நகர்ப்புற அமைப்பு

நகர்ப்புற அமைப்பு (Urban Structure) என்பது நகர்ப்புறப் பகுதிகளில் நிலப் பயன்பாட்டு ஒழுங்கமைப்பைக் குறிக்கும். சமூகவியல், பொருளியல், புவியியல் போன்ற துறைகளைச் சேர்ந்த பலர், நகர்ப்புறங்களில் வெவ்வேறு வகையான மக்களும், வணிகத்துறைகளும் எந்தெந்த இடங்களில் அமையக்கூடும் என்பது குறித்த கோட்பட்டு மாதிரிகளை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் சில முக்கியமான மாதிரிகளை இக் கட்டுரை எடுத்தாள்கிறது. நகர்ப்புற அமைப்பு என்பது நகர்ப்புற இடஞ்சார் அமைப்பையும் குறிக்கிறது. இது நகரப்பகுதிகளில் உள்ள பொது இடங்கள், தனியார் இடங்கள் என்பவற்றின் ஒழுங்கமைப்பையும், அவற்றுக்கிடையேயான இணைப்புகள், அணுகத்தக்க தன்மை என்பவை குறித்தும் கவனத்துக்கு எடுத்துக்கொள்கிறது.

வலைவடிவ மாதிரி தொகு

வலைவடிவ நகர அமைப்பு அல்லது வலைவடிவச் சாலை அமைப்பு என்பது ஒரு வகையான நகரத் தளவமைப்பைக் குறிக்கும். இதில் ஒன்றுக்கொன்று இணையான ஒரு தொகுதி சாலைகளும், அவற்றுக்குச் செங்குத்தான இன்னொரு தொகுதிச் சாலைகளும் ஒன்றையொன்று வெட்டுவதனால் வலை போன்ற தளவமைப்பு உருவாகிறது.

ஒருமைய வலய மாதிரி தொகு

நகர்ப்புறப் பகுதிகளில் பல்வேறு சமூகக் குழுக்களின் பரம்பல் குறித்து முதன்முதலில் விளக்கியது இதுவே ஆகும். இதை "ஒருமைய வளைய மாதிரி" என்றும் குறிப்பிடுவது உண்டு. 1924 ஆம் ஆண்டில் ஏர்னெஸ்ட்டு பர்கெசு (Ernest Burgess) என்னும் சமூகவியலாளர், சிக்காகோ என்னும் தனியொரு நகரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாதிரியை உருவாக்கினார். இந்த மாதிரியின்படி, நகரங்கள் ஒரு மையப் புள்ளியில் இருந்து வெளிப்புறமாகப் புதிய வளையங்கள் சேர்வதன் மூலம் வளர்கின்றன. இதன் மையப்பகுதி மைய வணிகப் பகுதி ஆகும். இதைச் சூழவுள்ள அடுத்த வளையம் மாறுநிலை வலயம் எனப்படும். இவ்வலயத்துள் தொழிற்சாலைகளும், தரக்குறைவான வீடமைப்புப் பகுதிகளும் இருக்கும். இதற்கு வெளிப்புறமாக அடுத்துள்ள வலயத்தில் தொழிலாள வகுப்பினரின் குடியிருப்புப் பகுதிகளைக் காணலாம். இதைக் கட்டற்ற தொழிலாளர் வீட்டு வலயம் என்பர். அடுத்துள்ள வளையம் புதியனவும், பெரியவையுமான வீடுகளைக் கொண்டிருக்கும். இதில் பெரும்பாலும் இடைநிலை வகுப்பினர் வாழ்வர். இதை "நல்ல வதிவிட வலயம்" என்றும் அழைப்பதுண்டு. கடைசியாகக் காணும் வளையத்தினுள் அன்றாடம் நகரின் மையப் பகுதியில் உள்ள வேலைத் தலங்களுக்குப் பயணம் செய்வோர் வசிக்கும் புறநகர்ப் பகுதிகள் அமையும்.

