, நடவரசன் தில்லை மன்று குமரி நாட்டுப் பாண்டியனால் அமைக்கப் பெற்றமை.[2]

விக்டர் தொகு

  1. விக்டர் என்பவர் கி.மு. 50,000 மதிக்கத்தக்க பழமையான ஆஸ்திரேலியா எலும்புக்கூடுகளும் தமிழக எலும்புக்கூடுகளும் ஒரே மரபணுத்தன்மை கொண்டதைக் கொண்டு இதை நிறுவுகிறார்.[3]

விவேகானந்தர் தொகு

  1. சென்னை மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே விவிலியம் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழன் பிறந்தகம். தமிழர் வரலாறு. www.tamilvu.org. பக். பப - 7-10. 
  2. ஞா.தேவநேயப் பாவாணர். "தமிழர் வரலாறு-1". www.tamilvu.org. pp. பப 7 - 10. பார்க்கப்பட்ட நாள் சூலை 23, 2012.
  3. விக்டர்.ம.சோ (டிசம்பர் 2007). பஃறுளி முதல் யூப்ரடீசு வரை. நல்லேர் பதிப்பகம். 
  4. The Madras Presidency is the habitat of that Tamil race whose civilisation was the most ancient, and a branch of whom, called the Sumerians, spread a vast civilisation on the banks of the Euphrates in very ancient times; whose astrology, religious lore, morals, rites, etc., furnished the foundation for the Assyrian and Babylonian civilisations; and whose mythology was the source of the Christian Bible. Another branch of these Tamils spread from the Malabar coast and gave rise to the wonderful Egyptian civilisation, and the Aryans also are indebted to this race in many respects.
  5. Vivekananda. MEMOIRS OF EUROPEAN TRAVEL. http://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_7/translation_of_writings/memoirs_of_european_travel_i.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கிலிருந்து_வடக்கு&oldid=3725890" இலிருந்து மீள்விக்கப்பட்டது