பிரான்சின் பதினான்காம் லூயி

(பதினான்காம் லூயி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பதினான்காம் லூயி (5 செப்டெம்பர் 1638 – 1 செப்டெம்பர் 1715) பிரான்சினதும், நெவாரினதும் அரசனாக இருந்தார். ஐந்து வயதாவதற்குச் சில மாதங்களே இருந்தபோது லூயி அரியணை ஏறினார். எனினும், 1661 ஆம் ஆண்டில் இவரது முதலமைச்சரான இத்தாலியர், ஜூல் கார்டினல் மசாரின் இறந்த பின்னரே அரசின் கட்டுப்பாடு இவரது கைக்கு வந்தது.[1] 1715 ஆம் ஆண்டு தனது 77 ஆவது பிறந்த நாளுக்குச் சில தினங்களே இருந்தபோது இவர் காலமானார். அதுவரை 72 ஆண்டுகளும், மூன்று மாதங்களும், பதினெட்டு நாட்களும் ஆட்சி புரிந்தார். ஐரோப்பாவில் மிக நீண்டகாலம் ஆட்சிபுரிந்த மன்னர் என்ற பெருமையும் இவரையே சாரும்.[2][3] ஐரோப்பாவில் 17 ஆம் நுாற்றாண்டு தொடங்கி 18 ஆம் நுாற்றாண்டு வரை காணப்பட்ட தனித்துவ ஆட்சிமுறையின் காலத்தில் பதினான்காம் லுாயியின் ஆட்சியின் கீழ் இருந்த பிரான்சு, வளர்ந்து வரும் அதிகார மையத்தில் தலைமையாய் இருந்தது.[4]

பதினான்காம் லூயி
பிரான்சினதும் நெவாரினதும் அரசன் (more...)
பதினான்காம் லூயி (1638–1715), ஹையாசிந்த் ரிகாட் வரைந்தது. (1701)
பதினான்காம் லூயி (1638–1715), ஹையாசிந்த் ரிகாட் வரைந்தது. (1701)
ஆட்சிக்காலம் மே 14, 1643 – செப்டெம்பர் 1, 1715
முடிசூட்டு ஜூன் 7, 1654
முன்னவர் லூயி XIII
பின்னவர் லூயி XV
Consort இசுபெயினின் மரியா தெரேசா
பிள்ளைகள்
பிரான்சின் லூயி
பிரான்சின் மாரி-தெரேஸ்
பிலிப்பே-சார்லஸ் டி பிரான்ஸ்
முழுப்பெயர்
லூயி-டியூடோன் போர்பன்
விருதுப் பெயர்
மாட்சிமை தாங்கிய அரசர்
HRH The Dauphin of Viennois
அரச இல்லம் போர்பொன் இல்லம்
தந்தை லூயி XIII
தாய் ஆஸ்திரியாவின் ஆன்
பிறப்பு (1638-09-05)5 செப்டம்பர் 1638
செயிண்ட்-ஜெர்மைன்-என் லாயே அரண்மனை, செயிண்ட்-ஜெர்மைன்-என் லாயே, பிரான்ஸ்
இறப்பு 1 செப்டம்பர் 1715(1715-09-01) (அகவை 76)
வெர்சாய் அரண்மனை, வெர்சாய், பிரான்ஸ்
அடக்கம் செயிண்ட் டெனிஸ் பசிலிக்கா, செயிண்ட்-டெனிஸ், பிரான்ஸ்

