நம்பிக்கையில்லாத் தீர்மானம்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் அல்லது நம்பிக்கையின்மைத் தீர்மானம் (No-Confidence Motion) என்பது நாடாளுமன்ற அரசமைப்பு முறை உள்ள நாடுகள் மற்றும் மாநிலங்களில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அவைகளில் கொண்டுவரப்படும் ஒருவகைத் தீர்மானம். இத்தீர்மானங்கள் அரசின் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படுகின்றன. இத்தீர்மானத்தின் வழிமுறைகள் நாட்டுக்கு நாடு, அவைக்கு அவை வேறுபடுகின்றன.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள அரசுத் தலைவர் மன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்கு உள்ளது என்று வாக்கெடுப்பின் மூலம் நிறுவ வேண்டும். இவ்வாறு நிறுவி விட்டால், அரசுத் தலைவர் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தனக்குண்டு என்று அவர் நிறுவத் தவறினால் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்து விட்டால் அரசு கவிழ்ந்து பதவி விலகும்.[1] இதன் பின்னர் நாட்டுத் தலைவர் வேறொருவரை அரசு அமைக்க அழைப்பார் அல்லது அவையைக் கலைத்து விட்டு புதிய தேர்தல்கள் நடத்த ஆணையிடுவார்.

இசுரேல், எசுப்பானியா, இடாய்ச்சுலாந்து போன்ற நாடுகளில், அரசுத் தலைவரின் மீது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோர், அதே தீர்மானத்தில் அவருக்கு பதிலாக மற்றொருவரின் பெயரை அரசுத் தலைவர் பதவிக்கு முன்மொழிய வேண்டும். இம்முறை “ஆக்கப்பூர்வமான நம்பிக்கையில்லாத் தீர்மானம்” எனப்படுகிறது. குடியரசுத் தலைவர் அரசமைப்பு முறை கொண்ட பல நாடுகளிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வழிவகைகள் உள்ளன. குடியரசுத் தலைவர் அல்லது அவரது அமைச்சரவையில் ஒரு குறிப்பிட்ட அமைச்சர் மீது இத்தீர்மானங்கள் கொண்டுவரப்படலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. வ.ரங்காசாரி (21 மார்ச் 2018). "நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: நடைமுறை என்ன?". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/opinion/columns/article23308871.ece. பார்த்த நாள்: 3 ஏப்ரல் 2018.