பயனர்:Marimuthu/இப்போகிரேட்டசு

இப்போகிரேட்டசு
பிறப்புகி.மு. 460
இறப்புகி.மு. 377
பணிமருத்துவர்

இப்போகிரேட்டசு கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் ஆவார். மருத்துவத் துறையின் வரலாற்றில் மிக உயர்ந்த மனிதராய் இவர் கருதப்படுகிறார். இப்போகிரேட்டசு மருத்துவ சிந்தனைக்கு ஆற்றிய பங்களிப்பின் காரணத்தால் இவர் மேற்குலக மருத்துவத்தின் தந்தை[2][3][4] என்று குறிப்பிடப்படுகிறார். பழைய கிரேக்கத்தில் இவரது சிந்தனைப் பள்ளி மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. மரபுவழியாக அதைக் கட்டிப் போட்டிருந்த இறையியல் மற்றும் மெய்யியல் போன்ற மற்ற துறைகளில் இருந்து விடுவித்து தனித்துவமான ஒரு துறையாக அதை ஆக்கியது.[5][6]

ஆயினும் இப்போகிரேட்டசின் நேரடி பங்களிப்புகளையும் அவரைப் பின்பற்றுவோரின் பங்களிப்புகளையும் பிரித்தறிந்து புரிந்து கொள்வதில் குழப்பம் நேர்வதுண்டு. புராதன எகிப்து நாட்டைச் சேர்ந்த இமோதெப் தான் வரலாற்றின் முதல் மருத்துவர் என்று கூறுவோரும் உண்டு. ஆயினும் இப்போகிரேட்டசு தான் புராதன மருத்துவத்திற்கான போற்றுதற்குரிய மருத்துவராக பொதுவாக குறிப்பிடப்படுகிறார். குறிப்பாக முந்தைய சிந்தனைகளின் மருத்துவ அறிவை உள்ளீர்த்துக் கொண்டு மருத்துவமனை மருத்துவத்தின் முறைப்படியான ஆய்வினை முன்னெடுத்த பெருமை பெருமளவு இவருக்கு உண்டு. அத்துடன் இப்போகிரேட்டசு மருத்துவத் தொகுதி, இப்போகிரேட்டசு சத்தியப்பிரமாணம் ஆகியவையும் அவருக்குப் பெருமை சேர்க்கின்றன.[5][7]

வாழ்க்கை வரலாறு

தொகு
 
காஸ் ஆலயம்

இப்போகிரேட்டசு காஸ் (Kos) என்கிற கிரேக்கத் தீவில் சுமார் கி.மு. 460 வாக்கில் பிறந்தார் என்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இவர் ஒரு பிரபலமான மருத்துவராகவும் மருத்துவ ஆசிரியராகவும் இருந்தார். ஆயினும் பிற வரலாற்று விவரங்கள் ஊகிக்கப்படுபவையே. (காணவும் நம்பிக்கைகள் ).[8] சோரானசு (Soranus of Ephesus) என்கிற இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மருத்துவர் தான் (பெண்களுக்கு வரும் நோய்க்கான சிறப்பு மருத்துவர்)[9] இப்போகிரேட்டசு வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் குறித்தவர் ஆவார். இவர் தான் இப்போகிரேட்டசு வாழ்க்கையின் அநேக விவரங்களுக்கான ஆதாரமாக கொள்ளப்படுகிறார். 4 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்து துவங்குகிற அரிஸ்டாட்டில் எழுத்துக்களிலும் பத்தாம் நூற்றாண்டின் சூடா விலும் (Suda - பேரகராதி வகை) மற்றும் 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்து துவங்கும் ஜான் செடஸ் (John Tzetzes) படைப்புகளிலும் இப்போகிரேட்டசு பற்றிய விவரங்கள் காணக் கிடைக்கின்றன.[5][10]

இப்போகிரேட்டசின் தந்தை எராகிலைட்சு. இவர் ஒரு மருத்துவர். இப்போகிரேட்டசின் தாய் பெயர் பிராக்சிடெலா. தெசலாசு மற்றும் டிராகோ ஆகிய இப்போகிரேட்டசின் இரண்டு மகன்களும் போலிபசு என்கிற அவரது மருமகனும் அவரது மாணவர்களாய் இருந்தனர். போலிபசு தான் இப்போகிரேட்டசின் உண்மையான மருத்துவ வாரிசாய் திகழ்ந்ததாக கலேன் என்னும் பிற்காலத்தைய மருத்துவர் குறிப்பிடுகிறார். தெசாலசு மற்றும் டிராகோ இருவரும் இப்போகிரேட்டசு என்கிற பெயரில் ஒரு பிள்ளை கொண்டிருந்தனர்.[11][12][13] [14]

