நிலைக்கண்ணாடிச் சோதனை

நிலைக்கண்ணாடிச் சோதனை (mirror test) என்பது ஒரு விலங்கிற்கு காட்சி சுய இனங்காணும் திறன் உள்ளதா என்பதை அறிய 1970-ம் ஆண்டில் அமெரிக்க உளவியலாளர் கோர்டன் கேலப் ஜூனியரால் உருவாக்கப்பட்ட ஒரு நடத்தை நுட்பமாகும்.[1] இது மதிப்பெண் சோதனை என்றும் நிலைக்கண்ணாடி சுய-அடையாளம் காணும் சோதனை (mirror self-recognition [MSR] test) என்றும் சிவப்புப் புள்ளி நுட்பம் என்றும் ரூஜ் சோதனை என்றும் அழைக்கப்படுகிறது. நிலைக்கண்ணாடிச் சோதனை என்பது உடலியங்கியல்சார் மற்றும் அறிதிற சுய விழிப்புணர்வை அளவிடுவதற்கான பாரம்பரிய முறையாகும். இவ்வாறாயினும், விலங்குகள் நிலைக்கண்ணாடிச் சோதனையால் அளவிடப்படாத வழிகளில் கூட சுய அறிவைக் கொண்டிருக்க வல்லவை என்பது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விலங்குகள் அவற்றின் சொந்த ஓசைகளையும் வாசனைகளையும் தங்களத இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளின் ஓசைகளிலிருந்தும் வாசனைகளிலிருந்தும் வேறுபடுத்துதல் இதற்கொரு எடுத்துக்காட்டாகும்.[2]

ஹமாடிரியாஸ் பபூன்கள் நிலைக்கண்ணாடிச் சோதனையில் தேராத முதனி வகைகளில் ஒன்றாகும்.

வழக்கமாக நிலைக்கண்ணாடிச் சோதனையில், ஒரு விலங்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு பின்னர் அதன் உடலில் அதனால் பார்க்க முடியாத ஒரு பகுதியில் வர்ணம் பூசப்பட்டோ அல்லது அடையாள ஒட்டுக் காகிதம் ஒட்டப்பட்டோ குறிக்கப்படுகிறது. மயக்க மருந்திலிருந்து அந்த விலங்கு மீளும்போது, ​​​​அதற்கு ஒரு நிலைக்கண்ணாடி அணுகல் வழங்கப்படுகிறது (அதாவது அந்த விலங்கின் அருகில் ஒரு நிலைக்கண்ணாடி வைக்கப்படுகிறது). அந்தக் கண்ணாடியில் தனது பிரதிபலிப்பினை சிறிது நேரம் அலசிய பின்னர் அந்த விலங்கு தன்னுடலில் குறிக்கப்பட்ட அந்த அடையாளத்தைத் கண்ணாடியில் பார்த்துத் தொட்டால், கண்ணாடியில் கண்ட பிரதிபலிப்பினை வேறெரு விலங்காகக் கருதாது அது தனது பிம்பத்தினுடையது தான் என்பதை அந்த விலங்கு உணர்கிறது என்பதற்கான அறிகுறியாக ஆராய்ச்சியாளர்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

விலங்கினங்களில் மிக சில இனங்கள் மட்டுமே நிலைக்கண்ணாடிச் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் பெரிய மனிதக் குரங்கு இனங்கள், ஒரு ஆசிய யானை, திருக்கை மீன்கள் (ray), டால்பின்கள், ஓர்க்கா திமிங்கலம் (orca), யூரேசியன் மாக்பி (Eurasian magpie) பறவை, மற்றும் கிளீனர் ராஸ்ஸே (cleaner wrasse) மீன் ஆகிய விலங்கினங்கள் அடங்கும். பல வகையான குரங்குகள், ராட்சத பாண்டாக்கள் மற்றும் கடல் சிங்கங்கள் உட்பட பல்வேறு வகையான விலங்கினங்கள் இந்த நிலைக்கண்ணாடிச் சோதனையில் தோல்வியடைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[3][4]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Gallup, GG Jr. (1970). "Chimpanzees: Self recognition". Science 167 (3914): 86–87. doi:10.1126/science.167.3914.86. பப்மெட்:4982211. Bibcode: 1970Sci...167...86G. 
  2. Bekoff, Marc (2002-09-19). "Animal reflections". Nature 419 (6904): 255. doi:10.1038/419255a. பப்மெட்:12239547. 
  3. "List of Animals That Have Passed the Mirror Test". 2015-04-15. பார்க்கப்பட்ட நாள் 23 November 2015.
  4. Turner, Rebecca. "10 Animals with Self Awareness". பார்க்கப்பட்ட நாள் 23 November 2015.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலைக்கண்ணாடிச்_சோதனை&oldid=3517417" இலிருந்து மீள்விக்கப்பட்டது