தோவாளை சுந்தரம் பிள்ளை

தோவாளை சுந்தரம் பிள்ளை (1903 - 1961) பழந்தமிழர் கிராமியக் கலைகளில் ஒன்றான வில்லுப் பாட்டுக் கலைஞர் ஆவார். வில்லுப் பாட்டு வழிவழியாய் பல புலவர்களால் பாடப் பெற்று 20ம் நூற்றாண்டில் சிறந்து விளங்கியது. வில்லுப் பாட்டு என்று குறிப்பிடும் போது தோவாளை சுந்தரம் பிள்ளை முதலிடம் பெற்று விளங்கினார். பின்னாளில் வந்த புலவர்களெல்லாம் தோவாளை சுந்தரம் பிள்ளையை வழிமுறையாகக் கொண்டு வணக்கம் சொல்லி ஆரம்பிப்பது வழக்கமாய் இருக்கிறது.

வில்பாவலர், ரேடியோ ஸ்டார் என்று பட்டங்கள் பெற்று விளங்கினார். தேரூர் ஆண்டார் பிள்ளையை குருவாகக் கொண்டு வில்கலையை வளர்த்தார் எனினும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு தமிழ் இலக்கியங்கள், புராண இதிகாசங்களைக் கையாண்டு தனித் தன்மையோடு விளங்கினார். பெண்கள், ஆண்கள், இளவயதினர், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் அவர் சொல்லழகில் மயங்கிக் கட்டுண்டு கிடப்பர்.

கோயில் கொடை விழா என்று இல்லாமல் தமிழ் சங்கம் பொது விழாக்களிலும் அவர் தீந்தமிழ் விரும்பி ரசிக்கப்பட்டு வந்தது. பொருளாதார மேதை டாக்டர் நடராஜன், பேராசிரியர் இலக்குவனார் போன்ற தமிழ் ஆர்வலர்களோடு நெருங்கிய உறவு வைத்ததோடு அவர்களால் பாராட்டப்பட்டார்.

வில் பாவலர் சுந்தரம் பிள்ளை குழுவில் சேர்ந்து பக்க வாத்தியங்கள் இசைப்பதைப் பெருப் பேறாகக் கருதினார்கள் பக்க மேளக்காரர்கள். அண்ணாவி என்று அவர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இவரோடு இணைந்தவர்கள் பிற புலவர்கள் அழைத்தாலும் போக மாட்டார்கள். சுருங்கக் கூறின் பக்க மேளக் காரர்களுக்கு வேலை குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவர் சொல் அலங்காரத்தில் மக்கள் கட்டுண்டு கிடப்பதால் பாட்டுக்க நேரம் குறைவாகவே கிடைக்கும்.

தந்தை வேலாயுதம் பிள்ளை, தாய் இராமலட்சுமி இவர்களுக்கு புதல்வராய் தோவாளையில் அவதரித்தார். முழுப் பெயர் கடம்பவன சுந்தரம் பிள்ளை, பின்னர் கே சுந்தரம் பிள்ளை என்று வழங்கலாயிற்று. இவருக்கு கைலாசம் பிள்ளை, பூதலிங்கம் பிள்ளை என்று இரு சகோதரர்கள். கைலாசம் பிள்ளையும் வில்லுப் பாட்டுக் கலை பயின்று பாடி வந்தார். பூதலிங்கம் பிள்ளை சிறந்த தமிழ் வித்துவான், உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பல இலக்கியங்களை படைத்துள்ள சிறந்த எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமாவார். மூன்று சகோதரிகளும் இருந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தமிழ் நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் இடைவிடாது கலைப் பணியாற்றச் செல்ல வேண்டியிருந்தமையால் தேரேகால் புதூர் என்னும் ஊருக்கு இடம் மாறினார்.

