பல்மைய மாதிரி

பல்மைய மாதிரி என்பது ஒரு வகை நகர்ப்புற அமைப்பு மாதிரி ஆகும். சௌன்சி ஹாரிஸ் (Chauncy Harris), எட்வார்டு உல்மன் (Edward Ullman) ஆகியோர் 1945 ஆம் ஆண்டில் தாமெழுதிய "நகரங்களின் இயற்கை" (The Nature of Cities) என்னும் கட்டுரையில் இந்த மாதிரியை முன்வைத்தனர். நகரங்கள் மைய வணிகப் பகுதிகளை மையமாகக் கொண்டு தோற்றம் பெறலாம் ஆயினும், ஒரே வகை நிலப் பயன்பாட்டையும், நிதித் தேவைகளையும் கொண்ட தொழில் முயற்சிகள் ஒன்றுக்கொன்று அருகாமையில் நிறுவப்படுகின்றன. இப்படியான சேர்க்கைகள் தமது அயலின் இயல்புகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன. விடுதிகளும், உணவகங்களும் வானூர்தி நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படுவது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இவ்வாறான மையங்களின் எண்ணிக்கையும், வகைகளும் நகரங்களின் வளர்ச்சியைக் குறிப்பனவாக அமைகின்றன.

பல்மைய மாதிரி

மகிழுந்து பயன்படுத்துவோர் அதிகரித்து இருப்பதனால், மக்கள் போக்குவரத்துச் செய்வதற்குக் கூடிய வசதிகளைக் கொண்டிருப்பர் என்னும் எண்ணக்கருத்தின் அடிப்படையிலேயே இக் கோட்பாடு உருவானது. இவ்வாறான அதிகரித்த போக்குவரத்து வசதிகளினாலேயே வட்டார மையங்கள் சிறப்பாக்கம் பெறக்கூடியதாக இருந்தது. கனரகத் தொழில் பகுதிகள், வணிகப் பூங்காக்கள் போன்றவை இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். பெரியனவும், விரிவடைந்து வருவனவுமான மாநகரங்களுக்கே இம் "மாதிரி" பொருத்தமாகக் காணப்படுகின்றது. நகரத்தின் விரிவாக்கத்துக்குத் தொடக்கப் புள்ளிகளாக அமையும் இத்தகைய மையங்களின் எண்ணிக்கை பல்வேறு நிலைமைகளிலும், வரலாற்றுக் காரணிகளிலும் தங்கியுள்ளது. பின் வருவன பல மையங்கள் உருவாவதற்குக் காரணமாகின்றன:

  1. சில நகர்ப்புறச் செயற்பாடுகளுக்குத் துறைமுகங்கள், தொடருந்து நிலையங்கள் போன்ற சிறப்பு வசதிகள் தேவையாக உள்ளன.
  2. சில செயற்பாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகி இருக்க முயல்கின்றன. எடுத்துக்காட்டாக, கனரகத் தொழிற்சாலைகளையும், வானூர்தி நிலையங்களையும் குறிப்பிடலாம்.
  3. சில செயற்பாடுகள் ஒன்றையொன்று சார்ந்து பயன் பெறுவனவாக உள்ளன. கல்வி நிறுவனங்கள், நூல் விற்பனை நிலையங்கள் போன்றவை இவ்வாறானவை.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்மைய_மாதிரி&oldid=1912079" இலிருந்து மீள்விக்கப்பட்டது