நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு நூல் பதிப்பகம் ஆகும். இதற்கு தமிழ்நாடு முழுவதும் 20 இடங்களில் கிளைகள் உள்ளது. இதன் துணை நிறுவனமாக பாவை அச்சகம் உள்ளது. இந்நிறுவனம் இதுவரை ஆயிரக்கணக்கான நூல்களை வெளியிட்டுள்ளது. இதன் நிர்வாக இயக்குநர் சண்முக சரவணன் ஆவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களைக் கொண்ட அறங்காவலர்களால் நடத்தப்படும் ஒரு தனியார் பதிப்பகம் ஆகும்.
பின்னணி
தொகுஇந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கான செய்தித்தாளாக 1937 முதல் ஜனசக்தி நாளிதழ் வெளியான நிலையில், அந்தப் பெயரிலேயே புத்தகங்களும் வெளிவந்துகொண்டிருந்தது. நூல்கள் வெளியிடுவதற்கு என 1 சூன் 1951 அன்று நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு பதிப்பகம் நிறுவப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் ப. ஜீவானந்தம், ப. ராமமூர்த்தி உள்ளிட்ட நான்கு பேர் பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்களாகவும், இராமகிருஷ்ண மூர்த்தி என்பவர் முழுநேர நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
சோவியத் ஒன்றியம் காலகட்டத்தில், கட்சிக் கொள்கைகளைப் பரப்ப புத்தகங்களை உருசியாவில் தமிழில் அச்சடித்து தமிழகத்தில் விற்பனை செய்ய நியூ செஞ்சுரி புக் ஹவுசுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
நிர்வாகப் பிரச்சனை
தொகுஇந்த நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள யாராவது ஒருவர் இறந்தாலோ, கட்சியை விட்டு விலகினாலோ அந்தப் பங்குகள் மற்றொருவருக்கு மாற்றிக்கொடுக்கப்படுவது வழக்கமாக உள்ளது. தற்போது இந்த பதிப்பகத்தின் இயக்குநர்களாக கட்சியின் முத்த தலைவர் இரா. நல்லகண்ணு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டச் செயலாளர் வீரசேனன், கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், கல்விப் பிரிவின் பொறுப்பாளரும் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான கா. சந்தானம், எழுத்தாளர் த. ஸ்டாலின் குணசேகரன், நிர்வாக இயக்குநராக சண்முக சரவணன் ஆகியோர் உள்ளனர்.
கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், நல்லகண்ணு ஆகியோர் வசம் உள்ள பங்குகள் நிர்வாக இயக்குநர் சண்முக சரவணன் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றப்பட்டது முறையல்ல எனக் கருதும் பிற இயக்குநர்கள்,சண்முக சரவணன் தன்வசம் உள்ள பங்குகளை கட்சி கூறும் நபருக்கு மாற்றிக்கொடுக்க வேண்டுமென கூறுகிறது.[1]