இப்போகிரேட்டசு மருத்துவத்தை தனது தந்தை மற்றும் தாத்தாவிடம் இருந்து கற்றார். மற்ற பாடங்களை டெமாகிரைடசு மற்றும் கோர்ஜியாசு ஆகியோரிடம் இருந்து கற்றார் என்று சோரானசு கூறினார். இப்போகிரேட்டசு காஸ் தீவின் புனிதக் கோவிலில் பயிற்சியளிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இப்போகிரேட்டசு குறித்த சமகால குறிப்பு என்றால் பிளேட்டோவின் உரையாடலில் வருகிறது. அவர் இப்போகிரேட்டசை “காஸ் தீவின் புனிதக் கோவில் மருத்துவரான இப்போகிரேட்டசு” என்று விவரிக்கிறார்.[15][16] இப்போகிரேட்டசு தனது வாழ்க்கை முழுவதிலும் மருத்துவத்தையே கற்றார், பயின்றார்.[12] இவர் 83 முதல் 90 வயதுக்குள்ளாக லாரிசாவில் காலமாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆயினும் சிலர் அவர் நூறு வயதுக்கு மேல் வாழ்ந்ததாய் கூறுகின்றனர். அவரது மரணம் குறித்த குறிப்புகள் மாறுபடுகின்றன.[12]

இப்போகிரேட்டசு தத்துவம்

தொகு

நோய்கள் இயற்கையாகத் தோன்றுபவை, மூடநம்பிக்கையினாலோ அல்லது கடவுளின் வெறுப்பினாலோ தோன்றுவன அல்ல என்று நம்பத் துவங்கிய முதல் மனிதர் என இப்போகிரேட்டசு நினைவு கூரப்படுகிறார். மெய்யியலையும் மருத்துவத்தையும் இணைத்ததாய் பிதாகரசின் சீடர்கள் இப்போகிரேட்டசுக்கு போற்றுதல் செய்கின்றனர்.[17] இவர் மருத்துவத்தையும் மதத்தையும் பிரித்தறிந்தார். நோய் என்பது கடவுள்களால் நிகழ்த்தப்படும் தண்டனை அல்ல, மாறாக சுற்றுச்சூழல் காரணிகள், உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகளின் விளைபொருளே என்று நம்பவும் வாதிடவும் செய்தார். சொல்லப் போனால் இப்போகிரேட்டசு தத்துவத்தின் மொத்தத்திலும் புரியமுடியாத நோய் என்பதைக் குறித்த ஒரு குறிப்பும் கூட இருக்கவில்லை. ஆயினும், இப்போகிரேட்டசு கொண்டிருந்த பல நம்பிக்கைகள் இன்றைய காலத்தில் உடல்நீர்மவியம் போன்ற தவறான உடற்கூறியல் மற்றும் உடலியங்கியல் என்று அறியப்படுகிறது.[18][19][20]

நோயைக் கையாளும் விதத்தில் புராதன கிரேக்கத்தின் மருத்துவ சிந்தனைகள் பிளவுபட்டிருந்தன. நிடியன் (Knidian) சிந்தனைப் பள்ளி நோயறிதலில் கவனம் குவித்தது. இப்போகிரேட்டசு காலத்தில் மனித உடலை அறுத்துப் பார்ப்பது என்பது தடை செய்யப்பட்ட ஒரு செயலாக இருந்ததால் அக்கால மருத்துவத்திற்கு மனித உடற்கூறியல் அல்லது உடலியங்கியல் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஒரே நோய் பல்வேறு அறிகுறிகளை உருவாக்கிய சமயத்தில் நிடியன் மருத்துவ சிந்தனை பிரித்தறிய முடியாமல் போனது.[21] இப்போகிரேட்டசு சிந்தனைப் பள்ளி அல்லது கோவான் (Koan) சிந்தனைப் பள்ளி பொதுவான நோயறிதல்களையும் மெதுவான சிகிச்சைகளையும் பயன்படுத்தி பெரும் வெற்றி பெற்றது. அதன் கவனமானது நோய் மூலத்தை அறிவதைக் காட்டிலும் நோயாளி மீதான அக்கறை மற்றும் நோய் வளர்ச்சி பற்றிய கணிப்பு ஆகியவற்றின் மீது இருந்தது. இதனால் நோய்களுக்குத் திறம்பட சிகிச்சையளிக்க முடிந்ததோடு மருத்துவமனை நடைமுறையிலும் பெரும் அபிவிருத்தி நிகழ்வதற்கு வழிசெய்தது.[22][23]

இப்போகிரேட்டசு வகை மருத்துவமும் அதன் மெய்யியலும் நவீன மருத்துவ வகையில் இருந்து வெகு விலகி அமைந்ததாகும். இப்போது மருத்துவர்கள் நோய்முலமறிதல் மற்றும் சிறப்பு சிகிச்சைமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். இரண்டுமே நிடியன் மருத்துவ சிந்தனையுடன் தொடர்புபட்டவையாகும். இப்போகிரேட்டசு காலத்தில் இருந்து மருத்துவ சிந்தனையில் ஏற்பட்டு வந்திருக்கும் மாற்றங்கள் எப்போதுமே கடுமையான விமர்சனத்திற்குரிய பொருளாய் இருந்து வந்திருக்கின்றன. உதாரணமாக எம்.எஸ்.ஹோதார்த் என்கிற பிரெஞ்சு மருத்துவர் இப்போகிரேட்டசு சிகிச்சையை “சாவது குறித்து தியானிப்பது” என்று கண்டித்தார்.[24]

