நவலிங்கபுர சிவாலயங்கள்
நலம் தரும் நவலிங்கபுரம்
தொகுசிவபெருமானை மூலவராக, முதல்வராகக்கொண்டு அமைந்துள்ள கோவில்கள் ‘சிவபதிகள்’ என்றழைக்கப்படுகின்றன. இப்பதிகள் சிவத்தலங்கள் என்றும் சிவாலயங்கள் என்றும் அறியப்படுகின்றன. இந்தியா, இலங்கை, நேபாளம், கம்போடியா என உலக நாடுகள் அனைத்திலும் சிவத்தலங்கள் அதிகமாக உள்ளன. இந்தியாவில் அதிக அளவில் சிவத்தலங்கள் உள்ள பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு ஆகும். இத்தகைய சிவத்தலங்கள் எண்ணிக்கை அடிப்படையில் முப்பீடதலங்கள், பஞ்சலிங்க தலங்கள், ஆறு ஆதாரதலங்கள், சப்தவிடங்க தலங்கள், அட்டவீரட்டான தலங்கள், நவகைலாய தலங்கள், நவசமுத்திர தலங்கள், மற்றும் நவலிங்க புரதலங்கள் எனக் கூறப்படுகின்றன.
சைவப்பெருமக்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதங்களில் சிறப்பானது மகாசிவராத்திரிவிரதம், ஆண்டு தோறும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது மகாசிவராத்திரி.
சிவாலயங்கள் பல இருந்தாலும் முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவகாரியங்களில் இருந்து விடுபட மகாசிவராத்திரி அன்று நவலிங்க புர சிவாலயங்கள் சென்று சிவபெருமானைத் தரிப்பது சிறப்பான ஒன்றாகும். இந்த நவலிங்கபுர சிவாலயங்களைத் தரிசித்தால் இப்பிறவியில் நமக்கு நடப்பன எல்லாம் நம் எண்ணப்படியே நல்லனவாக நடக்கும். தடைகள் தகர்ந்து வெற்றிகரமாக முடியும்.
நவலிங்கபுரம் என்பது லிங்கங்களைப் பிரதானமாகக் கொண்ட ஒன்பது சிவாலயங்களின் தொகுப்பாகும். சிவராத்திரி அன்று இந்த நவலிங்கபுர ஒன்பது சிவாலயப் பயணங்களும் தூத்துக்குடி மாவட்டத்திலேயே தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்திலேயே முடியும் பெருமைக்கும் சிறப்புக்கும் உரியதாகும்.
- வல்லநாடு திருமூலநாதர் திருக்கோவில்
- கொங்கராயக்குறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோவில்
- தெற்கு காரசேரி குலசேகரமுடையார் திருக்கோவில்
- புதுக்குடி வடநக்கர் திருக்கோவில்
- வெள்ளுர் நடுநக்கர் திருக்கோவில்
- மழவராயநத்தம் தென்நக்கர் திருக்கோவில்
- காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர் திருக்கோவில்
- புறையூர் அயனாதீஸ்வரர் திருக்கோவில்
- காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் திருக்கோவில்
வல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் நவலிங்கபுர சிவாலயங்களில் தலைக்கோவிலாக உள்ளது. கொங்கராயகுரிச்சி அருள்மிகு வீரபாண்டீஸ்வரர், தெற்கு காரசேரி அருள்மிகு குலசேகரமுடையார், வெள்ளூர் அருள்மிகு நடுநக்கநாதர், புதுக்குடி அருள்மிகு வடநக்கநாதர், மழவராயநத்தம் அருள்மிகு தென்நக்க நாதர் காந்தீஸ்வரம் அருள்மிகு ஏகாந்தலீஸ்வரர், புறையூர் அருள்மிகு அயனாதீஸ்வரர், காயல்பட்டினம் அருள்மிகு மெய்கண்டேஸ்வரர் ஆகிய திருக்கோவில்களும் நவலிங்கபுர சிவாலங்கள் வரிசையில் அடங்கும்.
