நோர்வேத் தமிழர்

தமிழ் பின்புலத்துடன் நோர்வேயில் வசிப்பவர்களை நோர்வேத் தமிழர் எனலாம். நோர்வேயில் உள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் 1983 இன் பின்னர் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நோர்வேயில் வசிக்கிறார்கள். இவர்களின் பெரும்பாலானவர்கள் ஒசுலோ பேர்கன் ஆகிய பெரும் நகரங்களில் வசிக்கிறார்கள்.

தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன்

வரலாறு

தொகு

நோர்வே நாட்டிற்குத் தமிழர்கள் வந்ததனை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற்பிரிவானது 1956 - 1975ஆம் ஆண்டுக் காலப்பகுதியாகும். நோர்வேயில் குடியேறிய முதல் தமிழரான திரு.அன்ரனி ராஜேந்திரம் அவர்களைத் தொடர்ந்து, அவரின் முயற்சியாலும், நேரடியாக வேலைவாய்ப்புப் பெற்றும் தமிழர்கள் நோர்வே வரத் தொடங்கினர். இந்நிலைமையானது உள்வருவோருக்கான தடை அமுலுக்கு வந்த 1975ஆம் ஆண்டுவரை நீடித்தது.

இரண்டாவது பகுதியாக 1975 - 1988ஆம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1975ஆம் ஆண்டுமுதல் வேலைவாய்ப்புப் பெற்று நோர்வே நாட்டிற்குள் உள்வருதல் தடைசெய்யப்பட்டது. இந்நிலையைத் தொடர்ந்து பாடசாலை அனுமதி பெற்றுத் தமிழர்கள் நோர்வேக்கு வர ஆரம்பித்தனர். இந்நிலைமையானது 1988ஆம் ஆண்டுவரை நீடித்தது. இதன் பின்பு பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் சிறிய அளவிலான தமிழர்களே வருடாவருடம் நோர்வே வருகின்றனர். இரண்டாவது பகுதியின் இறுதிப்பகுதிகளில் பெருமளவான தமிழர்கள் அகதிகளாக நோர்வே வந்திருந்தனர்.

மூன்றாவது பகுதியானது 1980களின் இறுதிக் காலகட்டத்தில் இருந்து இன்று வரையானது. 1980களில் இருந்து அகதிகளாகவும், அவர்களது குடும்ப உறவுகளாக அவர்களைத் தொடர்ந்தும் பெருமளவிலான தமிழர்கள் நோர்வே வந்தனர். இவர்களின் வருகையானது 1990களின் பிற்பகுதிகளில் இருந்து பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்களை இழந்த அல்லது பெற்றோர்களுடனான தொடர்பினை இழந்த சிறுவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் நோர்வேயில் வதிவிட அனுமதி கொடுக்கப்படுகின்றது.

அத்துடன் மேற்படிப்பிற்காகவும், வேலைக்காகவும் இந்தியாவில் இருந்து நோர்வேக்கு தமிழர்கள் அண்மைக் காலங்களில் வந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

மக்கள்தொகையியல்

தொகு

நோர்வேயில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகள் அனைத்தும் இலங்கையர் என்ற வரையறையிலேயே அமைந்திருந்தன. எனினும் நோர்வேயில் வாழும் சிங்களவர்கள் மிகவும் சொற்ப அளவில், சில நூற்றுக்கணக்கானவர்களே இங்கு வாழ்வதனால் இலங்கையர்களுக்கான கணிப்பீடானது தமிழர்களையே பொதுவாகச் சுட்டிநிற்கிறது எனலாம்.

1987-1988 ஆண்டுக்காலப்பகுதியில் நோர்வே நாட்டிற்குள் வந்த வெளிநாட்டினருள் இலங்கையர் மூன்றாவது இடத்தினைப் பெற்றிருந்தனர். 2008 கணிப்பின்படி நோர்வேயில் வாழும் வெளிநாட்டினரின் சனத்தொகையை கருத்தில் கொண்டால், இலங்கையர் 12 ஆவது இடத்தில் இருப்பதுடன் நோர்வேவாழ் வெளிநாட்டினரின் தொகையில் 3 % ஆகவுள்ளனர்.

நோர்வேயில் வாழும் இலங்கையர்களின் தொகையானது 2008 இல் 13063 ஆக அமைந்திருந்தது. இக்கணிப்பில் 8264 வரையிலானோர் நேரடியாக இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தோராகவும், மிகுதியானோர் இலங்கை பெற்றோர்களுக்கு நோர்வேயில் பிறந்த பிள்ளைகளாகவும் இருக்கின்றனர். இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்தோரில், பெண்களின் தொகையானது ஆண்களின் தொகையை விடச்சற்று அதிகமாகும். இலங்கையர்களில் கிட்டத்தட்ட 80 % மானோர் நோர்வே குடியுரிமை பெற்றவர்களாகவும், 20 % மானோர் வெளிநாட்டுக் குடியுரிமையுடன் இருப்பவர்களாகவும் உள்ளனர்.