உடல் நீர்மவியமும் (Humorism) நெருக்கடியும்

தொகு

இப்போகிரேட்டசு மருத்துவத்தில் ஒரு முக்கியமான கருத்தாய் விளங்குவது நெருக்கடி என்னும் கருத்து ஆகும். இது நோயின் அபிவிருத்தியில் ஒரு புள்ளியைக் குறிக்கிறது. இப்புள்ளியில் ஒன்று நோய் வெற்றி பெற்று நோயாளி இறக்க நேரும், அல்லது இயற்கை நிகழ்முறைகளால் நோயாளி குணமடைவார். ஒரு நெருக்கடிக்குப் பின் ஒரு மீட்சி பின் தொடர்ந்து பின் இன்னொரு தீர்மானமான நெருக்கடி வரலாம். இந்த தத்துவத்தின் படி, நெருக்கடிகள் தீவிரப்படல் தினங்களில் தான் நேரும். இத்தினங்கள் நோய் பீடித்ததன் பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் வரும். ஒரு தீவிரப்படல் தினத்தில் இருந்து தள்ளி ஒரு நெருக்கடி நேருமானால், ஒரு மீட்சியை எதிர்பார்க்கலாம். இந்த சிந்தனை இப்போகிரேட்டசு காலத்திற்கு முன்பே இருந்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும் இப்போகிரேட்டசுவிடம் இருந்து இச்சிந்தனை தோன்றியதாகவே காலேன் நம்பினார்.[25]

 
இப்போகிரேட்டசு மேசையிடுக்கியின் ஒரு சித்திரம்

இப்போகிரேட்டசு மருந்து என்பது எளிமையானதும் மெதுவானதும் ஆகும். இது இயற்கையின் குணப்படுத்தும் சக்தியின் அடிப்படையில் அமைந்தது. இத்தத்துவத்தின் படி, உடல் தனது நான்கு உடல்நீர்மங்களையும் மீண்டும் சமநிலை செய்து கொள்வதற்கும் தானே குணப்படுத்திக் கொள்வதற்குமான திறனை தன்னகத்தே கொண்டுள்ளது.[26] இவ்வகையில் ஓய்வும் நகராதிருப்பதும் முக்கியமானவை என்று இப்போகிரேட்டசு நம்பினார்.[27] பொதுவாக, இப்போகிரேட்டசு மருத்துவம் நோயாளியிடம் பக்குவமாய் நடந்து கொண்டது. சிகிச்சை மென்மையானதாய் இருக்கும். நோயாளியை சுத்தமாகவும் கிருமி அணுகாமலும் பாதுகாப்பதில் தான் அதிக கவனம் செலுத்தப்படும். உதாரணமாக சுத்தமான நீர் அல்லது ஒயின் தான் காயங்கள் மீது பயன்படுத்தப்பட்டது. ஆயினும் “உலர்” சிகிச்சை தான் விரும்பத்தக்கதாய் இருந்தது. சில சமயங்களில் வலி நிவாரணிகளும் அளிக்கப்படும்.[28]

மருந்துகளைக் கையாளுவதற்கும் சிறப்பு சிகிச்சைகளுக்கும் இப்போகிரேட்டசு தயக்கம் காட்டினார். பொதுவான நோயறிகையைத் தொடர்ந்து பொதுவான சிகிச்சைமுறை அளிக்கப்பட்டது.[28][29] ஆயினும் சில சந்தர்ப்பங்களில் சக்திவாய்ந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.[13] எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளுக்கு இந்த மென்மையான அணுகுமுறை மிக வெற்றிகரமானதாய் இருந்தது. இதற்கு இப்போகிரேட்டசு மேசையிடுக்கி மற்றும் பிற சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.

இப்போகிரேட்டசு மருத்துவத்தின் வலிமைகளில் ஒன்று நோய் அபிவிருத்தியின் மீதான அறிவில் கவனம் குவிப்பது. இப்போகிரேட்டசு காலத்தில் மருத்துவ சிகிச்சை என்பது முதிர்ச்சியற்று இருந்தது. ஒரு நோய்நிலையை மதிப்பிட்டு அதன் அபிவிருத்தியைத் தூண்டி ஆய்வது தான் மருத்துவர்கள் அதிகப்பட்சம் செய்யக் கூடியதாய் இருந்தது.[20][30]

தொழில்நேர்த்தி

தொகு
 
புராதன கிரேக்க காலத்தின் அறுவைச்சிகிச்சைக் கருவிகள்.[31]

இப்போகிரேட்டசு மருத்துவம் அதன் கண்டிப்பான தொழில்நேர்த்திக்கும், ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாடான நடைமுறைக்கும் பிரசித்தி பெற்றதாகும்.[32] மருத்துவர்கள் எப்போதும் நல்ல பராமரிப்புடன், நேர்மையானவர்களாக, அமைதியானவர்களாக, புரிந்துகொள்பவர்களாக, மற்றும் அலட்சியம் காட்டாதவர்களாக இருக்க வேண்டும் என்று இப்போகிரேட்டசு படைப்பான ஆன் தி பிசிசியன் (On the Physician) பரிந்துரைக்கிறது. இப்போகிரேட்டசு வகை மருத்துவர் தனது பயிற்சியின் அனைத்து அம்சங்களிலும் மிகக் கவனம் செலுத்துவார். பழைய அறுவைச் சிகிச்சை அறைகளில் வெளிச்சம், வேலைநபர்கள், சாதனங்கள், நோயாளி அமரும் நிலை என ஒவ்வொன்றிலும் விரிவான வரையறைகளை அவர் பின்பற்றுவார்.[33] தனது விரல்நகங்களைக் கூட சரியான நீளத்தில் தான் அவர் பராமரிப்பார்.[34]

