நூலக அடுக்கு

நூலக அடுக்கு (Library shelf) என்பது, நூலகங்களில் சேமித்து வைத்திருக்கும் நூல்களை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்படி அடுக்கி வைப்பதற்குப் பயன்படும் ஒரு தளவாடம் எனலாம். ஒரு நூலகத்தில் நூல் சேமிப்புப் பகுதி முக்கியம் பெறுவதுபோல், நூல் சேமிப்புப் பகுதியில் நூலக அடுக்குகள் முக்கியம் பெறுகின்றன.

நூலக அடுக்கு ஒன்றைக் காட்டும் வரைபடம்.
A - அகலம், B - ஆழம், C - உயரம்

அடிப்படை விபரங்கள் தொகு

நூலகங்களில் நூல் சேமிப்புப் பகுதிக்குத் தேவையான இடத்தின் அளவைக் கணிப்பதில் பயன்படவிருக்கும் அடுக்குகளின் விபரங்கள் இன்றியமையாதவை ஆகும். முக்கியமாக ஒரு அடுக்கின் கொள்ளளவு எவ்வளவு என்பதை அறிய வேண்டியது முக்கியமானது. இங்கே கொள்ளளவு என்பது ஒரு அடுக்கில் அடுக்கி வைக்கக்கூடிய நூல்களின் எண்ணிக்கை ஆகும். அத்துடன் அடுக்கொன்றின் அளவுகளும் இடத்தேவைக் கணிப்பீட்டுக்கு அவசியமான தரவு ஆகும். ஒரு அடுக்கின் அளவு அதன் அகலம், ஆழம், உயரம் என்பவற்றை உள்ளடக்கியது.

கொள்ளளவு தொகு

அடுக்கொன்றின் கொள்ளளவு ஒரு அலகு நீளத்தில் கொள்ளக்கூடிய நூல்களின் எண்ணிக்கையினால் குறிக்கப்படும். எடுத்துக் காட்டாக ஒரு அடுக்கின் கொள்ளளவு ஒரு மீட்டருக்கு 125 என்றால் ஒரு மீட்டர் அகலம் கொண்ட அடுக்கொன்றில் 125 நூல்களை அடுக்கமுடியும். இந்த எண்ணிக்கை ஒரு மீட்டர் நீளத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக அமைந்துள்ள எல்லாத் தட்டுக்களிலும் உள்ள நூல்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதால் ஒரு அடுக்கின் கொள்ளளவு அது கொண்டுள்ள தட்டுக்களின் எண்ணிக்கையிலும் தங்கியுள்ளது.

தட்டுக்களின் எண்ணிக்கை அடுக்கின் கொள்ளளவைக் கூட்டும் ஆயினும் அடுக்குகளின் எண்ணிக்கயை ஒரு வரையறைக்குள் மட்டுமே கூட்ட முடியும். தட்டுக்களின் எண்ணிக்கை பொதுவாகப் பின்வருவனவற்றில் தங்கியுள்ளது:

 
ஆறு தட்டுக்களுடன் கூடிய நூலக அடுக்குகள்
  • நூலகத்தின் பயனர் வகை.
  • அடுக்கில் வைக்கப்படவுள்ள புத்தகங்களின் உயரம்.
  • நூல்களை வழங்கும் முறை.

நூலகத்தைப் பயன்படுத்தும் பயனர்களைப் பொறுத்து நூலக அடுக்குகளின் மொத்த உயரம் அமையும். எடுத்துக்காட்டாக, சிறுவர் நூலகங்களிலும், பள்ளி நூலகங்களிலும் சிறுவர்கள் அடுக்குகளிலிருந்து தாமாகவே நூல்களை எடுக்கவேண்டின் அடுக்கில் உள்ள கடைசித் தட்டு சிறுவர்களுக்கு எட்டும்படி அமைதல் வேண்டும். இதனால் அடுக்குகளின் மொத்த உயரம் குறைவாக இருக்கும். எனவே அதற்கேற்றபடி தட்டுகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும்.

