நா. க. பத்மநாதன்


என். கே. பத்மநாதன் (1931 - ஜூலை 15, 2003, அளவெட்டி, யாழ்ப்பாணம்) ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக ஈழத்தின் நாதசுர இசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சியவர்.

என். கே. பத்மநாதன்
அளவெட்டி என். கே. பத்மநாதன்
பிறப்பு 1931
அளவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு ஜூலை 15, 2003
இலங்கை
பணி நாதசுர இசைக்கலைஞர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பத்மநாதனின் தந்தையார் நா. கந்தசாமி அக்காலத்தில் புகழ் பெற்ற நாதசுவரக் கலைஞர். அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலையில் கல்வி கற்ற அதே வேளையில் தனது ஏழாவது வயதிலேயே தனது தந்தையைக் குருவாக ஏற்று இசைப் பயிற்சியில் ஈடுபட்டார்.

இசைப் பயிற்சி

தொகு

இவர் முதலில் இவரது தகப்பனார் தொடக்கம் அக்காலத்தில் பிரபல தவில் வித்துவானாக விளங்கிய வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, முல்லைவாசல் முத்துவேற் பிள்ளை முதலானோருக்கும், ஈழத்தில் எஸ். எஸ். அப்புலிங்கம் பிள்ளை, பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை முதலான வித்துவான்களுக்கும் தாளக் காரனாக இருந்து தமது லயவளத்தையும் இசை அறிவையும் பெருக்கிக் கொண்டார்.

நாதசுரப் பயிற்சி

தொகு

தமது தகப்பனாரிடம் 14 வயது வரை நாதஸ்வரம் பயின்ற பின்னர் நாதஸ்வர வித்துவான் பி. எஸ். ஆறுமுகம் பிள்ளையின் தமையனாரான பி. எஸ். கந்தசுவாமிப் பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றார். தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த நாதஸ்வர மேதைகளான சீர்காழி பி. எம். திருநாவுக்கரசு பிள்ளையிடமும் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி பிள்ளையிடமும் நாதஸ்வரக் கலையின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

நாதஸ்வர கச்சேரிகள்

தொகு

இவர் தமது பதினெட்டாவது வயதில் தனது மாமனாரான அளவெட்டி கே. கணேசபிள்ளையின் குழுவில் இணைந்து கொண்டார். இக்குழுவில் கணேசபிள்ளையும் வி. தெட்சணாமூர்த்தியும் தவில் வாசித்தனர். பத்மநாதன் தனது குருவான திருநாவுக்கரசுவுடன் இணைந்து நாதசுவரம் வாசித்தார். அக்காலத்தில் பிரபல நாதஸ்வர வித்துவான் அம்பல் இராமச்சந்திரனுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்தார்.

தமது இருபத்தைந்தாவது வயதில் தனியாக ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டார். அக்குழுவில் தெட்சணாமூர்த்தியும், பத்மநாதனின் மைத்துனரான பி. எஸ். சாரங்கபாணியும் தவில் வாசித்தார்கள். பத்மநாதனுடன் பி. எஸ். பாலகிருஷ்ணன் நாதஸ்வரம் வாசித்தார்.

பத்மநாதனுடன் சுமார் பத்து வருடங்கள் இணைந்து நாதஸ்வரம் வாசித்தவர் எம். பி. பாலகிருஷ்ணன். அதேபோன்று ஆர். கேதீஸ்வரனும் சுமார் 20 வருடங்கள் இவருடன் நாதஸ்வரம் வாசித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஏறத்தாழ 40 வருடங்களாக ஆஸ்தான வித்துவானாக இருந்திருக்கிறார். திருவிழாக்கள் நடைபெறுகின்ற 25 நாளும் அவரது நாதஸ்வரக் கச்சேரியினைப் பார்ப்பதற்கென்று பெருங்கூட்டம் கூடும்.

விருதுகள்

தொகு
  • 1964 இல் பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் சைவப் பெரியாருமான சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களால் நாதஸ்வரக் கலாநிதி பட்டம் சூட்டப்பட்டார்.
  • 1979 இல் மதுரையில் நாதஸ்வர மேதை பொன்னுச்சாமிப் பிள்ளையின் நூற்றாண்டு விழாவில் இவரது நாதஸ்வர இசைக் கச்சேரியில் எம். பி. எம். சேதுராமனால் கௌரவிக்கப்பட்டார்.
  • 1982 இல் கலாசூரி விருது இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்களால் வழங்கப்பட்டது.
  • 1999 இல் வட-கிழக்கு மாகாண ஆளுனரின் விருது வழங்கப்பட்டது.
  • 2003 இல் இவரது மறைவின் பின்பு யாழ் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._க._பத்மநாதன்&oldid=2172064" இலிருந்து மீள்விக்கப்பட்டது