இப்போகிரேட்டசு சிந்தனைப் பள்ளி கவனிப்பு மற்றும் ஆவணமாக்கல் ஆகிய மருத்துவ தத்துவங்களுக்கு முக்கியத்துவம் அளித்தது. மருத்துவர்கள் தங்களது ஆய்வுமுடிவுகளையும் மருத்துவ வழிமுறைகளையும் தெளிவான வகையில் பதிவு செய்து வைக்க வேண்டும். அப்போது தான் அவை மற்ற மருத்துவர்கள் பார்த்து புரிந்து கொள்வதற்கும் பயன்படும் என்று இத்தத்துவங்கள் கட்டளையிட்டன.[12] நிறம், நாடித்துடிப்பு, காய்ச்சல், வலி, இயக்கம் மற்றும் சுரப்பு ஆகியவை உள்ளிட்ட பல அறிகுறிகளையும் இப்போகிரேட்டசு கவனமாகவும் தொடர்ந்தும் குறிப்பெழுதி பராமரித்து வந்தார்.[30] நோயாளி உண்மை கூறினாரா என்பதை அறிய அவரின் நாடித்துடிப்பை இப்போகிரேட்டசு சோதிப்பார் எனக் கூறப்படுவதுண்டு.[35] நோயாளியின் குடும்ப வரலாறு மற்றும் சூழலையும் கூட இப்போகிரேட்டசு மருத்துவரீதியான ஆய்விற்கு உட்படுத்தினார்.[36] “அவரைப் பொருத்தவரை மருத்துவத் துறை சோதனை மற்றும் கவனிப்புக்கு கடமைப்பட்டு இருக்கிறது.[20] இந்த காரணத்தினால் அவரை “மருத்துவமனை மருத்துவ த்தின் தந்தை” என்று அழைப்பதே முறையாக இருக்கும்.”[37]

மருத்துவத்திற்கான நேரடிப் பங்களிப்புகள்

தொகு
 
இப்போகிரேட்டசு விரல்கள்

இப்போகிரேட்டசும் அவரது சீடர்களும் தான் பல நோய்கள் மற்றும் மருத்துவ நிலைமைகளை முதன்முதலாய் விவரித்தவர்கள் ஆவர். நாள்பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் நீல்வாதை இருதய நோய் போன்றவற்றில் முக்கியமான அறிகுறியான விரல்கள் பின்னிக் கொள்வதைக் குறித்து விவரித்த பெருமை இப்போகிரேட்டசுக்கு உண்டு. இதனால் பின்னிக் கொண்ட விரல்களை ஒவ்வொரு சமயம் “இப்போகிரேட்டசு விரல்கள்” என்றும் குறிப்பிடுவதுண்டு.[38] நோய்வளர்ச்சி யில் இப்போகிரேட்டசு முகம் என்னும் அறிகுறியை விவரித்த முதல் மருத்துவரும் இப்போகிரேட்டசு தான். இந்த விவரிப்பை சேக்சுபியர் தனது ஹென்றி V நாடகத்தில் ஃபால்சுடாபின் மரணத்தின் போது குறிப்பிடுகிறார்.[39][40]

இப்போகிரேட்டசு நோய்களை தீவிரமானவை, நாள்பட்டவை, ஆண்டு முழுவதும் காணப்படுபவை, தொற்று நோய் என பலவகைகளாகப் பிரிக்கிறார். அத்துடன் நோய்க்குணம் மிகல், குறைதல், தீர்வு, நெருக்கடி, இசிப்பு, உச்சம் மற்றும் நோயிலிருந்து மீளல் போன்ற கட்டங்களையும் குறிப்பிடுகிறார்.[30][41] மார்பக சீழ்கட்டும் நோய்க்கான அறிகுறிகள், ஆய்வுகள், சிகிச்சை மற்றும் நோய் வளர்ச்சி ஆய்வு ஆகியவற்றிலும் இப்போகிரேட்டசின் பங்களிப்பு மிகப் பெரியது. சுவாச நோய் மருத்துவம் மற்றும் அறுவைச்சிகிச்சையில் இப்போகிரேட்டசின் கொடை இன்றளவும் மாணவர்க்கு பெரும்பயனளித்து வருவதாய் இருக்கிறது.[42] முதல் மார்பக அறுவைச்சிகிச்சை மருத்துவராக இப்போகிரேட்டசு தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறார். அவரது கண்டறிவுகள் இன்றளவும் பொருந்துவனவாய் உள்ளன.[42]