வல்லநாடு திருமூலநாதர் திருக்கோவில்
தொகுமகா சிவராத்திரி அன்று நவலிங்கபுர சிவாலயங்கள் சென்று இறைவனைத் தரிசனம் செய்வது, வாழ்வின் தடைகளைப் போக்கி, வண்ணமய வெளிச்சமாக்கி வசந்தம் வீசும் என்பது நிசம்தான் என்பதனை உணர்வோம். அதனால் நவலிங்கபுர சிவாலயங்களில் தலைக்கோவிலாக உள்ள வல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் இறைவனை முதலாவதாகத் தரிசித்து நவலிங்கபுர சிவராத்திரி தரிசனப் பயணத்தைத் தொடங்குவோம்.
இத்திருக்கோவில் திருநெல்வேலி – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் தாமிரபரணி நதிக்கரையில் பச்சைப்பசேல் எனப்பரந்து விரிந்த வயல்கள் சூழ்ந்த வளமான கிராமமான வல்லநாட்டில் அமைந்துள்ளது. வல்லநாடு பேருந்து நிலையத்தில் இருந்து கலியாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவில் கி.பி.1553-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். “சீமாறன் சீவல்லப வளநாடு” என்று அழைக்கப்பட்டு வந்த இவ்வூர் மருவி நாளடைவில் வல்லநாடு என்று கூறப்பட்டு வருகிறது. இவ்வூரில் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ள இறைவன் திருமூலநாதர் திருமேனிமீது ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21,22,23 தேதிகளில் சூரிய ஒளி பரவிப்பட்டொளிவீசும் காட்சி காணக் கண்கொள்ளாக்காட்சியாக இருப்பதைக் கண்டு சிவ பக்தர்கள் மெய் சிலிர்படைந்ததாகக் கூறுவர்.
இந்தத் திருக்கோவில் இறைவன் அருள்மிகு திருமூலநாதரைத் தரிசித்தால் மனப்பிணி நீங்கும் என்பது பக்தர்கள் மனம் நிறைந்த நம்பிக்கையாக உள்ளது. மேலும் இதய நோய் உள்ளவர்கள் இங்கு உள்ள ஈசன் அருள் வேண்டி நின்றால் இனிதே குணமாவதாக நம்பிக்கை உள்ளவர்கள் நற்சாட்சி சொல்லக் கேட்கலாம்.
கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர் திருக்கோவில்
தொகுதாமிரபரணி நதிக்கரையில் வெள்ளைப்பட்டுக் கம்பளம் விரித்தாற்போல் மணல்திட்டுகள் சூழ அமைந்துள்ள கிராமமான ‘கொங்கராயகுறிச்சி’ நவலிங்கபுரத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ள சிவத்தலமாகும். ஆதிச்ச நல்லூர் பூர்வ குடிமக்கள் இந்த ஊரைச் சாந்தவர்கள் என்றே கூறுவர்.
இவ்வூரில் எழுந்தருளியுள்ள மூலவர் அருள்மிகு வீரபாண்டீஸ்வரர், இத்திருக்கோவிலில் உள்ள சட்டநாதர் 64 பைரவர்களை ஒன்றாகக் கொண்டவர் ‘தென்சீர்காழி’ என்று அழைக்கப்படும் பெருமை கொங்கராயகுறிச்சியைச் சேரும். தேய்பிறை அஷ்டமி நாளில் இக்கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் அருள்மிகு சட்டநாதரை வணங்குவோரின் சங்கடங்கள் தீரும், சகலநலம் கூடும் என்று கூறுவர்.
வல்லநாடு - ஸ்ரீவைகுண்டம் சாலையில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது கொங்கராயகுறிச்சி. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து பேருந்து வசதி உண்டு. திருநெல்வேலி – திருச்செந்தூர் வழித்தடத்தில் கருங்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ மூலமாகப் பயணித்துக் கொங்கராயகுறிச்சி நவலிங்கபுரநாயகர் மற்றும் சட்டநாதரை சிவராத்திரி நாளில் தரிசிப்பவர் சீர்வளம் பெறுவர்.
