நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் (Neurons) என்பவை மின்புலத்தால் தூண்டலைப் பெற்று, தகவல்களை முறைப்படுத்தி, உடலின் பல பகுதிகளுக்கும் மின்சார வேதி சமிக்ஞைகளாகக் கடத்தும் திறன் வாய்ந்த உயிரணுக்கள் ஆகும். வேதி சமிக்ஞைகள், மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான நரம்பிணைப்புகளின் (synapse) மூலமாக நிகழ்கிறது. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து நரம்பு பின்னலமைப்புகளை (neural networks) உருவாக்குகின்றன. நரம்பணுக்கள், மூளை, தண்டு வடம், புற நரம்பு செல்திரள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நரம்பு மண்டலத்தின் அடிப்படையான பாகங்களாகும்.

நரம்பணு வரைபடம்
நரம்பணு வரைபடம்
a-ஒருங்குமுனைப்பு (dendrite); b-கலவுடல் (cell body); c-உயிரணுக் கரு; d-நரம்பிழை (axon); e-மயலின் நரம்புறை (myelin sheath); f-நரம்பிய உயிரணு (schwann cell); g-இடைவெளிக் கணு (node of Ranvier); h-நரம்பிழை முனையம் (axon terminal)

குறிப்பிடத்தக்க அளவில் தனித்துவமான நரம்பணு வகைகள் பல உள்ளன: உணர்வு உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு, மூளைக்கும், தண்டுவடத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பும் உணர்வு நரம்பணுக்கள் (sensory neurons); மூளை, தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று தசைச் சுருக்கங்கள் மற்றும் சுரப்பிகளைப் பாதிக்கும் இயக்க நரம்பணுக்கள் (motor neurons); மூளை, தண்டுவடத்தின் ஒரு பகுதியிலுள்ள நரம்பணுக்களை இணைக்கும் தொடுப்பு நரம்பணுக்கள் (interneurons).

முழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்[1].

நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் சிலசமயம் நரம்பு உயிரணுக்கள் அல்லது நரம்பு செல்கள் (Nerve cells) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த நரம்பணுக்கள் தவிர்ந்த வேறு உயிரணுக்களும் நரம்புத் தொகுதியில் காணப்படுவதனால், அவ்வாறு அழைப்பது பொருத்தமற்றதாக இருக்கும். நரம்பணுக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் நரம்புக்கட்டிகளும் (Glial cells) நரம்பு உயிரணுக்களே ஆகும்.

மனித மூளையில் 86[2] - 100 பில்லியன் (1011)[3] நரம்பணுக்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அமைப்பு தொகு

நரம்பணுவானது மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.

1. கலவுடல் (Cell body) - இதற்குள் உயிரணுக் கரு, ஏனைய உயிரணு நுண்ணுறுப்புக்கள் காணப்படும். இந்தக் கலவுடலானது ஒழுங்கற்ற வடிவம் அல்லது சமபக்கச்சீரமைவு அற்ற அமைப்பாகக் காணப்படும்.
2. சிறு நரம்புமுளைக் கிளைகள் / ஒருங்கு முனைப்புக் கிளைகள் (Denrites) - இவை கலவுடலிலிருந்து வெளி நோக்கி நீண்டு காணப்படும் கட்டையான கிளைகளாகும்.
3. நரம்பிழை (Axon) - கலவுடலிலிருந்து வெளியேறும் நீண்ட இழையாலான அமைப்பாகும். இதன் முடிவில் சிறிய கிளைகளைக் கொண்டிருக்கும். இவ்விழைகள் மயலினேற்றப்பட்ட நிலையிலோ, அல்லது மயலினேற்றம் செய்யப்படாத நிலையிலோ காணப்படலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. Herrup K, Yang Y (May 2007). "Cell cycle regulation in the postmitotic neuron: oxymoron or new biology?". Nat. Rev. Neurosci. 8 (5): 368–78. doi:10.1038/nrn2124. பப்மெட்:17453017. 
  2. Azevedo FA, Carvalho LR, Grinberg LT, et al. (April 2009). ""Equal numbers of neuronal and nonneuronal cells make the human brain an isometrically scaled-up primate brain"". The Journal of Comparative Neurology 513 ((5)): 532-41. doi:10.1002/cne.21974. 
  3. Williams RW, Herrup K (1988). "The control of neuron number". Annual Review of Neuroscience 11: 423-53. doi:10.1146/annurev.ne.11.030188.002231. https://archive.org/details/sim_annual-review-of-neuroscience_1988_11/page/423. 

புத்தகங்கள் தொகு

  • Kandel E.R., Schwartz, J.H., Jessell, T.M. 2000. Principles of Neural Science, 4th ed., McGraw-Hill, New York.
  • Bullock, T.H., Bennett, M.V.L., Johnston, D., Josephson, R., Marder, E., Fields R.D. 2005. The Neuron Doctrine, Redux, Science, V.310, p. 791–793.
  • Ramón y Cajal, S. 1933 Histology, 10th ed., Wood, Baltimore.
  • Richard S. Snell: Clinical neuroanatomy (Lippincott Williams & Wilkins, Ed.6th 2006) Philadelphia, Baltimore, New York, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-963-226-293-2
  • Roberts A., Bush B.M.H. 1981. Neurones Without Impulses. Cambridge University Press, Cambridge.
  • Peters, A., Palay, S.L., Webster, H, D., 1991 The Fine Structure of the Nervous System, 3rd ed., Oxford, New York

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரம்பணு&oldid=3521562" இலிருந்து மீள்விக்கப்பட்டது