பதினான்காம் லூயி அவரது காலத்தில் தலைசிறந்த அரசியல், இராணுவ, கலாச்சாரத் துறைகளில் சிறந்து விளங்கிய நபர்களான மசாரின், ஜீன்-பாப்டிஸ்ட் கால்பர்ட் போன்றோரை நன்கு உற்சாகப்படுத்தி தனது ஆட்சி சிறப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார். லூயியின் ஆட்சியின் போது, பிரான்சு ஐரோப்பாவின் முன்னணி சக்தியாக இருந்தது. அது மூன்று பெரிய போர்களை நடத்தியது: பிரான்சு-டச்சு போர், ஒன்பது ஆண்டுகள் போர் அல்லது ஆக்சஸ்பேர்க் லீக்கின் போர் மற்றும் இசுபானிஷ் வாரிசுரிமைப் போர் ஆகியவை அவையாகும். இவை தவிர, இரண்டு சிறிய மோதல்களும் இருந்தன: அவை புரட்சிப் போர் மற்றும் மறு ஒருங்கிணைப்புக்கான போர் நிகழ்வுகள் ஆகும். பதினான்காம் லூயியின் வெளியுறவுக் கொள்கையை போர்முறை வரையறுத்தது, அவருடைய ஆளுமை அவரது அணுகுமுறையை வடிவமைத்தது. "வர்த்தகம், பழிவாங்குதல், மற்றும் நெட்டாங்கு வரித்துணி ஆகியவற்றின் கலவை" ஆகியவை வென்றது, இந்த போர் வழி அணுகுமுறையே, தனது புகழை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி என்று லூயி உணர்ந்தார். சமாதானமான, போர்கள் நிகழாத காலத்தில் அவர் அடுத்த போருக்காக தயாராவதில் கவனம் செலுத்தினார். பிரஞ்சு இராணுவத்திற்கு தந்திரோபாய மற்றும் மூலோபாய நன்மைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் தனது இராஜதந்திரிகளுக்கு போதித்தார்.[5] பிரான்சு-டச்சுப் போரின் தொடக்கத்தில் கிடைத்த வெற்றி, நிஜ்மேகென் ஒப்பந்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து, எல்லா அரச ஆவணங்களும் அரசரின் பெயரை மகா லூயி (Louis the Great) என்று குறிப்பிட வேண்டும் என பாரிஸ் நாடாளுமன்றம் ஆணை பிறப்பித்தது.

பிறப்பும், இளமைப்பருவமும்

தொகு

பிரான்சின் பதின்மூன்றாம் லூயி மன்னனுக்கும், ஆஸ்திரிய இளவரசி ஆனேவுக்கும் 1638 ,செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு 23 வருடங்கள் கழிந்திருந்தது. 1619 ஆண்டிற்கும் 1631 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஆனேவுக்கு நான்கு முறை குறை பிரசவம் ஏற்பட்டது. இவ்வாறு ஒரு சிக்கலான தருணத்தில் பிறந்ததால், இவர் இறைவனின் கொடை "லூயிஸ் டையூடோன்" (Louis dieudonne) என்றே அழைக்கப்பட்டு அவ்வாறே பெயர் சூட்டப்பெற்றார்.[6] இந்தக் காலகட்டத்தில், அவரது தாயுடன் லூயியின் உறவு அசாதாரணமான அளவு பாசம் கொண்டதாக இருந்தது. சமகாலத்தவர்களும், கண்ணால் பார்த்தவர்களும் லுாயியின் தாய் ஆன் தனது நேரம் முழுவதையும் லுாயிசுடன் கழித்ததாகக் கூறுகின்றனர். இருவரும் உணவு மற்றும் நாடகக்கலையில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். மேலும் லூயிசு தனது தாயாருடன் கொண்டிருந்த நெருக்கமான உறவின் காரணமாக இவ்வித ஆர்வங்களை வளர்த்துக் கொண்டார். இந்த நீடித்த, அன்பான உறவு லூயிசின் சஞ்சிககைகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் பகுதிகளிலிருந்து ஆதாரப்பூர்வமாக அறியப்படலாம்.

