யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம்

யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் அல்லது வைத்தீஸ்வராக் கல்லூரி எனப்படும் இப் பாடசாலை 1913 ஆம் ஆண்டில் நாகமுத்து என்னும் சமூகப் பற்றாளர் ஒருவரால் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இது இராமகிருஷ்ண மிஷனின் முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அக்காலத்தில், விபுலானந்த அடிகள் போன்றவர்களின் மேலாண்மையின் கீழ் இயங்கிய பெருமை இப் பாடசாலைக்கு உண்டு. பிரித்தானியர் ஆட்சியின் கீழ், பாடசாலைகளைத் துவங்கி நடத்திவந்த கிறிஸ்தவ மிஷன்கள், தங்கள் மதத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவந்த ஒரு காலகட்டத்தில், யாழ்ப்பாணத்தவரின் சொந்தப் பண்பாடுகளைத் தழுவிய கல்வித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பாடசாலைகளில் இதுவும் ஒன்று. இது ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி புகட்டுகின்ற ஒரு கலவன் பாடசாலை ஆகும். இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் இலங்கை கல்வித் திணைக்களத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

வைத்தீஸ்வர வித்தியாலயத்தின் முன்புறத் தோற்றம்

அமைவிடம்

தொகு
 
வைத்தீஸ்வர வித்தியாலயம், முதன்மை வாயிலின் அண்மைத் தோற்றம்

யாழ்ப்பாண நகரத்திலுள்ள வண்ணார்பண்ணைப் பகுதியில் இருக்கும் சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள சிவன் கோயில் வடக்கு வீதியில் இது அமைந்துள்ளது. யாழ் மாவட்டத்தின் முக்கிய சாலையான காங்கேசந்துறை வீதிக்கு மிகவும் அண்மையில் உள்ளதால் இவ்விடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்திலிருந்து இங்கு வந்து செல்வதற்கு வசதியாக உள்ளது. இதனால், அயலிலுள்ளவர்கள் மட்டுமன்றி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கே கல்வி கற்கின்றனர். இப் பாடசாலை பெருமளவில் இந்துக்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்த போதும், சோனக தெரு என அழைக்கப்படுகின்ற, முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிக்கும் அண்மையில் இருப்பதால். இராமகிருஷ்ண மடத்தின் மேலாண்மையின் கீழ் இருந்த காலத்திலேயே இப் பாடசாலையில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மாணவர்களும் கல்வி பயின்றனர். ஆறுமுக நாவலரால் தொடங்கப்பட்ட நாவலர் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பனவும் இப் பாடசாலைக்கு அண்மையிலேயே அமைந்திருக்கின்றன.

கல்லூரிப் பாடல்

தொகு

இராமகிருஷ்ண மடத்தின் கீழ் இயங்கிய காலத்தில் இப்பாடசாலையின் கல்லூரிப் பாடல் இயற்றப்பட்டது. இதனால் இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கொள்கைகளை முன்னெடுக்கும் இதன் நோக்கம் இப் பாடலில் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். அத்துடன் இப் பாடசாலையைத் தொடக்கிய நாகமுத்து, இதன் வளர்ச்சிக் கட்டங்களில் முக்கிய பணியாற்றிய சுவாமி சர்வானந்தர், சுவாமி விபுலானந்தர் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அண்மையில் உள்ள சிவன் கோயிலின் இறைவனான வைத்தீஸ்வரப் பெருமானின் அருள் வேண்டி இப்பாடல் நிறைவெய்துகிறது.

பாடல் வரிகள்

தொகு
வீறுகொண்ட விவேகானந்த வேதஞான களஞ்சியத்தைப்
பேறுகொண்ட ராமகிருஷ்ண பேரருட்செல் வத்துடனே
சாறுகொண்டு பார்முழுதும் தானஞ்செய்து வேறுளகைம்
மாறுகொள்ளா வைத்தீஸ்வராக் கல்லூரி வாழியவே.


சாதிமத பேதமற்ற சமரசசன் மார்க்கநெறி
மேதினியில் கால்கொளவே மெச்சுகாவி பச்சைநீலம்
நீதிவளர் மூவர்ண நீள்கொடியும் குண்டெலியென்
றாதியுள இலாஞ்சனையும் அடிகளாரும் வாழியவே.


நன்னெறியோர் ஏத்துகின்ற நாகமுத்து செய்தவமும்
தன்னடிசேர் சர்வானந்தர் விபுலானந்தர் இதயபூர்வப்
பொன்னருளும் கல்லூரி பொலிவெய்த முதல்வருடன்
இன்றருளும் வைத்தீஸ்வரன் இருங்கருணை வாழியவே.

இவற்றையும் பார்க்கவும்

தொகு