நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம்

இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) 2011 செப்டெம்பர் 7 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் நில எடுப்பு, அதன் வரையறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது. இச்சட்டம் 2013-இல் நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம்(Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 ) அல்லது நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013 என்று மாற்றியமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013
சான்று2013-இல் 30-ஆம் எண்
முன்வரைவு சான்று2011-இல் 77-ஆம் எண்
குழு அறிக்கை17 மே 2012
ரத்து செய்யப்படுபவை
நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1894

பின்னணி

தொகு

நிலம் கையகப்படுத்தல் தொடர்பான பிரச்சனைகள் குறித்த சமூக அக்கறை வலுத்து வருவதாக இந்திய அரசு நம்புவதன் விளைவாக இச்சட்டம் வரையப்பட்டு, பற்பல விவாதங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. பல்லாண்டுகளாக 1894 நில கையகப்படுத்தல் சட்டம் பல திருத்தங்களைக் கண்டபோதும், நியாயமான இழப்பீடு மற்றும் புனர்வாழ்வு குறித்த ஏற்பாடுகளை அணுகிய ஒருமித்த தேசிய சட்டம் ஏற்படவில்லை. பொது நோக்கத்திற்காக நிலக் கையகப்படுத்தல் நிகழும் உடனே இழப்பீடு வழங்கலும், புனர்வாழ்விற்கான ஏற்பாடுகள் செய்துதரப்படுவதிலும் தொய்வில்லாமல் இருக்க ஓர் ஒருமித்த சட்டம் அவசியம் என்று அரசு கருதுகிறது.[1]

1978-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பின் நாற்பத்தி நான்காவது சட்டத் திருத்தம் 19(1)(f) பிரிவை விலக்கியதன் விளைவுகள்:

  1. சட்டம் வழங்கும் அதிகாரத்தின் பெயரில் அல்லாது வேறு எவ்வகையிலும் ஒருவரது சொத்துக்கள் பறிக்கப்பட மாட்டாது எனும் உரிமை, இனி அடிப்படை உரிமையாகக் கருதப்படமாட்டாது. "சட்டப்படியான அதிகாரமல்லாமல் எவரது சொத்துக்களும் பறிக்கப்படமாட்டாது" (அரசியலமைப்பு 44-ஆவது திருத்தம், 10.6.1979 முதல் அமலில்). இச்சட்டத் திருத்தம் சொத்துரிமை "இனி ஒருபோதும் அடிப்படை உரிமை ஆகாது, எனினும் அஃதொரு அரசியல் சட்டரீதியான உரிமை; உரிமை மீறல் நிகழும் தருவாயில் பாதிக்கப்பட்டவர் தீர்வைப் பெற, இந்திய அரசியலமைப்பு பிரிவு-32-இன் கீழ் உச்ச நீதி மன்றத்தை அணுகாமல், அரசியலமைப்பின் 226-ஆவது பிரிவின் கீழ் உயர் நீதி மன்றத்தை அணுலாம்" என்பதை உறுதி செய்தது.
  2. மேலும் தனி ஒருவரது சொத்தைப் பறிக்குமாறு சட்டமன்றம் இயற்றும் எந்த சட்டத்தின் நியாயத்தன்மையையும் யாராலும் எதிர்த்துக் கேட்க முடியாது.

குறிக்கோள்கள்

தொகு
  • தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், அத்தியாவசியமான கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சி முதலியவற்றிற்குத் தேவையான நிலங்களை, இந்திய அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட கிராம சபை, உள்ளாட்சி நிறுவனங்களோடு கலந்தாய்வு செய்து, அனைவரின் பங்கேற்போடுகூடியதும், மனிதநேயமிக்கதும், வெளிப்படைத் தன்மைமிக்கதும், நில உடைமையோர்க்கும், அதில் பாதிக்கப்படும் இன்ன பிறர்களுக்கும் மிகச்சிறிதான இடையூறுகளைக்கொண்டதுமான கையகப்படுத்தும் செய்முறைகளை உறுதி செய்யும் சட்டம் அமைக்க வேண்டும்.
  • நிலம் கையகப்படுத்தப்படுவதால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடுகளை வழங்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்டோரின் மீள்குடியேற்றத்திற்கும், புனர்வாழ்விற்குமான போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  • இக்கட்டாய கையகப்படுத்தலால் நேரும் கூட்டுவிளைவு, பாதிக்கப்படுவோரையும் விளையும் முன்னேற்றத்தின் பங்குதாரராக்கி, கையகப்படுத்தலுக்கு பின்னான காலங்களில் அவர்களின் சமூக பொருளாதார நிலைமையை மேம்படுத்த உறுதி செய்வதாக அமைக்க வேண்டும்.[2]

