நாடகப் பிராகிருதம்
நாடகப் பிராகிருதங்கள் என்பன நடுக்கால இந்தியாவில் நாடகங்கள் மற்றும் ஏனைய இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பிராகிருத வட்டார வழக்குகளின் தரப்படுத்தப்பட்ட வடிவங்களாகும். இவை முன்பொரு காலத்தில் பேசப்பட்ட மொழிகளாகவோ அல்லது பேச்சுமொழியின் அடிப்படையில் உருவான மொழிகளாகவோ இருக்கக்கூடும். எனினும், இவை பேச்சு வழக்கிலிருந்து ஒழிந்த பின்னரும் நீண்ட காலமாகத் தொடர்ந்து இலக்கிய மொழிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.[1] இந்தோ-ஆரிய மொழிகளின் வளர்ச்சி பற்றிய ஆய்வுக்கு நாடகப் பிராகிருதங்கள் இன்றியமையாதனவாகும். நாடகங்கள் மற்றும் இலக்கியங்களில் இவற்றின் பயன்பாட்டின்போது சமசுகிருத மொழிபெயர்ப்பும் இணைந்து காணப்படுவதே இதற்கான காரணமாகும்.[2]
வட்டார வழக்குகள்
தொகு"நாடகப் பிராகிருதங்கள்" எனும் சொற்றொடர் இவற்றுள் முதன்மையான சௌரசேனி, மாகதி மற்றும் மகாராட்டிரிப் பிராகிருத மொழிகளைக் குறிக்கும். எனினும், குறைவான பயன்பாட்டிலிருந்த பல்வேறு பிராகிருதங்களும் இவற்றில் உள்ளடங்குகின்றன. இவற்றுள் பிராச்சியம், பாலிக்கி, தட்சிணாத்தியம், சகரி, சந்தாலி, சபரி, ஆபீரி, திரமிளி மற்றும் ஒட்டரி போன்றன குறிப்பிடத்தக்கன. நாடகங்களில் இவ்வாறான பிராகிருதங்களைப் பயன்படுத்துவதில் வியக்கத்தக்களவு இறுக்கமான கட்டமைப்புக்கள் இருந்தன. தமது பங்கு மற்றும் பின்புலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கதைமாந்தரும் வெவ்வேறு பிராகிருத மொழிகளைப் பேசினர். எடுத்துக்காட்டாக, திரமிளி மொழி "காட்டுவாசிகளின்" மொழியாகும். "கதாநாயகியும் அவரது தோழியரும்" சௌரசேனி மொழியைப் பேசினர். "ஏமாற்றுவோரும் போக்கிரிகளும்" அவந்தியில் உரையாடினர்.[3] புரிந்துகொள்ளப்படும் அளவில் பிராகிருத மொழிகள் மாறுபட்டிருந்தன. சௌரசேனி மொழி, செஞ் சமசுகிருதத்தைப் பெரும்பாலும் ஒத்திருந்ததோடு,[4] மாகதிப் பிராகிருதம் செவ்வியல் பாளி மொழியைப் பெரிதும் ஒத்திருந்தது.
தற்கால மராத்தியின் மூல மொழியான மகாராட்டிரி மொழி தனித்துவமானதாகும். மகாராட்டிரி பெரும்பாலும் பாக்கள் இயற்றுவதற்குப் பயன்பட்டது. இதனால் மகாராட்டிரி இலக்கணம், பாவகைகளின் வெவ்வேறு வடிவங்களின் அமைப்புக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் விதத்தில், நேரியல் சமசுகிருத இலக்கணத்திலிருந்து விலகியுள்ளது. இப்புதிய இலக்கண மரபின் விளைவால் உயிரெழுத்து ஒலிப்பு நீளங்களில் தனித்துவமிக்க நெகிழ்வுப் போக்குகள் போன்ற இயல்புப் பிறழ்வுகள் மராத்தி மொழியில் காணப்படுகின்றன.[5]
மூன்று முதன்மையான நாடகப் பிராகிருதங்களும் அவற்றின் சில வழிமொழிகளும்:
- மகாராட்டிரி
- மகாராட்டிரி பண்டைய இந்தியாவின் தென்மேற்குப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டது. இது பின்னர், மராத்தி மற்றும் கொங்கணி ஆகியவற்றை உள்ளடக்கிய தெற்கு இந்தோ-ஆரிய மொழிகளாக உருப்பெற்றது.
- சௌரசேனி
- இந்தியாவின் நடு வடக்குப் பகுதிகளில் சௌரசேனி பயன்படுத்தப்பட்டது. இது பின்னர், இந்துசுத்தானி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட இந்தி மொழிகளாக உருப்பெற்றது.
- மாகதி
- மாகதி கிழக்கு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. இது பின்னர், சியால்கெட்டி, வங்காளி, அசாமிய மொழி, ஒடியா மற்றும் பிகாரி மொழிகள் (போச்புரி, மாககி, மைதிலி) ஆகிய மொழிகளை உள்ளடக்கிய கிழக்கு இந்தோ-ஆரிய மொழிகளாக உருப்பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- Woolner, Alfred C. Introduction to Prakrit. Delhi: Motilal Banarsidass, India, 1999.
- Banerjee, Satya Ranjan. The Eastern School of Prakrit Grammarians : a linguistic study. Calcutta: Vidyasagar Pustak Mandir, 1977.
குறிப்புகள்
தொகு- ↑ "Sanskrit". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 24. (1911). Cambridge University Press. “"As regards these dialectic varieties..."”
- ↑ Woolner, pg. v.
- ↑ Banerjee, pg. 19-21
- ↑ https://archive.org/details/introductiontopr00woolrich
- ↑ Deshpande, pg. 36-37