தோட்டக்காரி

1963 இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

தோட்டக்காரி 1963 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ஒரு ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். வி. தங்கவேலு இப்படத்தைத் தயாரித்தார்.[1] இலங்கையில் வெளியான முதலாவது 35மிமீ முழுநீளத் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.[2] இலங்கையின் மலையகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.[2] பி. எஸ். கிருஷ்ணகுமார் இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.[2] அவரே திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களையும் எழுதியிருந்தார்.[2] கே. எம். சவாகிர் இசையமைத்திருந்தார்.

தோட்டக்காரி
தோட்டக்காரி விளம்பரம் (சுதந்திரன்)
இயக்கம்பி. எஸ். கிருஷ்ணகுமார்
தயாரிப்புவி. தங்கவேலு
சிறீ கணபதி பிக்சர்சு
கதைபி. எஸ். கிருஷ்ணகுமார்
திரைக்கதைபி. எஸ். கிருஷ்ணகுமார்
இசைகே. எம். சவாகிர்
நடிப்புபி. எஸ். கிருஷ்ணகுமார்
ஜெயஸ்ரீ
ஒளிப்பதிவுதயானந்த விமலவீர
படத்தொகுப்புதுவான்கபூர்
கலையகம்நவஜீவன ஸ்ரூடியோ
வெளியீடுசெப்டம்பர் 27, 1963
நாடுஇலங்கை
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ. 450,000.00

படப்பிடிப்பு

தொகு

1960 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இத்திரைப்படத்துக்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகின.[2] கம்பளையில் ‘ரெவன்ஸ்கிறே’ தோட்டத்தில் முதலாவது படப்பிடிப்பு ஆரம்பமாகியது. தொழிற்சங்கத் தலைவர் கே. ராஜலிங்கம் படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.[1] ‘கொழும்பு முன்னேற்ற நாடக மன்ற’க் கலைஞர்களான வீ. மோகன்ராஜ், ஆர். வரதராஜன் போன்றோரும் நடித்தனர். கதாநாயகியாக நடித்தவர் ஜெயஸ்ரீ என்ற சேபாலிக்கா குரூஸ். செல்வம் பெர்னாண்டோ கதாநாயகிக்காகப் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.[2]

வெளியீடு

தொகு

தோட்டக்காரி திரைப்படம் 1963 செப்டம்பர் 27 இல் கொழும்பில் கிங்சுலி, பிளாசா ஆகிய திரையரங்குகளிலும், யாழ்ப்பாணத்தில் வெலிங்டனிலும், மற்றும் நாடெங்கிலும் உள்ள பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

தொகு

தோட்டக்காரி திரைப்படத்தில் நடித்தவர்கள்:

  • பி. எஸ். கிருஷ்ணகுமார்
  • ஜெயஸ்ரீ (இயற்பெயர்: சேபாலிக்கா குரூஸ்)
  • வி. மோகன்ராஜ்
  • வி. தங்கவேலு
  • சாந்தி
  • மாஸ்டர் பிரகாஷ் முத்துவேலு
  • ஆர். வரதராஜன்
  • கே. ஆர். ஆறுமுகம்
  • ஜாபிர்குமார்
  • தங்கையா
  • நல்லையா
  • வசந்தி
  • வீணைகுமாரி

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தேயிலைத் தோட்ட முதலாளி சிறீவேலு முதலியாருக்கும் (மோகன்ராஜ்), அவரது வேலைக்காரி லட்சுமிக்கும் பிறந்தவள் வள்ளி (ஜெயஸ்ரீ). தன் அண்ணனின் சொத்துக்களை அடைய அவரது தம்பி சிறீரங்கம், முதலியாரைக் கொலை செய்கிறான். முதலியாரின் மகன் சிறீதரைப் கிறித்தவப் பாதிரியார் ஒருவர் பாதுகாப்பாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கிறார். தோட்ட உரிமையைப் பெற்ர சிறீரங்கம் தோட்ட மக்களைத் துன்புறுத்துகிறான். இதே வேளை, தோட்டத்தின் கணக்குப்பிள்ளையின் மகன் சுந்தருக்கும் (கிருஷ்ணகுமார்) வள்ளிக்கும் இடையே காதல் எழுகிறது. சுந்தர் கொழும்பு செல்கிறான். அவனைத் தேடிக் கொழும்பு சென்ற வள்ளி அங்கு சுந்தரைத் தேடி அலைகிறாள். அங்கு சிங்கப்பூரிலிருந்து திரும்பிய சிறீதரால் காப்பாற்றப்படுகிறாள். சிறீதர் சுந்தரைக் கன்டுபிடித்து தங்கையை அவனிடம் சேர்ப்பிக்கிறான். சிறீரங்கம் காவல்துறையினரிடம் அகப்படுகிறான்.[2]

பாடல்கள்

தொகு

பாடல்களை பி. எஸ். கிருஷ்ணகுமார், கணேசாள் (அங்கவை) ஆகியோர் இயற்றியிருந்தனர். கே. எம். சவாகிர் இசையமைத்தார். கௌரீஸ்வரி இராஜப்பன், ஜி. எஸ். பி. ராணி, ஜி. வரதராஜா, ஹருண் லந்தரா, கே. குமாரவேல் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

  • என்னை நீ மறந்தாலும் உன்னை நான் மறப்பேனா முருகா (இயற்றியவர்: கணேசாள் அங்கவை, பாடியவர்: கௌரீஸ்வரி, இராகம்: இந்தோளம்)[3]

வரவேற்பு

தொகு

தோட்டக்காரி திரைப்படம் 1963 செப்டம்பர் 27 இல் நாடெங்கும் வெளியிடப்பட்டது. முதலாவது தமிழ்த் திரைப்படம் என்ற வகையில் எதிர்பார்ப்பு இதற்கு இருந்தது. கொழும்பில் இரண்டு திரையரங்குகளில் 2 வாரங்களும், ஏனைய இடங்களில் ஒரு வாரமும், அல்லது அதற்குக் குறைந்த நாட்களும் ஓடியிருந்தது.[2]

துணுக்குகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 3. ‘தோட்டக்காரி’, தம்பிஐயா தேவதாஸ்
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 தம்பிஐயா தேவதாஸ் (2001). இலங்கைத் திரையுலக முன்னோடிகள். காந்தளகம். p. 31-36.
  3. ஈழத்து இசைமேதையைச் சந்தித்தேன்!, அருண் சிவகுமாரன், விளம்பரம் இதழ், அக்டோபர் 1, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டக்காரி&oldid=2989435" இலிருந்து மீள்விக்கப்பட்டது