தெற்கு காரசேரி குலசேகரமுடையார் திருக்கோவில்
தொகுதெற்குகாரசேரி அருள்மிகு குலசேகரமுடையார் திருக்கோவில் நவலிங்கபுரத்தின் மூன்றாவது தலமாக உள்ளது. குலசேகரப்பட்டினத்தைச் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் குலசேகரப்பாண்டியன். இம்மன்னன் குலசேகரப்பட்டினம் தொடங்கி திருவாங்கூர்முடிய ஒன்பது சிவாலயங்களைக் கட்டியதாகக் கூறுவர். குலசேகர பாண்டியன் கட்டிய ஒன்பது சிவலாய வரிசையில் “தெற்குகாரசேரி அருள்மிகு குலசேகரமுடையாரைத் தரிசித்துப் போர்களில் குலசேகரப்பாண்டியன் வெற்றிவாகை சூடியதாக வரலாறு கூறும். இவ்வாறு தெற்கு காரசேரி அருள்மிகு குலசேகரமுடையாரை மகாசிவராத்திரி நன்னாளில் மனம் குளிரத்தரிசிப்பவர் வாழ்வில் தொட்டதெல்லாம் துலங்கும். துன்பமெல்லாம் விலகும். தொடர்ந்து பல வெற்றிகளும் சூழும்.
புதுக்குடி வடநக்கர், வெள்ளூர் நடுநக்கர் திருக்கோவில்
தொகுபழம்பெரும் சிறப்பினைப் பறைசாற்றும் பாங்கான ஊர் வெள்ளூர். ஸ்ரீவைகுண்டம் அருகில் அமைந்துள்ள சிறப்பான இவ்வூரில் பசுமைபடர்ந்த வயல்வெளிகளுக்கு இடையே பொங்கும் புனல்சூழ் சுனைநீர் ததும்பும் தெப்பக்குளத்தின் பின்பக்கம் தேர்ச்சி மிகுந்த கலைவண்ணச்சிலைகளுடன் காட்சிதரும் சிவன்கோவில் கற்பனைக்கு எட்டாத அற்புதம். செந்தூர் அழகன், செவ்வேள் முருகன் வெள்ளூர் நடுநக்கர் எனும் சிவபெருமானை பூஜை செய்து வழிபட்ட காரணத்தால் “வேல் ஊர்” என்பது வெள்ளூர் என மருவி அழைக்கப்படுவதாகக் கூறுவர்.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள வெள்ளூர் நடுநக்கர் ஆலயமும் நவலிங்கபுரத் திருத்தலங்களில் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
இரண்டு சிவநெறிச் செல்வர்களுக்கிடையில் ஏற்பட்ட வழக்கில் துறவி வேடத்தில் வந்து ஈசன் இனிய தீர்ப்பு வழங்கிய காரணத்தால் வெள்ளூர் இறைவன் ‘மத்தியபதீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இதற்கிணையான தமிழ்சொல்லில் “நடுநக்கர்” என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார் வெள்ளூர் வேந்தர் ‘மத்தியபதீஸ்பரர்’.
இத்தலத்திற்கு வடக்கே உள்ள புதுக்குடியில் எழுந்தருளி இருப்பவர் வடநக்கர் என வழங்கப்படுகிறார். புதுக்குடி வடநக்கர் ஆலயம் சிதைவுண்ட காரணத்தால் வெள்ளூர் நடுநக்கர் ஆலய இடதுபுறத்தில் வடநக்கர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடும் பக்கதர்களுக்கு அருள் ஆசி வழங்கி வருகிறார். சிவராத்திரிநாளில் நவலிங்கபுர தரிசனம் காணவருவோர் வெள்ளூரில் அமைந்துள்ள இந்த சிவாலய இறைவனை வணங்கிச் சென்றால் வடநக்கர், நடுநக்கர் என்ற இரண்டு சிவபெருமானின் அருள்கிட்ட சிந்தைகுளிரும், வாழ்வில் சிறப்புகள் மிளிரும்.
