நீல உடைப் பெண் கடிதம் வாசிக்கிறாள் (ஓவியம்)

நீல உடைப் பெண் கடிதம் வாசிக்கிறாள் (Woman in Blue Reading a Letter), என்பது, நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியரான ஜொஹான்னெஸ் வெர்மீர் (Johannes Vermeer) என்பவரால், 1663-1664 காலப்பகுதியில் வரையப்பட்ட ஒரு ஓவியம் ஆகும். இது தற்போது, அம்ஸ்ட்டர்டாமில் உள்ள ரைக்ஸ்மியூசியம் (அரசு காட்சிக்கூடம்) எனப்படும் அருங்காட்சியகத்தில் உள்ளது.[1][2][3]

நீல உடைப் பெண் கடிதம் வாசிக்கிறாள்
ஜொஹான்னெஸ் வெர்மீர், 1663-1664
கான்வஸில் எண்ணெய் வண்ணம்
46,6 × 39,1 cm
ரைக்ஸ்மியூசியம், ஆம்ஸ்டர்டாம்

சிந்தனையில் ஆழ்ந்துள்ள பெண்ணொருத்தியின் தனி உருவத்தைக் கொண்டமைந்த இவரது ஓவியமான, முத்துத் தோட்டுடனான பெண் (Girl with a Pearl Earring) என்னும் ஓவியத்தைப்போலவே, தனியான பெண்ணொருத்தி கடிதமொன்றை வாசிக்கும் காட்சி வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தின் கூட்டமைவின் மையமாக இருக்கும் இப்பெண் தனது வேலையில் முழுமையாக ஈடுபட்டிருப்பது படத்தில் தெரிகிறது.

இவ்வோவியம், இதன் கூட்டமைவின் எளிமை காரணமாகவே வேறு பல ஓவியங்கள் மத்தியில் வெளிப்பட்டு நிற்கிறது. முன்னைய ஓவியங்களில் கட்டாயமாக இருந்த சாளரம் இந்த ஓவியத்தில் கைவிடப்பட்டுவிட்டது. பெண்ணைச் சூழ இருக்கும் நாற்காலிகள், மேசை என்பனவும் முக்கியத்துவம் இல்லாதவையாக உள்ளன. பின்னணியில் உள்ள நிலப்படம் மட்டுமே ஓவியத்தின் ஒருசீர்த் தன்மையைக் (uniformity) குறைக்கும் அம்சமாக உள்ளது. வேர்மீருடைய நிறப் பயன்பாடு, மென்மையானதும், உயர் பண்பாக்கம் (sophistication) கொண்டதுமாக ஆகியுள்ளது. பெண்ணுடைய மேலாடையிற் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதால், நீலம் ஏனைய நிறங்களை விஞ்சி நிற்கிறது.

இதன் செந்நெறிப் பாங்கான எளிமையும், பீடும், ஏறத்தாழப் பண்பியல்சார் (abstract) கருத்துருவும் இவ்வோவியத்தை வெர்மீரின் மிகச் சிறந்த ஓவியங்களில் ஒன்று ஆக்குகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Woman Reading a Letter, Johannes Vermeer, c. 1663, Rijksmuseum. Retrieved on 15 February 2015.
  2. (in டச்சு மொழி) Brieflezende vrouw, Johannes Vermeer, ca. 1663, Rijksmuseum. Retrieved on 15 February 2015.
  3. Barker, Emma; Nick Webb; Kim Woods (1999). The changing status of the artist. Yale University Press. p. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-07742-1. பார்க்கப்பட்ட நாள் 18 June 2010.