தோகு எமோங்

நாகாலாந்தின் ஒரு திருவிழா

தோகு எமோங் ( Tokhü Emong ) என்பது இந்திய மாநிலமான நாகாலாந்தில் உள்ள லோதா நாகாக்களால் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.இந்த ஒன்பது நாள் இலையுதிர் திருவிழா அறுவடை பருவத்தின் முடிவைக் கொண்டாடுகிறது. [1]

'தோகு' என்றால் விருந்து (உணவு மற்றும் குடித்தல்) 'எமோங்' என்றால் குறிப்பிட்ட நேரத்தில் நிறுத்துவது எனப் பொருள். [2]

கண்ணோட்டம் தொகு

இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. [3] கொண்டாட்டம் ஒன்பது நாட்கள் நீடிக்கும். இந்த திருவிழா பயிர்களை அறுவடை செய்வதோடு தொடர்புடையது. இது நாட்டுப்புற நடனங்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்களுடன் நடத்தப்படுகிறது.

திருவிழாவின்போது மக்கள் தங்களை ஆசீர்வாதிக்குமாறு கடவுள்களைப் புகழ்கிறார்கள். 'தோகு எமோங்' என்பது சகோதரத்துவம், மன்னிப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் கொண்டாட்டமாகும். [4] இது உணவு, பரிசுகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சமூக விருந்து ஆகியவற்றின் மூலம் கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவின் போது, முழு கிராமமும் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் விருந்துக்கு உணவு மற்றும் பானங்கள் தயார் செய்யப்படுகின்றன. நண்பர்கள், குடும்பத்தினர் அண்டை வீட்டார் ஒருவரையொருவர் வீட்டிற்கு அழைக்கிறார்கள். இது 9 நாட்களுக்கு தொடர்கிறது. சமூகப் பாடல்கள், நடனங்கள், விருந்துகள், வேடிக்கை மற்றும் உல்லாசங்கள் ஆகியவை விருந்தின் முக்கிய அம்சங்கள். ஒவ்வொருவரும் அவரவர் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப தங்கள் அழகிய பாரம்பரிய உடைகளை அணிந்துகொள்கிறார்கள். திருவிழாவின் போது உணவு மற்றும் பானங்கள் பரிசாக பரிமாறப்படுகின்றன.

திருவிழாவிற்கு முன் தொகு

கிராமப் பூசாரி 'தோகு எமோங்கின்' ஆரம்பத்தை அறிவிக்கிறார். உணவுப் பொருட்களை சேகரிக்க கூடையுடன் கிராமத்தில் வீடு வீடாகச் செல்கிறார். இந்த நோக்கத்திற்காக இங்கா அல்லது ஆதரவாளர்களும் அவருடன் செல்கின்றனர். இந்தத் தொகுப்பு லிம்ஹா போட்சோ ஹா ஓயாக் போட்சோவுக்கு (பூமி-கடவுள் மற்றும் வான்-கடவுள்) காணிக்கையாகும். பூசாரி நன்கொடையில் ஒரு சிறிய தொகையை எடுத்து, பிரார்த்தனை செய்த பிறகு அதை தனது கூடையில் போடுகிறார். சாகுபடியின் போது அதிக பங்களிப்பு அதிக பயிர்களுக்கு உதவும் என்று நம்பப்படுவதால், சக கிராமவாசிகள் தாராளமாக பங்களிப்பது வழக்கம். புராணத்தின் படி, பங்களிப்பை மறுக்கும் எவரும் மோசமாக சபிக்கப்பட்டு பிச்சைக்காரனாக ஆவதாக நம்புகின்றனர்.

இத்தொகையின் ஒரு பகுதி பன்றியை வாங்க பயன்படுத்தப்படுகிறது, மீதமுள்ளவை அரிசி பீர் தயாரிப்பதற்காக வைக்கப்படுகின்றன. பின்னர், ஒரு மூங்கில் ஈட்டியின் உதவியுடன், பன்றியின் இதயத்தில் ஒரு துளை செய்யப்படுகிறது, பின்னர் தீர்க்கதரிசனத்தை விளக்குவதற்காக வயிறு வெட்டப்பட்டது. பூசாரி கிராமத்தின் விதியை குடலில் இருந்து படிக்கிறார். பின்னர் பன்றி சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் விநியோகிக்கப்படுகிறது.

திருவிழா தொடங்கும் முன் அந்நியர் கிராமத்திற்கு வந்தால், அவர் ஊருக்குச் செல்லலாம் அல்லது திருவிழா முழுவதும் விருந்தினராக தங்கலாம், கிராமத்தின் விருந்தோம்பலை அனுபவித்து மகிழலாம்.

கிராமங்களில் உள்ள கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டு வீடுகள் சீரமைக்கப்படுகின்றன.

திருவிழாவின் போது தொகு

லோதாக்களின் கிராமங்களுக்கு இடையே சில சடங்கு நிகழ்ச்சிகளிலும் மற்ற கொண்டாட்ட நடவடிக்கைகளிலும் சிறிய வேறுபாடு இருக்கலாம். கிராமம் அதன் சொந்த பூசாரி மற்றும் அதன் கிராமத்திற்குள் வழக்கமான சட்டங்களைக் கொண்டுள்ளது. அதன்படியே செயல்படவும் வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும், கொண்டாட்டத்தின் அடையாளம், அதன் முக்கியத்துவம் மற்றும் பாடங்கள் அல்லது நோக்கங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை.

விழாக்களில் மக்கள் தங்கள் வழக்கமான ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள்

'தோகு எமோங்' என்பது வருடாந்திர விழாவாகும். இது நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் தொடர்கிறது. வரலாற்று ரீதியாக, திருவிழா ஒரு நிலையான தொடக்க தேதியைக் கொண்டிருக்கவில்லை. லோதா நாகா இனத்தின் பெரியவர்கள் சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்த ஒரு குறிப்பிட்ட தேதியில் இதை நடத்துகின்றனர். [5] சமீபத்தில், நாகாலாந்து அரசு வெளியிட்ட அரசு நாட்காட்டியில் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் லோதாக்களுக்கு மட்டும் விடுமுறை என தேதியை நிர்ணயித்துள்ளது.

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோகு_எமோங்&oldid=3688946" இருந்து மீள்விக்கப்பட்டது