மனித மலக்குடல் நோய்களையும் சிகிச்சைகளையும் இப்போகிரேட்டசின் மருத்துவம் சிறப்பாய் விவரிக்கிறது. உதாரணமாக மூலநோய்க்கு இப்போகிரேட்டசு மருத்துவர்கள் வழங்கும் மருத்துவம் ஒப்பீட்டளவில் முன்னேறியதாய் இருக்கிறது.[43][44] சுடுகோல் மற்றும் அரிந்தெடுத்தல் ஆகியவை எல்லாம் இப்போகிரேட்டசு மருத்துவத் தொகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தைலங்களைப் பயன்படுத்தும் வழிமுறைகளும் ஆலோசிக்கப்பட்டுள்ளன.[45][46] இன்றும் மூலநோய் சிகிச்சையில் சூடுசெய்வது, இடுக்குவது மற்றும் அரிந்தெடுப்பது ஆகியவை பயன்பாட்டில் உள்ளன.[43] அத்துடன் மலக்குடல் சிகிச்சையிலான சில அடிப்படையான கருத்துருக்களும் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.[43][44] உதாரணமாக மலக்குடல் பிளப்பான் கருவியின் பயன்பாடுகள் இப்போகிரேட்டசு மருத்துவத் தொகுதியில் விவாதிக்கப்படும் ஒன்றாகும்.[44] உடற்குழாய் உள்நோக்கி மூலம் ஆய்வது குறித்து அந்த மிக ஆரம்ப காலத்திலேயே குறிப்பு காணப்படுகிறது.[47][48]

இப்போகிரேட்டசு மருத்துவத் தொகுதி

தொகு
 
சத்தியப் பிரமாணம் சிலுவை வடிவில்

இப்போகிரேட்டசு மருத்துவத் தொகுதி என்பது ஆரம்ப காலத்தின் சுமார் எழுபது மருத்துவப் படைப்புகள் அடங்கிய ஒரு தொகுப்பு ஆகும். இத்தொகுதியை இப்போகிரேட்டசு மட்டும் தான் எழுதினாரா என்பதற்கு தீர்மானமான பதில் கிடைக்கவில்லை.[49] ஆனால் அவரது மாணவர்களும் சீடர்களும் பங்களித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[50] பல்வேறு ஆய்வுப்பொருட்களும், பல்வேறு எழுத்து நடைகளும், பல்வேறு உத்தேச காலங்களும் இருப்பதன் காரணமாக, இதனை ஒருவர் மட்டும் எழுதியிருக்க முடியாது என்று அறிஞர்கள் நம்புகின்றனர். பத்தொன்பது பேரின் பங்களிப்பு இருக்கலாம் என்று எர்மரின்ஸ் குறிப்பிடுகிறார்.[13] இப்போகிரேட்டசு எழுத்தில் இருந்தும், அவரது கொள்கைகளில் இருந்தும் அடிப்படையைக் கொண்டிருந்ததால் இத்தொகுதிக்கு இப்பெயர் கிட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது. காஸ் காலத்து நூலகத்தின் எச்சமாகவோ அல்லது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அலெக்சாண்ட்ரியா காலத்தில் தொகுக்கப்பட்ட தொகுதியாகவோ கூட இது இருக்கலாம்.[15][33]

இப்போகிரேட்டசு மருத்துவத் தொகுதியில் மருத்துவத் துறையின் பல்வேறு ஆய்வுப்பொருட்கள் சம்பந்தமான பல்வேறு பாடப்புத்தகங்கள், உரைகள், ஆய்வுகள், குறிப்புகள் மற்றும் மெய்யியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆயினும் அவை எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இடம்பெற்றிருக்கவில்லை.[49][51] சாதாரண மனிதர்கள் மற்றும் நிபுணர்கள் என இருதரப்பாருக்கும் எழுதப்பட்டவை இதில் கலந்து காணப்படுகின்றன.[52] இப்போகிரேட்டசு பிரமாணம் (The Hippocratic Oath), நோய்வளர்ச்சி ஆய்வு புத்தகம் (The Book of Prognostics), கடுமையான நோய்களுக்குப் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்கு (On Regimen in Acute Diseases), மூத்தோர் மொழி (Aphorisms), காற்று, நீர் மற்றும் இடங்கள் குறித்து (On Airs, Waters and Places), குறைப்பின் சாதனங்கள் (Instruments of Reduction), மற்றும் புனிதமான நோய் குறித்து (On The Sacred Disease) ஆகியவை இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்க பகுதிகள் ஆகும்.[13]

இப்போகிரேட்டசு பிரமாணம்

தொகு

இப்போகிரேட்டசு பிரமாணம் என்பது மருத்துவ நடைமுறையின் தர்மத்தைக் குறித்து பேசுவதாகும். இது இப்போகிரேட்டசு எழுதியதாகக் கூறப்பட்டு வந்தாலும், அவரது மரணத்திற்குப் பின் இது எழுதப்பட்டிருக்கலாம் என புதிய தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன. இது இப்போகிரேட்டசு மருத்துவத் தொகுதியில் மிக பிரசித்தி பெற்ற ஆவணம் என்று கூறலாம். இதன் ஆசிரியர் யார் என்கிற சர்ச்சை சமீபத்திலும் எழுந்தது. இந்த பிரமாணம் அப்படியே இன்று மறு உச்சரிப்பு செய்யப்படுவதில்லை என்றாலும் மற்ற மருத்துவப் பிரமாணங்களுக்கான அத்திவாரமாக இதுவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. மருத்துவ பட்டதாரிகள் பயிற்சிக்குள் நுழையும் முன்னதாக இத்தகைய ஒன்றையே இப்போதும் எடுத்துக் கொள்கின்றனர்.[15][53][54]