நோக்கமும் பரப்பெல்லையும்

தொகு

இந்தியாவில் நிலம் கையகப்படுத்தவும், அதனால் பாதிக்கப்படுவோரின் மீள்குடியேற்றத்திற்கும், புனர்வாழ்வுக்கும் சேர்த்து ஒருமித்த சட்டம் இயற்றுவதே இதன் குறிக்கோள். ஜம்மு காஷ்மீர் மாநிலம் தவித்து, மற்ற அனைத்து இந்திய பிராந்தியங்களிலும் மத்திய மாநில அரசுகளால் கையகப்படுத்தப்படும் நிலங்கள் இச்சட்டத்தின் பரப்புக்குள் அடங்கும்.

சிறப்பு பொருண்மிய வலயச் சட்டம் (2005), அணு சக்தி சட்டம் (1962), ரயில்வே சட்டம் (1989) முதலிய பதினாறு சட்டங்களின் கீழ் நிகழும் கையகப்படுத்தல், இச்சட்டத்தின் பரப்புக்குள் வாரா.[3]

சட்ட ஏற்பாடுகள்

தொகு

பொது நோக்கம் - விளக்கம்

தொகு

இந்தியாவில் தனியார் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தேவையான பொது நோக்கத்தை விளக்கமாக இச்சட்டத்தின் பகுதி 2 (1) விளக்குகிறது:[4]

  • கப்பற்படை, இராணுவம், விமானப்படை மற்றும் ஒன்றிய அரசின் இதர ஆயுதம் தாங்கிய காவல் படைகளின் போர்திற நோக்கங்கள், தேச பாதுகாப்பிற்கும் தற்காப்பிற்குமான நோக்கங்கள் அல்லது மக்கள் பாதுகாப்பு, மாநிலக் காவல் போன்ற நோக்கங்கள்.
  • பின்வருபவை உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்கள்:
    • தொழிற்சாலை வழிகள், சுரங்கப் பணிகள், தேசிய உற்பத்திக் கொள்கை வகுத்த தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி வலயங்கள்
    • சுகாதாரம், நீர் சேகரிப்பு, சேமிப்பு கட்டமைப்புத் திட்டங்கள்
    • அரசு நிர்வகிக்கும், அரசு உதவி பெறும் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத் திட்டங்கள்
    • விளையாட்டு, சுற்றுலா, போக்குவரத்து, சுகாதாரம் முதலியவை தொடர்பான திட்டங்கள்
    • ஒன்றிய அரசு அறிவித்து நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கட்டமைப்பு வசதி திட்டங்கள்
  • திட்டங்களால் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கான திட்டங்கள்
  • வருமானக் குழு அடிப்படையில் அரசு நிர்ணயிக்கும் வீட்டுவசதி திட்டங்கள்
  • நகர்ப்புற அல்லது கிராமப்புற இடங்களின் வளர்ச்சி/மேம்பாட்டுத் திட்டங்கள்
  • ஏழை எளியோர், நில உடைமையற்றோர், இயற்கைப் பேரிடர் தாக்கிய இடங்களில் வசிப்போர் முதலானோருக்கான குடியிருப்பு வசதி திட்டங்கள்


இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்ட மசோதா வரைவு, 2011 – ஒரு மேற்பார்வை". கிராம வளர்ச்சி அமைச்சகம், இந்திய அரசு. Archived from the original on 2014-07-30. பார்க்கப்பட்ட நாள் 2015-04-25.
  2. "நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013" (PDF). இந்திய நாடாளுமன்றம். Archived from the original (PDF) on 2017-07-13. பார்க்கப்பட்ட நாள் 2015-04-21.
  3. "மசோதா கவனிப்பு - நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்ட மசோதா, 2013". பி.ஆர்.எஸ் இந்தியா. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  4. "நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்ட மசோதா, 2011". கிராம வளார்ச்சி அமைச்சகம், இந்திய அரசு. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-04-28.