ஆரைத்துண்டு மாதிரி தொகு

நகர்ப்புற அமைப்புக் குறித்த இந்த இரண்டாவது கோட்பாட்டு மாதிரி 1939 ஆம் ஆண்டில் பொருளியலாளரான ஓமெர் ஓயிட் (Homer Hoyt) என்பாரால் முன்வைக்கப்பட்டது. ஆரைத்துண்டு மாதிரி என்னும் இந்த மாதிரி, நகரங்கள் வளைய அமைப்பில் வளர்வதில்லை என்றும், ஆரைத்துண்டு அமைப்பிலேயே வளர்கின்றன என்றும் கூறுகிறது. தற்செயலாகவோ, அல்லது புவியியல், சூழல் காரணங்களாலோ நகரத்தில் சில பகுதிகள் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமைகின்றன. இதனால் அக் குறிப்பிட்ட இடங்களில் நிலைகொள்ளும் அந்நடவடிக்கைகள், நகரங்கள் வளரும்போது வெளிப்புறமாக ஒரு ஆரைத்துண்டு வடிவில் வளர்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு குறித்த பகுதியில் உயர் வருவாயுள்ளோரின் குடியிருப்பு அமைந்தால், அது வளரும்போது நகர மையத்துக்கு எதிர்ப்புறமாகவுள்ள வெளி விளிம்பில் இருந்தே விரிவடையும்.

ஒரு வகையில் இந்த மாதிரி முன்னர் கூறிய வலய மாதிரி அல்லது ஒருமைய மாதிரியின் திருந்திய வடிவமேயன்றி அடிப்படையான வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. ஓயிட், புர்கெசு ஆகிய இருவருமே சிக்காகோவின் அமைப்பு தத்தம் மாதிரிகளுக்குப் பொருத்தமாக அமைவதாகக் கூறியுள்ளனர்.

பல்மைய மாதிரி தொகு

1954 ஆம் ஆண்டில் புவியலாளர்களான சி. டி. அரிசு, ஈ. எல். உல்மன் ஏனும் இருவர் நகர்ப்புற அமைப்புக் குறித்த பல்மைய மாதிரியை உருவாக்கினர். ஒரு நகரம் பல மையங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்றும், அம்மையங்களைச் சுற்றிப் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றும் இம் மாதிரி விளக்குகிறது. சில நடவடிக்கைகள் குறித்த சில புள்ளிகள் அல்லது கணுக்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றன, வேறு சில நடவடிக்கைகள் அப் புள்ளிகளைத் தவிர்க்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பல்கலைக்கழகக் கணு, படித்தோர் குடியிருப்புக்கள், நூல் விற்பனை நிலையங்கள் போன்றவற்றைக் கவரும் அதேவேளை, ஒரு வானூர்தி நிலையக் கணு, விடுதிகளையும், களஞ்சியப்படுத்தல் வசதிகளையும் கவரக்கூடும். ஒன்றுடன் ஒன்று பொருந்திவராத நடவடிக்கைகள் ஓரிடத்தில் கூடி அமைவதில்லை. கனரகத் தொழிற்சாலைகளும், உயர்வருவாயினர் குடியிருப்புக்களும் ஓரிடத்தில் அமைவது அரிதாக இருப்பது இதனாலேயே.

ஒழுங்கற்ற கோல மாதிரி தொகு

இது, "ஊர் நிலையில் இருந்து நகர நிலைக்கு மாறும் நிலை"க்கு உரிய பண்புகளைக் கொண்ட பொது இடங்களின் ஒழுங்கமைப்பைக் குறிக்கும். பொதுவாக மூன்றாம் உலக நாடுகளின் இதனைக் காணலாம். இம்மாதிரி, முறையான திட்டமிடல் இன்மையாலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் கட்டுமானங்கள் இடம்பெறுவதாலும் உருவாகிறது. இது, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களிலும், ஐரோப்பாக் கண்டத்தின் சில பகுதிகளிலும் உள்ள பழைய நகரங்களுக்குப் பொருந்துகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர்ப்புற_அமைப்பு&oldid=3854108" இலிருந்து மீள்விக்கப்பட்டது