பாரம்பரியம்

தொகு
 
கலேன் மற்றும் இப்போகிரேட்டசு ஆகியோரைக் காட்டும் சித்திரம்

இப்போகிரேட்டசு பொதுவாக “மருத்துவத்தின் தந்தை” என்று கூறப்படுகிறார்.[50] அவரது பங்களிப்புகள் மருத்துவ நடைமுறையில் புரட்சியை உண்டாக்கின. ஆனால் அவரது மரணத்திற்குப் பின் அந்த முன்னேற்றம் நின்று போனது.[55] இப்போகிரேட்டசு மற்றும் அவரது போதனைகள் மீதிருந்த அளவுகடந்த மரியாதையால் அவை அதற்குமேல் மேம்படுத்த முடியாதவை என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டதாலும் வெகு காலத்திற்கு அவரது வழிமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லாமல் இருந்தது.[15][27] இப்போகிரேட்டசு மரணத்திற்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் முன்னேற்றத்தின் அளவுக்கு பிற்போக்கான தன்மையும் இருந்தது. உதாரணமாக, “இப்போகிரேட்டசு காலத்திற்குப் பிறகு, மருத்துவமனையில் நோய்-வரலாறுகளை பதிவு செய்யும் நடைமுறை அழிந்து போனது” என்று பீல்டிங் கேரிசன் குறிப்பிட்டார்.[56]

இப்போகிரேட்டசுக்குப் பிறகு வந்த அடுத்த முக்கியமான மருத்துவராக காலேன் குறிப்பிடப்படுகிறார். இவர் கி.பி. 129 முதல் கி.பி. 200 வரை வாழ்ந்த கிரேக்க மருத்துவராவார். காலேன் இப்போகிரேட்டசு மருத்துவத்தை நன்கு நிலைக்கச் செய்தார்.[57] மத்திய காலங்களில் அரேபியர்கள் இப்போகிரேட்டசு வழிமுறைகளை பின்பற்றினர்.[58] ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு, இப்போகிரேட்டசு வழிமுறைகள் ஐரோப்பாவில் மீண்டும் புத்துயிர் பெற்றன. அத்துடன் 19 ஆம் நூற்றாண்டில் மேலும் விரிவாக்கம் பெற்றன. சிடனேம், எபெர்டென், சார்கோட் மற்றும் ஓஸ்லர் ஆகியோர் இப்போகிரேட்டசின் கடுமையான மருத்துவ நுட்பங்களைப் பின்பற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த மறுமலர்ச்சிகள் தான் “உள் மருத்துவத்தின் மொத்த வரலாற்றையும்” உருவாக்கியதாய் ஹென்றி குகார்டு என்கிற பிரெஞ்சு மருத்துவ அறிஞர் குறிப்பிடுகிறார்.[59]

பிம்பம்

தொகு
 
ரோமானிய சித்திரம்.

”மகா இப்போகிரேட்டசு” என்று இப்போகிரேட்டசு அறியப்பட்டதாய் அரிஸ்டாட்டில் கூறினார்.[60] இப்போகிரேட்டசு முதலில் “பண்பான, கண்ணியமான, வயதான நாட்டுப்புற வைத்தியர்” போல் கருதப்பட்டதாகவும் பின்னாளில் அவர் “உறுதிபட்ட கடுமைகாட்டுகிற” மருத்துவராக அறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.[15] மிகுந்த மேதமை படைத்தவராகவும் குறிப்பாக நடைமுறைரீதியான ஆய்வுமுறை கொண்டவர் என்றும் அவர் கருதப்படுகிறார். “நிச்சயமாக அனுபவம் மற்றும் அறிவு ஆகியற்றின் ஒரு சிறந்த கலவை தான் இப்போகிரேட்டசு” என்று பிரான்சிஸ் ஆதம்ஸ் வருணிக்கிறார்.[21]

இவரது பிம்பங்கள் இவரை வயதான அறிவுஜீவியாகவே எடுத்துக் காட்டுகின்றன. இதில் சுருக்கம் விழுந்த முகத்தில் நீண்ட தாடி காணப்படுகிறது. [55] இப்போகிரேட்டசும் அவர் கண்முன் நிறுத்தும் நம்பிக்கைகளும் மருத்துவத்துறையின் உன்னதங்களாய் கருதப்படுகின்றன.[59][61]

நம்பிக்கைகள்

தொகு

இப்போகிரேட்டசு வாழ்க்கை குறித்து கூறப்படும் அநேக தகவல்களுக்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்பதோடு இதேபோன்ற தகவல்கள் சாக்கிரடீசு மற்றும் அவிசென்னா ஆகிய மற்ற மனிதர்கள் தொடர்பாகவும் கூறப்படுகின்றன. இப்போகிரேட்டசு காலத்தில் அவர் மருத்துவ அற்புதங்கள் நிகழ்த்தியதாக பல சம்பவங்கள் உலாவருகின்றன. உதாரணமாக, ஏதென்ஸில் கொள்ளை நோய் பரவிய போது பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் குணப்படுத்துவதற்காக இப்போகிரேட்டசு “நோய்கொல்லும் மகா நெருப்புகளை” ஏற்றியதாக கூறப்படுகிறது. பெர்டிகாசு என்னும் ஒரு மாசிடோனிய அரசனின் “காதல் நோயை” இப்போகிரேட்டசு குணப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களில் எதுவும் வரலாற்றாசிரியர்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.[62][63][64]

 
இப்போகிரேட்டசு மரம்.[65] இதன் கீழ் தான் இப்போகிரேட்டசு வேலை செய்ததாய் கூறப்படுகிறது.

