பகல்வேடம்
பகல்வேடம் என்று அழைக்கப்படும் கலை தமிழர்களின் ஆடற்கலைகளுள் ஒன்று. ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகள் பழைமையானது இக்கலையாகும். ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தேறிய கலைகள் பலவற்றுள் பகல்வேடமும் ஒன்றாகும். பல தலைமுறைகளாக இதனை ’’முடகசங்கமா’’ எனும் இனத்தினர் நிகழ்த்திவருகின்றனர். சங்கம பண்டாரம் என்றும் இவர்களை அழைப்பர். இவர்களின் தாய்மொழி தெலுங்கு. இவர்களால் தமிழை நன்றாகப் பேசவும் ஓரளவு படிக்கவும் தெரியும்.
பகடி வேஷாலு என்ற பெயரில், நிலையான அரங்குகளில் பல மணிநேரம் ஆந்திராவில் நடைபெறுகின்ற பகல்வேடக்கலையானது தமிழ்நாட்டில் தெருக்களில் நடத்தப்படுகிறது. செங்கற்பட்டு, கடலூர், தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் பகல் வேடக்கலைஞர்கள் குடும்பத்துடன் குறிப்பிடத்தக்க அளவில் குடியேறியுள்ளனர்.[1]
வேடங்கள்
தொகுபாரதம், இராமாயணம் மற்றும் இதர புராணங்களிலிருந்து மக்கள் மனங்கவரும் கதைகள் சிலவற்றைத் தெரிவு செய்து அவற்றைப் பாடல்களாக வார்த்துகொள்வர். அவற்றுக்குரிய வேடங்களை நிர்ணயித்து, வண்ணமயமான ஒப்பனைகளையும் செய்து கொள்வர். பெரும்பாலும் சிவன், காளி, முருகன், இராமன், அனுமான், குறவன், குறத்தி வேடங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.
பகல் வேடம் அணிபவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து குறிப்பிட்ட ஊர்களுக்குச் செல்வர். ஒருகுழு செல்லும் ஊர்களுக்கு மற்றொரு குழு செல்வதில்லை என்பது எழுதப்படாத ஒப்பந்தமாகும். மேலும் கலைத் தொழில் நிமித்தமாக ஒரு ஊருக்குச் சென்றால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்தே அவ்வூருக்கு மீண்டும் செல்வர். இதே போன்று ஊரூராக ஆறுமாதங்கள் வரை வெளியூர்களில் அலைந்துவிட்டுப் பின்னர் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர். பெண்கள் பகல் வேடக்கலையில் பங்கேற்பதில்லை என்பதால், ஆண்களே பெண்வேடமேற்று திறம்பட நடத்துவர். செல்லும் ஊர்களில் கோயில் அல்லது சத்திரங்களில் தங்குவர். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அன்றைய வேடங்களைப் பெரும்பாலும் தாமாகவே அணிவர்.
ஒரு வாரம் அல்லது பத்துநாட்கள் ஒரு ஊரில் வேடக்கலையை முடித்துவிட்டு அதற்குப் பின்னர் வேடம் ஏதுமில்லாமல் வீடுவீடாகச் சென்று சன்மானம் பெறுவது இவர்களது நடைமுறையாகும்.[2] கதை பாடல் இசை இவற்றைவிடவும், கதை மாந்தர்களைக் காட்சிப்படுத்தும் தோரணையில்தான் இக்கலை கனமும் கவனமும் பெறுகின்றது. வண்ண வண்ண உடைகள், முகங்களின் நிறங்கள், தலையில் கிரீடம், கையில் ஆயுதம் ஆகியவற்றுடன் வரும் இந்தக் கலைஞர்கள் போட்டிருக்கும் வேடத்தின் மேலுள்ள மரியாதையின் காரணமாக காலணி அணிவதில்லை. சன்மானம் பெரும்பாலும் காசாக வாங்கப்படுகிறது, சுமைகருதி தானியங்கள் தவிர்க்கப்படுகின்றன.
திரைப்படப்பாடல் மெட்டுக்களின் தாக்கம் பல மரபுக்கலைகளில் காணப்படுகின்ற இந்நாளில், பகல் வேடக்கலை அதற்கு விதிவிலக்காக உள்ளது. ஒரு வீட்டின் முன்பு இரண்டுமுதல் ஐந்து நிமிடங்கள் வரை நின்று கதை சொல்லிப் பாடுகிற நிலை காரணமாக கதையினைத் துண்டு துண்டாக நிகழ்த்துகிற சூழல் ஏற்படும் இதனால் கதை முழுமை சிதறுவது இயல்பான ஒன்றாகும். மதியம் வரை தெருவலம் வரும் இக்கலைஞர்கள் மாலை வருவதற்குள் தமது இருப்பிடம் நோக்கிச் சென்றுவிடுவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ எழிலவன், தேடிவரும் தெய்வங்கள், தமிழகத்தின் மரபுக் கலைகள். பிளாக்ஹோல் மீடியா வெளியீடு
- ↑ 2009 ஆனந்த விகடன் தீபாவளி மலர் - விமர்சனம்
வெளியிணைப்புகள்
தொகு- தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் பரணிடப்பட்டது 2012-01-11 at the வந்தவழி இயந்திரம்