நினைவுச்சின்னம் (புதினம்)

நாவல்

நினைவுச்சின்னம் என்பது மலேசிய எழுத்தாளரான அ. ரெங்கசாமி எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். இரண்டாம் உலகப் போரின்போது மரண இரயில்பாதை என அழைக்கப்பட்ட சயாம் – பர்மா தொடர்வண்டிப் பாதை அமைப்பதற்காக மலாயாவிலிருந்து சப்பானியர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்கள் பட்ட அவலங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டதே இப்புதினம். 1990களின் முற்பகுதியில் மயில் என்னும் வார இதழில் தொடராக வெளிவந்த இந்த வரலாற்றுப் புதினம் 2005 ஆம் ஆண்டில் நூலாக வெளிவந்தது.

நினைவுச்சின்னம் (புதினம்)
ஆசிரியர்(கள்):அ. ரெங்கசாமி
வகை:புதினம்
துறை:இலக்கியம்
காலம்:2005
இடம்:மலேசியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:10+537 (2005 பதிப்பு)
பதிப்பகர்:நூலாசிரியர்
பதிப்பு:2005
பன்னாட்டுத் தர
நூல் எண் (ISBN)
:
983-42587-0-4

வரலாற்றுப் பின்னணி

தொகு

இப்புதினத்தின் கதைக்களம் அண்மைக்கால வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. அதிகார ஆசையினால் வல்லரசுகளுக்கு இடையில் இடம்பெற்ற போர்க் காலத்தில் அதன் நோக்கங்களோடு எவ்வித தொடர்பும் அற்ற அப்பாவித் தொழிலாளர்கள் இலட்சம் பேர் வரை பலியாவதற்குக் காரணமான சூழலில் இக்கதை நடைபெறுகிறது.[1]

1942ல் சப்பானியர், பிரித்தானியரிடம் இருந்து பர்மாவைக் கைப்பற்றினர். இங்குள்ள சப்பானியப் படையினருக்கு விநியோகங்களை மேற்கொள்வதற்குக் கடல் வழிப்பாதை நீண்டதாகவும், ஆபத்தானதாகவும் இருந்தது. இதற்கு ஒரு தீர்வாக சயாமின் (தாய்லாந்து) தலைநகரமான பாங்காக்கையும் பர்மாவின் தலைநகர் ரங்கூனையும் இணைத்து தொடர்வண்டிப் பாதை ஒன்றை அமைக்க சப்பானியர் முடிவு செய்தனர். இப்பணியில் நேசநாட்டுப் படைகளைச் சேர்ந்த போர்க் கைதிகளையும், மலாயாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இலட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களையும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினர். மழையிலும், குளிரிலும், காடுகளிலும் பாதகமான சூழ்நிலைகளில் கடுமையாக வேலைவாங்கப்பட்ட இத்தொழிலாளர்களுட் பெரும்பாலோர் இறந்துபட்டனர். 1945ல் மீண்டும் பர்மா பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட பின்னரே தப்பிப் பிழைத்தவர்கள் மீண்டும் மலாயாவுக்குத் திரும்பினர். மேற்படி வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டதே இப்புதினம். மலாயாவில் இருந்து ஒரு தொகுதி தொழிலாளர்கள் கப்பல் ஏறியது முதல், எஞ்சியோர் மலாயாவுக்கு வந்து சேரும் வரையான அத்தொழிலாளர் பட்ட துயரங்களை இப்புதினம் கற்பனைப் பாத்திரங்களூடாகச் சொல்கிறது.

நோக்கம்

தொகு

மலாயாவில் இருந்து இலட்சக் கணக்கில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு சயாமியக் காடுகளில் உயிரிழந்த ஏராளமான தமிழர்கள் பற்றி இன்றைய தலைமுறையினர் மறந்து விட்டனர். இவர்களோடு கூடவே குறைந்த அளவில் இறந்துபோன ஐரோப்பிய இனத்தவர் குறித்த நினைவுகள் எழுத்து மூல ஆவணங்களாக வெளிவந்துள்ளன. ஆனால், உயிர்க்கொடை வழங்கிய தமிழர் குறித்த ஆவணங்கள் எதுவும் கிடையா. இவர்களைடைய நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் வகையில் பெரும் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்ப வசதி இல்லாவிட்டாலும், இந்தப் புதினம் மூலமாக அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதே நூலாசிரியரின் நோக்கம்.[2]

நூல் வரலாறு

தொகு

வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதுவதற்கு அந்த வரலாறு குறித்த நம்பத் தகுந்த, உண்மையான தகவல்கள் அவசியமானவை. இவ்வரலாற்றில் தமிழ்த் தொழிலாளரின் பங்கு குறித்தும், அவர்களுடைய அனுபவங்கள் குறித்தும் சரியான தகவல்கள் இல்லை. இதனால், சயாமியக் காடுகளில் இருந்து உயிருடன் திரும்பிவந்த சிலரில் உயிருடன் இருந்த பலரைப் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேட்டி கண்டு தகவல்களைச் சேகரித்ததாக நூலாசிரியர் கூறுகிறார். இவ்வாறு திரட்டிய தகவல்களையும், இவ்விடயம் தொடர்பாகக் கிடைக்கக்கூடிய ஆங்கில நூல்களையும் துணையாகக் கொண்டு இப்புதினம் உருவானது. முதலில் மயில் என்னும் மலேசிய வார இதழில் இப்புதினம் தொடராக வெளிவந்தது. ஏறத்தாழப் பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னர், 2005ல் இது ஒரு நூலாக வெளிவந்தது.

நூல் அமைப்பு

தொகு

கண்ணோட்டம் என்று தலைப்பிடப்பட்ட முதல் அத்தியாயத்தில் இருந்து, தோட்டம் வந்தாச்சு என்ற கடைசி அத்தியாயம் வரை மொத்தம் 63 அத்தியாயங்களில் இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. தலைப்புப் பக்கம், அணிந்துரை, என்னுரை என்பவற்றை உள்ளடக்கிய 10 பக்கங்களுடன், மொத்தம் 547 பக்கங்களைக் கொண்டதாக இப்புதினத்தின் முதற் பதிப்பு அமைந்துள்ளது.

குறிப்புக்கள்

தொகு
  1. ரெங்கசாமி, அ., 2005. பக். viii.
  2. ரெங்கசாமி, அ., 2005. பக். vi, vii என்னுரை

உசாத்துணைகள்

தொகு
  • ரெங்கசாமி, அ., நினைவுச்சின்னம், நூலாசிரியர் பதிப்பு, சிலாங்கூர் தாருல் ஏசான், 2005.