"என் தாயிடம் என்னை கட்டிவைத்திருந்த முதல் முடிச்சுகளுக்கு இயற்கையே பொறுப்பு. ஆனால், ஆன்மாவினாலும் உணர்வினாலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பண்புநலன்கள் இரத்த உறவால் உருவான பிணைப்புகளை விட பிரிக்க முடியாத அளவு உறுதியான பிணைப்புகளாக அமைந்திருக்கின்றன."[7]

முடியாட்சியின் மீதான முழுமையான மற்றும் தெய்வீக சக்தியை லுாயிசுக்கு அவரது தாயாரே அளித்தார்.[8]

இந்நிலையில் குடல் புண்கள், செரிமாணக்கோளாறு, காசநோயால் பீடிக்கப்பட்டிருந்த பதின்மூன்றாம் லூயி 1643 மே 14 ம் நாளில் உயிர் இழந்தார். அவர் தன் உயிலில் தனக்கு பிறகு மகன் பட்டத்துக்கு உரியவன் என்றும்,எஎனினும் தன் மனைவி ஆனே, நாட்டை மகன் சார்பாக ஆள வேண்டும் என்றும், முக்கிய மந்திரி ஜூல்ஸ் மசாரின் துணை கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதிநிதியின் ஆட்சி 1643- 1661

தொகு

மசாரினும், அரசமாதா ஆனேயும் புதுப்புது சட்டங்களை அமுல்படுத்தியதால் பிரபுக்களும், குடியானவர்களும் அதிர்ச்சியுற்றனர். பிரபுக்கள் இளவரசன் 14 ஆம் லூயி அரண்மனையில் தங்கள் பிரதிநிதியின் பார்வையில் இருக்க வேண்டும் என்று விரும்பினர். எனவே 1648 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பம் ஆனது. மன்னர் குடும்பம் உயிர் தப்ப பாரிசுக்கு செல்ல வேண்டியதாயிற்று. 1653 ஆம் ஆண்டில் கலகத்தை முற்றிலும் அடக்கினார் மசாரின். இதற்கிடையில் பதின்மூன்றாம் லூயியின் உயிலின்படி 1651 செப்டம்பர் 7 ஆம் நாள் ஆனே பிரதிநிதி பதவியில் இருந்து விலகினர். அன்றே பதினான்காம் லூயி மன்னன் ஆனார். 1661 மசாரின் இறக்கும் வரை முக்கிய மந்திரி பதவியில் இருந்தார். இதற்கிடையில் 1660 இசுபெயினை ஆண்ட நான்காம் பிலிப்பின் மகள் மரியா தெரசாவை பிரான்சு மன்னன் பதினான்காம் லூயி திருமணம் செய்து கொண்டபோது அரசியல் உலகம் கொஞ்சம் ஆட்டம் கண்டது.

