பசுமைக் கட்டிடப் பொருள்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பசுமைக் கட்டிடம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
உற்பத்தி, காவிச் செல்லல், பயன்பாடு போன்ற அம்சங்களில் குறைந்த அளவு சூழலியல் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய வகையில் அமைகின்ற கட்டிடப் பொருள்கள் பசுமைக் கட்டிடப் பொருள்கள் எனப்படுகின்றன. கட்டிடப் பொருட்களின் சூழலியல் தாக்கம் பற்றிக் கருதும்போது அது பயன் படுத்தப்படும் கட்டிடத்தின் முழு ஆயுட் காலமும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுவதால், பயன்படுத்தப்படும் கட்டிடப் பொருள்கள் கட்டிடங்களின் நீண்ட காலச் சூழல் நட்புத் தன்மைக்கு மிகவும் முக்கியமானவை ஆகும்.
கட்டிடங்களும், கட்டுமான நடவடிக்கைகளும், உலகின் மூலப்பொருட் பயன்பாட்டின் 40% அளவைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மேற்படி நடவடிக்கைகள் உலக எரிபொருள் நுகர்வின் குறிப்பிடத்தக்க அளவுக்கும் காரணமாக உள்ளன. இதனால் சூழல் மாசடைவதிலும், பெருமளவில் வளங்கள் சுரண்டப்படுவதிலும் கட்டிடங்களுக்கும், கட்டுமானத் துறைக்கும் பெரும் பங்கு உண்டு. இயற்கை வளங்களை எதிர்காலச் சந்ததியினரும் அநுபவிக்கும் வகையில் அவற்றைப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டுமென்ற உணர்வு மக்களிடையே வலுத்து வருவதன் காரணமாக, கட்டிடக் கலைஞர்கள் பசுமைக் கட்டிடப் பொருள்களின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.