நிகாப் (அரபு மொழி: نِقاب‎) என்பது சில இசுலாமிய பெண்கள் அணியும் முகத்திரைகளில் ஒன்றாகும். பெரும்பான்மையான இசுலாமிய மதபோதகர்கள் இசுலாம் சமயத்தில் முகத்திரைக் கட்டாயப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கின்ற போதிலும் சில மதபோதகர்கள் குறிப்பாக சலாபிய நெறியைப் பின்பற்றுபவர்கள் பெண்கள் பொது இடங்களில் முகத்திரை கண்டிப்பாக அணிய வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்கள். முகத்திரை அணியும் இசுலாமியப் பெண்கள் தங்கள் உறவினரல்லாத வேற்று ஆடவரைச் சந்திக்கும் தருணங்களில் அல்லது பொது இடங்களில் இதை அணிகின்றனர்.

Woman wearing a niqab with baby
சிரியாவில் நிகாப் முகத்திரை அணிந்த ஒரு பெண்

முகத்திரை அணியும் வழக்கம் இசுலாமியத் தோற்றத்தின் முன்பே அரபு கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்பட்டது. கலாச்சாரப்படி சவுதி அராபியாவின் நஜித் எனும் இடத்திலிருந்து பரவிய முகத்திரைக் கலாச்சாரம் சலாபிய அடிப்படைவாதத்தின் மூலம் பல இசுலாமிய நாடுகளில் பரவியது.[1]

இன்று நிகாப் முகத்திரை அராபியத் தீபகற்பத்திலுள்ள அராபிய நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அராபிய நாடுகளல்லாத இசுலாமிய நாடுகளிலும் இக்கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி வருகிறது. சோமாலியா, சிரியா, பாக்கித்தான், வங்காளதேசம் போன்ற இசுலாமிய நாடுகளில் சிறு அளவிலான இசுலாமியர்கள் நிகாப் முகத்திரை அணிகின்றனர். மேலும் இசுலாமிய சிறுபான்மையைக் கொண்ட இந்தியா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றிலும் நிகாப் முகத்திரை அணியப்படுகிறது.

நிகாப் எனும் சொல்லும் புர்கா எனும் உடையின் சொல்லும் சில இடங்களில் ஒரே அர்த்தத்தை கொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. எனினும் நிகாபில் கண்கள் தவிர முகத்தின் ஏனைய பகுதிகள் மூடப்படுகிறது. புர்காவிலோ தலை முதல் கால் வரை உடல் முழுமையாக மூடப்பட்டு வலை போன்ற திரையினூடாக மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுகிறது.

இஸ்லாம் சமயத்தில் முகத்திரை தொகு

பல இசுலாமிய அறிஞர்கள்[2][3] பெண்கள் முகத்திரை அணிவது இசுலாமிய சமயத்தில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்கின்றனர். எனினும் சில சலாபிய அறிஞர்கள் முகத்திரை அணிவது தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டிய இசுலாமிய கடமை எனக் கூறுகின்றனர்.[4][5]

குற்றச்சாட்டுகளும் தடைகளும் தொகு

நிகாப் முகத்திரை அணிதல் ஐரோப்பிய நாடுகளில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான விடயமாக உள்ளது. முக்கியமாக பிரான்சில் இது பெரும் விவாதத்துக்கிடமான தடையாக உள்ளது. பிரான்சில் குறிப்பாக நிகாப் முகத்திரை என்றில்லாமல் சகல மத (கிறித்தவம், யூதம், இசுலாமியம் மற்றும் ஏனைய மதங்கள்) அடையாளங்களும் பொது இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளன.

2004ம் ஆண்டில் பிரான்சிய நாடாளுமன்றத்தில் மத சின்னங்களைப் பொது கல்வி கூடங்களில் அணிவதைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் பிரான்சின் அனைத்து கல்வி நிலையங்களிலும் மதத்தை வெளிப்படையாக பறைசாற்றும் விதத்தில் மத சின்னங்கள் அணிவதை தடை செய்தது. பிரான்சிய கல்விக் கூடங்களில் கல்வி பயிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசுலாமியரல்லாத பிறர் முக்காடு அணிவதன் காரணம் அறியாமை மற்றும் அசௌகரியமாக உணர்ந்த காரணங்களாலும் அதனால் நிகழ்ந்த தகராறுகளினாலும் பிரான்சில் மத சார்பற்ற நடுநிலைமையைப் பேணும் ஸ்டேசி ஆணைக்குழு இச்சட்டத்தை பரிந்துரைத்தது.

 
கலிஃபோர்னியா , மாண்டெரிவில் நிக்காப் அணிந்த ஒரு பெண்

பிரான்சில் இயற்றப்பட்ட மத சின்னத் தடைச் சட்ட்ம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாகவிருந்தாலும் அச்சட்டம் இசுலாமியர்கள் மேல் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே பல சர்வதேச விவாதங்கள் நடந்தன. காரணம் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரன்சில் அதிகரித்து வரும் இசுலாமிய சனத்தொகை அதிகரிப்பாகும்.

