தேசியப் பூங்கா

விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாக்க அரசால் ஒதுக்கப்படும் நிலப்பகுதி
(தேசிய பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசியப் பூங்கா (National park) என்பது, ஓர் அரசால் அறிவிக்கப்பட்ட அல்லது அதற்கு உரிமையான, இயற்கை நிலங்களையோ அல்லது ஓரளவு இயற்கை நிலங்களையோ கொண்ட ஓர் ஒதுக்ககம் ஆகும். இது மனிதருடைய பொழுதுபோக்கு, கேளிக்கை போன்ற தேவைகளுக்காகவும், விலங்குகள் அல்லது சூழல் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஒதுக்கப்படுவதுடன், பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. தேசியப் பூங்காக்கள் அமைப்பது தொடர்பான எண்ணங்கள் முன்னரேயே இருந்தனவாயினும், முதன் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா 1872 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட யெலோஸ்ட்டோன் தேசியப் பூங்கா ஆகும். ஒரு பன்னாட்டு நிறுவனமான இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியமும் (இ.பா.ப.ஒ.) அதன் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையமும் தேசியப் பூங்காக்களைத் தமது பகுப்பு II என்னும் வகையுள் சேர்த்து வரையறுத்துள்ளன. இ.பா.ப.ஒ. வின் வரைவிலக்கணத்துள் அடங்கும் உலகின் மிகப் பெரிய தேசியப்பூங்கா வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா ஆகும். இ.பா.ப.ஒ. வின் தகவல்களின்படி, உலகில் சுமார் 7000 தேசியப் பூங்காக்கள் உள்ளன[1].

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜல்டாப்பாரா காட்டுயிர் ஒதுக்ககத்தின் ஊடாக யானைப் பயணம்.
அர்ஜென்டீனா தேசிய பூங்கா.
இசுப்பெயினில் தெனெரைபில் அமைந்துள்ள டெய்டே தேசியப் பூங்கா. வருவோர் தொகை அடிப்படையில் உலகில் இரண்டாவது பெரியது.

வரைவிலக்கணம் தொகு

1969 ஆம் ஆண்டில் இ.பா.ப.ஒ (), தேசியப் பூங்காக்கள் ஒப்பீட்டளவில் பெரியவையாக இருக்கவேண்டும் எனவும், குறிப்பிட்ட வரைவிலக்கணத்துக்கு அமையும் இயல்புகளைக் கொண்டவையாக இருக்கவேண்டும் எனவும் அறிவித்தது.[2]. இதன்படி ஒரு தேசியப் பூங்கா பின்வரும் இயல்புகளைக் கொண்டிருக்கவேண்டும்:

  • மனிதர் பயன்படுத்தியதனாலோ அல்லது வாழ்ந்ததினாலோ மாற்றங்களுக்கு உட்படாத, ஒன்று அல்லது பல சூழல்மண்டலங்களைக் கொண்டிருக்கவேண்டும். இங்குள்ள தாவர விலங்கு இனங்கள், புவிப்புறவியல் களங்கள் மற்றும் வாழிடங்கள் என்பன அறிவியல், கல்வி பொழுதுபோக்கு போன்ற அடிப்படைகளில் சிறப்புப் பெற்றவையாக இருக்கவேண்டும் அல்லது மிகுந்த அழகுடன் கூடிய இயற்கை நிலத்தோற்றம் கொண்டவையாக இருக்கவேண்டும்.
  • நாட்டின் அதி உயர்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு இப்பகுதியை மனிதர் பயன்படுத்துவதையும், வாழ்வதையும் தடுக்கவேண்டும் அல்லது கூடிய விரைவில் அகற்றவேண்டும். அத்துடன், பூங்கா அமைப்பதற்குக் காரணமாக இருந்த சூழலியல், புவிப்புறவியல் அல்லது அழகியல் அம்சங்களை மதிப்பதற்கான இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
  • அகத்தூண்டல், கல்வி, பொழுதுபோக்கு போன்ற தேவைகளுக்காக சிறப்பு நிபந்தனைகளின்கீழ் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்.

1971 ஆம் ஆண்டில், இந்தக் கட்டளை விதிகள் மேலும் விரிவாக்கப்பட்டு, தேசியப் பூங்காக்களின் மதிப்பீட்டை இலகுவாக்குவதற்காக தெளிவானதும் வரையறுக்கப்பட்டவையுமான மட்டக்குறிகளுடன் அமைக்கப்பட்டன. இவை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தன:

  • குறந்தது 1000 எக்டேர்கள் பரப்பளவு கொண்டவையாக இருக்க வேண்டும்.
  • சட்டப் பாதுகாப்பு.
  • முறையான பாதுகாப்புக் கொடுப்பதற்குத் தேவையான போதிய நிதி ஒதுக்கீடும், பணியாட்களும்.
  • வேட்டை, மீன்பிடி, என்பவை உள்ளடங்கிய இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்தல், மேலாண்மை, வசதிகள்.

பொதுவாகத் தேசியப் பூங்காக்கள் நடுவண் அரசுகளினால் நிர்வாகம் செய்யப்பட்டாலும், ஆசுத்திரேலியாவில் மாநில அரசுகளே இவற்றை நிர்வாகம் செய்கின்றன.

குறிப்புகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசியப்_பூங்கா&oldid=3765555" இருந்து மீள்விக்கப்பட்டது