1990 - 2007 ஆண்டிற்கிடையில், இடம்பெயர்ந்து வந்தவர்களில் அகதிகளாக வந்தவர்கள் அதிகளவிலும் (கிட்டத்தட்ட 71% ), குடும்ப இணைவிற்காக வந்தவர்கள் இரண்டாம் இடத்திலும் (கிட்டத்தட்ட 20 %), படிப்பிற்காக வந்தவர்கள் மூன்றாம் இடத்திலும் (கிட்டத்தட்ட 7%), வேலைக்காக வந்தவர்கள் குறைந்த அளவிலும் (கிட்டத்தட்ட 1%) உள்ளனர். 1990 - 2007 ஆண்டிற்கிடையில் அகதிகளாக வந்தவர்களில் கிட்டத்தட்ட 1600 பேரளவில் நோர்வேயில் தங்கியிருப்பதற்கான அனுமதியைப் பெற்றனர். இந்த எண்ணிக்கை வேறு வெளிநாட்டவர்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அகதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 10 ஆவது இடத்தில் உள்ளது. 1990 - 2005ஆம் ஆண்டுக்காலப் பகுதிகளில் சம அளவில் ஆண்களும், பெண்களுமாக 355 பேர் இலங்கையில் இருந்து மாணவர்களாக நோர்வே வந்துள்ளனர் . 2008 கணிப்பின்படி, இலங்கையரில் கிட்டத்தட்ட 12 வீதமானவர்கள் 20 வருடங்களுக்கு மேலாகவும், 49 வீதமானவர்கள் 15 வருடங்களுக்கும் மேலாகவும், 66 வீதமானவர்கள் 10 வருடத்துக்கும் கூடுதலாகவும், 84 வீதமானோர் 5 வருடங்களுக்கு அதிகமாகவும் நோர்வேயில் வாழ்பவர்களாக இருக்கின்றனர்.[1]

நோர்வேயின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழர்கள் பரந்து வாழ்ந்து வருகின்ற போதிலும் வேலைவாய்ப்புக்கள், உயர்கல்வி வாய்ப்புக்கள், தமிழ்ப்பாடசாலைகள், கலைக்கல்லூரிகள் முதலான பல காரணங்களுக்காகத் தமிழர்களில் பெரும்பான்மையினர் பெரிய நகரங்களில் வாழ்கின்றனர்.

கல்வி

தொகு

2007 இல் எடுக்கப்பட்ட கணிப்பின்படி, 16-18 வயதில் உள்ளவர்களில், இடம்பெயர்ந்த இலங்கையரில் கிட்டத்தட்ட 75% மானோரும், இலங்கைப் பெற்றோருக்கு நோர்வேயில் பிறந்த குழந்தைகளில் கிட்டத்தட்ட 95% மானோரும் மேல் உயர்நிலைக்கல்வியைக் கற்கின்றனர். 19-24 வயதுக்கு உட்பட்டோரில், இலங்கைப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளில் கிட்டத்தட்ட 62% மான பெண்களும், 42% மான ஆண்களும் உயர்கல்வி கற்கின்றனர். 1113 மாணவர்கள் பாடசாலைகளில் தமிழை ஒரு பாடமாகவோ அல்லது இருமொழிக் கல்வியில் தமிழை ஒரு மொழியாகவோ பெறுகின்றனர்.[2] ஓஸ்லோவிலுள்ள பன்மொழி நூலகம் தமிழ் மொழியில் வெளியான நூல்களையும் கொண்டுள்ளது.[3]. இங்குள்ள தமிழ் நூல்களை இந்த தளத்தில்[தொடர்பிழந்த இணைப்பு] தேடி அறியலாம்.

தொழில்

தொகு

2007 ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கணிப்பின்படி, 15 - 74 வயதுக்கிடைப்பட்ட இலங்கையரில், கிட்டத்தட்ட 75% மான ஆண்களும், 61% மான பெண்களும் முழுநேர அல்லது பகுதிநேர தொழில் செய்கின்றனர்.[4]

அரசியல்

தொகு

2007 ஆம் ஆண்டிற்கான நகராட்சி தேர்தலில், இலங்கையரான 36 ஆண்களும், 14 பெண்களும் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 5 ஆண்களும், 3 பெண்களுமாக 8 பேர் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வேட்பாளர் பட்டியலில் இருந்தோரில், பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டோரின் வீதம் 16 ஆகும் [5].