2010 ஜூலை மாதத்தில் பிரான்சின் சட்டப் பேரவை பொது இடங்களில் முகத்திரை அணிவதற்கான தடை சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் பொது இடங்களில் முகத்திரை அணிய முற்றாகத் தடை விதிக்கப்பட்டது.[6] சட்டத்தை மீறுபவர்களுக்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.[7] மேலும் எவராயினும் பெண்களைக் கட்டாயப்படுத்தி முகத்திரை அணியச் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டணையும் 60,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படுகிறது.

பிரான்சின் அப்போதைய அதிபர் நிக்கோலா சர்கோசி ''புர்க்கா உடை பிரான்சில் வரவேற்கப்பட மாட்டாது ஏனென்றால் அது பெண்களின் கண்ணியத்தைப் பற்றி நாங்கள் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும் விழுமியங்களுக்கும் எதிரானது.'' என வெளிப்படையாகத் தெரிவித்தார். மேலும் சர்கோசி இச்சட்டம் இசுலாமியர்களை பிரான்சிய சமுதாயத்தில் இணைப்பதோடு பெண்களுக்கு சம உரிமையும் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.[8]

அக்டோபர் 2008ல் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் இத்தடை பற்றி குறிப்பிடும் போது பிரான்சின் தடை பெண்களின் மத உரிமைகளில் தலையிடுகிறது என்றும் பெண்கள் வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடக்கும் வழிவகைகளை இச்சட்டம் ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டது.[9]

பாணிகள் தொகு

 
நிகாப் முகத்திரை அணிந்த ஒரு யேமானியப் பெண்

உலகெங்கிலும் பல்வேறு பாணியில் நிகாப் மற்றும் ஏனைய முகத்திரைகள் இசுலாமியப் பெண்களால் அணியப்படுகின்றன. அவற்றில் அதிகமாக அரை நிகாப் முகத்திரை மற்றும் முழு நிகாப் முகத்திரை ஆகியன அணியப்படுகின்றது.

அரை நிகாப் முகத்திரை எளிய துணியினாலான மீள் திறன் கொண்ட பட்டை அல்லது நாடாக் கொண்டிருக்கும். இது முகத்தைச் சுற்றி அணியப்படுகிறது. பொதுவாக இவ்வரை நிகாப் கண்கள் மற்றும் நெற்றியின் ஒரு பகுதி தெரியும் வகையில் தைக்கப்பட்டிருக்கிறது.

முழு நிகாப் முகத்திரை முகத்தை முழுமையாக மூடும் வகையில் அமைக்கப்பட்டருக்கும். நெற்றியைச் சுற்றி அணியும் வகையில் இழுபடும் தன்மையுடைய பட்டையுடன் நீளமான மற்றும் அகலமான துணி கண்கள் தவிர்த்து முகத்தை மறைக்கும் வகையில் அமைந்திருக்கும். அநேக முழு நிகாப் முகத்திரைகள் இழுபடும் பட்டையோடு இரண்டு அல்லது அதற்கு அதிகமான துணிகள் செங்குத்தாக இணைக்கப்பட்டிருக்கும். இது கண்களை மறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டிருக்கும். அவசியமான போது கண்களை மறைத்துக் கொள்ளலாம். கண்களுக்கும் திரையிட்டு நிகாப் அணிந்திருக்கையில் ஒரு பெண்ணை பார்க்கும் ஒருவருக்கு அப்பெண்ணின் கண்கள் தெரியாது என்பதோடு அப்பெண் மெல்லிய துணியின் ஊடாகவே பார்க்கும் வகையில் முழு நிகாப் முகத்திரை அமைந்துள்ளது.

ஆப்கான் பாணி புர்க்கா உடை குறைவாக அணியப்பட்டாலும் குறிப்பிடத்தக்க நிகாப் வகைகளில் ஒன்றாகும். இவ்வுடை தலை முதல் கால் வரை உடலை முழுமையாக மூடும் வகையில் முகப்பகுதியில் கொக்கிப் பின்னல் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். பாக் சடோர் எனும் பாகித்தானின் புதிய பாணி உடை பெரிய முக்கோண வடிவிலான கழுத்துக்குட்டையுடன் அமைந்திருக்கும்.