இவர் திருச்சி மற்றும் திருவனந்தபுரம் வானொலி நிலையங்களில் வில்லிசை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். இந்துக் கல்லூரியில் வில்லிசை வேந்தர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

நாகர்கோவிலில் 1957ல் இந்து சமயம் மற்றும் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. டாக்டர் நடராஜன், இலக்குவனார், தெ பொ மீ, சமயத் தலைவர்கள் என்று பல் துறை அறிஞர்கள் பங்கு பெற்று மிகச் சிறப்பாக ஒரு வாரம் நடை பெற்றது. அந்த பெரும் சபையில் வில்லிசை நிகழ்ச்சி நடத்தி அறிஞர்களால் பாராட்டப்பட்டார்.

நாஞ்சில் நாடு மட்டும் அன்றி தமிழகம் முழுவதும் மற்றும் தமிழ் கூறும் அன்றைய திருவிதாங்கூர் தேசத்திலும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. பழகிய யாவரும் அவரை உறவு சொல்லியே வருவது வழக்கமாக இருந்தது. இப்போதும் அவர் வழி வந்த சந்ததியினரை அவர் கலைத் துறை ஆட்கள் சந்திக்க நேர்ந்தால் உறவு முறை சொல்லியே அறிமுகப் படுத்திக் கொள்வர்.

பொருள் சேர்ப்பதில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இறை நம்பிக்கையால் அருளும் அன்பும் சேர்த்து வைத்துள்ளார். தமிழுக்கும் கலைக்கும் தன் வாழ்வை அர்ப்பணித்து மத்திய வயதிலேயே உலகை நீத்தார் இறுதியா திருநெல் வேலி மாவட்டம் தனக்கர் குளத்தில் (வடக்கன் குளம்) கோயில் விழாவில் கலைப் பணி ஆற்றிக் கொண்டு இருக்கும் போதே உயிர் நீத்து, கலையோடு ஐக்கியமானார்.

சென்னையில் நடந்த கிராமீயக் கலைவிழா, சேலத்தில் நடந்த பொருட்காட்சி ஆகியவற்றிலும் தன் குழுவினருடன் பங்கேற்றுப் பெருமை பெற்றார்.

இவரைப் பற்றிய பிற அறிஞர்களின் கருத்து தொகு

தொல் பொருள் ஆய்வாளர் "டாக்டர் பத்மநாபன்" தன்னுடைய கட்டுரையில் கீழ்வருமாறு கூறி உள்ளார்:

"தோவாளை சுந்தரம் பிள்ளை வில்லுப் பாட்டில் பல புரட்சிகளை செய்துள்ளார். சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரிடம் தமிழ்ப் பயிற்சி பெற்றமையால் அவரால் இனியமையாகவும் மனதை உருக்குமாறும் பாடல்கள் இயற்றிப் பாட முடிந்தது. நாஞ்சில் நாட்டில் வழக்குச் சொல் ஒன்று உண்டு. அதாவது, சொல்லுக்கு சுந்தரம், வில்லுக்கு கோலப்பன், பேய்க்கு நாராயணன். அதன் பொருள் சுந்தரம் பிள்ளை சொற்சுவைக்கு பேர் போனவர்.

விற்கலையை சுந்தரம் பிள்ளை மக்களிடம் தேசிய உணர்வு ஊட்ட ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். காந்திய வழியைப் பின்பற்றிய அன்னார் எப்போதும் தூய கதராடையை அணிவார். அவர் பின்னால் பெரும் ரசிகர் கூட்டம் எப்போதும் கூடியிருக்கும்."

பிரபல தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி வாயிலாக தெரிய வருவதாவது:

"லண்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜான் டூவீ 1957ம் ஆண்டு நாஞ்சில் வந்த போது, தோவாளை சுந்தரம் பிள்ளையினுடைய வில்லுப் பாட்டை ஒரு மணி நேரத்துக்கு பிபிசி வானொலிக்காகப் பதிவு செய்து சென்றுள்ளார்."

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோவாளை_சுந்தரம்_பிள்ளை&oldid=3618954" இலிருந்து மீள்விக்கப்பட்டது