நேரடி ஆட்சி 1661 -1715

தொகு

இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் போலவே பதினான்காம் லூயியும் எல்லா நிர்வாகமும் தன் கண் பார்வையிலே நடை பெற வேண்டும் என்று விரும்பினார் .பிரான்ஸுக்கு முதல் அமைச்சர் என்ற ஒருவர் இருப்பதும் அவர் முக்கிய முடிவுகள் எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும் வழக்கமாக இருந்த ஒன்றுதான். லூயிக்கு முற்பட்ட காலத்தில் இரிச்சலுவும், மசாரினும் பிரெஞ்சு அரசருடைய அதிகாரங்களுக்கு எந்த வரம்புமில்லாமல் அதை வளர்த்து வைத்திருந்தனர். அரச அதிகாரத்திற்கு இருந்த எதிர்ப்புகளை ஒழித்து, ஐரோப்பாவில் பிரான்சின் எழுச்சிக்குத் தடையாக இருந்த செருமனி, ஆசுத்திரியா, இசுபெயின் முதலிய நாடுகளையும் அடக்கி வைத்திருந்தனர். ரிசேலியுவுக்குப் பிறகு மஸாரின் என்பவர் முதல் அமைச்சராகி தன் பங்குக்கு பிரான்ஸில் கலைகளை வளரச் செய்தார். அரசுக்கும் தனக்கும் எதிரான புரட்சிகளை வெற்றிகரமாக ஒடுக்கினார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு மன்னர் ஒரு எதிர்பாராத அறிவிப்பைச் செய்தார். "கடவுள் நாட்டை ஆள மன்னனை படைத்தான். மந்திரிகள் ,மஹாஜனங்கள் அனைவரும் அவன் உத்தரவிற்கு கீழ்ப்படிய வேண்டும் .எதிர் கேள்வியோ ,தர்க்கவாதம் புரிவதோ குற்றம். அரசனுக்கு செய்யும் தொண்டு ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு" என்று கூறிவிட்டு முதல் மந்திரி பதவியை நீக்கினார். ’’அடுத்த முதல் அமைச்சர் என்று யாரும் கிடையாது. நான்தான் மன்னன். எனக்கு நானே தான் முதல் மந்திரி’’ என்று அறிவித்துக் கொண்ட பதினான்காம் லூயி இறுதிவரை அதைக் கடைப்பிடித்தார். ஒப்புக்குச் சில அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களை அவர் எப்போது நியமிப்பார், எப்போது நீக்குவார் என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் ஒன்றில் மட்டும் மிகத் தெளிவாக இருந்தார் லூயி. தன் அமைச்சரவையில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, புகழ்பெற்ற இளவரசர்களோ, இராணுவத்தில் பணியாற்றிய அறிஞர்களோ கட்டாயம் இருக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாய் இருந்தார் ஆகையால், லூயி தமது எதேச்சதிகாரத்தைத் தமது புகழ் ஒன்றையே கருதி நடத்தத் துணிந்தார்.[9]

நிர்வாகம், ஆட்சி முறை

தொகு

உள்நாட்டு விவகாரங்களிலும் வெளிநாட்டுத் தொடர்புகளிலும் மன்னன் பதினான்காம் லூயி ஈடு இணையற்று விளங்கினார். நாட்டில் புதிய, தெளிவான சட்டங்கள் இயற்றப்பட்டன. நிதி அமைச்சராக விளங்கிய கால்பர்ட் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். சிறப்பான பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தனார். இந்தக் கால கட்டத்தில் கலைகள் மிகச் செழிப்பாக வளர்ந்தன. ஓவியம், சிற்பம் போன்ற கலைகளுக்கு தனித்துறையை தொடங்கினார். அறிவியலும் ஏற்றம் கண்டது. பாரீஸில் ஒரு பெரும் தொலைநோக்ககம் (OBSERVATORY) உருவாக்கப்பட்டது. இலக்கிய அகாடமி அமைப்புக்கும் புது வெளிச்சம் கிடைத்தது. ஆனால் அது முழுக்க அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தது. அற்புதமான கட்டிடங்களைக் கட்டுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தார் மன்னர். லூவர் அருங்காட்சியகக் கட்டிடம் கூட அவர் காலத்தில் எழுப்பப்பட்டதுதான். ஸ்பெயினின் அதிகாரத்திலிருந்த சில பகுதிகள் பிரான்ஸோடு இவர் காலத்தில் இணைக்கப்பட்டன.

மதக்கொடுமையும், மத இன அச்சுறுத்தலும்

தொகு

நிர்வாகத்தில் பெரிதும் உதவிய நிதி அமைச்சர் கால்பர்ட்டின் இறப்புக்குப் பிறகு ஆட்சியில் பல மாறுதல்கள் உண்டாயின.1598 ஆம் ஆண்டு நான்காம் என்றியால் போடப்பட்ட மத நல்லிணக்க சட்டம் தூக்கி வீசப்பட்டு 1685 இல் மத தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. பிரான்ஸில் உள்ள பிராடஸ்டன்ட் சிறுபான்மையினரின் 10,00,000 பேரின் சிறப்பு வழிபாட்டு உரிமையை நீக்கினார் மன்னர். பிரெஞ்சு ப்ராடெஸ்டன்டுகளை ‘ஹுகனாட்ஸ்’ என்பார்கள். இவர்களுக்கான வழிபாட்டு உரிமைகளை ரத்து செய்தார் மன்னர். அது மட்டுமல்ல, ப்ராடஸ்டன்ட் ஆலயங்களையும் இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.