புத்தகங்களின் உயரம் ஒரே அளவாக இருப்பதில்லை எனினும் சிலவகை நூல்கள் மற்ற வகைகளை விட அளவிற் சிறையனவாக இருப்பதையும் வேறு சிலவகை நூல்கள் பொதுவாகப் பெரிதாகவே இருப்பதையும் காண முடியும். எடுத்துக்காட்டாக கதைப் புத்தகங்கள் அளவில் சிறியன, குறைவான உயரங்கொண்டவை. அதேவேளை கலைக்களஞ்சியங்கள், சில கட்டிடக்கலை தொடர்பான நூல்கள் போன்றவை அளவில் பெரியவை, கூடிய உயரமும் கொண்டவை. இதனால் இரண்டு தட்டுகளுக்கு இடைப்பட்ட ஆகக் குறைந்த தூரம் புத்தகங்களின் வகைகளைப் பொறுத்து வேறுபடக்கூடும்.

 
ஏழு தட்டுக்கள் கொண்ட அடுக்குகளின் வரிசை. நூலகப் பணியாளர்களின் உதவியுடன் மட்டுமே நூல்களை எடுக்கலாம்

நூல்களை நூலகப் பணியாளர்களே எடுத்துக் கொடுக்கும் முறை உள்ள நூலகங்களில் அல்லது ஒரு நூலகத்தின் சில பகுதிகளில் அடுக்குகளின் உயரம் கூடுதலாக இருக்கவும் அதனால் அடுக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

அடுக்கின் அளவு தொகு

அடுக்கின் அளவுகளில் அடுக்கின் அகலம் ஒரு அடுக்குக் கொள்ளக்கூடிய நூல்களின் அளவைப் பாதிக்கும் எனினும் மொத்தமாகப் பார்க்கும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையான நூல்களை வைப்பதற்குத் தேவையான இடவசதியின் அளவைப் பாதிப்பதில்லை. ஆனால், இடவசதியின் அளவைத் தீர்மானிப்பதில் அடுக்குகளின் ஆழம் முக்கியமானது. அடுக்குகளின் ஆழம் கூடும்போது குறித்த நீள அலகுகள் கொண்ட அடுக்குகளை வைப்பதற்குக் கூடிய இடம் தேவைப்படும். நூல்களின் வகைக்குத் தக்கபடி தேவைப்படும் ஆழம் வேறுபடுகின்றது. கதைப் புத்தகங்கள் போன்ற வகைகளுக்குக் குறைந்த ஆழமுள்ள அடுக்குகளே போதுமானது. சில வகை நூல்கள் பொதுவாகக் கூடிய அகலம் கொண்டவையாக இருப்பதால் அவற்றை வைப்பதற்குக் கூடிய ஆழம் கொண்ட அடுக்குகள் தேவை.

நூலக அடுக்குகள் பொதுவாக 200 சமீ, 250 சமீ, 300 சமீ, 400 சமீ போன்ற அளவுகளில் கிடைக்கின்றன. சில நூல் வகைகளுக்குத் தேவையான அடுக்கின் ஆழங்களை எடுத்துக்காட்டுக்காகக் கீழேயுள்ள அட்டவணை தருகிறது.

நூல் வகை அடுக்கின் ஆழம்
கலைக்களஞ்சியங்கள் 300 சமீ
சட்டம் 300 சமீ
மருத்துவம் 300 சமீ
உசாத்துணை நூல்கள் 300 சமீ
தொழில்நுட்பம், அறிவியல் 300 சமீ
கதைகள் 250 சமீ
செவ்வியல் 250 சமீ

அடுக்கு வகைகள் தொகு

நூலக அடுக்குகள் பல வகைப் பொருட்களினால் செய்யப்படுவதுடன், வடிவமைப்புக்களும் பல வகைகளாக உள்ளன. இவற்றுள் பின்வருவனவற்றை முக்கியமானவையாகக் கருதலாம்:

  • முனைநெம்பு வகை
  • பெட்டி வகை
  • அடக்க அடுக்குகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலக_அடுக்கு&oldid=1300644" இலிருந்து மீள்விக்கப்பட்டது