வெவ்வேறு நாடுகளில் நிகாப் தொகு

 
தென் ஈரானின் பண்டார் அப்பாஸ் நகரில் நிகாப் முகத்திரையணிந்த ஈரானிய அரபுப் பெண்
 
சவுதி அரேபியாவில் நிகாப் முகத்திரை அணிந்துள்ள ஒரு பெண்
 
யேமன் நாட்டில் நிகாப் முகத்திரை அணிந்துள்ள ஒரு பெண்

எகிப்து தொகு

எகிப்தில் நிகாப் முகத்திரை நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. எகிப்தின் முக்கிய இசுலாமிய பாடசாலை மற்றும் உலகின் முண்ணனி சுன்னி பிரிவு இசுலாமிய பாடசாலைகளில் ஒன்றான அல் அசாரில் வகுப்பறை மற்றும் ஓய்வறைகளில் நிகாப் முகத்திரை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தொகு

இசுலாமிய சமய வருகை முதல் குவாஜர் வம்ச முடிவு வரை கலாச்சார ரீதியாகத் தென் ஈரானில் நிகாப் அணியப்பட்டு வந்துள்ளது. ஈரானின் பிரதேச வாரியாக நிகாப் முகத்திரை பல்வேறு வகைகளைக் கொண்டிருந்தது. இசுலாமிய சமய வருகைக்கு முன்பிருந்தே ஈரானியப் பெண்கள் முக்காடு அணிந்து வந்துள்ளனர்.

20ம் நூற்றாண்டு ஆட்சியாளர் ரேசா ஷா தனது நவீனமயப்படுத்தல் கொள்கைக்கு தடையாகவிருப்பதாக எண்ணி 1936ல் அனைத்து வகையான முகத்திரைகளுக்கும் தடையுத்தரவு இட்டார். சட்டத்தை மீறிய பெண்களின் முகத்திரையை வலுக்கட்டாயமாக அகற்ற காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இத்தடைச் சட்டம் பெண்கள் கண்டிப்பாக முகத்திரை அணிய வேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்த இசுலாமிய மத போதகர்களை சினம் கொள்ளச் செய்தது. இச்சட்டத்தை எதிர்த்து பல பெண்கள் மசுகத்திலுள்ள கோர்சாத் பள்ளிவாசலில் தங்கள் முகத்திற்கு திரையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

1941-1979 வரையிலான காலப்பகுதியில் ஈரான் அரசால் முகத்திரை அணிவது சட்டத்திற்கு புறம்பானதல்ல என்று குறிப்பிடப்பட்டாலும் அது பிற்போக்குத்தனமானது எனப் பரவலாக அரசால் கருதப்பட்டது. இதனால் இக்காலப்பகுதியில் நிகாப் முகத்திரை அணிவது பெரிதும் குறைந்ததோடு தீவிர இசுலாமிய பெண்கள் கூட முக்காடு மட்டுமே அணிந்தனர். பெரிய நட்சத்திர விடுதிகள் நிகாப் முகத்திரை அணிந்த பெண்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பள்ளிக் கூடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் முக்காடு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் நிகாப் முகத்திரை தடை செய்யப்பட்டது.

இசுலாமியக் குடியரசின் நிறுவலின் பின் நிகாப் தடை சட்டமாக்கப்படவில்லை.

உசாத்துணைகள் தொகு


  1. போலின் அன்சனின் பாரளுமன்ற பேச்சு ஏன் முகத்திரை கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. த சிட்னி மார்னிங் ஹெரால்ட் இணையதளம். எல்ஹம் மனியா ஆகஸ்ட் 27, 2017.
  2. புர்க்கா இசுலாமிய கலைக் களஞ்சியம் யுவான் எடுவார்டோ (2009).
  3. பெண்கள் நிகாப் அணிவது கட்டாயமா? யூசுப் அல் கரதாவி, சுஹைப் இணையதளம் 10 மே 2009.
  4. முகத்தை மறைப்பது தொடர்பான சரியான பார்வை பரணிடப்பட்டது 2012-02-18 at the வந்தவழி இயந்திரம் இசுலாமிய கேள்வி பதில்கள் இணையதளம்ஜூலை 2, 2002.
  5. முகத்தை மறைப்பது தொடர்பான முழுமையான விளக்கம் இசுலாமிய கேள்வி பதில்கள் இணையதளம், மார்ச் 4, 2003.
  6. பிரான்சில் புக்காவுக்குத் தடை? பெஞ்சமின் இஸ்மாயில், மிடில் ஈஸ்ட் போரம் இணையதளம் செப்டெ3ம்பர் 1 2010.
  7. தீவிரப்படுத்தப்படும் பிரான்சிய முகத்திரைத் தடைச் சட்டம் (ஆங்கிலம்) அன்டனி புளுவா ரேடியோ பிரீ யூரோப் இணையதளம் ஏப்ரல் 11, 2011.
  8. பிரான்சில் புக்காவுக்குத் தடை? (ஆங்கிலம்) பெஞ்சமின் இசுமாயில் மிடில் ஈஸ்ட் போரம்
  9. பிரான்சு: முகத்திரை தடை இசுலாமியப் பெண்களின் இரு மதச் சுதந்திரத்தில் தலையிடுகிறது (ஆங்கிலம்) மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்ற இணையதளம்.அக்டோபர் 23, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகாப்&oldid=3307894" இலிருந்து மீள்விக்கப்பட்டது