ப்ராடஸ்டன்ட் பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பிரிவினரின் திருமணங்கள் செல்லாது என்று சட்டமியற்றும் அளவுக்கு மன்னரின் கத்தோலிக்க வெறி எல்லை தாண்டியது. கத்தோலிக்கக் கல்வியும் ஞானஸ்நானமும் அனைத்து பிரான்ஸ் குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதன் காரணமாக தொழிலதிபர்களாக இருந்த ப்ராடஸ்டன்ட் பிரிவினரில் பலரும் பிரான்ஸைவிட்டு நீங்கினார்கள். ஆக பெருத்த முதலீடுகளும் திறமையான நபர்களில் கணிசமானவர்களும் நாட்டைவிட்டு நீங்கினர். இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இப்படிச் சென்றவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஆகும்

ஆங்கில அரசுரிமைப்போர் (கி.பி.1688-1697)

தொகு

லுாயி ஆலந்துக்குச் செல்லக்கூடிய வழியிலுள்ள கொலோன் நகரத்தைத் தாக்கிய போது ஆங்கில அரசர் மூன்றாம் வில்லியம் ஆலந்தைக் காப்பாற்றும் பொருட்டு இங்கிலாந்து, ஆசுத்திரியா, இசுபெயின், பிரான்சுடன்பர்க்கு, தென்மார்க்கு, சுவீடன் முதலிய நாடுகளையெல்லாம் ஒரு பெருங்கூட்டாக இணைத்தார். பல இடங்கள் முற்றுகைக்கு உள்ளாயின. பிரெஞ்சுக் கப்பற்படை ஆங்கில-தச்சுக் கப்பற்படையை 1690-இல் பீச்சி எட்டில் வென்றது. ஆங்கிலக் கப்பற்படை 1692-இல் பிரெஞ்சுக் கப்பற்படையை இலாகோக்கில் வென்றது. இதற்கிடையில் நாட்டை விட்டுப் பிரான்சில் அடைக்கலம் புகுந்த இரண்டாம் சேம்சு அயர்லாந்துக்குச் சென்று அதனைக் கைப்பற்ற முயன்றார். மூன்றாம் வில்லியம் சேம்சைத் தோற்கடித்து அயர்லாந்தைத் தம் வசம் வைத்துக் கொண்டார். இறுதியில் 1697-இல் செய்யப்பட்ட இரிசுவிக்கு உடன்படிக்கையின்படி, பிரான்சு 1684-இல் தன் விருப்பமாக இணைத்துக் கொண்ட நகரங்களில் இசுடுராசுபர்க்கு, அல்சேசு முதலியவற்றை மட்டும் தன்வசம் வைத்துக் கொண்டு, மற்றவற்றைத் திருப்பிக் கொடுத்தது. மூன்றாம் வில்லியம் இங்கிலாந்தின் அரசராக ஒப்புக்கொள்ளப்பட்டார். உலுாயி தாம் இரண்டாம் சேம்சுக்கு ஆங்கில அரசுரிமையின்மீது ஆதரவளிப்பதில்லை என்று ஒப்புக்கொண்டார்.[9]

சொந்த வாழ்க்கை

தொகு

ஸ்பெயின் நாட்டு அரசிக்கும், பதினான்காம் லூயிக்கும் மொத்தம் ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். ஆனால், முதல் பிள்ளையைத் தவிர மற்ற அனைவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். அவர் ஒரு போதும் தன் மனைவிக்கு உண்மையான கணவர் ஆக இருந்ததில்லை. அவருக்கு நிறைய பெண்கள் தொடர்பும், அதன் விளைவாக நிறைய சட்டபூர்வமற்ற குழந்தைகளும் பிறந்தனர்