வடநக்கர், நடுநக்கரைக் காணவரும் பக்தர்கள் திருநெல்வேலி – திருச்செந்தூர் பேருந்து வழித்தடத்தில் உள்ள புதுக்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ. பயண தூரத்தில் வெள்ளூர் சென்று தரிசிக்கலாம்.
மழவராயநத்தம் தென்நக்கர் திருக்கோவில்
தொகுநடுநக்கர் தலத்திற்குத் தெற்கே உள்ள மழவராய நத்தத்தில் அருள் பாலிப்பவர் அருள்மிகு தென்நக்கர் இத்திருத்தலம் ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்திருநகரிக்கு இடையே அமைந்துள்ளது. நவலிங்கபுர நாயகர்களில் ஒருவரான தென் நக்கரின் தரிசனத்திற்கு ஆழ்வார்திருநகரி கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோவில் பயணிக்கலாம்.
காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர் திருக்கோவில்
தொகுதாமிரபரணி ஆற்றங்கரையில் வானுயர்ந்த கோபுரத்துடன் காண்போரைக் கவரும் வண்ணத்தில் காட்சியளிக்கும் காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர் சுவாமி திருக்கோவில் நாம் கண்டு தரிசித்து மகிழும் நவலிங்கபுரத்தலமாகும் “காசியிலும் சிறந்ததலம் காந்தீஸ்வரம்” என்பது சித்தர் பெருமக்களின் சீரியவாக்கு. கருவூர் சித்தருக்கு மோட்சம் தந்தவர் அருட்கருணை வள்ளல் காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர் என்பர். திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலை வழித்தடத்தில் ஆழ்வார்திருநகரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆற்றைக் கடந்து அக்கரை சென்றால் ஆழ்வார் தோப்பு எனும் அற்புத கிராமத்தில் எழுந்தருளி அருளாசி வழங்கும் ஏகாந்தலீஸ்வரர் சுவாமி தரிசனம் காணலாம்.
புறையூர் அயனாதீஸ்வரர் திருக்கோவில்
தொகுஅடுத்த நவலிங்கபுரமாகத் திருநெல்வேலி திருச்செந்தூர் வழித்தடத்தில் அமைந்துள்ள புண்ணிய கிராமம் புறையூர் இவ்வூரில் இனிதாக எழுந்தருளியுள்ள அருள்மிகு அயனாதீஸ்வரரின் அருந்தாள் பணிந்து அவனருள் பெறுவோம்.
காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் திருக்கோவில்
தொகுஇம்மைக்கும், மறுமைக்கும் இனியனவே அமைய நதிக்கரையில் தொடங்கிக் கடற்கரையில் நிறைவு பெறும் வண்ணம் அமைந்துள்ள நவலிங்கபுரத்தின் இறுதித்தலமான காயல்பட்டினத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் முன் மெய்பணிந்தார் மேன்மைபெற, அருளாசிகிட்டும். இதனால் மெய்கண்டேஸ்வரன் தாள் பணிந்து நம் சிந்தையில் நிறைந்த சிவராத்திரி தரிசனத்தைச் சிறப்பாக்குவோம்.
மகாசிவராத்திரி நாளில் இறையன்பர்களாகிய நாம் நவகிரங்கள் ஆட்சி செய்யும் நவகைலாய தரிசனம் செய்வதோடு நமது கர்மா அல்லது கர்மவினை வேரறுக்கும் முழுமுதற் கடவுளாம் எம்பெருமானார் சிவபெருமான் கொலுவீற்றிருக்கும் “நவலிங்கபுர ஈசனையும்” வழிபட்டுத் தரிசித்து இணையிலா வளமும் ஈடிலா நலமும் பெற்று வாழ்வோமாக!.
மெய்யன்பர்களே! வல்லநாடு நதிக்கரையில் சிவராத்திரி அன்று நலிங்கபுர சிவாலயப் பயணத்தைத் தொடங்கிப் பரணி நதி சங்கமிக்கும் (காயல்) பட்டினக் கடற்கரையின் நவலிங்கபுரத்தில் நிறைவு செய்வோம்! நீடுழி வாழ்வோம்! நிமலன் அருள் பெறுவோம்.