இன்னொரு சம்பவத்தில், பெர்சியாவின் அரசனான அர்டாசெர்செசு சபைக்கு முறையாக அழைத்தும் அதனை இப்போகிரேட்டசு நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.[66] இதனை புராதன வரலாற்று ஆதாரங்கள் ஒப்புக் கொண்டாலும், நவீன கால ஆதாரங்கள் ஒப்புக் கொள்ள மறுக்கின்றன. அதனால் இக்கூற்றும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.[67] இன்னொரு சம்பவத்தில், டெமாக்ரைடசு பார்த்ததை எல்லாம் கண்டு சிரித்துக் கொண்டிருந்ததால் பைத்தியம் பிடித்து விட்டதாகக் கருதி இப்போகிரேட்டசிடம் அனுப்பி வைக்கப்பட்டார். இப்போகிரேட்டசு அவருக்கு வெறுமனே மகிழ்ச்சி ததும்புகிற குணம் தான் என்று கூறி விட்டார். அதிலிருந்து டெமாக்ரைடசு “சிரிப்பு மெய்ஞ்ஞானி” என்று அழைக்கப்பட்டு வருகிறார்.[68]

இப்போகிரேட்டசு குறித்த அனைத்து விவரங்களுமே அவரை நேர்மறையாக சித்தரித்து விடுவதில்லை. ஒரு கதையில், கிரேக்க நாட்டின் ஒரு குணப்படுத்தும் கோயிலுக்கு தீவைத்து விட்டு இப்போகிரேட்டசு ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. அது நிடோசு ஆலயங்களில் ஒன்று என இத்தகவலைத் தெரிவிக்கும் சோரானாசு குறிப்பிடுகிறார். ஆயினும் சில நூற்றாண்டுகள் கழித்து எழுதிய ஜான் செட்செசு என்னும் ஆசிரியர், இப்போகிரேட்டசு தனது சொந்த காஸ் கோயிலையே எரித்ததாய் கூறினார். மருத்துவத் துறை அறிவில் ஏகபோகத்தை பராமரிப்பதற்காக அவர் அதனைச் செய்தார் என்று அவர் கூறினார். இது இப்போகிரேட்டசு பற்றி பாரம்பரியமாகக் கூறப்படும் தோற்றத்துடன் முரண்பட்டதாய் இருக்கிறது. இன்னும் சில கதைகளும் கூறப்படுகின்றன. அகஸ்தஸின் உறவினருக்கு அவர் மறு உயிர் அளித்ததாய் கூறப்படுவது அதில் ஒன்று.[12][62][64][69]

பெயர்சூட்டுகள்

தொகு

சில மருத்துவ அறிகுறிகளுக்கும் அடையாளங்களுக்கும் இப்போகிரேட்டசு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மரணத்தின் போது, அல்லது நெடிய நோய், மிகையான பட்டினி போன்ற சமயங்களில் தோன்றும் முகத்தோற்றத்தை இப்போகிரேட்டசு முகம் என்று குறிப்பிடுகிறார்கள். விரல்களும் விரல்நகங்களும் விகாரமடைந்து பின்னிக் கொண்டிருப்பது இப்போகிரேட்டசு விரல்கள் என்றும் அழைக்கப்படுகிறது. உடம்பிற்குள் ஓடும் நீர்வளி மார்பகம் அல்லது சீழ்வளி மார்பகச் சத்தத்திற்கு இப்போகிரேட்டசு உருட்டல் என்று பெயர். இப்போகிரேட்டசு மேசையிடுக்கி மற்றும் இப்போகிரேட்டசு கட்டு ஆகியவை இப்போகிரேட்டசு பெயர் தாங்கிய இரண்டு மருத்துவ எந்திர வகைகள் ஆகும்.[70] இப்போகிரேட்டசு மருத்துவத் தொகுதி மற்றும் இப்போகிரேட்டசு சத்தியப்பிரமாணம் ஆகியவையும் இப்போகிரேட்டசு பெயருக்கு பெருமையளிக்கின்றன. இப்போகிரேசு என்கிற பானமும் இப்போகிரேட்டசுவால் கண்டறியப்பட்டதாகவே நம்பப்படுகிறது. முகத் தசைகளை விரித்து வைத்து பராமரிக்கும் ஒரு பயிற்சிக்கு இப்போகிரேட்டசு புன்னகை என்றும் பெயருண்டு.