திருமணங்கள்

தொகு

2008 இன் ஆரம்பநிலை கணிப்பின்படி, இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்தோரில் கிட்டத்தட்ட 73.6 % ஆனோர் திருமணம் செய்தவர்களாகவும், மிகுதியானோர் திருமணம் செய்யாமலும் உள்ளனர். 2007 ஆம் ஆண்டில் நிகழ்ந்த திருமணங்களில் 55 திருமணங்கள் இரு இலங்கையருக்கிடையில் நிகழ்ந்ததாகவும், 6 திருமணங்களில் ஆண்கள் நோர்வேஜியர்களாகவும் பெண்கள் இலங்கையராகவும், 7 திருமணங்களில் பெண்கள் நோர்வேஜியர்களாகவும் ஆண்கள் இலங்கையராகவும் இருந்தனர்.

குழந்தைகள்

தொகு

இலங்கையில் இருந்து நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்தவர்களைப் பெற்றோர்களாகக் கொண்டு 4460 குழந்தைகள் நோர்வேயில் பிறந்துள்ளனர். இது நோர்வேயின் 4ஆவது பெரிய குழுவாகும். 2006ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவர்களில் 71 வீதமானோர் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 98 வீதமானவர்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருந்தனர். இலங்கை, நோர்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த பெற்றோர்களைக் கொண்டு 690 குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் நோர்வேயில் உள்வந்தோராக கணிக்கப்படமாட்டார்கள். இவர்களுக்கெனத் தனியான நடைமுறையுண்டு.

அகதிகள்

தொகு

அகதிகளாக நோர்வே வந்தவர்கள் அவர்களது விருப்புக்கேற்பவும், நகர சபைகளின் பராமரிக்கும் வசதிகளுக்கு ஏற்பவும் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டனர். நகரங்களுக்குள் வந்த அகதிகள் சம்பந்தமான அனைத்து விடயங்களையும் கவனிக்கவென அகதிகள் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அகதிகளின் தனிப்பட்ட விடயங்கள், பொருளாதார நிலைமைகள், தங்குமிடவசதி, நோர்வேஜிய மொழிப் பயிற்சி, அவர்களது தனிப்பட்ட நிலைமைகளுக்கேற்ற பராமரிப்பு, பொதுவான பராமரிப்பு, தொடர்பாடல் உதவிகள், நிர்வாகம், பொருளாதாரம், திட்டமிடல் எனப்பல பொறுப்புக்களையும் கொண்டு அகதிகள் ஆலோசகர்கள் செயற்பட்டார்கள்.

அகதிகளாக உள்வந்தோர் காத்திருத்தல் (வதிவிட உரிமை பெறுவதற்காக), நகரசபைகளில் குடியமர்த்தப்படல், சமூகத்துடன் இணைதல் என மூன்று நிலைகளைக் கடக்க வேண்டியவர்களாக இருந்தனர். தமிழர்களிடையே சிறந்த தொடர்பாடல் இருந்தமையினால் சமூகக் கட்டமைப்பை விளங்கியவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு, நோர்வேஜிய சட்டங்கள், நடைமுறைகள், வேலைவாய்ப்பைக் கொண்ட கற்கை நெறிகள், கற்பதற்கான கடனுதவிகள் முதலான பல்துறை விளக்கங்களையும் தம்முன்னோரிடமிருந்து, தமிழரின் கண்ணோட்டத்தில் பெற்று வாழ முடிந்தது.

அமைப்புகள்

தொகு

நோர்வேயில் தமிழர்கள் ஒருங்கிணைந்து செயற்படும் ஊடகங்களாக நோர்வேத் தமிழர் அமைப்புகள் காணப்படுகின்றன.

நபர்கள்

தொகு

நோர்வேயில் வசிக்கும் தமிழர்களில் குறிப்பிடத் தகுந்தோரான பல கல்விமான்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் காணப்படுகின்றனர்.

ஊடகத்துறை

தொகு
 • தமிழருவி
 • தமிழியம்
 • தமிழ் நாதம்
 • தமிழ் முரசம்
 • தமிழ் வானொலி
 • தேன்தமிழ் ஓசை

மேற்கோள்கள்

தொகு
 1. Innvandrere og norskfødte med innvandrerforeldre
 2. Utdanning
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-10. பார்க்கப்பட்ட நாள் 2012-10-18.
 4. Arbeid
 5. Politisk deltakelse og representasjon

உசாத்துணை

தொகு
 • நூல்:நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்; ஆசிரியர்: சாத்யகி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோர்வேத்_தமிழர்&oldid=3561322" இலிருந்து மீள்விக்கப்பட்டது