நித்ய சைதன்ய யதி

நித்ய சைதன்ய யதி என்று அறியப்படும் ஜெயச்சந்திரன் (1923 - 1999) கேரள சமூக சீர்திருத்தவாதியும் ஆன்மீக ஞானியுமான நாராயண குருவின் வழிவந்த ஆன்மீகவாதி, உளவியலாளர், தத்துவ அறிஞர்.

வாழ்க்கை

தொகு

பந்தளம் பணிக்கர்கள் என புகழ் பெற்ற நிலப்பிரபுக்களின் குடும்பத்தில் 1923ல் பிறந்தவர் நித்யசைதன்ய யதி. பத்தனம் திட்டா மாவட்டத்தில் கோந்நி என்ற ஊரில் தாய் வீட்டில் பிறந்தார். இயற் பெயர் ஜெயச்சந்திரன். அவருடைய குடும்பம் கேரளத்தில் உள்ள ஒரே ஈழவ நிலப்பிரபுக் குடும்பம். அவரது தந்தை மூலூர் ராகவப் பணிக்கர் அக்காலத்தைய முக்கியமான கவிஞர். தாய்வழித் தாத்தா பெரிய பாளி மொழி அறிஞர். பௌத்த மதம் சார்ந்த பல செப்பேடுகள் அவரது குடும்பத்திலிருந்து கிடைத்துள்ளன. அவரது தாய் வாமாக்‌ஷி அம்மா.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு நாடோடியாக அலைந்தார். பிறகு மீண்டு வந்து கொல்லம் கல்லூரியில் தத்துவம் எம்.ஏ படித்து அங்கேயே ஆசிரியராக வேலை பார்த்தார். அப்போதுதான் நடராஜகுருவின் தொடர்பு ஏற்பட்டது. துறவு பூண்ட நித்ய சைதன்ய யதி பிச்சை எடுத்தபடி பாரதம் முழுக்க அலைந்து திரிந்தார். காந்தியின் சபர்மதி ஆச்சிரமத்திலும், ரமணரின் ஆச்சிரமத்திலும் தங்கி அவர்களை நெருங்கி அறிந்தார். பின்னர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1952ல் டாக்டர் ராதாகிருஷ்ணனுடனான ஒரு தத்துவ மோதலுக்குப் பிறகு அப்பதவியைத் துறந்தார்.

முன்னரே நித்ய சைதன்ய யதிக்கு நடராஜகுருவின் அறிமுகம் இருந்தது. 1952ல் அவர் ஊட்டி ஃப்ரென்ஹில் குருகுலத்துக்குச் சென்று நடராஜகுருவின் நேரடி சீடரானார். இருவரும் கடும் வறுமையில் தனிமையில் பல வருடங்களை ஊட்டியில் செலவிட்டார்கள். நடராஜகுவிடமிருந்து ஜெயசந்திரன் துறவு பெற்று நித்யசைதன்ய யதி என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார்

1956ல் நடராஜகுரு உலகப் பயணத்துக்குப் போனபோது நித்ய சைதன்ய யதி பம்பாய் சென்று விழியிழந்தோர் உளவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவின் ஆணைப்படி 1959ல் மாற்று உளவியல் ஆய்வு மையம் துவக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக தலைவராக இருந்தார்.

1969ல் நித்ய சைதன்ய யதி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மாலுமியால் அழைத்துச் செல்லப்பட்டுத் திட்டமிடப்படாத ஓர் உலகப் பயணத்தை துவங்கினார். அப்பயணத்தில் அமெரிக்கா வந்து அங்கு போர்ட்லண்ட், சிக்காகோ உள்ளிட்ட பல பல்கலைகழகங்களில் கீழைத் தத்துவம் மற்றும் மாற்று உளவியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்திலும், பிரான்ஸிலும் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ரஸ்ஸல், கார்ல் பாப்பர், போன்றவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார். 1973ல் நடராஜகுரு உடல்நலம் குறைந்து இறந்தபோது பாரதம் திரும்பி ஊட்டி பெர்ன் ஹில் குருகுலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார். 1999 ல் மரணமடைந்தார். அவரது சமாதி ஊட்டியிலேயே உள்ளது.

எழுத்து வாழ்க்கை

தொகு

நித்ய சைதன்ய யதி மலையாளத்தின் புகழ்பெற்ற, பரபரப்பாக விற்கப்படும் நூலாசிரியர். கேரளம் உலகை ஈ எம் எஸ் மற்றும் யதி கண்கள் வழியாகவே காண்கிறது என்று ஒருமுறை புகழ்பெற்ற நூலாசிரியயையான கமலாதாஸ் குறிப்பிட்டார்.

நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்தில் எண்பதும் மலையாளத்தில் கிட்டத்தட்ட நூற்று இருபது நூல்களை எழுதியுள்ளார். எளிய அறிமுக நூல்களை எழுதி அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்தை கேரளத்தில் வேரூன்றச் செய்த பெரும் ஆசிரியர் அவர். அவரது நூல்களில் முக்கியமனவை நாராயணகுருவின் நூல்களுக்கு நவீன அறிவியல் தத்துவ நோக்கில் அவர் எழுதிய உரைகளாகும்.

ஆங்கில நூல்கள்

தொகு

நித்ய சைதன்ய யதியின் ஆங்கில நூல்களில் முக்கியமானவை

  • That Alone, the Core of Wisdom
  • Love and Blessings (autobiography)
  • Meditations on the Self
  • Psychology of Darsanamala
  • Brihadaranyaka Upanishad (3 volumes)
  • In the Stream of Consciousness
  • Saundarya Lahari
  • Bhagavad Gita
  • Living the Science of Harmonious Union (Patanjali’s Yoga Shastra)

தமிழில்

தொகு

தமிழில் அவரது விரிவான பேட்டி காலச்சுவடு சிற்றிதழில் வெளிவந்துள்ளது . தமிழில் நித்ய சைதன்ய யதியின் நான்கு நூல்கள் கிடைக்கின்றன. சூத்ரதாரி மொழிபெயர்ப்பில் ஈசோவாஸ்ய உபநிடதம் என்ற நூல் முதலில் வெளிவந்தது. அனுபவங்கள் அறிதல்கள் என்ற நூல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. குருவும் சீடனும் என்ற நூலை எனி இண்டியன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

'யதி : தத்துவத்தில் கனிதல்' என்னும் நூல் தன்னறம் வெளியீடாக வந்துள்ளது. நித்ய சைதன்ய எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பாக இது அமைந்துள்ளது. மேலும், குழத்தைகளுக்கு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய ஒரு நூலை 'சின்னச் சின்ன ஞானங்கள்' என்னும் பெயரில், எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பில் தன்னறம் நூல்வெளி பிரசுரித்துள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்ய_சைதன்ய_யதி&oldid=3486716" இலிருந்து மீள்விக்கப்பட்டது