நவீன காலத்தில் நிலவின் குழி ஒன்றுக்கு இப்போகிரேட்டசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டின் காஸ் தீவில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இப்போகிரேட்டசு அருங்காட்சியகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹாரி பாட்டர் தொடரில் ஒரு பாத்திரத்தின் பெயர் இப்போகிரேட்டசு சுமெத்விக் என்பதாகும். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவ மையம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வியை மேம்படுத்தும் ஒரு திட்டத்திற்கு இப்போகிரேட்டசு திட்டம் என்று பெயர் கொண்டுள்ளது.[71] கனடாவில் உள்ள இப்போகிரேட்டசு மருத்துவப் பதிவகமும் அமெரிக்காவில் உள்ள இப்போகிரேட்டசு மருத்துவப் பதிவகமும் ஆரம்பத்தைய இப்போகிரேட்டசு சத்தியப் பிரமாணத்தை வழுவாமல் பாதுகாக்கும் மருத்துவர்களைக் கொண்ட அமைப்புகளாய் அறியப் பெறுகின்றன.

குறிப்புகள்

தொகு
  1. National Library of Medicine 2006
  2. Useful known and unknown views of the father of modern medicine, Hippocrates and his teacher Democritus., U.S. National Library of Medicine.
  3. Hippocrates, Microsoft Encarta Online Encyclopedia 2006. மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் Archived 2009-10-31.
  4. Strong, W.F.; Cook, John A. (July 2007), "Reviving the Dead Greek Guys", Global Media Journal, Indian Edition, ISSN: 1550-7521 [தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 5.2 Garrison 1966, ப. 92–93
  6. Nuland 1988, ப. 5
  7. Garrison 1966, ப. 96
  8. Nuland 1988, ப. 4
  9. Britannica 2006
  10. Nuland 1988, ப. 7
  11. Adams 1891, ப. 19
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 Margotta 1968, ப. 66
  13. 13.0 13.1 13.2 13.3 Encyclopedia Britannica 1911 பிழை காட்டு: Invalid <ref> tag; name "britannica" defined multiple times with different content
  14. Adams 1891
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 Martí-Ibáñez 1961, ப. 86–87
  16. Plato 380 B.C.
  17. Adams 1891, ப. 4
  18. Jones 1868, ப. 11
  19. Nuland 1988, ப. 8–9
  20. 20.0 20.1 20.2 Garrison 1966, ப. 93–94
  21. 21.0 21.1 Adams 1891, ப. 15
  22. Margotta 1968, ப. 67
  23. Leff & Leff 1956, ப. 51
  24. Jones 1868, ப. 12–13
  25. Jones 1868, ப. 46,48,59
  26. Garrison 1966, ப. 99
  27. 27.0 27.1 Margotta 1968, ப. 73
  28. 28.0 28.1 Garrison 1966, ப. 98
  29. Singer & Underwood 1962, ப. 35
  30. 30.0 30.1 30.2 Garrison 1966, ப. 97
  31. [66]
  32. Garrison 1966
  33. 33.0 33.1 Margotta 1968, ப. 64
  34. Rutkow 1993, ப. 24–25
  35. Martí-Ibáñez 1961, ப. 88
  36. Margotta 1968, ப. 68
  37. Leff & Leff 1956, ப. 45
  38. Schwartz, Richards & Goyal 2006
  39. Singer & Underwood 1962, ப. 40
  40. Margotta 1968, ப. 70
  41. Martí-Ibáñez 1961, ப. 90
  42. 42.0 42.1 Major 1965
  43. 43.0 43.1 43.2 Jóhannsson 2005, ப. 11
  44. 44.0 44.1 44.2 Jani 2005, ப. 24–25
  45. Jóhannsson 2005, ப. 12
  46. Mann 2002, ப. 1, 173
  47. Shah 2002, ப. 645
  48. NCEPOD 2004, ப. 4
  49. 49.0 49.1 Singer & Underwood 1962, ப. 27
  50. 50.0 50.1 Hanson 2006
  51. Rutkow, ப. 23
  52. Singer & Underwood 1962, ப. 28
  53. Jones 1868, ப. 217
  54. Buqrat Aur Uski Tasaneef by Hakim Syed Zillur Rahman, Tibbia College Magazine, Aligarh Muslim University, Aligarh, India, 1966, p. 56-62.
  55. 55.0 55.1 Garrison 1966, ப. 100
  56. Garrison 1966, ப. 95
  57. Jones 1868, ப. 35
  58. Leff & Leff 1956, ப. 102
  59. 59.0 59.1 Garrison 1966, ப. 94
  60. Jones 1868, ப. 38
  61. Singer & Underwood 1962, ப. 29
  62. 62.0 62.1 Adams 1891, ப. 10–11
  63. Jones 1868, ப. 37
  64. 64.0 64.1 Smith 1870, ப. 483
  65. [159]
  66. Pinault 1992, ப. 1
  67. Adams 1891, ப. 12–13
  68. Internet Encyclopedia of Philosophy 2006
  69. Jones 1868, ப. 24
  70. Fishchenko & Khimich 1986
  71. Project Hippocrates 1995

புற இணைப்புகள்

தொகு


வார்ப்புரு:Ancient anaesthesia-footer வார்ப்புரு:Ancient Greece topics