  • லூயிஸ் டே ல வல்லேறே (Louise de La Vallière) - 5 குழந்தைகள் 1661 - 1667
  • போன்னி டே பொன்ஸ் டி ஹியூடிகோர்ட் (Bonne de Pons d'Heudicourt) (1665),
  • கேத்தரின் சரலோட்டி டே கிராமோன்ட் (Catherine Charlotte de Gramont) (1665),
  • பிராங்கோயிஸ் அத்தேனைஸ் மார்குலிஸ் டே மொன்டெஸ்பன் (Françoise-Athénaïs, Marquise de Montespan) - 7 குழந்தைகள் (1667 – 1680),
  • அன்னே டே ரோஹன் சபோட் (Anne de Rohan-Chabot) (1669–1675),
  • கிளாட் டே வின் தேஸ் எல்லிட்ஸ் (Claude de Vin des Œillets) (1 குழந்தை 1676),
  • இஸபெல்லே டே லூட்ர்ஸ் (Isabelle de Ludres) (1675–78), மற்றும்
  • மேரி ஏஞ்செலிக் டே ஸ்கோரைல்ல்ஸ் (Marie Angélique de Scorailles) (1679–1681),

தன்னுடைய அங்கீகாரமற்ற குழந்தைகளை பராமரிக்க வந்த 1673 டிசம்பர் 20 இல் நியமிக்கப்பட்ட மாடமே டே மொன்டெஸ்பன் (Madame de Montespan) இவரை 1683 ,அக்டோபர் 10 ஆம் நாள் இரகசிய திருமணம் புரிந்தாலும் இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகவே பேணப்பட்டு வந்தது.[10] லூயி ஆரோக்கியமாய் தோன்றினாலும் அவர் உடல் நிலை கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது. நீரழிவு நோய், பல் நோய்கள், கொப்புளங்கள், மூட்டு வலி மற்றும் தலைவலியால் அவதிப்பட்டார். இறுதியில், 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் தன் 77ஆம் வயதில் மரணம் அடைந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Louis XIV". Catholic Encyclopedia. 2007. பார்க்கப்பட்ட நாள் 19 January 2008.
  2. "Louis XIV". MSN Encarta. 2008. Archived from the original on 1 November 2009. பார்க்கப்பட்ட நாள் 20 January 2008.
  3. Some monarchs of states in the Holy Roman Empire ruled for longer: "Longest serving rulers ever", The Independent, 29 August 2015 (retrieved 4 July 2017).
  4. Jackson J. Spielvogel (2016). Western Civilization: A Brief History, Volume I: To 1715. Cengage Learning. p. 419.
  5. James Nathan, "Force, Order, and Diplomacy in the Age of Louis XIV." Virginia Quarterly Review 69#4 (1993) 633+.
  6. Brémond, Henri (1908). La Provence mystique au XVIIe siècle (in French). Paris: Plon-Nourrit. pp. 381–382.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  7. Fraser, Antonia. "Love and Louis XIV: The Women in the Life of the Sun King". Random House, Inc, 2006, pp. 14–16.
  8. Petitfils 2002, ப. 30–40
  9. 9.0 9.1 "பதினான்காம் உலுாயி". வாழ்வியற் களஞ்சியம் (மூன்றாம் பதிப்பு) தொகுதி 5. (2009). Ed. முனைவர் நா. பாலுசாமி. தஞ்சாவூர்: தஞ்சைத் தமிழ்ப் பல்கைலக்கழகம். 307-309. அணுகப்பட்டது 4 அக்டோபர் 2017. 
  10. "Morganatic and Secret Marriages in the French Royal Family". பார்க்கப்பட்ட நாள் 10 July 2008.: The description of the marriage as morganatic is inaccurate as French law does not define such marriages.