நலங்கிள்ளி

நலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

போர்

தொகு

அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)

தன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.

பெரிய பனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது [1]

இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும். என்பதை அறிகிறோம்.

கடற்படை

தொகு

நலங்கிள்ளி கடற்படை வைத்திருந்தான். கடலில் படை நடத்தி அள்ளிக்கொண்டுவந்த செல்வம் நாட்டில் மண்டிக் கிடந்தது. இந்தப் பெருமுயற்சியால் [நோன்தாள்] சோழநாட்டுப் பொருநன் (போராளி) என்னும் சிறப்பினைப் பெற்றிருந்தான். இவனிடம் குதிரைப்படையும் [இவுளி] இருந்தது. இவனைப் பாடும் புலவர் கோவூர் கிழார் நான் பொருநர் கூட்டத்துக் கலைஞன். பிறரைப் பாடிப் பரிசில் பெறுவதை விரும்பாதவன். அவனை மட்டுமே பாடுவேன். “அவன் தாள் வாழ்க”. என்று பாடுகிறார். [2]

நலங்கிள்ளி பாடல்

தொகு

இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.

நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என்நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஓப்புவத்துவிடுவேன், கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியை எழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக.[3]

மேற்கோள்

தொகு
  1. புறம். 45
  2.  கடற்படை அடல் கொண்டி,
    மண்டுற்ற மலிர் நோன் தாள்,
    தண் சோழ நாட்டுப் பொருநன்,
    அலங்கு உளை அணி இவுளி
    நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; 5
    பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்;
    அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' - புறநானூறு 382

  3. புறம். 73

வெளிப்பார்வை

தொகு
  1. கொடை வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறான்
  2. பகை வரும் எச்சரிக்கை
  3. நலங்கிள்ளி என்ன செய்ய வேண்டும்
  4. நலங்கிள்ளியின் ஆற்றல்
  5. நலங்கிள்ளி வெற்றி பாதை
  6. போர்த்திறமும் கொடைத்திறமும்
  7. பாண்டி நாட்டு ஏழெயில் கோட்டைக் கதவில் புலிச்சின்னம் பொறித்தது
"https://ta.wikipedia.org/w/index.php?title=நலங்கிள்ளி&oldid=3521233" இலிருந்து மீள்விக்கப்பட்டது