நிகாங் (Nihang,பஞ்சாபி மொழி: ਨਿਹੰਗ, நிஹாங்) ஆயுதமேந்திய சீக்கிய ஒழுங்காகும்.[1] இவர்கள் அகாலி (நேரடிப் பொருள்: "காலத்தை வென்றவர்கள்") என்றும் குறிப்பிடப்படுகின்றார்கள். நிகாங் குழுவினர் ஃபதேசிங்கின் வழியைப் பின்பற்றியவர்கள், அவரணிந்த உடைகளைப் போன்றே உடுத்துகின்றனர் என்று சிலரும்[2] குரு அர்கோவிந்த் உருவாக்கிய "அகால் சேனை"யிலிருந்து (நேரடிப் பொருள்: அழிவற்றவர்களின் படை) வந்தவர்கள் என்று சிலரும்[3] கருதுகின்றனர். துவக்க கால சீக்கிய இராணுவ வரலாற்றில் நிகாங்கினர் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது; தங்களைவிட எண்ணிக்கையில் கூடிய எதிரிகளையும் வெற்றி பெற்றதற்காக அறியப்படுகின்றனர். போர்க்களங்களில் இவர்களது வீரமும் தயவின்மையும் பெரிதும் புகழப்படுகின்றது. ரஞ்சித் சிங்கின் கரந்தடிப் போர் அணிகள் நிகாங்குகளை வைத்தே உருவாக்கப்பட்டது.

1860களில் சிறப்பியல்பான விரிவான தலைப்பாகையுடன் நிகாங் ஒருவர்

ஆயுதங்களும் ஆடைகளும்

தொகு
 
அனந்த்பூரில் நிகாங் ஒருவர்.

வழமையாக நிகாங் ஆடை சிவ சுவரூபா எனப்படுகின்றது: இதன் பொருள் "சிவனின் தோற்றம்" என்பதாகும். சிவனின் தோல்நிறத்தை ஒட்டி மின்சார நீலத்தில் ஆடை அணிந்துள்ளனர்;[4] மணிக்கட்டுகளில் இரும்பு வளையல் அணிந்துள்ளனர் (சங்கி கரா); உயரமான கூம்புவடிவ தலைப்பாகைகளில் இரும்பு வளையங்கள் (சக்கரம்) வரிசையாக உள்ளன; அனைவரும் மரபார்ந்த வாளையும் (கீர்ப்பன்) வைத்துள்ளனர்.[5] முழுமையாக ஆயுதமேந்திய நிலையில் வலது இடையில் வளைந்த தல்வாரையோ நேரான கண்டாவையோ வைத்திருப்பர்; இடது இடையில் கட்டார் எனப்படும் வாளை வைத்திருப்பர்; எருமைத் தோலாலான கேடயத்தை (தாலா) முதுகிலும், பெரிய சக்கரத்தையும் இரும்புச் சங்கிலியையும் கழுத்திலும் கொண்டிருப்பர். போர்க்காலங்களில் நிகாங்கின் உடலில் இருக்கும் இவை அவர் வைத்திருக்கும் ஆயுதத்தை இழக்கும்வரை நீக்கப்படாது. உதைக்கும்போது காயமேற்படுத்துவதற்காக காலணிகளின் கால்விரல் பகுதி இரும்பினால் கூர்மையாக இருக்கும்.

இவர்களது உயரமான தலைப்பாகைகளாலும் தனிப்பட்ட போர் வளையங்களாலும் பெரிதும் அறியப்படுகின்றனர். அவர்களது தலைப்பாகைகள் உச்சியில் கூர்மையாக இருக்கும். இங்கு திரிசூலம் செருகப்பட்டிருக்கும். இதன்மூலம் அருகில் வந்த எதிரியை குத்த முடியும். இன்றும், நிகாங் ஐந்து ஆயுதங்களின் --சக்கரம், கண்டா (வாள்), கருடு (கத்தி), கீர்ப்பன், தீர் (அம்பு) -- சிறுநகல்களை தங்கள் தலைப்பாகைகளில் அணிகின்றனர்.

மேற்சான்றுகள்

தொகு
  1. Brard, Gurnam (2007). East of Indus: My Memories of Old Punjab. Hemkunt Press. p. 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170103608.
  2. Surjit, Gandhi (2007). History of Sikh Gurus Retold: 1606-1708 C.E, Volume 2 of History of Sikh Gurus Retold. Atlantic Publishers & Distributors. p. 999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126908585.
  3. Singh, Khushwant (1999). A History of the Sikhs Volume I:1469-1839. India: Oxford University Press. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-562643-5.
  4. Collins, Larry; Lapierre, Dominique (1997). Freedom at Midnight. India: Vikas Publishing House Pvt. Ltd. p. 393. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-259-0480-8.
  5. Mayled, Jon (2002). Sikhism. Heinemann. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780435336271.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகாங்&oldid=3632939" இலிருந்து மீள்விக்கப்பட்டது