நாச்சிமார்கோயிலடி இராஜன்

(நாச்சிமார் கோயிலடி இராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாச்சிமார்கோயிலடி இராஜன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்து வில்லிசைக் கலைஞர் ஆவார். புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

நாச்சிமார்கோயிலடி இராஜன்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

இவர் இலங்கையின் யாழ்ப்பாணம், நாச்சிமார்கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் தற்சமயம் ஜேர்மனியில் பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார். பாடசாலையில் பயின்ற காலத்திலேயே இவரது கலை ஆர்வம் வெளிப்பட்டது.

கலையுலக வாழ்வு

தொகு

இவர் வில்லிசைகளில் வல்லவர். வில்லிசை நிகழ்ச்சிகளை 1968 இல் ஆரம்பித்து நடாத்தி வருகிறார். 1972 இலிருந்து "நாச்சிமார்கோயிலடி இராஜன் வில்லிசைக் குழுவை" நடாத்தி வருகின்றார். 1993இல் ஜெர்மனியின் றெயினை ஜெர்மன் தமிழ்ச் சங்கத்தின் வாணி விழாவில் பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமனால் "ஈழவில்லிசைச் செம்மல்" என்ற பட்டத்தைப் பெற்றார். 1996இல் கனடாவில் நிகழ்ந்த உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் அதன் தலைவர் வீரப்பனால் "வில்லிசைக் காவலர் " என்ற பட்டத்தைப் பெற்றார். ரீ.ரீ.என் தொலைக்காட்சியில் இவரது பல வில்லிசைகள் ஒளிபரப்பாகின.

நாடகத் துறை

தொகு

நாடகத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. ஜெர்மனியில் 1993, 1994, 1995, 1998 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் நடைபெற்ற நாடகப் போட்டிகளில் நான்கு முறைகளும் முதற்பரிசுகளைப் பெற்றுள்ளார். பிறேமன் தமிழ் கலை மன்றத்திற்காக பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். மூன்று தடவைகள் சிறந்த இயக்குனருக்கான தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தங்கப்பதக்கம்

1994 இல் இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றம் நடாத்திய நாடகப் போட்டியில் "எதிர்பார்ப்புகள்" நாடகம் இவரது இயக்கத்தில் முதற் பரிசு பெற்றது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவுசெய்யப்பட்டு இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றத்தால் இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.


1995 இல் இராட்டிங்கனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் "நீர்க்கோலம்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவானது. நீர்க்கோலம் சிறந்த நாடக பிரதியாக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், அந்த நாடகத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், சான்றிதழும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் வழங்கப்பட்டது.


1998 இல் எசன் நகரில் ஈழமுரசு பத்திரிகை நடாத்திய நாடகப் போட்டியில் "சுமைகள்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு ஈழமுரசு பத்திரிகையால் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது

திரைப்படத்துறை

தொகு

புகலிட திரைப்படத்துறையிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. நினைவுமுகம் திரைப்படத்திற்கு திரைக்கதை, உரையாடல் எழுதி இணை இயக்கம், தயாரிப்பு ஆகியற்றில் தடம் பதித்துள்ளார். தொடர்ந்து ஏ.ரகுநாதனின் தயாரிப்பில் பாரிசிலிருந்து தயாரிக்கப்பட்ட தயவுடன் வழிவிடுங்கள் படத்திலும் நடித்துள்ளார். யாரிவர்கள், பொறி, இப்படியுமா? ஆகிய குறும்படங்களை எழுதி இயக்கியுள்ளார். தற்போது இலண்டனில் தயாராகி வரும் ஈழவர் திரைக் கலை மன்றத்தின் நீர்க்கோலம் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். பாரிசிலிருந்து தயாரிக்கப்படும் ஈழத்தவரின் முதல் திரைத் தொடர் நேசங்களுக்காக திரைக்கதை, உரையாடலில் பங்கெடுத்து வருகின்றார்.

வெளிவந்த நூல்கள்

தொகு
  • எதிர்பார்ப்புகள் நாடக நூல்